ஞாயிறு, 7 மார்ச், 2010

விண்ணைத்தாண்டிவரும் இசைச்சாரல்

Posted on பிற்பகல் 3:56 by செல்வராஜா மதுரகன்

விண்ணைத்தாண்டிவருவாயா - விமர்சனம்

படம் பார்க்க முன்னரே ஏராளமான எதிர்பார்ப்புக்கள் மனதில் கிளர்ந்துவிட்டிருந்தது. அதற்கு கௌதம் மேனன்தான் முக்கிய காரணமாக இருந்தார். பலர் கூறுவதுபோல இசை அந்த அளவுக்கு ஆரம்பத்திலேயே என்னை வசீகரித்திருக்கவில்லை. ஓரளவு கேட்டபின்னர்தான் ஹோசனாவும் அன்பிலவனும் பிடித்திருந்தன. ஆனால் படம் பார்த்து வெளியே வந்தபின்னர் எனக்குத்தோன்றியது ”இசை இல்லாவிட்டால் இந்தப்படம் ஒன்றுமே இல்லை”.

பரீட்சை காரணமாக படம் பார்ப்பது தாமதமானது இன்னும் ஆவலைக் கிளறிவிட பரீட்சை முடிந்த 5ம் திகதியும் இன்றுமாக இரு தடவைகள் பார்த்துவிட்டேன் (நீங்க சூடாகாதீங்க ப்ளீஸ்). இன்னும் என் மனம் அதிர்ந்து கொண்டிருக்கிறது. மனதிற்குள்ளேயே பாடல்களை றிவைண்ட் செய்து செய்து மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பின்னணி இசையும் பாடல் இசையும் படத்தில் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் படம் முழுக்க வியாபிக்கிறார். இசையைப் பற்றியே ஒரு தனி இடுகை எழுதலாம் என்பதால் அதை விடுத்து மீதியைப்பார்ப்போம்.

படத்தில் அடுத்த ஆச்சரியம் சிலம்பரசன், எனக்கு சிறுவயதில் இவர் படங்கள் பிடிக்கும், ஏனென்று தெரியாது அந்த வயதில் அது பிடித்திருந்தது. ஆனால் ஹீரோ ஆன பிறகு நான் இவரை ரசித்த படங்கள் வெகு குறைவு. முக்கியமாக தொட்டிஜெயா அதைவிட மன்மதனில் கொஞ்சம் அவ்வளவுதான் ஏனைய படங்கள் ஒன்றைக்கூட முழுமையாக நான் பார்க்கவில்லை. பாதியில் STOPதான். ஆனால் அடக்க ஒடுக்கமாக ஒரு சாதாரண 22 வயது இளைஞனாக இப்படி ஒரு சாதாரண நடை, ”உடை”, பாவனையில் அவரைப் பார்ப்பது புதுமையாக இருந்தது. எல்லாப் பெருமையும் கௌதம் மேனனுக்கே. நடிப்பு நடனம் இரண்டிலும் வெளுத்துக் கட்டி இருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்வதானால் த்ரிஷாவிடம் காதல் வயப்பட்ட பின்னர் இவர் நடவடிக்கைகள். குறிப்பாக காதலைச் சொல்லும் இடம். முதல் ஸ்பரிஷம், முதல் முத்தம் போன்ற இடங்களில் ஒரு புதுக்காதலனின் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்துள்ளார்(எவ்வளவோ பண்ணியாச்சு, இதப்பண்ண மாட்டோமா..?). வயது குறைந்து அழகாக அடக்கமாக, ஆனால் ஒரு இடத்தில் ”என்னப் பார்க்கப் பார்க்கத்தான் பிடிச்சுதா என்று தனுஷைக் கடிக்கவும் மறக்கவில்லை. இப்பிடியே தொடர்ந்தால் நிச்சயம் தொடர் வெற்றிதான். ஆனாலும் ஒரு சில இடங்களில் மன்மத, வல்லவ பாதிப்புகளை வெளிக்காட்டாமலில்லை. எங்களுக்குள்ளே நல்ல Chemistry இருக்கென்று கூறிக்கொண்டாலும் நல்ல Physicsஇனை வெளிப்படுத்த முயன்றுள்ளார். 

 அடுத்துத் த்ரிஷா, அழகாக இருக்கிறார். பொருத்தமாக நடித்துள்ளார். அழகாக நடித்துள்ளார். திருமணம் தடைப்பட்ட இரவில் சிம்பு பிரிந்துபோகுமிடத்தில் மற்றும் படப்பிடிப்புக்காக சிம்பு கோவா செல்லும் இடத்தில் அவரது முகபாவம் கண்ணுக்குள் அப்படியே. ஆனால் மோசமான ஒரு நடை நடந்திருக்கிறார். இதுவரை எந்தப்படத்திலும் அவரது நடையைப் பார்த்த நினைவில்லை. கௌதம் செம risk எடுத்திருக்கிறார். சிம்புவே ஓரிடத்தில் Funny Walk என்று குறிப்பிடுவார். மேலும் சிம்புவுடன் பேசும்போது வசனத்திற்கு வசனம் கார்த்திக் என்று பெயர் குறிப்பிடுவது ஒரு மாதிரி செயற்கைத்தனமாக உள்ளது.

கணேஷ் காக்க காக்க ஒளிப்பதிவாளராக அறிமுகமானாலும் இதன் உண்மை ஒளிப்பதிவாளர் அவரல்ல என்பது உறுதி. ஆனால் அவர் ஒரு ஒளிப்பதிவாளரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவரது பேச்சு வித்தியாசமாகவும் நகைச்சுவையாகவும் உள்ளதுடன். கௌதம் அவரூடாக தான் திரைப்படத்தில் நுழைந்து கதையைக் கொண்டு சென்றுள்ளதாக நான் உணர்கிறேன். அதாவது கணேஷ் என்ற கதாபாத்திரம் கௌதம் மேனனின் பிம்பம் அல்லது சுயபிரதிபலிப்பு. இதே போன்ற ஒரு கதாபாத்திரம் வாரணம் ஆயிரத்திலும் வரும் சங்கர் மேனன் என்று கதாநாயகனுக்கு வாழ்க்கையில் பிடிப்பூட்டும் நபராக வருவார். அவரையும் நான் கௌதமின் பிரதிபலிப்பாகத்தான் பார்த்தேன். இது போன்று கதாபாத்திரங்களூடு தங்கள் சுயத்தினை நுழைக்கும் இயல்பு பல இயக்குநர்களிடம் உண்டு. ஏனைய நடிகர்களும் மிகையின்றி கதைக்குத்தக்க நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் கௌதம் மேனனுக்கு சரியான இணை, காட்சியமைப்புக்களிடையே அவரும் கலை இயக்குநர் ராஜீவனும் கலந்திருக்கின்றனர், அற்புதமாக... 
நிறைவாக கௌதம் மேனன், இயக்கம், கதை இலாகா...
கதை - கேட்டுப் பழகி கேட்டுக்கொண்டிருக்கும் கதைதான் ஆனால் இசை உணர்வுகளைத் தூண்டிவிட்டு கதைக்கு உயிரூட்டியுள்ளது. எல்லாரும் படம் நன்றாக உள்ளதென்று கூறக்காரணம் அது அவர்கள் உணர்வுகளைத் தொட்டுள்ளது. அதற்கு மூல காரணம் என்னைப்பொறுத்தவரை இசைதான். காட்சியமைப்பற்றி பலர்கூறலாம். காட்சியமைப்பு அருமையாகத்தான் உள்ளது ஆனால் இசை அளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை அல்லது கதையோடு இணையவில்லை. கௌதம் காட்சிகளைத் தெரிவுசெய்து நடிகர்களைத் தெரிவுசெய்து விட்டுத்தான் கதையை திரைக்கதை எழுதுவார் என்று நினைக்கிறேன். அதற்கு ஒரு உதாரணம் கத்தோலிக்கரான த்ரிஷாவின் சொந்த ஊராக கேரளாவைக்காட்ட காரணமென்ன ஒரு வேளாங்கண்ணியோ அல்லது சென்னை பாரிமுனையாவோ இருக்கக் கூடாதா..? ஏன்? அவர் கேரளாவில் படம் பிடிக்கவென்றே கதை அப்படிப்போகின்றது. அடுத்து நடிகர்களின் நடிப்புத்திறமையை விட நிறம் மற்றும் தோற்றத்திற்கு முக்கியம் கொடுப்பார் என்று நினைக்கின்றேன்.

மேலும் அதிகரித்த ஆங்கில வசனங்களும் பாடல்காட்சிகளில் பின்னணியில் வரும் குழந்தை கூட வெளிநாட்டவராக இருப்பதும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனா ஊனா என்றால் அமெரிக்காவிற்கு ஓடும் வழக்கம் மோட்டாசைக்களில் போகும் பாடல்கள், கத்தோலிக்க தேவாலயங்கள், ரயில் காட்சிகள், காதலில் ஒரு இணையின் பிரிவு என்பன கௌதமிடமிருந்து பிரிக்க இயலாது தொடர்கின்றன. ஆனால் ஒரு கவிஞனும் தனது கவிதையின் பிடித்த வரிகளை மீண்டும் மீண்டும் பயள்படுத்துவது போன்றதுதான் இது என உணரவேண்டும் பார்ப்பவர்கள். அடுத்து எடுத்துக்கொண்ட கதையை பார்ப்பவரிடம் கொண்டு செல்லும் ஆற்றலில் தனக்கிருக்கும் சிறப்புத் தேர்ச்சியை இன்னுமொருமுறை நிரூபித்துள்ளார். படத்தில் வரும் ஒரே ஒரு சண்டைக்காட்சி படத்துடன் ஒட்டவில்லை அல்லது என் மனதில் ஒட்டவில்லை அத்துடன் முதல் பார்வையில் காதல் என்படும் நிச்சயமாக நடக்காது என்று தெரிந்தும் மேலும் தொடர்வதும் சற்று நெருடலாக உள்ளது. இனி மேலாவது முதல்ப் பார்வைக்காதல் விடயங்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்கப்படவேண்டும் என்பது என் ஆவல்.

படத்தில் இரு இடங்களில் வரும் இந்த வரி எனக்கு அருமையான கவிதையாக இருந்தது ”காதலைத் தேடி நாங்கள் போகக்கூடாது, அதுவா நடக்கவேண்டும், அதுவா நிலைக்கவேண்டும், எங்களைப் போட்டுத் தாக்க வேண்டும், தலைகீழாகத் திருப்பவேண்டும் எப்பவும் கூடவே இருக்கவேண்டும் அதுதான் உண்மைக்காதல்” - இன்னொரு வரைவிலக்கணம்.
மற்றையது இடையிடையே நான் போட்ட படங்களைப்பார்த்து சந்தேகம் வந்திருக்கலாம், இவர்கள் கார்த்திக் இயக்கும் ஜெஸ்ஸி படத்தின் நடிகர்கள்தானே என்று ஆம் அத்துடன் இவர்கள்தான் விண்ணைத்தாண்டிவருவாயாவின் தெலுங்குப்பதிப்பான யே மாயா சேசாவே(சுந்தரத்தெலுங்கு தவறென்றால் மன்னிக்கவும்) இனது கதாநாயகன் நாக சைத்தன்யா மற்றும் கதாநாயகி சமந்தா ஆகியோர்.   

மதுரகன்

  


3 Response to "விண்ணைத்தாண்டிவரும் இசைச்சாரல்"

.
gravatar
Thenuka.S Says....

That's absolutely correct...... u have done a great job......

Music made this movie 2 become brighter.....

I also realised that...without music VTV won't reach the top...... AR.Rahman did a wonderful job..... Every time ,He proves that he is the BEST........

.
gravatar
Thenuka.S Says....

U r absolutely correct......... without music VTV is nothing.....

AR did a great job...
Everytime he proves that, he is the best.....

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...