வெள்ளி, 1 அக்டோபர், 2010

எந்திரன் - சுடச்சுட முதல்ப்பார்வை

Posted on முற்பகல் 3:15 by செல்வராஜா மதுரகன்

எந்திரன் - விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகளாவிய எதிர்பார்ப்பில் வெளியான எந்திரனை சிநேசிட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்தது என்பதை விட போராடிப் பெற்றுக்கொண்டோம். அள்ளிக்கொண்டு வந்த சன வெள்ளத்தைப் பார்த்தே நண்பன் ஒருவன் கழன்றுவிட்டான் மீதி ஏழு பேர் எஞ்சி இருந்தோம். நெரிபட்டு நசிபட்டு திரையரங்கிற்குள்ளே சென்றபின் அவர்களிலும் ஒருவனைக் காணவில்லை. கூட்டம் தள்ளியதால் விழுந்து அறைக்கு திரும்பி விட்டதாக தொலைபேசியில் செய்தி வந்தது. ஒருவாறு கதிரைகளைப் பிடித்து அமர்ந்து கொண்டால் புகைபோக்கிகளினதும் விசிலடிச்சான் குஞ்சுகளினதும் தொல்லை தலைவலியை வரவழைத்து விட இரவு 10.30இலிருந்து அதிகாலை 2 மணி வரை அமர்ந்து பார்த்து விட்டு வந்தேன் . தூக்கம் கண்ணைக் கசக்குவதால் ஒரு சுருக்கமான முதல் பார்வை இங்கே..

நடிகர் நடிகையர்
ரஜினி ஐஸ்வர்யா மற்றும் வில்லனாக வந்த டான்னி டென்சொன்க்பா(Danny Denzongpa) இவர்கள் மட்டும்தான் கதாபாத்திரம் என்று கூறலாம். மற்றவர்களுக்கு வேலை மிகசொற்பம். அதிலும் கருணாஸ் மற்றும் சந்தானம் ஆகியோர் சும்மா வந்து போகிறார்கள். 
ரஜினி - சொல்லித்தான் தெரிய வேண்டுமா. வழக்கமான ஸ்டைலில் விஞ்ஞானி வசீகரனாகவும் அதை விட எந்திரன் சிட்டியாகவும்(அதிலும் இருவேறுபட்ட தோற்றங்கள்) வந்து கலக்கியுள்ளார். இந்தக் கதாபாத்திரம் எத்தனை கை மாறி அவரிடம் வந்தாலும் இதற்குப் பொருத்தமான நபர தான் என்று கட்டியுள்ளார். அதிலும் நிறைவுக்காட்சியில் ஏராளமான ரோபோக்கள் ரஜினியுருவில் காட்சியளிப்பதும் சண்டை இடுவதும் அற்புதமாக உள்ளது. 

ஐஸ்வர்யா - வழக்கம் போல அழகாக இருக்கிறார், கதாபாத்திரத்துக்கு அழகாக நடித்துள்ளார். அற்புதமாக நடனம் ஆடியுள்ளார். இதை விட வேற என்ன சொல்ல. எந்திரன் காதலிக்கும் அழகுப் பதுமையாக வருகிறார்.

 டான்னி டென்சொன்க்பா - விஞ்ஞானி வில்லன் சீன மூஞ்சயுடன் வேண்டும் என்று தேடிப்பிடிதார்களோ தெரியவில்லை. தேடிப்பார்த்ததில் அந்த நடிகர் இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தில் பிறந்தவர் என்பது. ஹிந்தி மற்றும் உருதுப் படங்களில் நடித்துள்ளவர் என்பதும் தெரிகிறது. ஆனால் இறுதிக் காட்சிக்கு முன்னர் அவரையும் போட்டுதள்ளிவிட்டு எந்திரன் ரஜினி வில்லன் பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்கிறார்.

இசை - ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அந்த அளவிற்கு ஈர்ப்பதாய் இல்லை. அரிமா அரிமா பாடல் மற்றும் காதல் அணுக்கள் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனால் அதனை பாடல்களும் காட்சியமைப்பு அற்புதமாக இருக்கின்றது. சங்கர் சங்கர்தான் சாபு சிரில் மற்றும் ரத்னவேலு ஆகியோரும் புகுந்து விளையாடி இருக்கின்றனர்.

கதை, திரைக்கதை
திரைக்கதை ஒரு இடமும் சோர்வடைய விடாமல் அற்புதமாக இருக்கின்றது. வழக்கமான சங்கர் படத்தினுடைய முடிவு போலவே முற்றுப்புள்ளி இன்றி காற்புள்ளியுடன் படம் முடிகின்றது... 
நிறைவுக்காட்சியில் வரும் மிக நீண்ட சண்டை சற்றே சலிப்படைய வைத்தாலும் Graphics அற்புதமாக கையாளப்பட்டுள்ளது. 

வசனம் - மறைந்த என் மனம் கவர்ந்த சுஜாதா என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்வதற்கு இந்தத் திரைப்படமும் ஒரு கருவியாக அமையும். அத்துடன் இந்த திரைப்படத்தின் வெற்றி(இப்போதே கூறி விட்டேன் பார்ப்போம்) நிச்சயம் சுஜாதாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படவேண்டும். 

தொழிநுட்பம் - இதுவரை எந்த இந்திய மொழிப் படங்களிலும் இந்த அளவு நுட்பங்கள் பயன்படுத்தி நான் அறியவில்லை. (எனக்கு தமிழ் ஹிந்தி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமே படம் பார்த்த அனுபவம் உண்டு மற்றைய இந்திய மொழிகளைப் பற்றி தெரியாது.)
எந்திரன் வரும் காட்சிகள் குறிப்பாக சண்டைக் காட்சிகள் பாராட்ட வைக்கின்றன.

பாதிப்புக்கள் - சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" "மீண்டும் ஜூனோ" ஆகிய நாவல்களின் பாதிப்பு இருக்கின்றது, வசனகர்த்தாவே அவர் என்பதால் பரவாயில்லை. 
சில இடங்களில் I- robot படத்தின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. அந்த I- robot உருவத்தைப் பயன்படுத்தும் உரிமத்தை வாங்கியிருப்பினும் காட்சிகள் அதை நினைவு படுத்துவதை தவிர்த்து இருக்கலாம். 

கதைச்சுருக்கம் - வசீகரன் என்ற விஞ்ஞானி தனது பத்து வருட உழைப்பின் பின் தன்னைப் போல உருவம் கொண்ட மனிதனைப் போல செயற்படக்கூடிய ஆனால் மனிதனிலும் நூறு மடங்கு ஆற்றல் வாய்ந்த எந்திரனை உருவாக்குகிறார். அதனை நாட்டின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு பயன்படுத்த நினைக்கிறார். பலத்த சிரமத்தின் பின் எந்திரனை மனித உணர்வுகளை புரிந்து கொள்ளவும் வெளிப்படுத்தவும் கூடியதாக மாற்றுகிறார். உணர்வு பெற்ற எந்திரன் வசீகரனின் காதலியான ஐஸ்வர்யாராயை காதலிக்கின்றது. அதனால் கட்டளைகளையும் மீறுகின்றது. அதை நெறிப்படுத்த முயன்று அது வழிக்கு வராததால் அதனை துண்டு துண்டாகி குப்பையில் வீசுகிறார் வசீகரன். ஆனால் சமுதாய விரோதிகளுக்கு துணை போக நினைக்கும் வசீகரனின் குருநாதரான இன்னொரு விஞ்ஞானி போஹ்ரா எந்திரனை உயிர்ப்பித்து அதனது ஆக்க வலுவை அழிக்கும் வலுவாக மாற்றி விடுகிறார். எந்திரனோ போஹ்ராவையும் கொன்றுவிட்டு ஐஸ்வர்யவையும் கடத்தி வைத்துக்கொண்டு இன்னும் எண்ணற்ற எந்திரங்களை உருவாக்கி ஒரு எந்திர சாம்ராஜ்யத்தை உருவாக்க முயல்கின்றது. பலத்த உயிரிழப்பு மற்றும் போராட்டத்திற்கு பின்னர் வசீகரன் எந்திரனை பழைய படி அழிவு எண்ணங்கள் அற்றதாக மாற்றுகிறார். ஆனால் அதனது குற்றசெயல்களுக்காக அது செயலிழக்க செய்யப்பட நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க. நிறைவில் எந்திரன் தன்னைத்தானே செயலிழக்கச் செய்துகொண்டு அருங்காட்சியகப் பொருளாக இருக்கின்றது,

நிறைவில் மனதிலிருந்து - எவ்வளவு இருந்தும் என் மனதில் ஏதோ குறை. சிறந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் தேர்வு சிறந்த காட்சியமைப்பு சிறந்த கதை வசனம் எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைகின்றது. தொழிநுட்ப விடயங்களைத் தவிர கதை என்ற அடிப்படையில் புதுமை இல்லை....
அத்துடன் ரஜினி என்ற நல்ல நடிகரை ரஜினி என்ற நல்ல கதாநாயகனாக மாற்றி விட்டோம்....

முடிந்தால் மற்றுமொரு தெளிவான பார்வை ஓரிரு நாட்களில்...


அன்புடன்
மதுரகன்


2 Response to "எந்திரன் - சுடச்சுட முதல்ப்பார்வை"

.
gravatar
jee Says....

அளவான விமர்சனம் மற்றவர்கள் படம் பார்க்கும் போது குழப்பாது வாழ்த்துக்கள். ஆனால் ரகுமான் பற்றி குறிப்பிட்டது எல்லா படத்தை பார்த்தவர்களுக்கும் சற்று உங்களில் கோபம் ஏற்டுத்தலாம். ஆனால் பாடல்கள் பற்றிய விமர்சனம் இரண்டு மாதங்களுக்கு முன் வந்திருக்க வேண்டும்.

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...