சனி, 5 பிப்ரவரி, 2011

மரபு வழிப்படா இயல்புகள் 2 - பிரிதலின் பிற்பட்டபெருந்துயர்

Posted on பிற்பகல் 2:02 by செல்வராஜா மதுரகன்எனக்குள் இருக்கும் உயிர்கள் மீண்டுமொருமுறை கூவிக்கொண்டன...
அடைகாத்தலின் குறைபாடுகளால் 
அவற்றின் குறைப்பிரசவம் நேரிடலாம் 
என்று இடைக்கிடை 
சுகம் விசாரித்தன...

இறக்கைகள் முளைப்பதற்கு முன்னமே 
பறந்து போய்விட்ட குயிலொன்று 
இன்னமும் என்னைப் பார்க்க வருகிறதா 
எனக் குறைகேட்டன...

நானும் குயிலின் நாதம் என்னைப் 
பாதிக்கவில்லையெனப் பதிலளித்தேன்

ஆனால் குயில் இடைக்கிடை என்னைப் பார்த்துக் கூவிச்சென்றது... 
நான் அதற்குத் தலையசைக்கவில்லை
சில வேளைகளில் 
மரத்தில் குந்தியிருந்து கொத்திப் போனதும் 
கிளைகளில் எச்சமிட்டும் 
அது நடந்துகொண்டது...
நான் சட்டை செய்யவில்லை..

என் கவனங்கள் 
கூட்டுக்குளிருக்கும் முட்டைகளைப் பாதுகாப்பதில், 
குறிப்பாக இந்தக்குயிலின் சங்கீதம் 
அவற்றை எட்டாமல் 
காதுகளைப் பொத்திகொண்டேன்...
அருகில் வரும் நேரங்களில் 
கண்ணைப் பொத்திக்கொண்டேன்....

காலத்துடன் குயில் 
கூவுவதை மறந்து போனது
அருகாமையில் கடந்தாலும் அசைவுகள் ஏற்படுத்தவில்லை
ஆனால் அடிக்கடி கிடைக்கும் செய்திகள் 
உவப்புடையவையாக இருக்கவில்லை

என்னைத் துஷ்டனைப்போல பாவனை காட்டுவதாய், 
எனதருகில் செல்ல அஞ்சுவது போலும், 
நான் திருடி வந்து முட்டைகளை அடைகாப்பதைப்போலும்
பல்வேறு பாவங்கள்...
அன்றொரு நாள் 
அயல் மரக்கிளையில் என்னைப் பார்த்து இருந்தபோது, 
ஆதிகாலத்தில் அடைக்காக்கும்போது நான் பாடிய ராகத்தின் பாடலொன்றை இசைக்க முயன்றேன்..
ஆனாலும் நிலைமையுணர்ந்து 
சம்பிரதாயக் கச்சேரி ஒன்றுக்கு 
முகஸ்துதி பாடினேன்...

காலங்களாய்ப் பூட்டப்பட்டிருந்த வாய்திறந்து
குயில் என் மீது 
நீண்ட குற்றப்பத்திரிகை ஒன்று படித்தது..
தனது அடைகாப்புப்பற்றி 
நான் அர்த்தமின்றி உளறுவதாய்..
மேலும் பழமை நினைவில் உள்ளதன் கெடுதியைப்பற்றி
நீண்ட அறிவுரை கூறிப் பின்னர் 
தன்னை அடைகாத்த தடயங்களை எரிக்கச்சொன்னது...  

நான் கூறினேன், அதற்குக் கூட்டை எரிக்கவேண்டும்...
அதன் நிலைப்பாடு உறுதியாயிருந்தது..
நான் கூட்டிலுள்ள ஏனைய முட்டைகளின் 
எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டினேன்...
வேண்டுமானால் நான் தற்கொலை செய்வேன் 
என வழியுரைத்தேன்

குயில் பறந்துவந்து கூட்டைக்கொத்த முயன்றது..
நான் என் இறக்கைகளை விரித்துத்தாங்கினேன், 
முட்டைகளைப் பற்றிக்கொண்டேன்,
கூட்டினுள் முகம் புதைத்து அழுந்தினேன்..

வர வர இறக்கையிலும் முதுகிலும் விழும் கொத்து 
வேகமும் வீச்சும் கூடியிருந்தது உணர்ந்து திரும்பினேன், 
குயில் ஒரு மரங்கொத்தியாக மாறியிருந்தது...

நான் முட்டைகளையும் கூட்டினையும் தூக்கிக்கொண்டு 
அந்தக்குயில்/மரங்கொத்தி கனவிலும் அணுகமுடியாத 
தேசம் நோக்கிப்பயணிக்கிறேன்...


இவை புரிந்துகொள்ளலுக்கும் பிரிதலில் புரிந்து செல்வதற்கும் இடைப்பட்ட முரண்பாடுகளின் மனப்போராட்டங்கள்...

அன்புடன்,
மதுரகன்


No Response to "மரபு வழிப்படா இயல்புகள் 2 - பிரிதலின் பிற்பட்டபெருந்துயர்"

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...