திங்கள், 29 மார்ச், 2010

பழக்கதோஷம்


சின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை
கண்களை மூடிக்கொணடு தென்றலை நுகர்வது
மழைதுமிக்கும் போது வானத்தைப்பார்ப்பது
சூரியனைப்பார்த்து கண்சிமிட்டுவது...
இப்படி
சின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை
கடவுளை வணங்கும்போது கைகளை முத்தமிடுவது
சாலையில் செல்லும்போது சத்தமின்றிப்பாடுவது
காலையில் எழுந்தவுடன் கண்ணாடிபார்ப்பது..
இப்படி
சின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை
அதிகாலைப்பனித்துளிகளை இலைகளில் தேடி
நாவினால் ஏந்துவது
காலைச்சூரியன் வெயிலில் சூடுபட
கால்களை நீட்டி குளிர்காய்வது
இப்படி சொல்லிக்கொண்டேயிருக்கலாம் 
சின்ன வயதிலிருந்து எனக்கும் எத்தனையோ பழக்கங்கள் விட்டுப்போகவில்லை...

அன்புடன் 
மதுரகன் 

சனி, 20 மார்ச், 2010

கிரிக்கெட் தொடர் பதிவு

நேரப் பிரச்சனைகளால் தொடர்ந்து இழுபறி நிலையில் இருத்த கிரிக்கெட் பதிவை இன்று பதிவு செய்கிறேன் ஒருவாறு . 
அழைத்தவர் - சதீஷ் (சதீஷ் இன் கில்லி) 


விதி முறைகள்:


1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். 
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை 

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்
(யாரை அழைப்பது என்ற குழப்பமும் தாமதத்திற்கு காரணம்)
கிரிக்கெட்டில் எனக்கு சர்வம் சச்சின் மயம் 
(1) பிடித்த போட்டிவகை :ஒருநாள்

     என்னைப் பொறுத்தவரையில் முழுமையான மற்றும் அளவான போட்டி முறை இதுவே, சிறப்பான தொடக்கம் பொறுமையான மைய ஓவர்கள் மற்றும் அதிரடி முடிவு என சீராக உள்ளது அத்துடன் டெஸ்ட் போட்டிக்கு அடுத்து வீரர்களின் முழுமையான திறமையை வெளிக்காட்ட கூடிய போட்டி வகை.  
(2) பிடிக்காத போட்டிவகை : T20 போட்டிகள்(பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளதாக உணர்கிறேன் மேலும் ஓரிரு ஓவர்களே முடிவுகளை தீர்மானிகின்றன பொதுவாக அடுத்து மட்டை அடி அடிப்பவர்களும் ஏனோ தானோ என்று பந்து வீசுபவர்களும் பெயர் பெரும் இடம். மேலும் இனிப்பு அதிகரித்தால் தெவிட்டும் நிலை ஏற்படுமே எனக்கு இங்கு அதுதான் ஏற்படுகிறது)   
    டெஸ்ட் போட்டிகள். உண்மையில் சிறந்த ஒரு போட்டி வடிவம் தான் அதிரடி மட்டுமன்றி பூரணமான துடுப்பாட்ட திறமையும் சீரான தொடர்ந்த பந்து வீச்சும் மட்டுமே இங்கு எடுபடும் அதாவது உண்மையான திறமைக்கு சரியான அங்கீகாரம், ஆனால் 5 நாட்கள் அரக்க பறக்க விளையாடியும் ஒருவரும் வெற்றி பெறாவிட்டால் அது எல்லாம் ஒரு போட்டியா என்று தோன்றுகிறது .

(3) பிடித்த அணி : இந்தியா 
(4) பிடிக்காத அணி : எதுவுமில்லை. ஏனென்றால் எனக்கு இந்த பிடிக்காத விடயங்களை வைத்து அரசியல் செய்வது பிடிக்காது. எனக்கு இந்திய பிடிகிறதா இந்திய வென்றால் ரசிப்பேன் தோற்றாலும் ரசிப்பேன் ஏனென்றால் எனக்கு பிடிக்கிறது. இந்திய விளையாடாத தருணத்தில் இன்னொரு அணி தோற்கவேண்டுமென ஆசைப்படமாட்டேன். (ஏனோ தெரியவில்லை பல இலங்கை அணி ரசிகர்கள் இந்திய அணி கென்யாவுடன் விளையாடினால் கூட தோற்கவேண்டுமென ஆசை கொள்கிறார்கள்)

(5) பிடித்த துடுப்பாட்ட வீரர்கள் : ஒட்டு மொத்தமாக - சச்சின்
                                                         சச்சின் தவிர இந்தியாவில் - கபில் தேவ், கங்குலி, டிராவிட் 
                                                         மற்றைய அணிகளில் - சனத், Nathan Astle , Lara   
(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்கள் : Ricky Ponting (சச்சின் சாதனைகளை நெருங்கும் எண்ணத்தில் இருப்பதால்)

(7) பிடித்த விக்கட் காப்பாளர் : மார்க் பௌச்சர், டோனி   

(8) பிடிக்காத விக்கட் காப்பாளர் : நயன் மொங்கியா (ஏனோ தெரியாது இந்த ஆள் முகத்தை கண்டாலே ஏறுது 

(9) பிடித்த களத்தடுப்பாளர் : யுவராஜ் சிங், Andrew Symonds , நம்ம சச்சின்   

(10) பிடிக்காத களத்தடுப்பாளர் : முனாப் படேல் (பந்தை விட்டுட்டு அப்பாவியா சிரிப்பாரே அவர்தான்)

(11) பிடித்த வேகப் பந்து வீச்சாளர் : கபில் தேவ், மக் கிராத், பிரவீன் குமார் 
   
(12) பிடிக்காத வேகப் பந்து வீச்சாளர் : ஸ்ரீசாந்த் (இவர் அணியிலே உள்ள ஒரு ஜோக்கர் என்பது என் கருத்து)

(13) பிடித்த ஸ்பின்னர் : வேற யாரு கும்ப்ளே 

(16) பிடிக்காத ஸ்பின்னர் : அஜந்தா மென்டிஸ் (சத்தியமா அதுக்கு இவர் காரணமில்லை இவரை பெரிய ஆளாகிய ஊடகங்கள் தான் காரணம்)

(17) பிடித்த ஆடுகளங்கள் : உலகத்தில சச்சின் செஞ்சரி அடித்த எல்லா ஆடுகளங்களும். ஆனால் பந்து நன்றாக மேலெழும் ஆடுகளங்களில் பந்து சிறந்த பந்து வீச்சாளர்கள் அகப்பட்டால் பார்த்துக்கொண்டே இருக்கலாம். 

(18) பிடிக்காத ஆடுகளங்கள் : கீப்பர் காறித்துப்பினா கோச்சருக்கு சத்தம் கேட்கும் நியூசிலாந்து ஆடுகளங்கள்(இதுக்கு இன்டோர் கிரிக்கெட் வைக்கலாம் ). தம்புள்ளை(முரளியை நம்பியே உருவாகப் பட்ட ஒன்று)     

(19) பிடித்த சகலதுறை வீரர் : கபில் தேவ் , ரொபின் சிங்,  இர்பான் பதான், சனத்

(20) பிடிக்காத சகலதுறை வீரர் : ரொமேஷ் பவார் (இவரை நாங்கள் செல்லமாக தார் பீப்பா என்று அழைப்போம் உருவம் காரணமாக அவரின் ஹேர் ஸ்டைலும் திருவிழாவில் 20 ரூபாவிற்கு வாங்கிய சிவப்பு பிரேம் கண்ணாடியும் மறக்க முடியாதவை, யாவரை என் அணியில் வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து 2 எடுகோள்கள் எடுத்தோம் ஒன்று சரத் பவார் இவரது மாமாவாக இருக்கலாம் அல்லது திருஷ்டிக்காக இருக்கலாம்)
சகலதுறை வீரராம்..? 

(21)பிடித்த அணித் தலைவர் : இந்தியாவில் கேள்விப்பட்ட வகையில் கபில், பார்த்தவகையில் அசார்டீன், கங்குலி, டோனி 
மற்ற அணிகளில் Steve Waugh, Hanzy Cronje(எழுத்து சரி என்று நினைக்கிறேன் இவரை நினைவிருக்கா யாருக்கும்)  
நினைவிருக்கா? 
(22) பிடிக்காத அணித்தலைவர் : பொண்டிங், மஹேல, யூனிஸ் கான்
(23) கனவான் வீரர்கள் : சச்சின், டிராவிட் (இருவரிலும் முக்கிய ஒற்றுமை ஒரு பந்து வீச்சை எதிர் கொண்ட பின்னர் மறு புறம் திரும்பி விடுவார்கள் பந்து வீச்சாளர் என்ன சொல்கிறார் என்ற கவலை எல்லாம் படாது..)

(24) பிடித்த வர்ணனையாளர் : டோனி கிரேக், ஹர்ஷா போக்லே, ரவி சாஸ்த்ரி இவர்களை விட எதோ ஒரு போட்டியில் சங்ககாரவின் வர்ணனை கேட்டேன் பிடித்துக்கொண்டது    

(25) பிடிக்காத வர்ணனையாளர் : சேனல் ஐ இலே சகோதர மொழியில் அறிவிக்கும் எவருமே (எனக்கு அவ்வளவாக மொழி புரியாவிட்டாலும் அவர்கள் அறுவை என்பது புரியும்)

(26) பிடித்த பயிற்றுவிப்பாளர் : ஜான் ரைட், வாட்மோர்     (27) பிடிக்காத பயிற்றுவிப்பாளர் : கிரேக் சப்பல் (போடா டேய்...)

(28) பிடித்த போட்டி : பொதுவாக இந்திய விளையாடும் போட்டி மட்டும் தான் பார்ப்பேன் ஆகவே அனைத்துப் போட்டிகளும் பிடிக்கும். 

(29) பிடித்த வளரும் வீரர் : ரோஹித் ஷர்மா(இவரை வளர்த்தெடுக்க வேண்டும் எல்லா வகையான போட்டிகளிலும் அதன் தன்மை அறிந்து விளையாடும் ஆற்றல் உள்ள இந்த தலைமுறை வீரர்) 
 பிரவீன் குமார் - எனக்கு இவர் உத்தர பிரதேச அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகத்தான் அறிமுகமானார் சிறந்த ஒரு சகலதுறை வீரர் ஆகக்கூடிய ஆற்றல் இவரிடம் உண்டு என்பது என் கருத்து. 

(30) பிடிக்காத வளரும் வீரர் : பிரக்யன் ஓஜா (ஆரம்பத்திலேயே இவ்வளவு படம் கூடாது, கிட்டத்தட்ட இவரின் நிலையில் உள்ள அமித் மிஸ்ரா எவ்வளவு சாந்த மாக இருக்கிறார்.)எல்லாம் என் எண்ணங்கள் விருப்பங்கள் யாரையும் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும், 
அன்புடன் 
மதுரகன் 

நான் அழைப்பவர்கள் - எனக்கு பதிவுலக அறிமுகங்கள் குறைவு தெரிந்தவர்களில் இதுவரை தொடர் பதிவு இடாதவர்களை அழைக்கிறேன் 
ஸ்ரீதர்ஷன் - பதியவும் பகிரவும்   
கண்ணன் - Indian Tamil Cinema (சினிமாவைப் பற்றியே பதிவெழுதி பிரபலமாகி விட்ட நபர் பார்ப்போம் கிரிக்கெட் இற்கு என்ன சொல்கிறார் என்று)
ஹரன் - Harans

புதன், 17 மார்ச், 2010

கிரிக்கெட் தொடர்பதிவு முன்னோட்டம்

பலர் கிரிக்கெட் தொடர்பதிவு போட்ட போது நானும் பார்த்தேன், என்னை யார் அழைக்கப்போகிறார்கள் என்று, அன்பிற்காக என்று சதீஷ் அழைத்த பிறகு நேரப்பற்றாக்குறையால் சில நாட்கள் தாமதித்து இன்று தருகிறேன்.   
எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியும் ஆனால் நான் ஒரு batsman உம் இல்லை baller உம் இல்லை keeper உம் இல்லை. அப்பா என்ன என்று கேட்காதீர்கள் எல்லாம் தெரியும் ஆனா எல்லாம் சொதப்பல் ஆனாலும் ஆர்வம் விடாததால் இன்றுவரை மைதானத்தில் இறங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்.  சிறு வயதிகிருந்தே பெண்கள் அதிகம் இருந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். அதனால் பாடசாலை வந்து ஓரளவு வளரும் வரை எனது விளையாட்டெல்லாம் தாயம், கெந்திக்கோடுதான்(தெரியாதவர்கள் அருகிலுள்ள சிறு பெண்களிடம் கேட்டுக்கொள்க). ஆகவே விளையாடி அனுபவம் இல்லை, பக்கத்திலேயே மைதானம் இருந்தும் கேட்ட சகவாசம் வந்துவிடும் என அங்கு போகவும் அனுமதி இல்லை. 
ஆனாலும் ஓரளவு சிறு வயதிலேயே தந்தையுடன் அமர்ந்து கிரிக்கெட் தொலைக்காட்சியில் பார்க்க பழகிக்கொண்டேன். முற்றாக புரிந்து நான் பார்த்த முதல் போட்டி எது என்று நினைவுக்கு வரவில்லை. ஆனாலும் எனக்கு 9 வயது இருக்கும் போது நடந்த உலகக்கிண்ணம் 1996 போட்டிகளில் ஒன்றுதான் என்பது உறுதி. 
முதல் அனுபவங்கள் எப்படியும் மறக்க இயலாதவை தானே அதுதான் எனக்கும் நடந்தது. சச்சின் அந்த உலககின்னப்போண்டியில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். பெயர் கூட தெரியாது அப்பா சொன்ன பெயரை காதில் வாங்கி எனக்கேற்றபடி செந்தில்காந்த் என்று அழைத்துக்கொண்டேன். சச்சின் எப்போது பிடித்ததோ அன்று முதல் தான் கிரிக்கெட் மிகவும் பிடித்தது. இன்று சச்சின் விளையாடாவிட்டால் நான் போட்டிகள் பார்ப்பதே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு ஒரு சச்சின் பைத்தியம். சச்சின் பிடித்ததால் இந்திய அணியும் பிடித்தது. அப்படியே அதில் விளையாடிய சிலரும்.   

அடுத்தது இந்திய அணியை பிடித்துக் கொண்டதால் நான் பட்ட துன்பங்கள் ஏராளம் தேசத்துரோகி என்றார்கள் சிலர், அதை விட பெரும்பான்பை இன நண்பர்கள் சிலர் தீவிரவாதி என்றார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு பதில் நான் ஒரு இந்து என்ற படியால் சிவனை வலி படுகிறேன் அது என் கடமை. ஆனால் கிரிக்கெட் என் பொழுதுபோக்கு அங்கு யார் என்னை மகிழ்விக்கிறாரோ அவரை ஆதரிப்பதில் என்ன தவறு. என்னை திட்டியவர்கள் கூட பிடித்த நடிகர், இசை அமைப்பாளர், கவிஞர் என்றவுடன் உடனே எண்கள் நாட்டுக்காரரையா சொல்கின்றனர். இல்லையே ??
ஆங்கிலத்தில் சொல்வதானால் Cricket is an Entertainment, Ill like the Team or Person which/who mostly entertains me. இதைவிட இங்கு அரசியல் கலக்கவும் தேசப்பற்றைக் காட்டவும் எதுவும் இல்லை. பிடிக்குதா பார் இல்லாடி எழும்பிப் போ அதுதான் எனது கொள்கை. சரி இதிலே நிறைய எழுதி விட்டதால் தொடர் பதிவை தனிப்பதிவாக தருகிறேன். 

மதுரகன்      
  

வியாழன், 11 மார்ச், 2010

ஆறாவது புலன் சாத்தியமாக்குகிறார் பிரணவ் மிஸ்ட்ரி


அங்குலம் அங்குலமாக வளர்ந்து கொண்டிருந்த விஞ்ஞானம் தற்போது மீட்டர் மீட்டராக வளர ஆரம்பித்துள்ளது. இந்த நிலையின் பிரதிபலிப்பாக இந்தியாவைச் சேர்ந்த PhD மாணவரான 29 வயதான பிரணவ் மிஸ்ட்ரி ஆறாவது புலன்(Sixth Sense) எனும் சாதனத்தை உருவாக்கி கணினி மற்றும் தகவல் தொழினுட்பத்துறைக்கு சவால் விடுத்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணை இங்கே இணைத்துள்ளேன். 

">

">
">
http://economictimes.indiatimes.com/videoshow_ted/5231080.cms - முழுமையாக இங்கேயும் பார்க்கலாம் 


தொழினுட்பத்திற்கும் மனித சாதாரண வாழ்க்கை முறைக்கும் இடையான இடைவெளியை குறைக்கும் முகமான அவரது கண்டுபிடிப்புக்கள் வேறுபட்ட ஒரு வாழ்க்கைத்தளத்தை உருவாக்கும் என்பது நிச்சயமாகப் புரிகின்றது. 
உடல் அங்கங்களின் அசைவுகளைப் புரிந்து செயற்படும் கருவி ஒன்றினை அவர் 2000 ஆண்டிலேயே உருவாக்கியதும் அதை அப்போதைய இந்திய ஜனாதிபதி Dr. அப்துல் கலாம் முன்னிலையில் காட்சிப்படுத்தி பாராட்டுப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 
பின்னர் Pocket Projector, கண்ணாடி, கேமரா ஆகியவற்றினை இணைத்து ஆறாவது புலன் கருவியை உருவாக்கி உள்ளார். TabletPC, I-Pad ஆகியவை தற்போதுதான் பாவனைக்கு வந்துள்ள நிலையில் அதை விடப் பன்மடங்கு முன்னேற்றகரமான கருவி ஒன்றை உருவாக்கி உள்ளமை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் உற்பத்திப் பெறுமதி ஏறத்தாள 350 அமெரிக்க டாலர்களாக இருக்குமென அவர் கூறியதோடு இதற்குரிய OpenSource மென்பொருளை இலவசமாக வழங்குவதாக அவர் கூறினார். 
இந்தக் கருவி என்ன செய்கிறது - திரை தேவை இல்லை பெரிய அளவிலான கருவியும் இல்லை கழுத்திலே மாலை போல அணிந்து கொண்டு காதில் செவிப்பன்னியை சொருகிக்கொள்ளுங்கள் நீங்கள் செல்லும் இடமெல்லாம் வருகிறது ஆறாம் புலன். கிடைக்கும் சுவர்களின் கிடைக்காவிட்டால் வெள்ளைத் தாளினை உங்கள் திரையாக பயன் படுத்தி உங்கள் கை விரல்களாலேயே சுட்டுங்கள். கை விரல்களால் தேவையான இடங்களை படம் பிடிக்கலாம். இப்படி எத்தனையோ (Videoclip இணைப் பாருங்கள்). இது பற்றிய மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் பகிர்கிறேன்.    

அன்புடன் 
மதுரகன் 

திங்கள், 8 மார்ச், 2010

பண்டாரவன்னியன் நினைவு நடுகல் அழிப்பு

பகைவரின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டி தமிழர் வீரத்திற்கு அடையாளமாக திகழ்ந்த மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நடுகல்லை இலங்கை இராணுவம் மிலேச்சத்தனமாக அழித்துள்ளதாக Tamilmedia இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 
ஒரு மனிதனுக்கு அவனது வாரிசுகள் நடுகல் எழுப்பலாம், ரசிகர்கள் நண்பர்கள் ஏன் பெற்றோர் கூட எழுப்பலாம், ஆனால் ஒரு மனிதனுக்கு அவனது எதிரியே நடுகல் எழுப்பினான் என்றால் அவன் பெருமையை என்னவென்பது. வன்னியன் மன்னர்களின் கடைசி மன்னனான பண்டார வன்னியன் பனங்காமத்தினை தலை நகராக கொண்டு வன்னியை ஆண்டான். ஒல்லாந்தருடைய இறுதிக்கட்டத்திலும் ஆங்கிலேயர் வந்தபின் அவர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவன் வெல்லப்பட முடியாத மாவீரனாக திகழ்ந்தான். 

பலமுறை படை எடுத்தும்  வெல்லப்படமுடியாத அவனை நிறைவில் மன்னர் ஆனையிறவு திருகோணமலை என மும்முனையிலும் இருந்து படை எடுத்து வந்து வென்றனர். அப்படி வென்ற தளபதி வொன் டிரிபெர்க், பண்டாரவன்னியனின் வீரத்தினைப் பாராட்டியும் தனது பெருமையைப் பறைசாற்றவும். அவனுக்கு யுத்தம் நடந்த இடத்திலே நடுகல் ஒன்று அமைத்தான். அதிலே 1803 ம் ஆண்டு ஆசுஸ்ட் மாதம் 31 ம் திகதி இந்த இடத்திலே தன்னால் பண்டார வவ்னியன்(அவர்கள் அப்படிதான் வன்னியன் என்பதை உச்சரித்தார்கள்) தோற்கடிக்கப்பட்டதாக எழுதினான். 
இராச்சியம் இழந்த பின்னரும் மீண்டும் மீண்டும் போர் தொடுத்த பண்டாரவன்னியன் போரில் விழுப்புண் பெற்று 1811ம் ஆண்டளவில் மரணித்தான். இலங்கை அரசு கூட அவனை தேசிய வீரனாக அறிவித்து இருந்த்த நிலையில். அவனது நினைவாக 2 நூற்றாண்டுகளுக்கு மேலாக காணப்பட்டு, அனைத்து தமிழர்களாலும் புனிதப் பிரதேசமாக மதிக்கப்பட்ட அந்த நடுகல்லை காட்டுமிராண்டித்தனமாக இலங்கை இராணுவம் அளித்துள்ளமை. ரோசமுள்ள எந்த ஒரு தமிழனாலும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் இடுகை ஒன்று இடுவதைத் தவிர என்ன செய்துவிட முடியும் என்னால். அழிந்தது அழிந்தது தானே...      

இது, 
வவுனியா கச்சேரியின் முன்பாக உள்ள பண்டாரவன்னியன் சிலை. இயலாமையுடன் மிகுந்த கோபத்துடன், 
மதுரகன் 

ஞாயிறு, 7 மார்ச், 2010

விண்ணைத்தாண்டிவரும் இசைச்சாரல்

விண்ணைத்தாண்டிவருவாயா - விமர்சனம்

படம் பார்க்க முன்னரே ஏராளமான எதிர்பார்ப்புக்கள் மனதில் கிளர்ந்துவிட்டிருந்தது. அதற்கு கௌதம் மேனன்தான் முக்கிய காரணமாக இருந்தார். பலர் கூறுவதுபோல இசை அந்த அளவுக்கு ஆரம்பத்திலேயே என்னை வசீகரித்திருக்கவில்லை. ஓரளவு கேட்டபின்னர்தான் ஹோசனாவும் அன்பிலவனும் பிடித்திருந்தன. ஆனால் படம் பார்த்து வெளியே வந்தபின்னர் எனக்குத்தோன்றியது ”இசை இல்லாவிட்டால் இந்தப்படம் ஒன்றுமே இல்லை”.

பரீட்சை காரணமாக படம் பார்ப்பது தாமதமானது இன்னும் ஆவலைக் கிளறிவிட பரீட்சை முடிந்த 5ம் திகதியும் இன்றுமாக இரு தடவைகள் பார்த்துவிட்டேன் (நீங்க சூடாகாதீங்க ப்ளீஸ்). இன்னும் என் மனம் அதிர்ந்து கொண்டிருக்கிறது. மனதிற்குள்ளேயே பாடல்களை றிவைண்ட் செய்து செய்து மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பின்னணி இசையும் பாடல் இசையும் படத்தில் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் படம் முழுக்க வியாபிக்கிறார். இசையைப் பற்றியே ஒரு தனி இடுகை எழுதலாம் என்பதால் அதை விடுத்து மீதியைப்பார்ப்போம்.

படத்தில் அடுத்த ஆச்சரியம் சிலம்பரசன், எனக்கு சிறுவயதில் இவர் படங்கள் பிடிக்கும், ஏனென்று தெரியாது அந்த வயதில் அது பிடித்திருந்தது. ஆனால் ஹீரோ ஆன பிறகு நான் இவரை ரசித்த படங்கள் வெகு குறைவு. முக்கியமாக தொட்டிஜெயா அதைவிட மன்மதனில் கொஞ்சம் அவ்வளவுதான் ஏனைய படங்கள் ஒன்றைக்கூட முழுமையாக நான் பார்க்கவில்லை. பாதியில் STOPதான். ஆனால் அடக்க ஒடுக்கமாக ஒரு சாதாரண 22 வயது இளைஞனாக இப்படி ஒரு சாதாரண நடை, ”உடை”, பாவனையில் அவரைப் பார்ப்பது புதுமையாக இருந்தது. எல்லாப் பெருமையும் கௌதம் மேனனுக்கே. நடிப்பு நடனம் இரண்டிலும் வெளுத்துக் கட்டி இருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்வதானால் த்ரிஷாவிடம் காதல் வயப்பட்ட பின்னர் இவர் நடவடிக்கைகள். குறிப்பாக காதலைச் சொல்லும் இடம். முதல் ஸ்பரிஷம், முதல் முத்தம் போன்ற இடங்களில் ஒரு புதுக்காதலனின் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்துள்ளார்(எவ்வளவோ பண்ணியாச்சு, இதப்பண்ண மாட்டோமா..?). வயது குறைந்து அழகாக அடக்கமாக, ஆனால் ஒரு இடத்தில் ”என்னப் பார்க்கப் பார்க்கத்தான் பிடிச்சுதா என்று தனுஷைக் கடிக்கவும் மறக்கவில்லை. இப்பிடியே தொடர்ந்தால் நிச்சயம் தொடர் வெற்றிதான். ஆனாலும் ஒரு சில இடங்களில் மன்மத, வல்லவ பாதிப்புகளை வெளிக்காட்டாமலில்லை. எங்களுக்குள்ளே நல்ல Chemistry இருக்கென்று கூறிக்கொண்டாலும் நல்ல Physicsஇனை வெளிப்படுத்த முயன்றுள்ளார். 

 அடுத்துத் த்ரிஷா, அழகாக இருக்கிறார். பொருத்தமாக நடித்துள்ளார். அழகாக நடித்துள்ளார். திருமணம் தடைப்பட்ட இரவில் சிம்பு பிரிந்துபோகுமிடத்தில் மற்றும் படப்பிடிப்புக்காக சிம்பு கோவா செல்லும் இடத்தில் அவரது முகபாவம் கண்ணுக்குள் அப்படியே. ஆனால் மோசமான ஒரு நடை நடந்திருக்கிறார். இதுவரை எந்தப்படத்திலும் அவரது நடையைப் பார்த்த நினைவில்லை. கௌதம் செம risk எடுத்திருக்கிறார். சிம்புவே ஓரிடத்தில் Funny Walk என்று குறிப்பிடுவார். மேலும் சிம்புவுடன் பேசும்போது வசனத்திற்கு வசனம் கார்த்திக் என்று பெயர் குறிப்பிடுவது ஒரு மாதிரி செயற்கைத்தனமாக உள்ளது.

கணேஷ் காக்க காக்க ஒளிப்பதிவாளராக அறிமுகமானாலும் இதன் உண்மை ஒளிப்பதிவாளர் அவரல்ல என்பது உறுதி. ஆனால் அவர் ஒரு ஒளிப்பதிவாளரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவரது பேச்சு வித்தியாசமாகவும் நகைச்சுவையாகவும் உள்ளதுடன். கௌதம் அவரூடாக தான் திரைப்படத்தில் நுழைந்து கதையைக் கொண்டு சென்றுள்ளதாக நான் உணர்கிறேன். அதாவது கணேஷ் என்ற கதாபாத்திரம் கௌதம் மேனனின் பிம்பம் அல்லது சுயபிரதிபலிப்பு. இதே போன்ற ஒரு கதாபாத்திரம் வாரணம் ஆயிரத்திலும் வரும் சங்கர் மேனன் என்று கதாநாயகனுக்கு வாழ்க்கையில் பிடிப்பூட்டும் நபராக வருவார். அவரையும் நான் கௌதமின் பிரதிபலிப்பாகத்தான் பார்த்தேன். இது போன்று கதாபாத்திரங்களூடு தங்கள் சுயத்தினை நுழைக்கும் இயல்பு பல இயக்குநர்களிடம் உண்டு. ஏனைய நடிகர்களும் மிகையின்றி கதைக்குத்தக்க நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் கௌதம் மேனனுக்கு சரியான இணை, காட்சியமைப்புக்களிடையே அவரும் கலை இயக்குநர் ராஜீவனும் கலந்திருக்கின்றனர், அற்புதமாக... 
நிறைவாக கௌதம் மேனன், இயக்கம், கதை இலாகா...
கதை - கேட்டுப் பழகி கேட்டுக்கொண்டிருக்கும் கதைதான் ஆனால் இசை உணர்வுகளைத் தூண்டிவிட்டு கதைக்கு உயிரூட்டியுள்ளது. எல்லாரும் படம் நன்றாக உள்ளதென்று கூறக்காரணம் அது அவர்கள் உணர்வுகளைத் தொட்டுள்ளது. அதற்கு மூல காரணம் என்னைப்பொறுத்தவரை இசைதான். காட்சியமைப்பற்றி பலர்கூறலாம். காட்சியமைப்பு அருமையாகத்தான் உள்ளது ஆனால் இசை அளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை அல்லது கதையோடு இணையவில்லை. கௌதம் காட்சிகளைத் தெரிவுசெய்து நடிகர்களைத் தெரிவுசெய்து விட்டுத்தான் கதையை திரைக்கதை எழுதுவார் என்று நினைக்கிறேன். அதற்கு ஒரு உதாரணம் கத்தோலிக்கரான த்ரிஷாவின் சொந்த ஊராக கேரளாவைக்காட்ட காரணமென்ன ஒரு வேளாங்கண்ணியோ அல்லது சென்னை பாரிமுனையாவோ இருக்கக் கூடாதா..? ஏன்? அவர் கேரளாவில் படம் பிடிக்கவென்றே கதை அப்படிப்போகின்றது. அடுத்து நடிகர்களின் நடிப்புத்திறமையை விட நிறம் மற்றும் தோற்றத்திற்கு முக்கியம் கொடுப்பார் என்று நினைக்கின்றேன்.

மேலும் அதிகரித்த ஆங்கில வசனங்களும் பாடல்காட்சிகளில் பின்னணியில் வரும் குழந்தை கூட வெளிநாட்டவராக இருப்பதும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனா ஊனா என்றால் அமெரிக்காவிற்கு ஓடும் வழக்கம் மோட்டாசைக்களில் போகும் பாடல்கள், கத்தோலிக்க தேவாலயங்கள், ரயில் காட்சிகள், காதலில் ஒரு இணையின் பிரிவு என்பன கௌதமிடமிருந்து பிரிக்க இயலாது தொடர்கின்றன. ஆனால் ஒரு கவிஞனும் தனது கவிதையின் பிடித்த வரிகளை மீண்டும் மீண்டும் பயள்படுத்துவது போன்றதுதான் இது என உணரவேண்டும் பார்ப்பவர்கள். அடுத்து எடுத்துக்கொண்ட கதையை பார்ப்பவரிடம் கொண்டு செல்லும் ஆற்றலில் தனக்கிருக்கும் சிறப்புத் தேர்ச்சியை இன்னுமொருமுறை நிரூபித்துள்ளார். படத்தில் வரும் ஒரே ஒரு சண்டைக்காட்சி படத்துடன் ஒட்டவில்லை அல்லது என் மனதில் ஒட்டவில்லை அத்துடன் முதல் பார்வையில் காதல் என்படும் நிச்சயமாக நடக்காது என்று தெரிந்தும் மேலும் தொடர்வதும் சற்று நெருடலாக உள்ளது. இனி மேலாவது முதல்ப் பார்வைக்காதல் விடயங்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்கப்படவேண்டும் என்பது என் ஆவல்.

படத்தில் இரு இடங்களில் வரும் இந்த வரி எனக்கு அருமையான கவிதையாக இருந்தது ”காதலைத் தேடி நாங்கள் போகக்கூடாது, அதுவா நடக்கவேண்டும், அதுவா நிலைக்கவேண்டும், எங்களைப் போட்டுத் தாக்க வேண்டும், தலைகீழாகத் திருப்பவேண்டும் எப்பவும் கூடவே இருக்கவேண்டும் அதுதான் உண்மைக்காதல்” - இன்னொரு வரைவிலக்கணம்.
மற்றையது இடையிடையே நான் போட்ட படங்களைப்பார்த்து சந்தேகம் வந்திருக்கலாம், இவர்கள் கார்த்திக் இயக்கும் ஜெஸ்ஸி படத்தின் நடிகர்கள்தானே என்று ஆம் அத்துடன் இவர்கள்தான் விண்ணைத்தாண்டிவருவாயாவின் தெலுங்குப்பதிப்பான யே மாயா சேசாவே(சுந்தரத்தெலுங்கு தவறென்றால் மன்னிக்கவும்) இனது கதாநாயகன் நாக சைத்தன்யா மற்றும் கதாநாயகி சமந்தா ஆகியோர்.   

மதுரகன்

  
 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...