செவ்வாய், 19 ஜனவரி, 2010

பத்து ஆயிரத்தில் ஒருவன்

Posted on PM 12:12 by செல்வராஜா மதுரகன்






பொங்கல் தினத்தன்று அதிகாலை முதல் மாலை ஏழரை வரை கொழும்பு பல்கலைக்கழக மைதானத்திலேயே கழித்துவிட்டு (அன்றுதான் எமது கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தின் பீடங்களிடைப்பட்ட வருடாந்த விளையாட்டுப்போட்டி, அத்துடன் நான்தான் அன்ற மன்றத்தின் தலைவன் என்பது மற்றொரு தொல்லை) அறைக்கு வந்து குளித்துவிட்டு ஒரு நல்ல தூக்கம் போட்டு எழுந்தேன் மணி 8.45 ஐ தொட்டிருந்தது.



பசியும் எல்லையைக்கடக்க மற்றொரு நண்பனையும் அழைத்துக்கொண்டு தவளகிரி - மருதானை க்கு சாப்பிடும் எண்ணத்தில் போனால் அங்கு பொங்கல் விடுமுறை. பின்னர் ஒருவாறு அருகிலிருந்த சிறிய கடையில் உணவை முடித்துக்கொண்ட பின்தான் இந்த எண்ணம் வந்தது. அவனிடம் கேட்டேன் ஆயிரத்தில் ஒருவன் பார்ப்போமா என்று, அடுத்த நாள் எட்டு மணிக்கு நான் லேடி றிஜ்வே வைத்தியசாலையில் நிற்க வேண்டும். அவனுக்கோ விரிவுரைகள் இருந்தாலும் பார்ப்பதென தீர்மானித்து சினிசிட்டிப்பக்கமாக நடந்தோம். 


அங்கு கூட்டம் அவ்வளவு இல்லை ஒரு 60 போ் சொல்லலாம் இருந்தாலும் வழக்கம் போல முண்டியடித்துக்கொண்டும் மேலே தாவிக்கொண்டும் நின்றனர். அரை மணி நேர காவலுக்கு பின் 10 மணியளவில் உள்ளே விட்டார்கள். ரிக்கற் வாங்கிக்கொண்டு ஒருவாறு தியேட்டருக்குள் போனால் கூட்டம் பாதி அரங்கைத்தான் நிறைத்திருந்தது. என்றாலும் படம் உடனே ஆரம்பித்துவிட்டது.  ஆரம்பித்து 5 நிமிடத்திற்குள்ளேயே படத்தின் கதை புரிந்து விட்டது. இருந்தாலும் அது ஆர்வத்தை தூண்டும் வகையிலேயே அமைந்திருந்தது. 


பின்பு ஒருவாறு பார்த்து முடித்து பொடிநடையாக புஞ்சிபொரளை வந்து படுத்து உறங்கியதுதான் அடுத்த நாள் 9 மணிக்குத்தான் கண் விழித்தேன். அப்பொயின்மற் ஏற்கனவே கட் பண்ணப்பட்டிருந்தது. சரி படத்தைப்பற்றி என் கருத்துக்கள். நிறைய இல்லை ஒரு பத்து விடயங்களை மட்டும் கூறி விடுகிறேன்.



1. ஒட்டு மொத்தமாக படம் என்று பார்த்தால் சிறந்த, அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் (ஆனால் பார்க்கமுடியுமா என்பது கேள்விக்குறியே??). மாறுபட்ட கதைக்களம், கதாபாத்திரங்கள், காட்சியமைப்பு.  அடுத்தது இது போன்ற திரைப்படங்களின் வருகையை ஆதரிக்க வேண்டியது எங்கள் கடமை என்று கூட கருதிக்கொள்ளலாம். ஏனென்றால் சிறந்த ஒரு பாதைக்கு தமிழ் சினிமாவின் பயணங்களை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. 


2.  படத்தில் கதைக்கரு மெய்சிலிர்க்க வைக்கிறது. இத்தகைய கருவை கண்டெடுத்த மூளை திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறது அதுவும் இரண்டாம் பாதியில். முதலாம் பாதியை முற்றுமுழுதாக அனுபவித்து பார்த்தேன் (ஓரிரு காட்சிகளைத்தவிர). ஆனால் இரண்டாம் பாதி பல குறுக்கு கேள்விகளுடன் படத்தின் நியாயப்பாட்டை கேள்விக்குறியாக்குகின்றது. எப்படி இருந்தாலும் இடைவேளைக்கு சற்று முன்னர் வரை நான் படத்தை அவ்வளவு அனுபவித்துப்பார்த்தேன். இது வரை இப்படி ஒரு தளத்தில் தமிழ் படமொன்றை நான் பார்த்திருக்கவில்லை என உணர்ந்தேன். 



3. படத்தின் கதை இடைவேளைக்கு பிறகு போக்கின்றி போகிறது. முடிவு பொருத்தமற்ற ஒரு முடிவு. ஆங்கிலப்படங்களின் பாதிப்பு தெரிகிறது. ஆனால் இந்தக்கதைக்கு பொருந்தவில்லை.



இவ்வளவு செலவழித்து திரைப்படம் எடுக்கமுன்பு கதையின் பொருத்தப்பாடு மற்றும் உறுதிப்பாட்டை யோசிக்க வேண்டாமா?



அல்லது சத்தமின்றி உறங்கிக்கொண்டு இருக்கும் கல்கி, சாண்டில்யன், அகிலன் போன்றோரின் கதைகளை அல்லது உண்மை வரலாறுகளை படமாக்கலாமே. ஆங்கிலப்படங்கள் அப்படித்தானே வருகின்றன.



ஏன் கற்பனையாக புதுக்கதை உருவாக்க வேண்டும். இருந்த வரலாறுகளை மக்கள் முதலில் தெரிந்து கொள்ளட்டுமே.


4. சோழர் பேசுகின்ற தமிழ் 12ம் நூற்றாண்டு இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள தமிழ் அதையே அந்தக்கால பேச்சு மொழியெனக்கருதிக்கொண்டு செல்வராகவன் பயன்படுத்தியுள்ளார்.
ஆனால் உண்மை என்னவென்றால் எந்தக்காலத்திலும் மொழிக்கு பேச்சு வடிவம் மற்றும் எழுத்து வடிவம் வேறுவேறாகத்தான் இருந்துள்ளது.
மற்றபடி படத்தில் சோழர் மற்றும் பாண்டியர்கள் கீழ்த்தரமாக சித்தரிக்கப்படுகின்றனர்.
சோழர்கள் காட்டுமிராண்டிகளாகவும் நரமாமிசம் தின்பவர்களாகவும் காட்டப்படுகின்றனர்.
அதிலும் அரசன் நடந்து செல்ல காலடிக்கு இரத்தம் வேண்டி பலர் பலியிடப்படுவது கொடுமையிலும் கொடுமை.
தமிழர்களுக்கிடையில் நடந்த எந்த யுத்தத்திலும் பெண்கள் கற்பழிக்கப்பட்ட வரலாறுகள் இல்லை. ஆனால் திரைப்படத்தில் நவீன பாண்டியர்களின் கையாள்களாக வரும் எத்தனையோ தமிழர்களே அத்தனை சோழப்பெண்களையும் கதறக்கதற கற்பழிப்பதாக காட்டுவது மற்றொரு கொடுமை.
மேலும் சோழர் கறுப்பு என்பதற்காக நீக்ரோ கறுப்பிலா காட்டுவது மக்களை.




5. படத்தில் வன்முறை மிக மிக அதிகம், யதார்த்தம் என்று கூறிக்கொண்டு வன்முறையை கண்ணுக்கு முன்னால் காட்டுவது மட்டும் யதார்த்தம் என்று ஆகிவிடாது. அடுத்தது இரட்டை அர்த்த வசனங்களும் வெளிப்படையான ஆபாச வசனங்களும்(ஆங்கிலம் மற்றும் தமிழில்) குடும்த்துடன் பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பை இல்லாமல் செய்திருக்கிறது.


6. படத்தின் முக்கிய பலம் பின்னணி இசை. அசத்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார், சில இடங்களில் மெய்சிலிர்க்க வைக்கிறது பின்னணி இசை, அடுத்து பாடல்கள், பாடல்களுக்கான காட்சியமைப்பு அற்புதம்.

7. ஒட்டுமொத்த படத்தின் காட்சித்தெரிவு, காட்சியமைப்பு மற்றும் ஒளிப்பதிவு அற்புதம். காடுகள், பாலைவனங்கள், காட்டுவாசிகள், சோழர்களின் கட்டிட இடிபாடுகள் அத்தனையும் சிறந்த தெரிவுகள்

8. நடிப்பில் ரீமா, பார்த்திபன், கார்த்தி ஆகியோர் கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால் யார் கதாநாயகன் யார் வில்லன் யார் குணச்சித்திர பாத்திரம் என்பது கடைசி வரை குழப்பமாகத்தான் காணப்பட்டது. என்னைப்பொறுத்தவரை பார்த்திபன் மற்றும் ரீமா கதாபாத்திரங்கள் அழுத்தமாகவும் மனதில் பதிந்தும் காணப்படுகின்றன.


9. படத்தில் நிறைய நிறைய லொஜிக் ஓட்டைகள். மிக மோசமான குழப்பங்கள் கூட காணப்படுகின்றன. படம் எடுக்கும்போது செல்வராகவன் யாரிடமும் கதையை கூறவில்லையாம். அப்படிச்செய்யுங்கள் இப்படிச்செய்யுங்கள் என்று விபரித்து வேண்டியதை பெற்றுக்கொண்டாராம். ஒளிப்பதிவாளருக்கு கூட கதை தெரிந்திருக்கவில்லை போல இருக்கிறது. சில இடங்களில் கதைக்கும் காட்சிக்கும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக மழையில்லாமல் வரட்சி நிலவுவதாக பார்த்திபன் கூறிக்கொண்டிருக்க பின்னால் அழகுக்காக அருவி கொட்டுகிறது.

10. யாவரும் நிச்சயம் இந்தப்படத்தைப்பார்க்க வேண்டும், ஏனெனில்
- சிறு சிறு குறைகள் இருந்தாலும் தரமான படங்கள் எடுக்கும் இது போன்ற முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்
- மற்றையது படம் உங்களுக்கு புதிய ஒரு அனுபவத்தை அளிக்கும் என உறுதியாக கூற முடியும். ஏனென்றால் தமிழில் இதுபோன்ற படம் இதுவரை வரவில்லை.

மதுரகன்


2 Response to "பத்து ஆயிரத்தில் ஒருவன்"

.
gravatar
Mugilan Says....

மிகச் சரியாக சொன்னீர்கள் மதுரகன்!

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...