ஞாயிறு, 31 ஜனவரி, 2010

தேர்தலின் முடிவும் தமிழரின் முடிவும் - 2

Posted on PM 6:39 by செல்வராஜா மதுரகன்


தேர்தல் முடிவுகளைப்பற்றி ஏராளமான சந்தேகங்கள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. அவை உண்மையோ பொய்யோ, சிறுபான்மையினரின் பகுதிகளின் முடிவுகளைப்பற்றி எனக்கு துளிகூட சந்தேகம் இல்லை. எப்படி இருந்தாலும் தமிழரின் முடிவு பற்றி எண்ணிப்பார்க்க வேண்டிய தேவை ஒன்று இருப்பது இந்த சந்தர்ப்பத்தில் மறுக்க முடியாதது.

முடிவு என்று பார்க்கின்றபோது தமிழரின் தீர்ப்பு(Decision), தமிழரின் நிறைவு (End) இப்படிப்பல அர்த்தங்கள் கொள்ளலாம். தீர்ப்பு என்று பார்க்கின்றபோது சிறுபான்மையினரின் ஒற்றுமைக்கான அறைகூவலை யாழ் குடா நாட்டின் ஒரு பகுதித்தமிழரை விட ஏனையோர் ஏற்றுக்கொண்டிருப்பதாகவே படுகின்றது. ஏனென்றால் தேர்தலில் வாக்களிப்பு அப்படித்தான் அமைந்திருக்கின்றது. ஆகவே தமிழர்கள் வாக்களித்த அபேட்சகர் தோல்வி அடைந்தாலும் ஒற்றுமை என்ற அடிப்படையில் தமிழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நீண்ட காலத்தின் பின் சிறுபான்மையின மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டிருக்கிறார்கள்.

எனவே இந்த ஒற்றுமை பாராளுமன்றத்தேர்தலிலும் தொடரும் பட்சத்தில் அது மிகச்சிறந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் உள்ளது. சிறுபான்மையினரின் பேரம் பேசும் பலம் வலுப்பெறும். ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை மாற்ற அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளும் தாம் ஆட்சியமைக்க சிறுபான்மையினரே தேவையில்லை என்று நம்பிக்கை கொண்டிருக்கும் பெரும்பான்மை அரசியல் சமூகமும் சிறுபான்மையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது அத்துடன். இது எத்தனை தூரம் எவ்வளவு காலம் சாத்தியம் என்று பார்ப்போம்.

அடுத்து ஒற்றுமை என்பதற்கு அடுத்த படி சிறுபான்மையினர் மற்றொரு விடயத்தில் வெற்றிபெற்றிருக்கின்றனர். அரசாங்கத்தின் வாலில் காலம் காலமாக தொங்கிக்கொண்டு தேவைப்படும்போது மக்களிடம் நீலிக்கண்ணீர் வடிக்கும் போலி அரசியல் வாதிகளுக்கு முகத்தில் கரியைப்பூசி அவர்களை நிராகரித்துள்ளனர். மேலும் ஆதிக்கம் அதிகாரம் என்பவற்றை பொருட்படுத்தாது எதிர்ப்புக்காட்டி எம் மனோபலம் இன்னும் குறையவில்லை என்பதையும் புலப்படுத்தியுள்ளனர்.

சரி இதெல்லாம் எங்கே சென்று முடியப்போகின்றது என்று யோசிக்கும் போது குழப்பமாகத்தான் இருக்கின்றது. எதிர்காலத்தை நோக்கிய தெளிவானதொரு பாதை இன்னும் தமிழர் அரசியலில் இடப்படவில்லை. வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதற்கு விடைகிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். மற்றும் நீண்டகால நோக்கில் பார்க்கும் போது புதியதொரு அரசியல் தலைமைத்துவத்திற்கு கீழே அணிதிரள வேண்டிய தேவை ஒன்று தமிழர்களுக்கு உள்ளது. ஏனென்றால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுதிப்பாடு கேள்விக்குறியாக உள்ளது. அப்படி ஒரு புதிய அரசியல் அமைப்பு கட்டமைக்கப்படும்போது பிரதேச வேறுபாடுகள் களையப்பட்டு அனைத்து தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாக அமைய வேண்டுமென்பது எனது ஆசையாகும்.

அடுத்து வாக்களிக்காத மக்களைப்பற்றி கொஞ்சம் - நான் வவுனியாவில் பலருடன் கதைக்கும் போது புரிந்தது 96ம் ஆண்டும் அதற்குப்பிறகும் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்த பலர் தங்களது வாக்காளர் பதிவை வவுனியாவில் மேற்கொள்ளாமலே சும்மா இருக்கிறார்கள். என்ன 5 வருடத்திற்கு ஒரு தரம் வாற தேர்தலுக்கு ஏன் இந்த அலைச்சல் என்று. இதே நிலைதான் இன்று தலைநகரில் வாழ்கின்ற தமிழர்கள் பலரிற்கும். மிக அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் இதனால் வீணாய்ப்போயுள்ளது. இன்று மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் வவுனியாவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் தொகை வெறும் ஒரு லட்சத்துப் பதின்மூன்றாயிரமாக இருப்பது சிரிப்பை வரவழைக்கவில்லையா..?

அது போலத்தான் பதிவு இருந்தும் சோம்பல், உடல் அசதி, மனக்கவலை மற்றும் இதர சில்லறைக் காரணங்களால்  வாக்களிக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கொண்டு தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகளைப்பார்த்து அரட்டை அடிக்கும் மற்றோர் கூட்டம் அடுத்த பாராளுமன்றத்தேர்தலுக்கு முன்பாவது இத்தகைய மனநிலை ஒழிய வேண்டும். 

மதுரகன்


No Response to "தேர்தலின் முடிவும் தமிழரின் முடிவும் - 2"

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...