ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

எனது வாசிப்புலகம் 3 - பாடசாலைக்காலம் (மரபிலக்கியங்கள்)

இரண்டு பாகங்கள் எழுதி ஒரு வாரத்திற்குப் பின்னர் மூன்றாவது பாகத்தை எழுதுகிறேன். இடை நடுவில் பார்த்த மங்காத்தா படத்தின் விமர்சனத்தை எழுதவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தாலும் அதை இன்னும் ஒரு வாரம் தாமதித்து எழுதலாம் என நினைக்கிறேன். இது வரை என்னுடைய பதினைந்து வயதின் நடுப்பகுதி வரை அதாவது 2002 இன் நடுப்பகுதி வரையான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். ஆனால் அந்த 2002 இன் நடுப்பகுதி வாழ்வில் எனக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 

அது வரை கல்வி சாரா செயற்பாடுகள் என்றால் ஒதுங்கி நிற்கும் நான் ஏதோ ஒரு ஆரவத்திலும் நண்பர்கள் கொடுத்த உசாரிலும் நான் ஜனுதர்சன், ரமேஷ் என மூன்று பேர் பாடசாலை விவாத அணியின் தெரிவில் கலந்துகொண்டோம். அதற்கு முன் ஒரு நிகழ்வில் பேச முயன்றதாக நினைவு ஆனால் பாடசாலை அளவில் கலந்து கொண்டது அதுதான் முதல்முறை. அந்த தெரிவு நிகழ்வும் அதனை நடாத்திய அப்போதைய எங்கள் பகுதித்தலைவர் கலாநிதி. தமிழ்மணி. அகளங்கன் அவர்களும்தான் என்னை ஒரு சரியான பாதை நோக்கி நெறிப்படுத்தியது.

அதற்கு முன் ஒரு மேடை கூட ஏறிப்பழக்கமில்லாத என்னை நூற்றுக்கணக்கான மேடைகள் ஏற வைத்ததும் அவரது வழிகாட்டல்தான். அவரைப் பற்றி பெரிதாக அறிமுகம் தேவை இல்லை முப்பதுக்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய அவர் சமீபத்தில் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்து இருக்கலாம். 
கலாநிதி அகளங்கன்
அந்தத் தெரிவுப்போட்டியில் ஒரு முன்னனுபவமோ பெரிதான விடயஅறிவோ இல்லாத என்னை அவர் கூறிய வார்த்தைகள் உற்சாகப்படுத்தியது. "உன்னுடைய ஆர்வத்தாலதான் உன்னை எடுத்து இருக்கிறேன், இந்த வருசம் நீ பேசவேண்டாம் ஆனா எங்களோட பயிற்சிக்கு வா பேசிப்பழகு அடுத்தவருசம் நல்ல அணி ஒண்டு உனக்கு அமையும்" அவர் கூறியது மட்டுமன்றி ஒரு மூன்று மாத காலம் கிட்டதட்ட வார நாட்களில் ஒவ்வொரு நாளும் குறித்தளவு நேரம் எங்களுடன் செலவிட்டு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தலைப்பில் பேசியபின்னர் எங்கள் குறை நிறைகளைக் கூறி பின்னர் அந்தத்தலைப்பில் அவரது கருத்துக்கள் கடல் போல விரியும். அது வரை கேட்டுக்கொண்டிருந்த நான் அவர் கூறும் கருத்துக்களை ஒரு நாட்குறிப்பில் பதிவு செய்து கொள்வேன், கருத்துக்கள், செய்யுள்கள், விளக்கங்கள் என.

என்னிடம் தற்போது இருக்கிற விடயஅறிவில் நூலகங்களிடம் இருந்து பெற்றுக்கொண்டதை விட அதிகம் சொல்லிக்கொடுத்தது இருவர். ஒருவர் தமிழ்மணி அகளங்கன் ஆசிரியர், அடுத்தவர் திரு. கதிர்காமசேகரன் ஆசிரியர். கதிர் சேர் என மாணவர்கள் பலராலும் அழைக்கபட்ட அவர் பெரும்பாலான மாணவர்களின் அபிமானம் பெற்ற ஒரு ஆசிரியர். வகுப்பறைக் கற்பித்தலிலும், மேடைப்பேச்சிலும் தனக்கான தனிப்பாணி கொண்ட அவருக்கு ஆசிரியர், மாணவர்களிலேயே பல ரசிகர்கள் இருந்தனர். இருவரும் இணைந்து கொண்டு சில விடயங்கள் கதைப்பதை நேரம் போவது தெரியாமல் கேட்டுக்கொண்டுஇருந்தே நாங்கள் அறிந்த விடயங்கள் ஏராளம்.

தொடர்ந்து கதிர்காமசேகரன் ஆசிரியர் வீட்டிலும் மாலை நேரங்களில் பயிற்சிகள் தொடர்ந்தது. நேரம் தெரியாது அவர் கூறும் விடயங்களைக் கேட்ட படியே நாட்கள் ஓடியிருக்கின்றன. அங்குதான் பல நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. சிறு வயதில் நான் பேசப் பழக ஆரம்பிக்கும் முன்னரே என்னைக்கவர்ந்த எமது பாடசாலை மாணவர்கள் இருவர் ஒருவர் கார்த்திகேயன் அண்ணா, அவரைப் பார்த்தது மட்டும்தான் மற்றவர் கோகுலதாசன் அண்ணா,. கோகுலதாசன் அண்ணாவின் அறிமுகம் கிடைத்ததும் அடுத்த வருடத்தில் அவரின் தலைமையிலான விவாத அணியில் நான் ஜனுதர்சன், ரமேஸ் ஆகியோர் இடம்பிடித்ததும் என எங்களின் வாழ்க்கைத் தடங்களில் பலவற்றைத் தொட்டுச்செல்வது கதிர் சேர் வீட்டு முற்றமும் அவரின் வரவேற்பரையும்தான். கதிர் சேர் தான் பங்கேற்ற பட்டி மன்றங்கள், கம்பன் கழக நிகழ்வுகள் என பலவற்றின் வீடியோக்களைப் போட்டுக்காட்டிக் கதைப்பார். அதை விட கம்பன் கழகம் பற்றிய அழிக்கமுடியாத எண்ணக்கருவை விதைத்ததும் அவர்தான். 

எனது வாசிப்புலகத்தில் இவர்களைப் பற்றி கூறுவதற்குக்காரணம் இவர்கள் இருவரிடமும் கற்றது எந்த நூல் நிலையத்திலும் வாசித்ததை விட அதிகம் அடுத்தது எனது வாசிப்புப்பழக்கத்தையும் மெருகேற்றியவர்கள் இவர்கள். இந்த பேச்சு, பட்டிமன்ற அறிமுகத்தாலும் இவர்கள் மூலம் கிடைத்த இலக்கியப் பரிச்சயத்தாலும் எனது வாசிப்பு இன்னும் கொஞ்சம் அகலமானது ஆரம்பத்தில் பாரதியார் கவிதை, பாரதிதாசன் கண்ணதாசன் என தொட்டுத் தொட்டு சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி என மரபிலக்கியங்களையும் தொட்டுக்கொண்டேன்.
பெரும்பாலான எல்லா மரபிலக்கியங்களின் கதையுருவில் அமைந்த பாதிப்புக்களையும் முதலில் வாசித்தேன் பின்னர் இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்தேன். அகளங்கன் ஆசிரியரின் வாலி, பாரதப்போரில் மீறல்கள் போன்ற புத்தகங்கள் இலக்கியங்களின் இனிமையை உணர்த்துவதை இருந்தது. ஒவ்வொரு நிகழ்விற்கும் வேறு பட்ட தலைப்பில் பட்டிமன்றம் அமைப்பதும் அதற்காக அது தொடர்பான நூல்களைத்தேடுவதும் புத்தகங்களுக்குள் என்னைப் புதைத்துவிட்டது. எங்களுடைய நோக்கம் எல்லாம், எல்லாவற்றிலும் கொஞ்சமாவது அறிந்திருத்தல் என்னும் நோக்கில் இயங்கியது (Something in Every thing).
அந்தத் தேடல் பிற்காலத்தில் பாடசாலையில் அவசரமாக ஒரு மாணவர் பேசவேண்டிய சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் அந்த வாய்ப்பை எனக்கே பெற்றுக்கொடுத்தது. 2001ம் ஆண்டில் தற்செயலாக கிடைத்த சந்தர்ப்பத்தால் பேசச்சென்று நாத்தழு தழுத்து பேச முடியாமல் இறங்கிய எனக்கு பாடசாலை விட்டு விலகும் வரை போதும் அதே இடத்தில் போதும் என்னும் வரை வாய்ப்புக்கொடுத்தது. மாவட்ட, மாகாண, தேசிய அளவுகளில் எமது விவாத அணி பல வெற்றிகளைப் பெறுவதற்கு காரணமாக இருந்தது என்னைப் பொறுத்தவரையில் கலாநிதி. அகளங்கன் ஆசிரியர் மற்றும் கதிர் ஆசிரியர் ஆகியோரின் வழிகாட்டலும், எம்மைத்தொடர்ந்த வாசிப்புப் பழக்கமும்தான். உயர்தர வகுப்புக்கள் ஆரம்பித்ததும் எனது வாசிப்புப் பழக்கம் இன்னும் கொஞ்சம் மாற்றமடைந்தது அதற்கு நண்பன் ஒருவனின் பாதிப்பும் காரணம்.

தொடரும்...

அன்புடன்,
மதுரகன்

சனி, 27 ஆகஸ்ட், 2011

எனது வாசிப்புலகம் 2 - பாடசாலைக்காலம் (சிறுகதை - நாவல்)

தேடலுக்குத் தீனி போட்ட வவுனியா பொது நூலகம்
எனது சிறு பிராயத்து அனுபவங்களை ஏற்கனவே பதிவு செய்து இருந்தேன். (பார்க்க : எனது வாசிப்புலகம் 1- சிறுபிராயத்து வாசிப்பு அனுபவங்கள்) அதனைத் தொடர்ந்ததாகவே இதுவும் இருக்கும். சிறுபிராயம் கழிந்து கொஞ்சம் துடிப்பு உடலிலும் மனதிலும் ஏறிக்கொண்டிருந்த பொழுதில் நானும் என் நண்பனும் (ஜனுதர்சன்) வவுனியா பொது நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து புத்தகங்களை இரவல் பெற்று வந்து வாசிப்பதென முடிவெடுத்தோம். 
ஒரு நாள் பாடசாலை முடிய இருவரும் சென்று விண்ணப்பப்படிவதைக் கேட்கும்பொது எங்களுக்கு பதின்மூன்று வயதாவதால் சிறுவர் பகுதியில் அனுமதிக்க முடியாது ஆகவே இரவல் வழங்கும் பகுதியில் உறுப்புரிமை பெறுமாறு அங்கிருந்த பொறுப்பாளர் கூறினார். அங்கு என்ன இருக்கும் என்று அறிந்திராவிட்டாலும் இருவரும் படிவத்தைப் பெற்றுச்சென்று அதில் கூறியிருந்த அனைவரிடமும் கையொப்பம் பெற்று ஓரிரு நாட்களுக்கும் நகரசபையில் கட்டுப்பணமும் செலுத்தி உறுப்புரிமை பெற்றுவிட்டோம். 

தமிழ்வாணன்
அதன் பின்பு இரவல் வழங்கும் பகுதிக்கு நுழைந்தபோதுதான் புரிந்தது ஒரு புத்தகக்கடலுக்குள் நுழைந்துவிட்டோம் என. ஆரம்பத்தில் எந்தப்புத்தகதை எடுப்பது என குழப்பம் நேரிட்டது. நண்பன் (வசீதன்) ஒருவனின் அறிவுறுத்தலில் தமிழ்வாணன் நாவல்களை வாசிக்க ஆரம்பித்தேன். பின்பு ஒரு வாரத்திற்கு ஒரு நகைச்சுவைப் புத்தகம் ஒரு தமிழ்வாணன் புத்தகம் என வாசித்தேன். தமிழ்வாணன் எழுதி நூலாகத்தில் இடம்பிடித்திருந்த அவ்வளவு புத்தகங்களையும் முடிக்கும் மட்டும் இது தொடர்ந்தது. 
கூடவே வேறு சில நண்பர்களும் தமிழ்வாணனை வாசிப்பதை அறிந்து அவர்களுடன் சங்கர்லால், தமிழ்வாணன் போன்ற கதாபாத்திரங்கள் பற்றியெல்லாம் விவாதிப்பதும் நடந்தது (குறிப்பாக அருணனுடன்). அப்படியே தமிழ்வாணன் முடிய ஜே.டி.ஆர், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், எண்டமூரி விரேந்திரநாத் என இது தொடர்ந்தது. (பிற்காலத்தில் இந்தப் புத்தகங்களில் பல சிரிப்பை வரவழைத்தாலும் அந்த வயதுகளில் அது பிடித்து இருந்தது). 
ராஜேஸ்குமார்
ப. பிரபாகர்
நாட்செல்லச்செல்ல வாரம் இரு புத்தகங்கள் போதாது என்ற உணர்வு வந்தது. அக்கா பயன்படுத்தாமல் வைத்திருந்த அவரது அட்டைக்கும் நான் புத்தகம் எடுக்க ஆரம்பித்தேன். நூலகப் பொறுப்பாளர் அறிமுகம் ஆனவர் என்பதால் அவர் பொருட்படுத்துவது இல்லை. கிட்டத்தட்ட ஒன்பதாம் ஆண்டு முடியும் வரை இவ்வாறுதான் தொடர்ந்தது. நகைச்சுவைக் கதைகளில் பாக்கியம் ராமசாமி சென்னைத்தமிழில் எழுதிய அப்புசாமி தொடர்கதைகளைப் படித்ததாக நினைவு அதைவிடவும் பல நகைச்சுவைகள் படிப்பேன். 

எண்டமூரி
பாக்கியம் ராமசாமி
கல்கி
பத்தாம் ஆண்டின் ஆரம்பப்பகுதி அல்லது முதல் அரைப்பாகத்தில் மகாபாரதத்தை முழுமையாக வாசித்து முடித்து பொன்னியின் செல்வனையும் முடித்தேன். பொன்னியின் செல்வன் பலதடவைகள் வகுப்பில் பாடம் நடக்கும்போது மடியில் வைத்தெல்லாம் வாசித்து இருக்கிறேன். கூடவே இந்திரா சௌந்தர்ராஜனின் எழுத்துக்களின் அறிமுகம் மற்றும் மாயாஜால விடயங்களில் இருந்த ஆர்வம போன்றன அவரது கதைகளை வாசிக்கத்தூண்டியது. அவரது புத்தகங்கள் இருந்த தட்டையும் முடித்தேன். இதிலே விடுபட்ட ஓரிரு புத்தகங்களை கடையில் வாங்கியும் வாசித்தேன். அந்தக் காலங்களில் எமது தனியார் கல்வி நிலையத்தில் தமிழ் கற்பித்த கஜரூபன் ஆசிரியரது கற்பித்தலும் பல வாசிப்புகளில் என்னைத்தூண்டியது. அடிக்கடி பல புத்தகங்களை பரிசளித்தும் எங்கள் ஆர்வத்திற்கு வழிகோலினார். அதை விட கம்பன் கழகம் பற்றிய அறிமுகம் மற்றும் தகவல்களும் அவரின் மூலமே எங்களுக்கு முதன் முதலில் கிடைத்தன.

2002ம் ஆண்டின் இன் மத்திய பகுதியில் என் வாழ்க்கையில் எதிர்பாராத அறிமுகங்களும் திருப்பங்களும் ஏற்பட்டன....

தொடரும்...

அன்புடன்,
மதுரகன்

பி. கு - இதை வாசிக்கும் நெருங்கிய நண்பர்கள் நான் எதையும் தவற விட்டிருந்தால் கூறவும்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

எனது வாசிப்புலகம் - சிறுபிராயத்து வாசிப்பு அனுபவங்கள்

நீண்ட நாளாக எழுத விரும்பிய அல்லது பதிந்து வைத்துக்கொள்ள விரும்பிய விடயம் இது. நான் என்னைப்பற்றிக் கூறிக்கொள்கிற ஒரு விடயம் நான் ஒரு Book addict அதாவது வாசிப்பிற்கு அடிமையான ஒருவன் என்பதாகும். இது எவ்வாறு தொடங்கியது எப்படி நான் பயணித்தேன் என்று அடிக்கடி மீட்டுப்பார்த்துக்கொள்வேன்.
பெரும்பாலான எல்லாரையும் போல் பிஞ்சு வயதில் கேட்ட கதைகள்தான் எனது வாசிப்பு உலகத்தின் திறவுகோல். புத்தகம் எடுத்து வாசிக்கப் பொறுமை இல்லாதவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் இருக்கலாம். ஆனால் சின்ன வயதில் கதை கேக்க விருப்பமில்லாதவர்கள் இருக்கவே முடியாது. இன்று வரை பல குழந்தைகளுக்கு பராக்கு காட்டவும், உணவு ஊட்டவும், தூங்கவைக்கவும் கதைகளே உதவுகின்றன. நானும் நினைவு தெரிந்த நாள்முதல் கதை கேட்டு இருக்கிறேன். அம்மா, அப்பா, அம்மம்மா என அந்த நினைவுகள் நீளும். 
ஆனால் அதிகளவு கதை கேட்டது அப்பாவிடமிருந்துதான். அந்தக்காலங்கள் அருமையானவை கட்டிலில் அப்பாவின் அருகில் படுத்திருந்தவண்ணம் கதை கேட்கும் பொழுதுகள். பெரும்பாலான கதைகள் இன்றுவரை நினைவிருக்கின்றன. சிக்கல் தன்மை குறைந்தவையாக சுவாரசியமான, விகடமான, சாதுரியமான பல கதைகள். அவற்றில் பல காட்டு விலங்குகளைப் பற்றியதாக இருக்கும் பல மனிதர்கள் இடையான கதைகள் என பல்வேறு வகைப்பட்டது. அவற்றில் பெரும்பாலான கதைகள் மீண்டும் வேறு புத்தகங்களில் நான் வாசித்ததில்லை. ஆனால் அதே கதைகளை அவர் என்னிலும் ஐந்து வயது குறைந்த தங்கையிடமும், என்னிலும் பதின்மூன்று வயது குறைந்த தம்பியிடமும் கூறும் போதும் திரும்ப அருகிலிருந்து கேட்டேன். அதே சுவாரசியமும் மழலைப்பருவ மகிழ்ச்சியும் கிடைக்காமல் இல்லை.
பள்ளி செல்லும் வயது வந்ததும் அந்தந்த வயதுகளில் நான் வாசிக்க ஏற்ற புத்தகங்கள் எனக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டன. ஈஸாப் நீதிக்கதைகளில் தொடங்கி தெனாலி ராமன் மரியாதை ராமன் கதைகள் என 7 - 8 வயதுகளில் வாசித்தேன். ஒன்பது வயதை எட்டியதும் கோகுலம் இதழ்கள் எனக்கு அப்பா வாங்கிக்கொடுப்பார். அந்த வயதில்தான் வாசிப்பு ஆர்வம் வெளிப்படையாக எனக்குத் தெரிந்தது. கொண்டுவந்த கோகுலத்தை அரை நாளுக்குள் வாசித்து முடித்துவிட்டு இன்னொரு புத்தகம் கேட்பதைப் பார்த்து அப்பா பொறுமையாக வாசி என்பார். சிலவேளைகளில் நான் பலவற்றை வாசிக்காமல் விடுவதை சுட்டிக்காட்டுவார். 
அதேவேளை அந்த நேரம் பிரபலமாக வந்து கொண்டிருந்த ஒரு கட்டுரை "அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை" என்று நினைக்கிறேன் வாசிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் தினமுரசு பத்திரிக்கை எடுக்கப்படுவது வழக்கம். (அந்தக்கட்டுரைக்காகத்தான் அது எடுக்கப்பட்டது என்பது பிற்காலத்தில் அந்த பத்திரிகைக்கான சந்தா நிறுத்தப்பட்டபோது விசாரித்து அறிந்து கொண்டேன்). அந்தப் பத்திரிகையின் சிறுவர் பக்கத்தை வாசிக்க ஆரம்பித்தேன் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா, சிறுகதை என வாசிக்க ஆரம்பித்து ஐந்தாம் ஆண்டவில் என்று நினைக்கிறேன் தொடர்கதைகளையும் வாசிக்க ஆரம்பித்தேன். அந்த நேரம் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஸ்குமார் போன்றவர்களின் தொடர்கதைகள் மாறி மாறி வந்தது ஞாபகம். அதை விட பூலான் தேவியின் வாழ்க்கை வரலாறு, இடி அமீன் வரலாறு, பின்னர் "கண்ணீரில் கரைந்த இரவுகள்" என்ற தலைப்பில் டயானாவின் வரலாறு போன்றன வெளிவந்தன புரிந்தும் புரியாமலும் அவற்றையும் வாசித்தேன்.
அந்த நேரம் வெளிவந்த ராணி காமிக்ஸ் புத்தகங்கள் எனக்குப் பிடிக்கும் ஆனால் ஏனோ அப்பா அவற்றை வாங்கிக்கொடுப்பதில்லை கோகுலம்தான் வாங்கிக் கொடுப்பார், ஆனால் ஒன்பது வயதில் எங்களது வகுப்பு மாணவன் ஜோன்சன் ஒவ்வொரு வாரமும் ராணி காமிக்ஸ் வந்ததும் காலையே வாங்கிக்கொண்டு பாடசாலை வருவான். நாங்களும் போட்டி போட்டுக்கொண்டு அவன் வாசித்து முடித்ததும் ஒவ்வொருவராக பாடசாலை முடியும் முன்னரே வாசித்துவிடுவது வழக்கமாக இருந்தது.
அதைவிட எனது தாய் தந்தையர் இருவரும் ஆசிரியர்களாக இருப்பதால் ஏனைய வகுப்புகளின் பாடப்புத்தகங்கள் எனது வீட்டில் இருக்கும் இவற்றில் உள்ள கதைகளையும் ஒன்று விடாமால் வாசித்து முடித்துவிடுவேன். இதேவேளை நான்காம் ஆண்டில் படிக்கும் போதே அடுத்தடுத்து புத்தகம் கேட்டு தொல்லை கொடுப்பதைக் கண்டு அப்பா சனி ஞாயிறுகளில் வவுனியா நூலகத்திற்கு கூட்டிகொண்டு போவார் காலையில் கொண்டுபோய் இறக்கிவிட்டு பின்னர் மதியம் வந்து ஏற்றிச்செல்வார் அந்த நேரம் கொஞ்சம் நாட்டுச்சூழலும் பிரச்சினை மிக்கதாய் இருந்ததால் இடைக்கிடை எனது விஜயம் தடைப்படும். அல்லது அம்மா நீண்ட அறிவுறுத்தல் பட்டியலுடன் அனுப்பி வைப்பார்.
சிறு வயதில் நான் நேரம் செலவிட்ட பழைய பொதுநூலகம்
அங்கு சிறுவர் பகுதிக்குச் சென்று கையில் அகப்படும் புத்தகத்தை எடுத்து வாசிப்பேன் அது பிடிக்காவிட்டால் இன்னொன்று என நிறையப்புத்தகங்களை வாசித்து இருக்கிறேன். புலமைப்பரிசில் பரீட்சைக்கு மேலதிக வகுப்புக்கள் ஒழுங்கு செய்யப்படும் வரை இது தொடர்ந்தது.

குறிப்பு - இந்த நடை பலருக்கு அலுப்படிக்கலாம் ஆனால் எல்லாவற்றையும் பதிவு செய்யவேண்டும் என்ற ஆர்வமே எனக்கு முதலிடத்தில் இருக்கிறது.

இன்னும் தொடரும்...

அன்புடன்,
மதுரகன்


வியாழன், 9 ஜூன், 2011

பா.விஜய் தலைமையில் நடைபெற்ற முத்தமிழ்விழாக் கவியரங்கில் நான் வாசித்த கவிதை

தேமதுரத் தமிழோசை பூவுலகை வெல்லும்
காற்றாகி, கனலாகி, காதலாகி, ஊற்றாகி, உறவாகி, உழைப்பாகி
காற்றாகி...
காத்திடு என் கவியில் கலையாத களங்கமுண்டேல்
பார்த்து என் கவியின் பழுதெலாம் போக்கிடு
சேர்த்துச் சேர்த்துனது செவியினிலே நான்பாடும்
நீர்த்துப்போன வரிகளையும் நிலைநாட்டு கணபதியே

என் கவிதைக்கு அப்பன் பாரதியை வணங்கிக்கொண்டு
இஃது எனக்குத் தோல்வியையும் புன்னகையையும்
கற்றுத்தந்த அனைவருக்காகவும்....

தமிழன்னை தாள் போற்றி
குருநாதர் அடி போற்றி
அறியாத கவிதைதனை அறியவைத்தான் மனம் போற்றி

கோவையில் உடல் பிறந்து கவிதையில் உளம் வளர்ந்து
ஆவியில் தமிழ் புகுந்து களமெலாம் கவி கண்டு
ஞானப்பழத்தில் அடியெடுத்து ஒவ்வொருபூக்களிலும் உச்சம்பெற்று
கலைஞர் மடி தவழ்ந்து காப்பியக் கவிஞர் வழி வாரிசாகிய
வித்தகக்கவிஞரே உமக்கென்றோர் தனிவாழ்த்து உவகையிலே
விதத்துவம் எதுவுமிலான் கவி வரி வழியே...

தேமதுரத் தமிழோசை பூவுலகைக் காற்றாகி வெல்லும்..
வென்றாகவேண்டும் தமிழ், நன்றாக அதுவெல்லும் பூவுலகை
குன்றாது குன்றி மணியேனும், அது கொண்ட புகழ்
நன்றாக நன்றாக உரத்துச் சொல்வேன், காற்றாகி வெல்லும் தமிழ்

காற்றுத்தான் அனைத்திற்கும் ஆக்குபொருள்
வானின்று தோன்றிய பஞ்சபூதங்களில் காற்றுத்தான் மூத்ததும் முதலானதும்
காற்றுத்தான் பூவுலகிலும் பூவுடலிலும் நீக்கமற நிறைந்தது
காற்றின்றிப் பூவுலகிலும் உயிரில்லை பூவுடலிலும் உயிரில்லை
            நிலத்திலும் உயிரில்லை நீரிலும் உயிரில்லை  
காற்றணுக்கள் இணைந்துதானே நீரணுக்கள் பிறக்கின்றன
காற்றின் சத்துப்பெற்றே அக்கினியும் எரிகிறது
காற்றுத்தானே பூவுலகில் கட்டின்றிப்பரவும் ஆற்றல்கொண்டது
ஆதலால் காற்றாகி வெல்லும் தமிழ் – அல்லது
காற்றாகினால் வெல்லும் தமிழ்

அது என்ன பொல்லாத காற்றைப்பாடப்போகிறாய்
சிலர் பொங்குவது கேட்கிறது – பொறுத்தருள்வீர் உண்மை சொல்வேன்
நீர்க்குமிழ்க்காற்று, தென்றல் காற்று, பருவக்காற்று, வாடைக்காற்று, புயல்க்காற்று, சூறாவளிக்காற்று, விசக்காற்று, உயிர்க்காற்று என நான் கண்ட காற்றுகள் சிலகொண்டு
காற்றாகி வெல்லும் தமிழ் எனக் கவியினால் நிறுவவந்தேன்

ஒன்று மட்டும் உண்மை
தமிழ் ஊற்றாகிக் கனலை வெல்லும்
      உறவாகி அன்பு ஊற்றை வெல்லும்
      காதலாகி உறவை வெல்லும்
      உழைப்பாகிக் காதலை வெல்லும்
காற்றாகித்தான் அனைத்தையும் வெல்லும் பூவுலகையும் வெல்லும்

நீர்க்குமிழிக்காற்றாகி..
நமக்குத்தொழில் கவிதை அல்ல!
நமக்குப் புலன் கவிதை!! நமக்குப் புலம் கவிதை!!
நமக்குப் புலப்பாடுகளும் கவிதையே!!
நீரிலிருந்து மிதந்துவரும் நீர்க்குமிழிபோல
என் கவியும் சில கணங்கள் உலாப்போகும்
அளவில் சிறிதானாலும் அது வெடித்து வெளியேறும்
சொற்பக்காற்றிலும் சோர்வின்றிப்பூவுலகை வெல்லும் என்தமிழ்

பருவக்காற்றாகி...
கண்டவுடனே காதல் வருமெனக் கேட்டதுண்டு
கண்டபடியெல்லாம் காதல் வர இன்று பார்க்கிறேன் நான்
இன்றைக்குத் தமிழனுக்கு கண்டபடி வருவது காதலும் கவிதையும்தான்
இன்றைய கவிஞர்கள், கவிதைக்குப் பொய்யழகு எனச்சொல்வதில்லை
அவர்கள் கவிதைகளுக்கு மெய்யழகு
அவர்கள் கவிதைகளிலும் ஒரே மெய்யழகுதான் - பாவை மெய் அழகு

காதல் காதல் காதல் துரத்த துரத்த மோதி விழுந்து ஓடிக்கொண்டு இருக்கின்றனர்
தாயகத்தின் கரைகளை போர்க்கடல் அரிக்கின்றவேளை
தலைநகர்க் கடற்கரையில் இவர்தம் கூத்துக்கள் ரத்தம் கொதிக்க வைக்கின்றது

கொஞ்சம் பொறுங்கள் காதல் வேண்டாம் என்று சொல்லவில்லை நான்
தமிழை மறவாது காதல் செய்யுங்கள்
கலாச்சாரம் உங்கள் காதலில் சிக்கிச்சாகத்தான் வேண்டுமா..
காதல் அனைவருக்கும் வரும் அது பருவக்காற்றுப்போன்றது
காலம் வந்தால் அனைவருக்கும் வரும்..

காதலியின் பார்வையிலே தேகமெங்கும் மின்னல் வெட்டும்
மேகப்புகைகள் போல
பட்டும்படாமலும் அருகேநடக்க மனம்முழுக்க முழக்கமிடும்
பிரிவொன்று நேரும்போது கண்ணிரண்டில் சாரல்வரும்
ஒற்றை மழையை நம்பித்தான் ஒரு ஊரே வயல விதைக்கும்
அதுதான் உண்மைக்காதல்

கண்ட கண்ட வாய்க்கால்களின் கழிவுநீர் வயலில் சேர்வதுபோல்
காண்பவருடனெல்லாம் காதல்கொள்வதும்
அவசரமாய் ஆள் மாற்றம் செய்வதும் ஆள் மாறாட்டம்செய்வதும்
சொல்லவகையில்லை சோர்ந்துபோகும் என்விரல்கள்
வேண்டாம் இது...
கண்ணியமாய்க்காதல்செய்க தமிழ் பருவக்காற்றை உலகைவெல்லும்

தலைநகர்க் காதல் பார்த்தோம், எங்கள் தாய்நிலத்துக் காதல்பற்றிக்கொஞ்சம்
காணாமல்போனோர் பற்றிய கணக்கெடுப்பில்
தன்கணவன் பெயர் சேர்க்கக் காத்திருக்கும் பெண்கள்
காத்திருந்து காத்திருந்து, கைதானோர் பட்டியலில்
தன் காதலன் பெயரும் வருதா எனப் பார்த்திருக்கும் காதலிகள்
கூடவே களம்கண்டு உயிர்நீத்த பத்தினிகள்
இன்னும் எத்தனையென்று சொல்ல..
எங்கள் பெண்களுக்கு நெடுநல்வாடைகள் கிடையாது
களம்கண்ட கணவனைக்காணாது இரண்டுமூன்று வருடங்களாய்
நெடு வாடைகள் மட்டும் வீசிச்செல்கின்றன
அந்த வாடைக்காற்றிலும் தமிழ் பூவுலகை வெல்லத்தான் போகிறது

தென்றல்காற்று
தமிழ்த்தென்றலின் இனிமை யாவருக்கும் புரிந்துவிடுவதில்லை –வாய்ப்பதும் இல்லை
அதிலும் வீசுகின்ற குண்டுகளில்
உரிமைகளையும் கனவுகளையும் தொலைத்துவிட்டு
தொலைவாக ஓடிவந்து கோடிகளைக்கொட்டி குடியிருக்க வீடெடுத்து தொடர்மாடிகளில் தொங்கிவாழும் தலைநகரத்தமிழர்கள் வீடுகளுக்குள்
தமிழ்த்தென்றல் கொஞ்சம் தயங்கித்தான் வீசுகிறது...

சிங்களத்துடன் சிரித்துக்கொண்டே குடும்பம் நடாத்துபவர்களும்
ஆங்கிலத்துடன் இழித்துக்கொண்டே Adjust செய்துகொண்டவர்களும்
நாளாக நாளாக கூடியவண்ணம்தான்

இங்கேயே இப்படி என்றால் புலம்பெயர்ந்து ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், ஸ்பானிஷ் என அந்நியமொழிகள் அனைத்தையும் கற்கும் அதிசயத்தமிழர்கள்
அன்னைத்தமிழை மறந்தனர் பாவம்..
அவர்கள் நாடுகளில் கூட மாடுகள் அம்மா எனக்கத்தியும்
அவர் குழந்தைகள் இன்றுவரை மம்மி என்றுதான் கத்திக்கொண்டிருக்கின்றனர்..

எஞ்சிய தமிழ்பேசும் தமிழரிலும் எத்தனைபேர்
தரமான தமிழ்பேச வாயெடுகின்றனர்
இலக்கியம் தெரியாது இலக்கணம் புரியாது
கம்பனைத்தெரியாது வள்ளுவம் படிக்காது
வளர்ந்து கெடுகிறது என்னினம்
கொஞ்சம்போலப் பருகிப்பாருங்கள் என் தமிழ்த்தாயின் பாலை
தமிழ் தென்றல் காற்றாய் உங்களைத்தாலாட்டும்...

நிறைவாக..
துடிக்கின்ற விரல்களில் இருந்து கண்களைப்பற்றி
ஆயிரம் கவிதைகள் எழுதவேண்டும் – காதல் மயக்கத்தில் அல்ல
கண்ணீர் பற்றியெரியும் கதைகளையும் வற்றிப்போன விழிகளையும் கொண்டு
இன்னமும் சிலிர்க்கின்ற மயிர்களும் புடைக்கின்ற நரம்புகளும்
கொஞ்சம் மீதமிருப்பதை எதிரிக்குப்புலப்படுத்த
வலிக்கின்ற இதயங்களுடன் விடிகின்ற இரவுகளுக்கு
வரியாகச் செலுத்தப்பட்ட விழிநீர்க்கனல்கள்
விதையாகி வீழ்ந்து விண்ணையும் சுட்டு
விண்மீன்களாகி மிளிர்கின்ற வரலாறுகளைப் புரட்டிப்போட

எமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம்...
எங்கள் குழந்தைகள் மட்டும்
பால காண்டம் முடிந்ததும் ஆரணியகாண்டம் புகுந்து
யுத்தகாண்டத்தில் விதையாகின
எங்கள் இளைஞர்களுக்கோ வனவாசத்தைவிட நீண்டு கிடக்கிறது
அஞ்ஞாதவாசம் – வேஷம் கலைந்தால் வாழ்வு தொலைந்துவிடும்...
அநியாயமாய்ப் பலிகொடுத்த அன்புக் கணவர்களுக்காய்
நியாயம் கேட்கப்போன நிறையக் கண்ணகிகள்
முலைகள் திருகியெறியும் முன்னர் அவர்கள் தலைகள் திருக்கப்பட்டன

பெற்றவரை இழந்து பிள்ளைகளை இழந்து
வீடிழந்து வாழ்விழந்து அக்காள் தங்கைகள் மானமிழந்து
கொத்துக்கொத்தாய் விழுந்த கொத்தணிக்குண்டுகளுக்கு
மொத்தமாய்ப்பலிகொள்ளப் பார்த்திருந்து
வெற்றுக்காகிதமாய் வரலாறுதனை இழந்து
உயிர்ப்பை இழந்து உணர்வை இழந்து உழைப்பை இழந்து
கடைசியில் கல்லில்லா அரிசிக்கும் கால்கிலோ சீனிக்கும்
கையேந்தும் நிலைகொண்டோம்

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை
மானத்தை மறைப்பதற்கே இருகையும் போதாத நிலையில்
இரந்து கேட்கவும் இறைவனை வணங்கவும்
என்ன செய்ய எனத்தவிக்கின்ற தாய்மார்
கூப்பிடவோ நா ஒன்றால் முடியவில்லை
நம்பிடவும் எம்மிடத்தில் நாதியில்லை தமிழை விட
துயரங்கள் கூடிவந்த போதும் சுரணை கெட்டுச் சுற்றுகின்ற மூடர்களே
தமிழ்க்காற்று புயலாகத் திரும்பிவரும் துயரனைத்தும் பொடியாக்கும்
துரோகங்கள் தொலைந்தோடும் பூவுலகை வெல்லும்..

பேரினவாதப் பெருமான்களுக்கு...
உங்கள் ஒப்பந்தங்களிலும் அவை கிழித்தெறியப்பட்ட நிர்ப்பந்தங்களிலும்
சிதறி வீழ்ந்தன எங்கள் வரலாறுகள்...
சிறு சிறு சலுகைகளுக்காய் சண்டையிட்டே மறைந்துபோனது ரோசம்
அவ்வப்போது போடப்படும் எச்சிற்பருக்கைகளுக்காய்
நன்றி பாராட்டி நன்றி பாராட்டி முதுகெலும்பு வாலாகிவிட்டது
உரிமைகளுக்காய் போராடியும் போராட எத்தனித்தும்
ஆயிரம் ஆயிரம் உடன்பிறப்புக்கள் சாம்பாராயினர்...
குரல் கொடுக்க அஞ்சி அஞ்சியே தொலைந்து போயின குரல்கள்
மற்றவர் நிழலில் தங்கித்தங்கியே எங்கள் நிழல்கள் காணாமல் போயின
இன்னும் என்ன என்கிறீர்களா...
அடக்கப்பட்ட தமிழ்மூச்சுக்கள் அடங்காத சூறாவளியாய் உருவெடுக்கும்
அழித்து ஒழித்து அதிலேயே மழையாகப்பொழிந்து பூவுலகை வெல்லும்...

உயிர்க்காற்று...
வெறுப்புறும் ஒரு பொருளாய்க் காற்றதன் பெருவெளியில்
இன்னும் அலைகிறது என்னுயிர்
காலமும் கடவுளும் கைவிட்டு நீந்த ஒரினத்தை சூழும் இருளறிந்தும்
கண்டு கொள்ளாக்கவிதைகளை இன்னும் யாத்தபடி
நிமிர்ந்து இறுமாந்து இருந்து
ரத்தக்கரைகளுக்கு அவர் இவர் எனச்சுட்டுதல் செய்து
கவனமாய்த்தப்பித்தாவிக் காத்து வந்த என்னுயிர்
சொட்டும் ரத்தமின்றி சொட்டுதற்கு நீருமின்றி
கத்த மனமுமின்றி காப்பதற்கு யாருமின்றி
தூக்க வருவார் துயர் துடைக்க வருவார் என
கடைசிவரை நம்பிக்காத்திருந்து கதியிழந்து
வெறுப்புறும் ஒரு பொருளாய்க் காற்றதன் பெருவெளியில்
இன்னும் அலைகிறது என்னுயிர்..

இனியும் இருளில்லை எமக்கும் அருளில்லை
போகுமுயிர் பேனாவால் புதுச்சரிதம் படைக்குமெனில்
காத்திருந்த கவலையெல்லாம் கலையவழி கிடைக்குமெனில்
எமதுயிரும் இப்பாழும் உடல் நீங்கிப் பயணிக்க
அச்சமில்லை அச்சமில்லை இனிப்பொறுமை எமக்கில்லை..
நாம் நீத்த மூச்செல்லாம் பகைவர்க்கு நச்சுக்காற்றாய் மாற
தேமதுரத்தமிழோசை எம்முயிர்க்காற்றாகி எம்முயிர்க்காற்றாலும்
இப்பூவுலகை வெல்லும்...

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”  
 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...