ஞாயிறு, 31 ஜனவரி, 2010

தேர்தலின் முடிவும் தமிழரின் முடிவும் - 2


தேர்தல் முடிவுகளைப்பற்றி ஏராளமான சந்தேகங்கள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. அவை உண்மையோ பொய்யோ, சிறுபான்மையினரின் பகுதிகளின் முடிவுகளைப்பற்றி எனக்கு துளிகூட சந்தேகம் இல்லை. எப்படி இருந்தாலும் தமிழரின் முடிவு பற்றி எண்ணிப்பார்க்க வேண்டிய தேவை ஒன்று இருப்பது இந்த சந்தர்ப்பத்தில் மறுக்க முடியாதது.

முடிவு என்று பார்க்கின்றபோது தமிழரின் தீர்ப்பு(Decision), தமிழரின் நிறைவு (End) இப்படிப்பல அர்த்தங்கள் கொள்ளலாம். தீர்ப்பு என்று பார்க்கின்றபோது சிறுபான்மையினரின் ஒற்றுமைக்கான அறைகூவலை யாழ் குடா நாட்டின் ஒரு பகுதித்தமிழரை விட ஏனையோர் ஏற்றுக்கொண்டிருப்பதாகவே படுகின்றது. ஏனென்றால் தேர்தலில் வாக்களிப்பு அப்படித்தான் அமைந்திருக்கின்றது. ஆகவே தமிழர்கள் வாக்களித்த அபேட்சகர் தோல்வி அடைந்தாலும் ஒற்றுமை என்ற அடிப்படையில் தமிழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நீண்ட காலத்தின் பின் சிறுபான்மையின மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டிருக்கிறார்கள்.

எனவே இந்த ஒற்றுமை பாராளுமன்றத்தேர்தலிலும் தொடரும் பட்சத்தில் அது மிகச்சிறந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் உள்ளது. சிறுபான்மையினரின் பேரம் பேசும் பலம் வலுப்பெறும். ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை மாற்ற அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளும் தாம் ஆட்சியமைக்க சிறுபான்மையினரே தேவையில்லை என்று நம்பிக்கை கொண்டிருக்கும் பெரும்பான்மை அரசியல் சமூகமும் சிறுபான்மையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது அத்துடன். இது எத்தனை தூரம் எவ்வளவு காலம் சாத்தியம் என்று பார்ப்போம்.

வியாழன், 28 ஜனவரி, 2010

தேர்தல் முடிவும் தமிழரின் முடிவும்தேர்தலின் முடிவு அனைவர்க்கும் தெரிந்துவிட்டதால் நிறைய விளக்கம் தேவை இல்லை. ஆனான் தமிழரின் முடிவு பற்றி சிறிது கூறலாம் என்று ஆசைப்படுகிறேன். நேரம் பற்றாக்குறையாக இருப்பதால் சிறிதளவை இப்போது எழுதிவிட்டு எஞ்சியதை வார இறுதியில் எழுதுகிறேன். 
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 1842749 வாக்குகள் வித்தியாசத்தில் எதிரணிகளின் போது வேட்பாளர் ஜெனரல். சரத் பொன்சேகாவை தோற்கடித்துள்ளார். வரலாற்றில் இல்லாத அளவிற்கு 74.5  வீதமான மக்கள் (அதிகமாக பெரும்பான்மை இனத்தவர்) வாகளிதுள்ள இந்த தேர்தலில் மித அபாரமான ஒரு வெற்றியை மகிந்த பெற்றுள்ளார். எதிரணிகளின் ஒட்டு மொத்த அபிலாசைகளுடன் களத்தில் நின்ற பொன்சேகா பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளார். 


ஆனால் ஒட்டு மொத்த சிறுபான்மையினரும் மகிந்தவை நிராகரித்து உள்ளமை சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரத்தை கண்டு அஞ்சாது எதிர்த்து வாக்களித்த அதனை மக்களின் நெஞ்சுரத்தைக் கண்டு வியந்து போயுள்ள அதே வேளை ஒட்டு மொத்த சிறுபான்மையினரும் ஒரு புறம் நிற்க, தமது வாக்குக்களை வீணாகி விட்டு தத்துவம் பேசிக்கொண்டு இருக்கும் இன்னொரு தரப்பினரை என்ன செய்வதென்று புரியவில்லை?? (குறிப்பாக யாழ் குடாநாட்டு மக்கள் ). யாழ் குடாநாட்டில் வெறும் 25 வீதமானோர்(185132 வாக்குகள்)  மட்டும் வாக்களித்துள்ள அதேவேளை அங்குள்ள இடம்பெயர்ந்து புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுள் 65  வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளமை வியக்க வைக்கிறது.   அதிலும் கிளிநொச்சி, தபால் மூல மற்றும் இடம்பெயர்ந்தோரை தவிர்த்து பார்க்கிறபோது மீதமுள்ள 674553 வாக்காளர்களுள் 158853 பேரே வாக்களித்து உள்ளனர் அதாவது 23.5 வீதமானோர். அங்குள்ள மொத்த வாக்காளருள் எத்தனை பேர் அங்கு இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தாலும் பெரும்பாலானோர் வாக்களிக்க செல்லவில்லை என்ற உண்மையை மறுக்க முடியாது. 
வன்னி மாவட்டத்தை நோக்குகின்ற போது மொத்தமாக 40.33 வீத வாக்களிப்பு இடம்பெற்று இருந்தாலும் முல்லைத்தீவு, இடம்பெயர்ந்தோர் மற்றும் தபால் மூல வாக்குகளை விட்டு நோக்கும் போது தனியே மன்னர் மாவட்டத்தில் வெறும் 34 வீத வாக்குப்பதிவும் வவுனியா மாவட்டத்தில் 43.83 வீதமான வாக்குக்களும் இடப்பட்டுள்ளன இரு மாவட்டங்களிலும் இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம் பெயர்ந்தோர் தொகையை கணக்கில் எடுக்கும் போது 60  வீதத்திலும் அதிகமான வாக்குகள் இடப்பட்டு  இருப்பதாக கருத்திற் கொள்ள முடியும்.                  
ஏனைய மாவட்டங்களான திருகோணமலை-68வீதம், மட்டக்களப்பு-65வீதம் மற்றும் அம்பாறை-73வீதம் வாக்களித்து தமது உரிமையை நிலைநாட்டியுள்ளனர். எனது மனம் நிறைந்த வணக்கங்களை கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு தெரிவித்துக்கொண்டு தமிழரின் முடிவு பற்றி அடுத்த கட்டுரையில் தொடர்கிறேன்... 
மதுரகன்    

திங்கள், 25 ஜனவரி, 2010

யாருக்கு வோட்டு?? யாருக்கு வேட்டு?? - பாகம் 2

வவுனியா புறப்பட்டு வந்ததிலும் இங்கு சில தனிப்பட்ட வேலைகளிலும் பதிப்பின் இரண்டாம் பாகத்தை சற்று தாமதமாக தொடர்கிறேன். 

தாமதமும் நன்மைக்கே என்றது போல எழுத புதிதாக சில விடயங்கள் கிடைத்துள்ளது. அவற்றுள் முக்கியமானது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எதிரணி வேட்பாளர் பொன்சேகாவை ஆதரிப்பதாக இறுதி நேரத்தில் அறிவித்துள்ளமை. இது எந்த அளவிற்கு பாதிப்பு செலுத்தப்போகிறது என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் பாமரமக்களிடத்தில் அவருக்கு இன்னமும் செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அவருடைய ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தியுள்ள சமிறத்தி முதலான திட்டங்களால் பயன் பெற்ற ஏழை மக்கள் பலர். அதை விட்ட ஊழலுக்கும் குடும்ப ஆட்சிக்குமெதிராக வாக்களிக்கும்படி அவர் கூறியுள்ளமை கற்ற சமூகத்தில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தலாம். 

அடுத்தது நான் முதலே கூறிய படி பிரயத்தனப்பட்டேனும் வெல்வதற்குரிய முழு முயற்சியில் தற்போதைய அதிபர் இறங்கியுள்ளமை தெரிகிறது. இதற்கு சான்றாக குருநாகலையில் பிடிக்கபட்டிருக்கும் லாரியில் எதிரணிக்கு எதிரான போஸ்டர்கள் மற்றும் சாராயப்போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பல பல செய்திகள், நான் கூறி தெரிய வேண்டியதில்லை. 


தமிழ் மக்கள் அதிகம் வாழும் இடங்களில் ஏராளமான வாக்குச்சீட்டுக்கள் இன்னமும் விநியோகிக்கப்படாது காணப்படுகின்றமை எங்களது வாக்குப்பலத்தை முடக்கும் மறைமுக முயற்சியாக தெரிகின்றது. 
ஆனால் இன்னொரு முக்கிய விடயம், இங்கு வவுனியாவில் பெரும்பாலான மக்கள் இதுவரை வாக்களிக்கும் மன நிலையில் இல்லை. 50 வீதம் வாக்களிப்பதே பெரிய விடயம் போல இருக்கிறது. என் இந்த மன நிலை என்று புரியவில்லை. நான் அவர்களுக்கு கூறியது இதுதான் 
"இப்போது உள்ள ஜனாதிபதியே தொடர்ந்து இருக்க விரும்பினால் வாக்களிக்க தேவை இல்லை வேறு யாரவது வேண்டுமெண்டால் வாக்களியுங்கள்"    


என்னைப் பொறுத்தவரையில் தமிழர்கள் முன்னால் இருப்பது இரண்டு வழிகள்தான் தற்போதய ஆட்சியை வைத்துக்கொள்வதா அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதா என்பதுதான். தேர்தலைப்புறக்கணிப்பதும் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிப்பதும் மகிந்தவிற்கு வாக்களிப்பதற்கு சமமானவை என்பது என்கருத்து ஏனென்றால் பெரும்பான்மை வாக்குகள் பிளவுபட்டாலும் அவற்றுள் பெரும்பங்கு மகிந்தவிற்குத்தான் செல்லும் கிட்டத்தட்ட மகிந்த அவற்றுள் 60 வீதமானவற்றையும் பொன்சேகா 40 வீதம் அல்லது அதற்கு சற்றுக் குறைவாக பெறக்கூடும்


இந்தவகையில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வாக்குகள் பொன்சேகா பக்கமும்(70வீதம்) சிறுபங்கு மகிந்தபக்கமும் சாயலாம் என எண்ணப்படுகின்றது. அதே வேளை மலையகத்தமிழர்களின் நிலைபற்றி உறுதியாக கூற முடியாவிட்டாலும் மாகாணசபைத் தேர்தல்களைக்கொண்டு நோக்கும்போது பொன்சேகா பக்கம் 65 வீதமானோரும் மகிந்த பக்கம் 35 வீதமானோரும் வாக்களிக்கக் கூடும். இப்படி அமைகின்ற நிலையில் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவினை விட சற்று பின் தங்கிய நிலையில் காணப்படுவார்.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்புத்தமிழர்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறும். இவர்கள் ராஜபக்சவிற்கு வாக்களித்தாலோ அல்லது தேர்தலைப் புறக்கணித்தாலோ அல்லது சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்தாலோ சந்தேகத்திற்கிடமின்றி மகிந்த மீண்டும் ஜனாதிபதியாகி தன்னுடைய ”சேவையை” மேலும் 8 வருடங்களுக்கு தொடர்வார். அப்படியின்றி எதிர்த்து வாக்களிக்கும் பட்சத்தில் சரத் பொன்சேகா ஜனாதிபதி ஆகக்கூடும்.


எனவே யாரை வைத்திருப்பது யாரை வீடுக்கு அனுப்புவது என தமிழ் பேசும் மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் சனத்தொகையில் 26 வீதமான சிறுபான்மைத், தமிழ் பேசும் மக்கள் நினைத்தால் தேர்தலில் இதை சாதிக்கலாம் ஏனென்றால் பெரும்பான்மை வாக்குகள் பிளவுபட்டுள்ளன.


இதற்குமேல் எதிர்பார்ப்புக்களை வீசாமல் இரு நாள் பொறுத்து முடிவுகளுடன் தொடர்கிறேன். 


அன்புடன் 
மதுரகன் 
    
  

சனி, 23 ஜனவரி, 2010

யாருக்கு வோட்டு? யாருக்கு வேட்டு?

தேர்தல் மிக மிக அருகில் வந்து விட்டது. இதுவரை இந்தத்தேர்தலால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானது தமிழர்கள் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன் அனால் இப்போதுதான் புரிகிறது எல்லாரையும் விட தேர்தலால் பாதிக்கப்பட்ட ஒரு ஜென்மம் இருக்கிறதென்று கீழே உள்ள படத்தைப்பார்த்தால் யாரென்று உங்களுக்கு புரியும்.
கடந்த தேர்தலிலேயே கதிகலங்கிப்போய் என்னை விடிவிடுங்கள் என்று கெஞ்சிய அவரை மீண்டும் ஒரு தர்மசங்கடமான களத்திலே நிற்க வைத்திருக்கிறார்கள் .

அடுத்து களத்திலே நேருக்கு நேர் இரு பிரதான வேட்பாளர்கள்.
இவர்களின் வெற்றி வைப்பு இன்னமும் சந்தேகத்துக்கு இடமாகவே காணப்படுகிறது அதற்கு இரு பிரதான காரணங்கள்
1 . ஆட்சியில் உள்ளவரிடம் சர்வ அதிகாரமுள்ளது அவர் தனது வெற்றிக்காக உயிரையும் கொடுத்து முயற்சி செய்வார்.
2  . சிறுபான்மை வாக்குக்களின் பெரும்பங்கு எதிரணி வேட்பாளர் சரத்திற்கு போகக்கூடும் என்ற நிலைப்பாடு.

மீதி விரைவில்... (எப்படியாவது தேர்தலுக்கு முன்னர்)   
  

செவ்வாய், 19 ஜனவரி, 2010

பத்து ஆயிரத்தில் ஒருவன்


பொங்கல் தினத்தன்று அதிகாலை முதல் மாலை ஏழரை வரை கொழும்பு பல்கலைக்கழக மைதானத்திலேயே கழித்துவிட்டு (அன்றுதான் எமது கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தின் பீடங்களிடைப்பட்ட வருடாந்த விளையாட்டுப்போட்டி, அத்துடன் நான்தான் அன்ற மன்றத்தின் தலைவன் என்பது மற்றொரு தொல்லை) அறைக்கு வந்து குளித்துவிட்டு ஒரு நல்ல தூக்கம் போட்டு எழுந்தேன் மணி 8.45 ஐ தொட்டிருந்தது.பசியும் எல்லையைக்கடக்க மற்றொரு நண்பனையும் அழைத்துக்கொண்டு தவளகிரி - மருதானை க்கு சாப்பிடும் எண்ணத்தில் போனால் அங்கு பொங்கல் விடுமுறை. பின்னர் ஒருவாறு அருகிலிருந்த சிறிய கடையில் உணவை முடித்துக்கொண்ட பின்தான் இந்த எண்ணம் வந்தது. அவனிடம் கேட்டேன் ஆயிரத்தில் ஒருவன் பார்ப்போமா என்று, அடுத்த நாள் எட்டு மணிக்கு நான் லேடி றிஜ்வே வைத்தியசாலையில் நிற்க வேண்டும். அவனுக்கோ விரிவுரைகள் இருந்தாலும் பார்ப்பதென தீர்மானித்து சினிசிட்டிப்பக்கமாக நடந்தோம். 


அங்கு கூட்டம் அவ்வளவு இல்லை ஒரு 60 போ் சொல்லலாம் இருந்தாலும் வழக்கம் போல முண்டியடித்துக்கொண்டும் மேலே தாவிக்கொண்டும் நின்றனர். அரை மணி நேர காவலுக்கு பின் 10 மணியளவில் உள்ளே விட்டார்கள். ரிக்கற் வாங்கிக்கொண்டு ஒருவாறு தியேட்டருக்குள் போனால் கூட்டம் பாதி அரங்கைத்தான் நிறைத்திருந்தது. என்றாலும் படம் உடனே ஆரம்பித்துவிட்டது.  ஆரம்பித்து 5 நிமிடத்திற்குள்ளேயே படத்தின் கதை புரிந்து விட்டது. இருந்தாலும் அது ஆர்வத்தை தூண்டும் வகையிலேயே அமைந்திருந்தது. 


பின்பு ஒருவாறு பார்த்து முடித்து பொடிநடையாக புஞ்சிபொரளை வந்து படுத்து உறங்கியதுதான் அடுத்த நாள் 9 மணிக்குத்தான் கண் விழித்தேன். அப்பொயின்மற் ஏற்கனவே கட் பண்ணப்பட்டிருந்தது. சரி படத்தைப்பற்றி என் கருத்துக்கள். நிறைய இல்லை ஒரு பத்து விடயங்களை மட்டும் கூறி விடுகிறேன்.1. ஒட்டு மொத்தமாக படம் என்று பார்த்தால் சிறந்த, அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் (ஆனால் பார்க்கமுடியுமா என்பது கேள்விக்குறியே??). மாறுபட்ட கதைக்களம், கதாபாத்திரங்கள், காட்சியமைப்பு.  அடுத்தது இது போன்ற திரைப்படங்களின் வருகையை ஆதரிக்க வேண்டியது எங்கள் கடமை என்று கூட கருதிக்கொள்ளலாம். ஏனென்றால் சிறந்த ஒரு பாதைக்கு தமிழ் சினிமாவின் பயணங்களை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. 


2.  படத்தில் கதைக்கரு மெய்சிலிர்க்க வைக்கிறது. இத்தகைய கருவை கண்டெடுத்த மூளை திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறது அதுவும் இரண்டாம் பாதியில். முதலாம் பாதியை முற்றுமுழுதாக அனுபவித்து பார்த்தேன் (ஓரிரு காட்சிகளைத்தவிர). ஆனால் இரண்டாம் பாதி பல குறுக்கு கேள்விகளுடன் படத்தின் நியாயப்பாட்டை கேள்விக்குறியாக்குகின்றது. எப்படி இருந்தாலும் இடைவேளைக்கு சற்று முன்னர் வரை நான் படத்தை அவ்வளவு அனுபவித்துப்பார்த்தேன். இது வரை இப்படி ஒரு தளத்தில் தமிழ் படமொன்றை நான் பார்த்திருக்கவில்லை என உணர்ந்தேன். 3. படத்தின் கதை இடைவேளைக்கு பிறகு போக்கின்றி போகிறது. முடிவு பொருத்தமற்ற ஒரு முடிவு. ஆங்கிலப்படங்களின் பாதிப்பு தெரிகிறது. ஆனால் இந்தக்கதைக்கு பொருந்தவில்லை.இவ்வளவு செலவழித்து திரைப்படம் எடுக்கமுன்பு கதையின் பொருத்தப்பாடு மற்றும் உறுதிப்பாட்டை யோசிக்க வேண்டாமா?அல்லது சத்தமின்றி உறங்கிக்கொண்டு இருக்கும் கல்கி, சாண்டில்யன், அகிலன் போன்றோரின் கதைகளை அல்லது உண்மை வரலாறுகளை படமாக்கலாமே. ஆங்கிலப்படங்கள் அப்படித்தானே வருகின்றன.ஏன் கற்பனையாக புதுக்கதை உருவாக்க வேண்டும். இருந்த வரலாறுகளை மக்கள் முதலில் தெரிந்து கொள்ளட்டுமே.


4. சோழர் பேசுகின்ற தமிழ் 12ம் நூற்றாண்டு இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள தமிழ் அதையே அந்தக்கால பேச்சு மொழியெனக்கருதிக்கொண்டு செல்வராகவன் பயன்படுத்தியுள்ளார்.
ஆனால் உண்மை என்னவென்றால் எந்தக்காலத்திலும் மொழிக்கு பேச்சு வடிவம் மற்றும் எழுத்து வடிவம் வேறுவேறாகத்தான் இருந்துள்ளது.
மற்றபடி படத்தில் சோழர் மற்றும் பாண்டியர்கள் கீழ்த்தரமாக சித்தரிக்கப்படுகின்றனர்.
சோழர்கள் காட்டுமிராண்டிகளாகவும் நரமாமிசம் தின்பவர்களாகவும் காட்டப்படுகின்றனர்.
அதிலும் அரசன் நடந்து செல்ல காலடிக்கு இரத்தம் வேண்டி பலர் பலியிடப்படுவது கொடுமையிலும் கொடுமை.
தமிழர்களுக்கிடையில் நடந்த எந்த யுத்தத்திலும் பெண்கள் கற்பழிக்கப்பட்ட வரலாறுகள் இல்லை. ஆனால் திரைப்படத்தில் நவீன பாண்டியர்களின் கையாள்களாக வரும் எத்தனையோ தமிழர்களே அத்தனை சோழப்பெண்களையும் கதறக்கதற கற்பழிப்பதாக காட்டுவது மற்றொரு கொடுமை.
மேலும் சோழர் கறுப்பு என்பதற்காக நீக்ரோ கறுப்பிலா காட்டுவது மக்களை.
5. படத்தில் வன்முறை மிக மிக அதிகம், யதார்த்தம் என்று கூறிக்கொண்டு வன்முறையை கண்ணுக்கு முன்னால் காட்டுவது மட்டும் யதார்த்தம் என்று ஆகிவிடாது. அடுத்தது இரட்டை அர்த்த வசனங்களும் வெளிப்படையான ஆபாச வசனங்களும்(ஆங்கிலம் மற்றும் தமிழில்) குடும்த்துடன் பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பை இல்லாமல் செய்திருக்கிறது.


6. படத்தின் முக்கிய பலம் பின்னணி இசை. அசத்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார், சில இடங்களில் மெய்சிலிர்க்க வைக்கிறது பின்னணி இசை, அடுத்து பாடல்கள், பாடல்களுக்கான காட்சியமைப்பு அற்புதம்.

7. ஒட்டுமொத்த படத்தின் காட்சித்தெரிவு, காட்சியமைப்பு மற்றும் ஒளிப்பதிவு அற்புதம். காடுகள், பாலைவனங்கள், காட்டுவாசிகள், சோழர்களின் கட்டிட இடிபாடுகள் அத்தனையும் சிறந்த தெரிவுகள்

8. நடிப்பில் ரீமா, பார்த்திபன், கார்த்தி ஆகியோர் கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால் யார் கதாநாயகன் யார் வில்லன் யார் குணச்சித்திர பாத்திரம் என்பது கடைசி வரை குழப்பமாகத்தான் காணப்பட்டது. என்னைப்பொறுத்தவரை பார்த்திபன் மற்றும் ரீமா கதாபாத்திரங்கள் அழுத்தமாகவும் மனதில் பதிந்தும் காணப்படுகின்றன.


9. படத்தில் நிறைய நிறைய லொஜிக் ஓட்டைகள். மிக மோசமான குழப்பங்கள் கூட காணப்படுகின்றன. படம் எடுக்கும்போது செல்வராகவன் யாரிடமும் கதையை கூறவில்லையாம். அப்படிச்செய்யுங்கள் இப்படிச்செய்யுங்கள் என்று விபரித்து வேண்டியதை பெற்றுக்கொண்டாராம். ஒளிப்பதிவாளருக்கு கூட கதை தெரிந்திருக்கவில்லை போல இருக்கிறது. சில இடங்களில் கதைக்கும் காட்சிக்கும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக மழையில்லாமல் வரட்சி நிலவுவதாக பார்த்திபன் கூறிக்கொண்டிருக்க பின்னால் அழகுக்காக அருவி கொட்டுகிறது.

10. யாவரும் நிச்சயம் இந்தப்படத்தைப்பார்க்க வேண்டும், ஏனெனில்
- சிறு சிறு குறைகள் இருந்தாலும் தரமான படங்கள் எடுக்கும் இது போன்ற முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்
- மற்றையது படம் உங்களுக்கு புதிய ஒரு அனுபவத்தை அளிக்கும் என உறுதியாக கூற முடியும். ஏனென்றால் தமிழில் இதுபோன்ற படம் இதுவரை வரவில்லை.

மதுரகன்

திங்கள், 18 ஜனவரி, 2010

தெரிந்துகொள்...


இதுவரை ஒளி கூட நுழைவதற்கு அனுமதிக்கப்படாத
என் படுக்கையறையில் நீ நுழைந்தால்,

அங்கு உனக்காகக் காத்துக்கொண்டிருப்பவை....

இந்த உலகத்திலிருந்து உனக்கு விடுதலையளிக்கும்

மெல்லிய இசையும்...

கண்ணீரோடு காத்திருக்கும் ஒரு ஜோடிக்கண்களும்.. 


மதுரகன்

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

காத்திருப்பு


இந்தக்கண்ணீர்த்துளிகளின் காய்ந்து சென்ற சுவடுகளை
தேடியாவது நீ வர வேண்டும்..
இல்லை..
தன் உலகங்களையெல்லாம் உனக்குள்
சிருஷ்டித்துக்கொண்டவனின் இறுதி சுவாசம்
கூட உன்னை ஸ்பரிசிக்கும் வாய்ப்பை
இழந்துவிடுவாய்....
மதுரகன் 


என்ன செய்யும் என்கண்கள்உன்கண்கள் காதலை உமிழ்ந்துகொண்டிருந்தன


என்கண்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை
காதலை கண்களினால் வெளிப்படுத்தும் ஆற்றலை இன்னமும் நான் பெற்றுக்கொள்ளவில்லை

சன செருக்கடியான புகையிரதங்களில் புதைக்கப்பட்டிருந்த
பொழுதுகளிலும் தனிமையில் உன்னை நோக்கி
நெருங்கிக்கொண்டிருந்தேன்.

சன சந்தடியற்ற வீதிகளிலும் உன்னுடைய ஒவ்வொரு
உணர்வுகளிலும் நான் பரிணமித்துக்கொண்டிருந்தேன்.

கார்த்திகை மாதத்தில் பூத்துக்கொண்ட பூவொன்று மழைக்கால
இரவுப்பொழுதுகளில் விழித்திருப்பதைப் போன்றது
நீ கொண்ட காதல் என்பது எனக்குப்புரியாமல் இல்லை..

எந்த அளவில் இந்த உணர்வுகளைப்பற்றிக்கொள்வது
என்பதில்தான் நான் இன்னமும் முழுமைபெறவி்ல்லை

இன்னமும் உன் கண்களில் காதல் உமிழப்பட்டுக்கொண்டுதான்
இருந்தது..
இன்னும் சில நாட்களில் அதுவும் தோற்றுப்போகக்கூடும்
பலமுறை முழுமை பெறாத கவிதைகளுடன் கிழித்துப்போடப்பட்ட
என்னுடைய காகிதங்கள்போல்..

சில நாட்களில் எதுவேண்டுமானாலும் நிகழலாம்

இன்றுவரை உன்னைக்கடந்து நான் போகும்போது
நான் மென்று விழுங்கும் உமிழ்நீரில் கரைந்துபோகிறது
உன்மீதான எனது காதல்..

என்னசெய்வது வார்த்தைகளைத்தவிர வேறு எந்த
ஊடகத்தாலும் காதலை வெளிப்படுத்தும் ஆற்றல் என்னிடம் வசப்படவில்லை..

நான் உருண்டு கொண்டிருக்கும் புல்வெளிகள் விரைவில் வசந்தகாலத்தை நிறைவு செய்துகொள்ளக்கூடும்

இன்னமும் ஒவ்வொருநாள் காலையிலும்
நான் சுவாசிக்கும் புதிய காற்றில் உன்வாசம் கலந்துதான் இருக்கிறது..

என்ன செய்ய என் கண்களோ தலையணையுறைகளை
நனைப்பதிலும் வேறேதும் புரிவதில்லை.அன்புடன் மதுரகன் 

செவ்வாய், 12 ஜனவரி, 2010

நீண்ட நாட்களுக்குப்பின்னர்...

ஆரம்பிப்பதும் ஆரம்பித்த வேலையை அரைகுறையில் விடுவதும் புதிதல்ல எனக்கு இருந்தபோதும் இந்தமுறை எனக்குள் கொஞ்சம் நம்பிக்கை கணிசமான அளவு நாட்களுக்காவது தொடர்வது என....

நான் நினைக்கிறேன் 2006ம் ஆண்டு ஆரம்பித்தது என் இணையப்பதிவிடல் என்தனையோ வலைப்பதிவுகளை வெவ்வேறு நோக்களுக்காக ஆரம்பித்து விட்டு விட்டுச் சென்றிருக்கிறேன். கல்விப்பழுவும் காரணம் கணினியை வீட்டில் விட்டு வந்ததும் காரணம்.

ஆனாலும் எங்காவது என் வெளிப்பாடுகளை வெளிப்படுத்தாமல் இருந்ததில்லை பல்கலைக்கழக அறிவித்தல் பலகையில் தொடங்கி வானொலி நிகழ்ச்சிகள் ஈறாக facebook, tamilmantram.com என கிடைத்த வேளைகள் ஒன்றையும் தவறவிடவில்லை என்னை வெளிப்படுத்துவதில் எனக்குள்ள ஆர்வம் அப்படி. ஏதோ என்னாலும் சில வெளிப்பாடுகளை செய்யமுடிகிறது அவற்றை சிறப்பாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த வலைப்பதிவு. இதை ஒரு நூலொன்றை வெளியிடுவதற்கு முந்தைய தற்பரிசோதனை என்றும் கொள்ளமுடியும் (முக்கியமாக கவிதைகளைப் பொறுத்தவரையில்).

எப்படியும் எந்த ஒரு முயற்சியிலும் துணை புரியும் நண்பர்களின் துணை இங்கும் இருக்கும் என நம்புகிறேன். முடிந்தவரை வாரம் ஒரு முறையாவது இடுகையிட முயற்சிப்பேன்....

நன்றிகளுடன்,
மதுரகன்
 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...