ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

அசல் - தல மயம் (தலட நடை போல வருமா???)

Posted on PM 1:52 by செல்வராஜா மதுரகன்


தல அஜித்தின் தீவிர ரசிகனான நான் எப்படியாது முதற்காட்சி(1st Show) பார்த்துவிட வேண்டும் என்று அசல் வெளியீடு அறிவிக்கப்பட்ட நாள் முதலாகவே ஆர்வமாக இருந்தேன். வழக்கமாக படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவே முன்னோட்ட (Preview) காட்சி காண்பிப்பது வழக்கம். எனவே 4ம் திகதி இரவே பார்த்துவிடுவது என்ற முடிவுடன் இருந்த எனக்கு சுதந்திர தினத்தன்று படமாளிகைகள் (அதான் தியேட்டர்) விடுமுறை என்று கருத்துக்கூறி காலையே எரிச்சலூட்டினான் நண்பன் ஒருவன். இருந்தாலும் போய்த்தான் பார்ப்போமே என்று பொழுதுபோகாமால் தவித்துக்கொண்டிருந்த நண்பா் ஒருவரையும் கூட்டிக்கொண்டு (அவருக்கு அஜித்தே பிடிக்காது என்பது வேறுகதை) சினிசிட்டிக்குப் போனால் அங்கே கூட்டம் அலை மோதிக்கொண்டிருந்தது. தல கட்டவுட்டுக்கள் வேறு மேலே ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.
படம் பார்க்கப்போன எனக்கு முதலாவது ஆச்சரியம் அங்கு வந்திருந்த பெண்களின் எண்ணிக்கை. அளவு கணக்கற்ற கூட்டத்திற்கிடையே எத்தனையோ முதற்காட்சிகள் பார்த்திருந்தாலும் இந்த அளவிற்கு பெண் ரசிகைகள் முதற்காட்சிக்கு திரண்டு வந்திருந்தது அன்றுதால் முதல் அனுபவம் எனக்கு. மனதிற்குள் தலையை வாழ்த்திக் கொண்டு ஒரு வழியாக அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்து ஒரு ஓரமாக இருந்த ஆசனத்தை இலக்கு வைத்துச் சென்று அமா்ந்தோம்.
படம் பற்றிய எதிர்பார்ப்பு பலகாலமாக இருந்தாலும் பாடல்கள் என்னை திருப்தி செய்யவில்லை. இது தொடர்பாக பரத்வாஜை மனதிற்குள் கறுவிக்கொண்டிருந்தேன். துஸ்யந்தா பாடல் நன்றாக இருந்தாலும் அதே போன்ற தொடக்கம் உடைய ஹிந்திப்பாடல் ஒன்றினை நான் கேட்டிருந்ததால் அது என்னை மேலும் கடுப்பேற்றியிருந்தது.(நீண்ட நாட்களுக்கு முன்னர் அசல் முன்னோட்டப்பாடல் என அருமையான ஒரு பாடல் இணையத்தில் உலவியது அதனை இசைத்தட்டிலும் காணவில்லை படத்திலும் காணவில்லை - கனவா நினைவா என??) 

படம் ஆரம்பிக்கும் போது ரஜினிக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். சிவாஜியின் படத்தினை காண்பித்து அவர் பற்றிக்கூறும் குரல் ரஜினியின் குரல் என்று நினைக்கின்றேன். படம் சிவாஜி பில்ம்ஸ் சார்பில் பிரபு தயாரிக்க சரணின் இயக்கத்தில் வெளிவந்திருந்தது. ஏற்கனவே காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என மூன்று தொடர் வெற்றிகளுக்குப் பின்னர் சரணும் அஜித்தும் இணையும் நான்காவது படம்தான் அசல். படத்தில் இணை இயக்குநராகவும் வசனகர்த்தாவாகவும் அஜித் பணியாற்றியிருப்பது மேலதிக சிறப்பு.
படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷாவின் உதவியாளராக இருந்த பிரசாந்த் என்பவர் அறிமுகமாகி இருந்தார். 
படம் பிரான்சில் ஆரம்பிக்கின்றது, சமீப காலமாக வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் பிரான்சில் காட்சியாக்கப்பட்ட திரைப்படம் அசல் மட்டுமே. பாரிஸ் நகரத்தின் அழகான அடங்களில் கமரா வழுக்கிக் கொண்டு திரிகின்றது. மேலும் மும்பையில் நடைபெறுவதாக வரும் காட்சிகள் கூட மலேசிய மற்றும் தாய்லாந்து பகுதிகளில் படமாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே படம் முழுக்க பின்னணி மற்றும் காட்சியமைப்பு அற்புதம்.
கதை ஆரம்பிக்கும் போது இந்தியத்தூதர் கடத்தப்படுகிறார் அதுதொடர்பான உதவி கேட்க சமீரா ரெட்டி ஒரு முக்கியஸ்தரிடம் வருகிறார். அவர்தான் ஜீவானந்தம்(அப்பா அஜித்), ஆயுத விற்பனை முகவர். அவர் அறிமுகமான சற்று நிமிடங்களில் பில்லா, கிரீடம் போல சிவாவின்(மகன் அஜித்) திறமையை காட்டவும் அவரை அறிமுகப்படுத்தவும் ஒரு சண்டைக்காட்சி வருகின்றது. கடத்தப்பட்ட இந்தியத்தூதரை மீட்கச்செல்கிறார். சண்டைமைப்பும் அஜித்தின் ஸ்டைலும் ஆரம்பத்திலேயே அமர்க்களப்படுகின்றது. பஞ்ச் டயலொக்குகள் சொல்லி நேரத்தினை வீணடிக்காது மௌனமாவே எதிரிகளைப் பந்தாடுகிறார் பின்னர் ஒரு கார் சேசிங்(மீன் குட்டிக்கே நீச்சலா??) என அதிகம் நேரமெடுக்காமல் சண்டை முற்றுப்பெறுகிறது. தொடர்ந்து தலை போல வருமா பாடல் அதனையும் முற்றாக போடவில்லை பாதிதான் வருகிறது. சமீரா ரெட்டியும் வளைந்து நெளிந்து ஆடிச்செல்கிறார்.
பின்னர் அப்பா அஜித்தை ஒரு வியாபார விடயமாக இளைய மகன்கள்(சம்பத், ராஜீவ் கிருஷ்ணா) அழைத்துச்செல்ல அது சட்டவிரோதமான செயல் என்று அப்பா அஜித் மறுக்கிறார். அவர் மறுக்க மகன் அஜித்தும் காரணம். இதற்குப்பின் பிரதீப் ராவத் - சம்பத், ராஜீவ் கிருஷ்ணாவின் தாய் மாமன், பழைய ஹீரோ சுரேஷ் - பிரெஞ்சுப் பொலிஸ் மற்றும் சம்பத்தின் நண்பர் போன்றோர் அறிமுகமாகின்றனர். அப்போது மெல்ல மெல்ல சிவா, ஜீவானந்தத்தின் மனைவிக்கு பிறந்தவர் அல்ல தவறான தொடர்பால் பிறந்தவர் எனவும் இந்தியாவிலுள்ள பிரபுவின் உதவியால் தந்தையிடம் வந்து சேர்ந்தவர் என்பதும் தெரிகின்றது. சிவாவுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தொடர்பில் தம்பிமார் பொறாமையில் புழுங்குவதும் தெரிகிறது. 
இதற்கிடையில் ஜீவானந்தம் செத்துப்போகிறார். சட்டவிரோத ஆயுத வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்தவுடன் ராஜிவ் கிருஷ்ணா கடத்தப்படுகிறார். அவரை மீட்க அஜித், சமீரா இந்தியா வருகிறார்கள். தந்தையின் நண்பர் பிரபுவின் உதவியுன் இதற்கான வேலைகளில் அஜித் ஈடுபட பிரபுவின் அலுவலகத்தில் வேலை செய்யும் பாவனா அறிமுகமாகிறார். பிரபுவின் கையாட்களான யூகி சேது குழுவினரை அஜித் வில்லனை(ஷெட்டி) சந்திக்க பயன்படுத்துகிறார். ஷெட்டி எனப்படும் கெல்லியை கொன்று தம்பியை மீட்டபின்னர். இரு தம்பிமார்களும் அஜித்தை சுட்டு கடலுக்குள் வீழ்த்துகின்றார்கள். 
தப்பிவரும் அஜித் மீண்டும் பிரான்ஸ் வந்து ராஜிவ் கிருஷ்ணா,  பிரதீப் ராவத், சம்பத் ஆகியோரைத் தேடி கொல்கிறார். சுரேஷ் திருந்தி விடுகிறார்.  இறுதிக்கட்டத்தில்தான் தந்தை முழுச்சொத்தையும் தன்பெயரில் எழுதி வைத்ததும் தந்தையைக் கொன்றது சம்பத் மற்றும் பிரதீப் ராவத் ஆகியோர்தான் என்பதும் தெரிகிறது. சமீரா பாவனா ஆகியோருக்கான போட்டியில் காரணமின்றி சமீரா விலகிவிட படத்தின் முடிவில் பாவனா அஜித்தைக் கைப்பிடிக்கிறார். 
இதுதான் கதை. பல முறை கேட்ட பழைய கதை என்பது படத்தின் பலவீனம். அத்துடன் பாடல்கள் ஓரளவு சிறப்பாக இருந்தாலும் படத்தை தூக்கி நிறுத்துமளவிற்கு இல்லை. பின்னணி இசை கூட எங்கோ கேட்டது போன்று இருந்தாலும் பின்னணி இசை பரவாயில்லை.  படத்தின் அடுத்த பலவீனம் பலமான நகைச்சுவை நடிகர் இன்மை யூகி சேது வந்து நான் ஜோக்கர் நான் ஜோக்கர் என்று சொல்லித்திரிந்தாலும் அவ்வளவாக சிரிப்பு வரவில்லை. கதையோட்டத்திற்கு நகைச்சுவை பொருந்தவில்லை அதற்கு யாரையும் நகைச்சுவைக்கென்று போடாமல் இருந்திருக்கலாம். 

நாயகிகளில் சமீராவுக்கு 2 பாட்டு பாவனாவுக்கு 2 பாட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. சமீரா சற்று அதிகமாக வருகிறார். இரண்டு பேரும் சிவாவிற்கு போட்டிபோடுகிறார்கள். வெற்றிக்கு அதிக வாய்ப்புகள் இருந்தும் இறுதியில் ஏன் சமீரா விலகிக்கொண்டார் என்று புரியவில்லை. இருவரும் அழகாக இருக்கிறார்கள். கழுத்தில் வலது பக்கம் மச்சமுள்ள சமீராவும் இடது பக்கம் மச்சமுள்ள பாவனாவும் (கூர்ந்து கவனிச்சதுதான்) ஆங்காங்கே ஹீரோயின் தேவை என்பதற்காக மட்டும் வந்ததால் நடிக்க அவ்வளவு வாய்ப்பில்லை. கிடைத்த இடங்களில் சமீரா மிளிர்கிறார். பாவனா வெட்கப்படுகிறார் முகபாவம் காட்டுகிறார் அவ்வளவுதான். 

வில்லன்கள் கூட்டத்தில் ஷெட்டியாக வரும் கெல்லி வியப்பூட்டுகிறார். அவரையே இடைவேளைக்கு முன் போட்டுத்தள்ளிய பின்னர், சம்பத் மற்றும் குழுவினரின் வில்லத்தனங்கள் அவ்வளவு பொருட்டாயில்லை. கொஞ்சம் ஷெட்டியை தாமதமாக போட்டிருந்தா கதை இன்னும் கொஞ்சம் சுவாரசியப்படுத்தியிருக்கலாம். அதாவது அவனையே போட்ட பிறகு இவங்க யார் பொடிப்பசங்கள் என்றது போல் இருக்கிறது.

நிறைவாக தல தல தல - அஜித் அழகாக இருக்கிறார், ஸ்டைலாக இருக்கிறார். அதிகம் பேசுகிறாரில்லை ஆனால் அதிகமாக நட நடன்னு நடந்திருக்கிறார். படம் முழுக்க அஜித் 20 நிமிசம் பேசியிருந்தா 40 நிமிடம் நடந்து இருக்கிறார். ஆனாலும் அனாயாசமாக சிகார் பிடிக்கும் இடத்தில் கைதட்டி ரசிக்க வைக்கிறார். அவரது ஸ்டைலுக்கு தீனி போட்டிருக்கும் அசல் நடிப்புக்கு தீனி போட்ட மாதிரி தெரியவில்லை. மேலும் கதையில் மேலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் சிறப்பாக செய்திருக்கலாம்.
அஜித்தின் திறமையை முற்றாக பயன்படுத்த இயக்குநர்கள் தயாராகவேண்டும். படம் எப்படியும் ஓடிவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் அஜித் படத்தை அஜித் ரசிகர்கள் ரசித்தால் போதாது. அஜித்தே பிடிக்காதவர்கள் கூட திரும்பிப்பார்க்க செய்ய வேண்டும். அதுதான் உண்மையாக வெற்றி!!
மற்றபடி அசல் ஒரு ஸ்டைலான பாத்திரத்தில் பழைய மசாலா...
சுபம்
மதுரகன்


 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...