வியாழன், 30 டிசம்பர், 2010

கடந்து போகிறதா ஓர் ஆண்டு? பாகம் 2(கலையுலகும் நானும்)

Posted on PM 10:31 by செல்வராஜா மதுரகன்


கடந்துபோகிறதா ஓர் ஆண்டு..? பாகம் - 1(நானும் பதிவுலகமும்)

தலைப்பைப் பார்த்து ஏதோ தமிழ்ப் பேச வராத புதுமுக நடிகை ஒருவரின் பெட்டி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். என்னதான் மருத்துவ பீடத்தில் கற்றாலும் எனக்குள் இருக்கும் கலையார்வம் தங்குதடையின்றி இங்கும் பொங்கிக் கொண்டுதான் இருக்கின்றது நேரம் வரும்போது பயன்படுத்திக் கொள்கிறேன்..
நான் ஒரு வாசிப்பு பைத்தியம். எனது வாசிப்பு உலகத்தைப் பற்றி நீண்ட ஒரு பதிவு தனியாக எழுத வேண்டும்.. கிட்டத்தட்ட ஏழு எட்டு வயதில் பிடித்த வாசிப்பு பைத்தியம் அந்த அந்த வயதுகளுக்கு உரிய புத்தகங்களுடன் நகர்ந்து இன்று என்னவென்று இல்லாமல் வியாபித்து இருக்கின்றது. இந்த வருடத்தில் எனது வாசிப்பு வீச்சினை எடுத்துப் பார்த்தால். இலக்கியங்களுள் டாக்டர். மு. வரதராசனாரின் கிடைத்தற்கரிய பல புத்தகங்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது பல இலக்கிய விமர்சன நூல்களை வாங்கி வாசித்தேன். மேலும் எங்கள் பிரதேச எழுத்தாளரும் எனது பேச்சுலக குருவுமாகிய தமிழ்மணி அகளங்கன் ஐயா அவர்களின் பல இலக்கிய நூல்களை வாசித்தேன். 
நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் பார்த்தால் எனது ஆஸ்தான எழுத்தாளர் சுஜாதாவின் பல குறுநாவல்கள் கொண்ட ஒரு தொகுப்பு கிடைத்தது. அத்துடன் சுந்தர ராமசாமி, ல. ச. ராமாமிர்தம் போன்றோரின் எழுத்துக்களை பரிச்சயப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது.
இதை விட மொழிபெயர்ப்பு நாவல்களில் ரசிய மொழிபெயர்ப் பான செம்மணி வளையல் என் நெஞ்சுக்குள்ளேயே வார்த்தைகளாக நிற்கிறது இன்னும்.. வழக்கம் போல எனது தட்டில் இன்னும் பல கவிதைப் புத்தகங்கள் முளைத்தன.. இந்த வருடம் மட்டும் நான் கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்களை வாங்கியுள்ளேன். எனது குட்டி நூலகம் நூற்றுஅறுபது புத்தகங்களை தாண்டி விட்டது என்று நினைக்கின்றேன். குறிப்பாக வருட இறுதியில் நண்பன் ஜனுதர்சன் பரிசளித்த செம்மொழி மாநாடு தொடர்பான புத்தகம் விலை மதிப்பிலா சொத்து.

அடுத்ததாக நான் தலைவராக செயற்பட்ட கொழும்புப் பல்கலைக்கழக இந்து மன்றத்தின் வருடாந்த கலைவிழாவினை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் ஜூன் 12ம் திகதி மிக விமரிசையாக நடாத்தியது பெருமைக்குரிய விடயம். பார்வையாளர்கள் எதிர்பார்த்த அளவு வராமையும் இறுதி நிகழ்வான நாடகம் அரங்கேறாமையும் தவிர எந்தக் குறையும் இன்றி இந்து மன்ற வரலாற்றில் பாரிய விழாவாக நடைபெற்றது, நிகழ்விற்கு பிரதம விருந்தினராக நீதவான். மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களும் கௌரவ விருந்தினராக எழுத்தாளர் கவிஞர் தமிழ்மணி அகளங்கன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியக் கலாநிதி. கணேசரத்தினம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். என்னுடன் தோளோடு தோள் நின்று விழா சிறப்புற உதவிய இதர நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் நிர்வாகக் குழு சாரா நண்பர்களுக்கும் முக்கியமாக மருத்துவ பீடத்தினை சார்ந்த எனது அணித்தோழர்களுக்கும் நன்றிகள். தனியாக கூற வேண்டிய நன்றி இருவருக்கு, ஒரு சிக்கலான பிரச்சனையால் வழக்காடு மன்றம் நடப்பதே கேள்விக்குறியானபோது உடனே தயாராகி வழக்காடு மன்றத்தில் பங்கேற்ற எமது பீட சிரேஷ்ட மாணவரும் சிறந்த நண்பருமாகிய பரதன் அண்ணாவிற்கும், விஞ்ஞான பீட பழைய மாணவரும் என்னுடைய ஆரம்பகாலங்களில் பேச்சிற்கு வழிகாட்டியாக அமைந்த கோகுலதாசன் அண்ணாவிற்கும் உரித்தான நன்றிகள் அவை.


அடுத்ததாக கூறப்பட வேண்டிய விடயம் கொழும்புப் பல்கலைக்கழ தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா. இந்து மன்றத்தின் அப்பன் தமிழ் மன்றம் என புடம் போட்டு காடியது போல் இருந்தது விழா.. பல்கலைக்கழக வரலாற்றிலேயே பொறிக்கப் படவேண்டிய விழாவொன்றை கவிக்கோ அப்துல் ரகுமானையும் அழைத்து நடாத்தியது, அந்த நிகழ்வில் அப்துல் ரகுமான் தலைமையிலான கவியரங்கில் நானும் பங்கேற்க கிடைத்த வாய்ப்பு என்னுடைய ஓட்டு மொத்த வாழ் நாளில் ஒரு நாளாகும்... இந்த இடத்தில் 
தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழு, நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக் குழு குறிப்பாக தலைவர் கோபிதாஸ் ஆகியோருக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த ஒரு முக்கிய திருப்பு முனை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்ற கம்பவாரிதி ஐயாவின் திருக்குறள் பற்றிய தொடர் சொற்பொழிவு. அதன்   அந்த இலக்கிய முழக்கத்தால் வசீகரிக்கப்பட்டு நண்பன் தனேசனின் உதவியுடன் ஐயாவின் அறிமுகம் கிடைத்ததும் பின்பு அவரிடம் நேரடியாக இலக்கியம் கற்கும் பேறு கிடைத்ததும் எனது இலக்கியப் பயணத்தினை மேலும் உறுதிப்படுத்தும் புள்ளிகள். 

இதை விடக் கூறுவதானால் எமது பீடத்தின் வாணிவிழா கடந்த வருடங்களை விட மிகவும் சிரத்தை எடுக்கப் பட்டு மிக அருமையான மேடை அமைப்பு மற்றும் ஒலி ஒளி அமைப்புகளுடன் வெகு விமரிசையாக நடாத்தப்பட்டது. அதற்கு தலைவர் பிரசாத் தலைமையிலான நிர்வாகக் குழுவிற்கு பாராடுதல்களை தெரிவிப்பதோடு, அங்கு நடை பெற்ற "பெண்மையின் ஆற்றலால் சமகாலப் பெண்களுக்கு வழிகாட்டுவதில் விஞ்சி நிற்பது பாரதி காட்டும் பாஞ்சாலியே, இளங்கோ காட்டும் கண்ணகியே" என்னும் படி மன்றத்திலும் "ஜயமுண்டு பயமில்லை மனமே" கவியரங்கிலும் பங்கேற்றமை மறக்க முடியா நிகழ்வுகள். 
எல்லாவற்றிலும் மேலான நிகழ்வாக சக்தி தொலைக்காட்சியால் நடாத்தப்படும் தமிழோசை நிகழ்வில் தெரிவுச் சுற்று முதலாம் சுற்று என்பவற்றில் வெற்றி பெற்று தற்போது இரண்டாம் சுற்றில் இருபது போட்டியாளர்களுள் ஒருவராக இடம்பெற்றுள்ளமை மிகவும் மனமகிழ்ச்சி தரும் விடயம். வரும் வருடத்தில் அந்தப் போட்டித்தொடரின் இறுதிச் சுற்றுக்குள் எப்படியும் நுழையவேண்டுமென்பது எனது ஆசை பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று..
இத்துடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்... ஆனால் எனது சொந்த வாழ்க்கைப் பயணம் பற்றிய பதிவு இதை அடுத்து பதிவிடப் பட உள்ளது. உங்கள் பார்வை மற்றும் ஆதரவு அங்கும் தேவை..

அன்புடன் 
மதுரகன்.


1 Response to "கடந்து போகிறதா ஓர் ஆண்டு? பாகம் 2(கலையுலகும் நானும்)"

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...