ஞாயிறு, 27 ஜூன், 2010

உயிர்த்திருப்பு

Posted on முற்பகல் 4:04 by செல்வராஜா மதுரகன்உயிர்த்திருப்பு
            சிறுகதை
செல்வராஜா மதுரகன்
3ம் வருடம்
மருத்துவபீடம்
- 1 -

சிலநூறு மைல்கள் வடகிழக்காக ஏதோ ஒரு கிராமத்தில்,
வானம் வழக்கம் போலவே கிழக்குப்புறமாக வெளுத்துக்கொண்டிருந்தது. அதற்கு இரு நாட்களுக்கு முன்புதான் பிறந்திருந்த குட்டிகளின் ஈனமான சத்தத்தைக் கேட்டபடி மரத்தநிலையில் படுத்திருக்கும். அந்த நரைநிற நாயும், இறுதி முயற்சியாக பால்வராத அந்த முலைகளை சப்பிப்பார்த்துவிட்டு “ஓள... ஊ…” என்று ஏமாற்றம் தெரிவிக்கும் அதன் குட்டிகளும் மனித சஞ்சாரமற்ற அந்தக்காணியின் (யுத்தத்தால்) பாழ்பட்ட அந்த வீட்டினுள் அனுமதியின்றி வசித்துவரும் குடிகள்.
      வானத்தை ஆக்கிரமித்த இனம்புரியாத கரிய மேகங்கள் எழுப்பும் சத்தங்களாலும், வீசும் நெருப்புக்களாலும் அண்டையிலிருந்து இரண்டு மூன்று வீடுகளின் மனிதர் குடிபெயர்ந்து போனது ஏனென்று புரியும் அறிவில்லாததாலும், நிறைமாத கர்ப்பத்தினாலும் வேறு இடம் போகாமல் தங்கிவிட்;ட தாய்நாய்க்கு நாட்கள் நகர நகர சிக்கல்களும் புரிந்தது. நேரத்துக்கு உணவளித்த மனிதர்கள் போய்விட்டபிறகு தனது வயிற்றுக்கு உணவு தேடுவதே சிக்கலாக இருக்கும் காலத்தில் மூன்று குட்டிகளையும் ஈன்று பால் கொடுப்பது அதன் இயலுமையைச் சோதித்தது. அது தன்னாலானவரை முயன்றும் கூட குட்டிகள் ஈன்ற உடலுடன் எவ்வளவு தூரம்தான் அலைந்து திரிவது. முந்தையநாள் முழுவதும் தண்ணீரைத்தவிர ஏதும் அகப்படாததால், இன்று குட்டிகளுக்கு ஊட்ட போதியளவு பால்சுரக்கவில்லை.
      
        குட்டிகளின் பலவீனமான முனகல்கள் அதற்குள்ளிருந்த தாய்மையுணர்வை மேலும் உசுப்பிவிட, படுத்துக்கிடந்து ஆவதென்னவென்று எழுந்து நின்றது. இன்றைய தேடலுக்குச் செல்லமுன்பு குட்டிகளை வாஞ்சையுடன் நக்கிக்கொண்டது.
“வெள.. வெள.. ஒள…”
விடைபெற்றுக்கொண்டது. காணியைவிட்டு வெளியேறித்தெருவுக்கு வந்தது. ஒரு தாய்க்கே உரிய பயமும் கலவரமும் பற்றிக்கொள்ள சுற்றும் முற்றும் பார்த்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு விரைவில் திரும்பிவிடவேண்டும் என்ற எண்ணத்துடன். விரைவாக ஓட ஆரம்பித்தது. பிரதான வீதியை அடையவேண்டும் பிறகு பிரதான வீதியில் கொஞ்சத்தூரம் போனால் அடுத்துவரும் சந்தியிலுள்ள சாப்பாட்டுக்கடைதான் அதனது இலக்கு. கடைதிறக்க முன்பே சென்று காத்திருந்தால் முதல்நாள் மீதிகள் ஏதாவது கிடைக்கலாம். ஒரு எலும்புத்துண்டு, காய்ந்துபோன நாட்பட்ட ரொட்டி அல்லது இன்று காலையில் பிழிந்த தேங்காய்ப்ப+ கலந்த தண்ணீராவது கிடைத்தால் போதும் அதன் இன்றைய நாளை சமாளித்துக்கொள்ள. மனிதர்கள்தாம் நாளைக்கு நாளைக்கு என்று சேர்த்து வைப்பவர்கள். மிருகங்களுக்கு அப்படி இல்லையே…

0--------0-------0--------0

அதே வட்டாரத்தில், அதே சூழ்நிலையில் இன்னுமோர் கிராமத்தில்
அதே நாளின் மாலைநேரம்….
      மனங்களைப்போல இருண்டு வயிற்றினைப்போல வெறுமையாக இருந்த அந்தவீட்டின் வெளிப்புறத் திண்ணையில் கால்களை மடித்து கைகளைத் தலைக்கு அணையாக வைத்து படுத்துக்கிடந்தான் இரவீந்திரன். திடீரென உள்ளே குழந்தையின் அழுகுரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தான். சூரியன் தனது அன்றைய நாளுக்குரிய ஓட்டத்தை நிறைவுசெய்துகொள்ள எத்தனிப்பது புரிந்தது. கலக்கத்துடன் எழுந்து அமர்ந்தான். எதிரே அவனையே உற்றுப்பார்த்தபடி அவனது வளர்ப்பு நாள் “ஜிம்மி” அவளையே உற்றுப்பார்த்தபடி.
அதற்கு இரண்டு நாளாகச் சாப்பாடுபோடவில்லை,
தான் நேற்றிலிருந்து பட்டினி,
உள்ளே படுத்திருக்கும் அவனது மனைவியும் நான்கு மாதக்குழந்தையும் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அரைப்பட்டினி.
     
 “கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்கள் வீடுகளை, கால்நடைகளை, காணிகளை, பிழைப்பினை, எல்லாக் கஷ்டத்தையும் குடுத்திட்டு அமைதியாக இருந்து பார்க்கும் முத்துமாரியம்மனை விட்டுவிட்டு போக்கிடம் தேடிப்போனபோதே நானும் போயிருக்கவேண்டும், பாழாயப்போன மண்ணில இருந்த பற்றாலயும் என்ர உழைப்பில இருந்த நம்பிக்கையாலயும் இருக்கப்போய்.. சே…! கட்டின மனுசிக்கும் பெத்தபிள்ளைக்கும் சோறுபோட முடியாத நிலையில நான்”. அவன் மட்டும் நினைத்தா பார்த்தான், தென்னிலங்கையுடனான தொடர்புகள் அறுந்துபோகவும் பிறகு விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடைகளாலயும் விவசாயம் செய்யக்கூட கஷ்டம் வருமென்று. விதைச்சத காக்கவும் வெட்டினத விக்கவும் இயலாம. கடவுளுக்கு மேல கும்பிடுற விதை நெல்லப்பொங்கிச்சாப்பிடும்போது அவனது தொண்டைக்குள்ளால் சோறு எப்படி இறங்கும். தோட்டத்தில தோப்பில என்று தான் விதைச்சதைத் தாங்களே சாப்பிட்டு ஏதோ எப்படியோ வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க, இரண்டு மாதமாய் அதுவும் சிக்கலாகிவிட்டது. ஊரில மிஞ்சியிருந்த ஒரே கடையில அவன் மீளமுடியாத கடனாளியாகி விட்டான்.
      பசித்திருந்தே செத்துப்போக அவன் உடலில் உரம் இல்லாமலில்லை. ஆனால் பச்சைக்குழந்தை பாலுக்காக அழுவதையும், பட்டினியிருந்து இருந்து பால்சுரக்கா மார்புடன் பரிதவிக்கும் மனைவியின் முகத்தையும் பார்க்கும்போது இருக்கின்ற தைரியம் எல்லாம் இடம்தெரியாமல் ஓடிவிடும். இதற்கு மேலும் இங்கிருந்தால் தான் மனிதன் என்பதில் அர்த்தமில்லை என உணர்ந்துகொண்டு, கடையைப்பூட்ட முதல் கயிலாயத்தின்ட காலில விழுந்தாவது ஒரு அங்கர்ப்பெட்டியும் அரைக்கிலோ மாவும் வாங்கிவிடுவோமென ஆணியில் மாட்டியிருந்த பிரம்புக்கூடையையும் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கி சைக்கிளில் ஏறி ஓட ஆரம்பித்தான்.
- 2 –
முதலாவது கிராமத்தில்…
நீண்ட தூரம் ஓடிவந்தது மூச்சிரைத்தது. நாக்கை வெளியே நீட்டி மூச்சுவாங்கிக்கொண்டே கடையை நோட்டம் விட்டது. இன்னமும் கடை திறக்கப்படாததால் நிம்மதியடைந்து அருகிலிருந்த சிறுகுட்டையில் தாகத்தைத் தணித்துக்கொண்டு வழக்கமாக கடைக்குப்பைகள் வீசப்படும் அந்தத்தொட்டிக்கு அருகில் காத்திருந்தது. போட்டிக்கு வேறு யாரும் வந்துவிட்டாலம் என்னும் பயம்வேறு அதனை வாட்டிக்கொண்டிருந்தது. ஏனென்றால் சண்டைபிடிக்க அதனுடலில் துளியும் திராணியில்லை. இருவாரங்களுக்கு முன்பு வயிற்றில் குட்டிகளை சுமந்திருப்பவள் என்று பாராது எங்கிருந்தோ வந்த சிவலை ஒன்று அதன் காலினைப் பதம் பார்த்தது இப்போதுதான் கொஞ்சம் ஆறிவருகின்றது.
      மெல்லத்திறக்கப்பட்ட பின்கதவினூடு ஒரு பையன் வந்து தட்டுநிறைய எதையோ கொட்டிவிட்டுப்போக, இன்றைக்கு நல்ல விருந்து என்று மோப்பம் பிடித்தபடி ஆவலுடன் வாயை வைத்தது.
“ஓள.. ஊ….”
திடீரென தொடையில் சுருக்கென்று ஏதோ ஒன்று தைத்தது. பின்னால் திரும்பிப்பார்க்க கையில் ஒரு நீண்டதடியுடன் இருவர். ஏதோ ஒரு வலி உடல் முழுவதும் பரவிச்செல்ல கிடந்து துடித்தது. கண் இருட்டிக்கொண்டு வந்தது. இன்னமும் முழுமையாக கண்திறந்து பார்க்கமாட்டாத தன் குட்டிகளின் நிலையை நினைத்துக்கொண்டிருந்த கணத்துடன் நினைவிழந்தது.

“இண்டைக்கு விடியவே நல்ல வேட்டை, அஞ்சு நாய் அம்பிட்டிட்டு” என்று கூறிக்கொண்டே அதன் உடலை எடுத்துப் பின்னால் நின்ற வண்டியில் போட்டான், வந்தவர்களில் ஒருவன்.
0--------0-------0--------0

இரண்டாவது கிராமத்தில்…
     
      கடையை அண்மித்ததும் மெல்ல சைக்கிளால் இறங்கி அருகிலுள்ள மரத்துடன் சைக்கிளைச் சாத்திவைத்துவிட்டு கூடையுடன் சென்று கடைக்கு முன்னாலிருந்த சுவரோரத்தில் அமர்ந்து கொண்டான். இவனைக்கண்டவுடனே கயிலாயம் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டான். கடையிலிருந்த ஓரிருவர் செல்லும்வரை பொறுமையுடன் இருந்த இரவீந்திரன் கதைக்கத்தொடங்கினான். “சைக்கிள விட்டுட்டுப்போறன்”. கயிலாயம் மௌனம் சாதித்தார்.
      இரவீந்திரன் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான். “இந்த உதவிய இண்டைக்கு நீங்கள் செய்தா நாளைக்கு என்ர பிள்ளை உயிரோட இருக்கும்”. அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. கயிலாயம் திடுக்கிட்டுவிட்டார், அவர் இப்படி ஒரு வசனத்தை எதிர்பார்க்கவில்லை. அவரும் மனுசர்தானே. அதற்கு மேல் தாமதியாது என்னவென்று கேட்காமலே அவன் வழக்கமாய் வாங்கும் அங்கர், ஒரு கிலோ மா, அரைக்கிலோ உருளைக்கிழங்கு சுத்திக்கொண்டுவந்து கொடுத்தார்.
“சைக்கிளையெல்லாம் விட்டிட்டுப்போயிடாத எல்லாம் பிறகு பார்ப்பம், வாங்கி வச்சுக்கொண்டு நான் மட்டும் என்னசெய்ய அங்க இங்க விழுறது இங்க விழுந்தா எல்லாம் சாம்பல்தானே…”. வாயினாலே நன்றிகூறக்கூடிய நிலையில் இல்லாத அவன் கண்களாலேயே நன்றி கூறிவிட்டு மரத்தடியில் சென்று சைக்கிளை எடுத்தான்.
“டொம்ம்ம்…..” என்று மிகப்பெரும் அதிர்வுடன் சத்தம் கேக்க ஏதோ பிரச்சினை என்று புரிந்துகொண்டு அவசரமாக அவசரமாக சைக்கிளை மிதித்துச்சென்றான். சற்று நேரத்துக்குள் “சட் சட் சட் சட் சட்….” என்று சத்தம் ஆரம்பிக்கின்றது. இரவீந்திரனுக்கு முதுகில் ஏதோ ஊசி குத்தியதுபோல உணரும்போதே சைக்கிளுடன் கீழே சரிந்தான். கொஞ்சம் கொஞ்சமாக செந்நிறநீர் பெருக்கெடுக்கு அவனைச் சூழ்கிறது. கண் இருட்டிக்கொண்டு வருகிறது, மூச்சிரைக்கிறது, நினைவுகள் மெல்ல மெல்ல அகலும் போது காட்சிகள் மாறி மாறி கண்முன் வந்துபோகின்றன. இன்னமும் தெளிவாக அவன் முகத்தைப் பார்த்தறியாத அவன் குழந்தைக்கு அவன் முகம் தெரியாமலே போகப்போகிறதா… வீட்டைத்தாண்டி வெளியுலகம் அறியாத அவன் மனைவி….?
நேரம் கடந்தும் கணவன் திரும்பாததால் திண்ணையில் அமர்ந்திருந்து படலையைப் பார்த்தபடியே குழந்தைக்கு சீனித்தண்ணி பருக்கிக்கொண்டிருக்கிறாள் இரவீந்திரன் மனைவி. யாருமற்ற வீதியில் இரத்தவெள்ளத்தில் இரவீந்திரன் சடலம்.

- 3 -
சில மாதங்களுக்குப்பின்பு,
ஒரு பற்றரி வானொலியின் காலைச்செய்திகளில்…..
“அமைச்சரவைத்தீர்மானங்களை அறிவிக்கும் கூட்டத்திலே இன்று முக்கியமான ‘சிந்தனை’ ஒன்று உருவாக்கம். அதன்படி நாய்களைக்கொல்வது தண்டனைக்குரிய குற்றம் என இன்றிலிருந்து அழுலுக்கு வரும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவிப்பு.
0--------0-------0--------0
அடுத்த அடுத்த நாட்களில்,
இன்னமும் சில தூரங்களுக்கு அப்பால்,
      அதேபோல் கிழக்குப்புறமாக வானம் விடிந்துகொண்டிருக்க ஒரு இறைச்சித்துண்டுக்காக கூட்டமாக சண்டைபோட்டபடி சில நாய்களும் அதற்கு அப்பால் இன்னமும் வீடு திரும்பாத அப்பாவை எதிர்நோக்கி வேலியருகில் தூங்காமல் காத்திருக்கும் சிறுமியும் மற்றோர் ஆளில்லாத வீதியில் ஓரமாக கிடக்கும் ஓரிரு துவிச்சக்கர வண்டிகளும்….

“முற்றும்”


 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...