செவ்வாய், 30 நவம்பர், 2010

வாணி விழா 2010 - கவியரங்கக்கவிதை

Posted on PM 4:52 by செல்வராஜா மதுரகன்

எமது பீடத்தின் வருடாந்த வாணிவிழாக் கவியரங்கில் நான் வாசித்த கவிதை.. வாசித்த கவிதை என்று ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால் உணர்வுகளின் தொகுப்பாக நான் எழுதிய கவிதையில் பொருத்தம் பற்றி வேறு சிலரின் கவிதைகளின் தழுவல்களையும் இடையிடையில் புகுத்தியிருகிறேன். குறிப்பாக அப்துல்ரகுமானின் சில வரிகள்(காதல் பற்றிய இடத்தில்). மற்றும் தேவை கருத்தி ஒரு பாடலின் இரு வரிகளை பயன்படுத்தயுள்ளேன். கவியரங்கில் கவித்துவத்திலும் சமர்ப்பிக்கும் முறைதான் தாக்கம் செலுத்தும் என்ற எண்ணத்தில் நான் வழக்கமாகவே தழுவல்களை புகுத்துவது வழக்கம். தவறென்று எண்ணுபவர்கள் மன்னிக்கவும். மேலும் பத்து நிமிடங்கள் வாசிக்கப் பட்ட இக்கவிதையின் நீட்சி எழுத்து வடிவில் அதிகமாகத் தென்படுகிறது. மன்னிப்பு - பொறுமை...

தலைமை - வைத்தியக்கலாநிதி. திவாகரன் (நரம்பியல் நிபுணர்)
பங்கேற்பு - 
கவிஞர். காரையம்சன் (நடேசன் அகிலன்)
கவிஞர். எஸ்.பொ அல்லது பொ.சி(பொன்னுத்துரை சிவபாலன்)
கவிஞர். ஜோசெப் ஷரோன்ராஜ்
கவிஞர். அஹ்மத் ஷஹ்மி 
மற்றும் அடியேன்...
ஜயமுண்டு பயமில்லை மனமே..

ஜயமுண்டு பயமில்லை மனமே இந்த ஜன்மத்திலே
விடுதலை உண்டு நிலை உண்டு, 
பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற் பதிவுற்ற 
குலசக்தி சரணுண்டு பயமில்லை 

பாரதியை வணங்கிக்கொண்டு

இஃது திக்குத்தெரியாத பேரிருளில் தமது சூரியங்களைத் தொலைத்துக்கொண்ட என்னின விசுவாசிகளுக்காக

இன்னமும் 

சிக்கித்தவிக்கின்ற மனங்களுக்குள் இன்னமும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள
காதல்களுக்கும் வேறுபட்டுப் பிரிந்தபின்பும் 
வெள்ளி முளைக்கின்ற வயதுகளிலும் மனதை 
வெட்கப்படுத்தும் காதல்களுக்கும் சமர்ப்பணம் என் கவிதைகள்

கல்லான கடவுளுக்கு
எல்லா உலகமும் ஆனாய் நீயே
உள்ளாய் உண்மையுமாய் உறைபவனும் நீயே 
விலங்குகளாய்த் தாவரமாய் விளைபவனும் நீயே
விளையாடி வினைதீர்க்க விதிப்பவனும் நீயே
முதல் நீ; முடிபு நீ; முற்றும் நீயே..

சிலையாகி வாழ்ந்திட்ட பெருவாழ்வு நாமுமக்குத் தந்திட்டோம்
வாழ்கையில் சமையத்தை அன்றி சமயத்தில் வாழ்க்கை அமைத்த 
நெறி நின்ற தமிழர் வழிவந்தவன் நான்..
கோயிலைக் காக்கவும் சிலைகளைக் காக்கவும்
போர்த்துகேயர் முதல் பொன்சேகா வரை 
வீசிவிட்ட குண்டுகளுக்கும் தீர்த்துவிட்ட வேட்டுக்களுக்கும் இடையில்
விதியோடு விளையாடி விளையாட்டாய் உயிர்நீத்த 
தமிழர் வழி வந்த கடையன்தான் நானும்...

யாரை நம்பினாலும் நம்பாவிட்டாலும் கடைசிவரை
உன்னை நம்பியவர்கள் நாங்கள், ஆனால்
கதிர்காம மலைமுதல் நயினா தீபம் வரை உன் கோயிலையே
பாதகர்க்குப் பங்குபோட்ட பாவியோ நீயெனப் பாடவைக்கிறாய் 
ஏன் எனை இன்னும்...

ஆனாலும் ஒன்று 
 நீயெமை விட்டாலும் நாமுமை விடுவதாயில்லை
எமக்குத்தெரியும் 
விடுதலையெனும்போது போராட்டம்தான் கடவுள் 
வாழ்க்கை எனும்போது முயற்சிதான் கடவுள் 
ஆகையால் நானும் உன்னை விடுவதாயில்லை
நிலையாக உனக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே..

- கண்முன் தெரியும் கடவுளர்க்கும் கண்டபடி ஒரு வாழ்த்திசை
ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் 
பிரணவன் பானை முகத்தான் 
கஜானன் சோணை முகத்தான்
அவன் தம்பியொருத்தன் அவன் ஆறுமுகத்தான்
பெரும் காதல் முகப்பால் பலர் கரம் பிடித்தான்
(பிரணவன், கஜானன் என்ற பெயர்களில் எமது பீடத்திலும் நண்பர்கள் உளர்)

நவராத்திரியில் நலம் வழங்கும் முத்தேவிகளே 
நீங்கள் மட்டும் எமக்கு வைத்ததில்லை குறை

என்னென்ன இடர்ப்பட்டாலும் இடம் பட்டாலும் 
இருப்பொன்றை ஏற்படுத்தும் கல்விக்கு என்றுமே 
குறை வைத்ததில்லை

புலம் பெயர்ந்துபோனாலும் புலன் பெயர்ந்து போனாலும் 
கண் தெரியாத் தேசங்களின் கழிப்பறைகளில் தொழில் புரிந்தாலும்
காசுக்கும் குறையில்லை என்றும் எமக்கு...

கடத்திச் சென்றாலும் கற்பழிக்கப் பட்டாலும் 
முற்றாக எமக்குள்ளே கறுவிக்கொள்ளும் ரோசத்திலும் 
வெளிநாட்டுப் புல்விரிப்புகளில் ஒரு கையில் பியர்ப் போத்தலுடனும்
மறுகையில் தாயகக் கொடியுடனும் வீதியில் நின்றுகொண்டு
வேண்டாம் இனி இன ஒழிப்பு என்று நித்தம் போராடும் வேட்கைக்கும்
வந்ததில்லை குறைவு
ஆதாலால் ஜயமுண்டு பயமில்லை மனமே

நீட்டமாய்ப் பாட்டுகள் போவதால் வாட்டமாய்க் கூரை வளம் பார்க்கும் 
பெண்களே பையன்களே இன்னும் அரைமணி நேரத்திற்குள் கவியரங்கம் முடியவுள்ளதால் உங்களுக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே...

வந்து நான்காவது வருடமாக இன்றும் 
எம் புலன் நரம்புகளைக் கொண்டு சிலிர்ப்பூட்டவும் 
இயக்க நரம்புகளைக் கொண்டு சிரிப்பூட்டவும் கவிபாடி 
எம் கரம் பிடித்து மருத்துவ மாணவர் இந்து மன்றத்தில் கவிபாடும் வகையுரைத்து
வருடங்களாய் வலிகாட்டிவரும் நரம்பியல் மருத்துவர் 
திவா அண்ணா வந்தனங்கள்
மற்றிச் சபையோரைப் பணிகின்றேன்

நமக்குத்தொழில் கவிதை அல்ல 
நமக்குப் புலன் கவிதை; நமக்குப் புலம் கவிதை 
நமக்குப் புலப்பாடுகளும் கவிதையே 
ஆதலால் பொறுத்தருள்க எம் வாய்ப்பிழை 
இது பற்றி நமக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே

கூடக் கவிபாடவந்த கூட்டாளிக் கவிஞர்களுக்கும் ..

காரைதீவில் தொடங்கி பருத்தித்துறைவரை தேடியும்
கடைசியில் போயும் போயும் லண்டனில்தான் 
பெண் கிடைப்பாள் என்று தெரிந்தும் 
விழுந்தும் மீசையில் மண் ஒட்டாமலிருக்க மீசை எடுத்த 
காரையம்சனே அகிலனே உனக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே

சின்ன இடையுடையான் சித்திரத்துப் பல்லுடையான் 
வெட்டிவைத்த செங்கரும்பின் நீளத்துக்குக் காலுடையான்
பத்தரைக்குப் பிறகு Facebook இல் இருந்து கொண்டு 
பாத்திராத பெண்களின் Profile துழாவி முகம் பார்த்து
முகம் மலரும் சிவபாலனே
சிங்களத்து பெண்ணின் பெயருக்கும் பையனின் பெயருக்கும் 
வேறுபாடு உணராது பையனுடன் கடலை போட்டு
கல்லடி வாங்கப் பார்த்த உனக்கும் 
ஜயமுண்டு பயமில்லை மனமே...

இன்னமும் சிங்களத்துப் பெண்களுக்கு
சின்னச் சின்ன Joke சொல்லி சிரிக்க வைப்பதை விட்டு விட்டு
கவியரங்கில் கால் பாதிக்கும் ஷரோன் ராஜ் 
ஆர்வத்துடன் வந்துள்ள அஹ்மத் ஷஹ்மி 
அனைவருக்கும் இங்கு ஜயமுண்டு பயமில்லை மனமே

ஜயமுண்டு பயமில்லை மனமே 
யாருக்குத்தான் இல்லை பிரச்சினை - உண்மையோ இல்லையோ
ஐந்து வருடமென்று கூறினாலும் ஆறாவது வருடத்திலாவது 
படிப்பு முடியுமென்னும் நம்பிக்கையில் 
ஜயமுண்டு பயமில்லை மனமே

முடிந்ததும் வேலை கிடைக்குமென்னும் நம்பிக்கையோ 
கிடைக்காவிட்டால் பெட்டிக்கடை வைத்தாலும் பிழைத்துக் 
கொள்வோம் என்னும் நம்பிக்கையில்
ஜயமுண்டு பயமில்லை மனமே

Facebookஇல் கணக்கில்லாமல் கடலை போட்டு 
கலியாணத்திற்கும் பெண் பார்த்த மாசிலனுக்கு 
உள்ளதுபோல அமையாவிட்டாலும், 
கண்ட கண்ட Status Like பண்ணியும் Comment போட்டும்
கணக்கெடுபடாமல் விடுபட்ட அல்பர்ட் உனக்கும் 
ஜயமுண்டு பயமில்லை மனமே

எதிரொலிக்கு எதிராக எதிரொலிக்க எழில் ஒலிக்க
தரமான தமிழொலிக்க தரம் கெட்டோர் தலைதெறிக்க 
தகவான விழாவெடுக்கும் தலைவனே 
செல்வானந்தம் பெற்ற புதல்வனே உனக்கும்
ஜயமுண்டு பயமில்லை மனமே

கம்பசுக்கு வந்தால் கலர் கலராய் கடலை போடலாம் என்று
எண்ணி வந்து நொந்து போன சஜீவ்
கடலை போட்டும் போடாமலும் செட் ஆன சிவசுகந்தன், அர்ஜுன் 
எல்லாருக்கும் நிஜமாக ஜயமுண்டு பயமில்லை மனமே..

யாருக்குத்தான் தோல்விகள் இல்லை
எனக்கும் தோல்விகள் உண்டு - அது ஒரு அழகிய காதலின் தோல்வி

பலருக்கு காதல்தான் கவிதை கொடுக்கும் 
எனக்கு கவிதைதான் காதல் கொடுத்தது
வரும்போதும் போகும்போதும் கண்ணீர் கசிந்தது 

பாடசாலைக் காலங்களில் பார்க்கும் அழகிய முகங்களிலெல்லாம்
திக்கித் திணறி வெளியே வந்தவன்தான் நான்
காணுமிடமெல்லாம் தேவதைகள் நடந்து திரிவதைக் கண்டு 
நீண்ட இரவுகளில் தூக்கமில்லாமல் புலம்பியிருக்கிறேன்
ஆனாலும் இது வெறும் இனக்கவர்ச்சி என்பது 
எனக்குப் பட்டும் படாமலும் புரிந்ததில் அப்போது
எனக்கும் ஜயம் இருந்தது பயம் இல்லாமல்

காதல் வந்தது காலத்திலே.. அது இறந்த காலமாகிவிட்டது இன்று..
இறந்தகாலம்தான் நான் உயிர்ப்புடன் இருந்தகாலம் ஏனென்றால்
அப்போதுதான் அவள் என்னைக் காதலித்துக் கொண்டிருந்தாள்

ஜென்ம ஜென்மங்களுக்கு நேசிக்கத் தெரிந்த பெண்ணொருத்தியை
நான் இங்கே அறிமுகம் செய்கிறேன்
கவிதை எழுத வார்த்தைகளைத் தேடும் ஒரு கணத்தில்
இறைவன் அவளை என் முன் அனுப்பியிருந்தான்

தனிமையில் மனம் பசித்து அழுதபோது அவளது நினைவுகள் 
என்னை அள்ளி எடுத்துப் பாலூட்டியுள்ளன.. 
இன்று அவளில்லாவிட்டாலும் ஒருகாலத்தில்
நகர்ந்து கொண்டேயிரு நதிபோல ஓரிடத்தில் 
கடலாக நான் வருவேன் என்று நான் உரைத்ததும்
காத்திருப்பேன் கடைசிவரை மரணம் போல நீ நிச்சயம் வருவதானால்
என்று நீ கூறிய வார்த்தைகளும் இன்று வரை என் காதுகளில் ஒலித்தபடி..

என்ன வேண்டுமென்று ஒவ்வொருமுறையும் கடவுள் கனவிலே
கேட்கின்ற போதும் கீறல் விழுந்த CD போல நான் உனது பெயரையே 
மீண்டும் மீண்டும் புலம்பியிருக்கின்றேன்..
இன்று எனக்கும் அவளுக்கும் பிறந்த கவிதைகள்
தாயைதேடி அழுகின்றன...

காதல் தோல்விக்கு நான் கலங்கவில்லை அதை வாழ்கையின்
எல்லா வெற்றிகளையும் விட உயர்ந்ததாக கருதுகிறேன்
அத்துடன் காதல் ஒருபோதும் தோற்பதில்லை 
காதலர்கள்தாம் தமக்குள்ளே தோற்றுப் போகின்றனர்
அதை உணர்ந்து விட்டதால் எனக்கு ஜயமுண்டு பயமில்லை மனமே..
நிறைவாக.. இது கண்ணீர் அல்ல கண்கள் உனக்காகப் பூத்தொடுக்கின்றன

கண்டபடி கதைத்தாலும் காட்டமாகப் பேசினாலும் கடைசிவரை 
என் வாயிலிருந்து வழுவாத என் வாய்த்தமிழே 
என் காலடியில் இருந்து கழராத என் வன்னித்தாய் மண்ணே 
ஜயமுண்டு பயமில்லை மனமே

ஆரம்பமாயிருந்தோம் குமரியிலே ஆழி தடுத்தது 
ஆண்டவராயிருந்தோம் ஈழ - பாரதத்தை அந்நியப்படைகள் தடுத்தது
மீண்டெழுந்து வந்தோம் தக்கணத்தில் ஆரியத்தின் ஊடுருவல் தடுத்தது
நின்று நிமிரும் முன்பே தமிழ் உச்சரிப்பின் பல்வகைமை தடுத்தது
இன்றுவரை இந்திய இந்தியும் இலங்கைச் சிங்களமும் 
எதிரே நின்று தடுக்கின்றது..
நோந்தாலும் வெம்புனலில் வெந்தாலும் 
நெறி மாறோம் நிலை மாறோம் - ஏனெனில் 
நாங்கள் கண்ணீரைக் கைவிட்டுக் கனகாலம்
நீர் வழிந்த கண்களிலே தீ மூட்டி 
தீவினைகள் தெறித்தெறியக் காத்திருப்போம் 
ஜயமுண்டு பயமில்லை மனமே

நாங்கள் அலைக்கழிந்த கதை அலை கரையரித்த கதை
காலத்தையும் ஏமாற்றியே வந்தது இதுவரை
கனவுகள் மாத்திரம் பலநூறு கண்டோம்
தாகத்திற்குத் தண்ணீர் தேடினோம் 
கானல் நீரே கண்ணுக்குப் பட்டது 
அமைதிக் குஞ்சுகளை அடை காத்த போது அர்த்தமற்ற அமளிகளால்
கூழாகிப் போன முட்டைகளும் முடமாகிப் பிறந்த புறாக்களும் ஏராளம் 
பறந்து வந்த பருந்துகளுக்கு விருந்தாகிப் போனது மிச்சம் 
என்னதான் நடந்தாலும் உயர உயரப் பறக்கும் ஊர்க்குருவிகள் நாங்கள்
வலிமை மிகுந்த வல்லூறுகளை எதிர்த்து எமது இறக்கைகளைக் 
காயப்படுத்திக் கொள்வதால் ஜயமுண்டு பயமில்லை மனமே

நிலத்தையும் மக்களையும் மீட்டபின் சிலருக்கு
அரசியலே தீர்வாகிப் போனதால் அரசியல் தீர்வு 
அவர்களுக்கு அந்நியமாகிப் போனது
இன்னும் சொல்லப் போனால்
அவசரமாக வரும்போதும் அடக்கிக்கொண்டு 
அவசரகாலச் சட்டத்திற்கு அவசர அவசரமாகக் கையுயர்த்திக் 
கையுயர்த்தியே Shoulder Joint இல் Pain வந்த தொண்டர்களும்
ஐம்பது அறுபது பெயரை வைத்துக்கொண்டே ஐம்பதாயிரம் வாக்குகள் 
போடவைத்து வென்றதில் களைத்துப் போன அவர்கள் தலைவனுக்கும் கூட 
ஜயமுண்டு  பயமில்லை மனமே

இதை விட மிஞ்சிப் போன தம்பியருள் ஒருவருக்கு 
விழாக்களுக்கு முதன்மை விருந்தினராகச் செல்லும் 
பொன்சு அமைச்சுப் பொறுப்பு, மற்றவருக்கோ 
ஊரார் குடிகெடுத்துக் கிடைப்பவற்றைச் சுருட்டும் வேலை
இதைவிட கோட்டையைத் தாண்டாத மந்திரி சபையை 
கிளிநொச்சியிலும் மாங்குளத்திலும் வைப்பதிலும்
பின்பு இரவில் யாழ்ப்பாணத்தில் விருந்துண்டு கள்ளுக்குடிப்பதற்கும் கூட
நேரம் போதாததால் அவர்களுக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு உழைத்து உழைத்துக் 
களைத்தபின் உண்டு உறங்கி வாழ்ந்த குடிக்கு 
உயிரை அழித்து உயிர்ப்பை அழித்து உணர்வை அழித்து   
உழைப்பை அழித்துக் கடைசியில் கால்கிலோ சீனிக்கும்
கல்லில்லா அரிசிக்கும் கையேந்தும் சுதந்திரம் கொடுத்தாலும்
"தலைகள் குனியும் நிலையில் இங்கே தமிழர் இல்லையடா
யாரும் விலைகள் கூறும் நிலையில் இவர் மானம் இல்லையடா"
என்று உரைக்கும் புலம் பெயர் உறவுகள் இருக்கும் வரைக்கும்
ஜயமுண்டு பயமில்லை மனமே

வரலாற்றுத் தோல்வியைக் கடந்தாலும் வரலாற்றை நாம் இழக்கவில்லை
முள்ளி வாய்க்கால் எம் உணர்வுகளின் முடிவல்ல நிலை மாற்றம் மட்டுமே
வேள்வியில் சொரியப்பட்ட அர்ச்சனைப் பூக்கள் கருகினாலும் 
வாசம் மாறுவதில்லை..
மூழ்கும் ஓடத்திலேறி வருகின்ற தசாப்தக் கனவுகளைப் பயணிக்க வைப்பது
எப்படி என்னும் திகில் நிறைந்த போதும்
காலத்தினால் நேரத்தினால் இயல்பினால் மாறுபட்டு 
எமக்குத் தீர்வு வரும் அதுவரை தமிழன் என்னும் பெயர்காக்க 
தமிழைக் காத்து வாழ்வோம், எமக்கு
ஜயமுண்டு பயமில்லை மனமே...

வாழ்க்கையில் தோற்றாலும் வரலாற்றில் தோற்றாலும் 
கூறுவதற்கு ஒன்றுண்டு 
"விடுதலை எனும் போது போராட்டம்தான் கடவுள்
வாழ்க்கை எனும்போது முயற்சிதான் கடவுள்"
ஆகவே கடவுள் எம்மை விட்டாலும் நாம் அதை விடலாது..
கடவுளை நம்புவோர்க்கு என்றும் ஜயமுண்டு பயமில்லை மனமே.....

அன்புடன்
மதுரகன்


2 Response to "வாணி விழா 2010 - கவியரங்கக்கவிதை"

.
gravatar
KANA VARO Says....

வாழ்த்துக்கள். கவி மழை பொழிஞ்சிட்டீங்கள் போல! இவ்வளவு நீளமான கவிதையா?

பொ.சி யாழ் இந்து தானே!

.
gravatar
செல்வராஜா மதுரகன் Says....

நன்றி வரோ...
ஆம் அவர் யாழ் இந்துதான் இதை நீளம் என்கிறீர்கள் அவர் இதிலும் மூன்று மடங்கு நீளமான கவிதை ஒன்று தந்திருந்தார்...

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...