ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

இரு கண்களும் சில சூரியன்களும் - பாகம் 2

Posted on PM 12:47 by செல்வராஜா மதுரகன்


பாகம் இரண்டு
அன்று..
வெகு நாட்களுக்குள்ளேயே சலனமடைந்து கிடந்த
என் மனதில் அவள் தவிர்க்கப்படவேண்டியவளானாள்....
             
ஆனாலும் சாக்கடை நீரும் கஷ்டப்பட்டாவது            
அந்த தேவதையின் பிம்பத்தை தன்னில் பிரதிபலிக்கவே            
எண்ணுவது போலே...
          
தீ சுட்டபின்பும் அது சுகம் என்றெண்ணி மெல்லக்கைகளை
அருகே பிடிக்கும் குழந்தை போலே..
கட்டுப்பாடிழந்த என்கால்கள் சரியாக அந்தப்பொழுதில் என்னை            
அந்த நடைபாதைக்கு அழைத்துச்செல்கின்றன...
           
            ஏதோ ஒரு அவமானம் அந்த வீதியில் என்னை
            நிர்வாணமாக்குகின்றது...
            என் தன்மானக்கொம்புகள் உடலெங்கும் குத்திட்டு நிற்கின்றன..

என்றாலும்...
            கடைக்கண்ணால் பார்த்தபடி தவிர்க்கமனமின்றி இனிப்பை மறுக்கும்
            சர்க்கரை நோயாளியைப்போல நானும் அகல்கிறேன்...
            வானைப்பார்த்தபடி...

என் கால்கள் விசித்திரமானவை..
            வெகுதூரம் என்னைச்செல்ல விடாமல் அந்த நடைபாதைக்கு
            சற்று விலகியுள்ள அந்த புற்றரையில் என்னனை ஓய்வு படுத்தின..

            பாதிப்பு என்ன என்று புரியாமல் சுனாமியைப்பார்த்து விட்டுத்தான்
            போவேன் என்று கடற்கரையில் காத்திருக்கும் சிறுவனைப்போல               
            நானும் அடம்பிடித்துக்கொண்டு நிற்கிறேன்...  அந்தக்காலடிகளுக்காய்..

என் மனம் ஆறவில்லை..
            அந்த வீதியின் கற்களெல்லாம் அவளை இடித்து இடித்து
            சொல்லவேண்டாமா..  அவள் கால்தடங்களை காவல் புரியும்
            ஒருவன் இன்று இந்த வீதியில் இல்லை என்பதை...

            அந்த வீதியின் மரங்களெல்லாம் மலர் உதிர்த்து
            சொல்ல வேண்டாமா அந்தச்சாலையின் உயிர்களில்
            ஒன்று தொலைந்து போய்விட்டதை...      
அந்தக்கூடுகளின் பறவைகளெல்லாம் கத்திக்கத்தி            
பேச வேண்டாமா அந்தச்சாலையின் உயிர்களில் ஒன்று
தொலைந்து போய்விட்டதை...
 அந்த மேகங்களெல்லாம் கண்ணீர்விட்டுக் கதறியழவேண்டாமா            
அவளுக்காகவே தங்களை நேசித்த ஒருவன் இழக்கப்பட்டுவிட்டதை உணர்த்த...

இந்த சூரியன் முகம் கறுத்து வெம்பவேண்டாமா
அந்த தாரகையின் பொலிவில் தன்ஒளி மங்கிவிடாது
தடுத்து அவளின் ஆகர்ஷகிரணங்களை முழுமையாக
உள்வாங்கிக் கொண்டவன் இன்று இல்லை என்று எண்ணி...

இந்தத் தென்றலில் குளிர்மை அவளுக்கு குத்திக் குத்தி
உணர்த்த வேண்டாமா அவள் மீது இதுநாள் வரை
வெம்மையைப் பாய்ச்சிய பார்வை இழக்கப் பட்டுவிட்டதை...

எவருமே தங்கள் வேலையைச் செய்யவில்லையா?

நான் விளையாடத் தொடங்கும்போது மாத்திரம் ஏன்
ஏன் கால்களே என்னை இடறிவிடுகின்றன...

எந்த வித பிரதிபலிப்போ முக மாறுதலோ இன்றி அவள் அந்த
வீதியை கடந்து செல்கிறாள்
வறண்ட காலத்தில் தன்னைக் கடந்து செல்லும் மழை மேகங்களை
ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் பாலைவனத்தைப் போலே
நான் அவளை நோக்கிய படி...

-தொடரும்...


1 Response to "இரு கண்களும் சில சூரியன்களும் - பாகம் 2"

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...