சனி, 28 மே, 2011

மனதைவருடும் மலேசிய இசை - திலீப் வர்மன்


தமிழ் மெல்லிசையை முழுமையாக சினிமா ஆக்கிரமித்துக்கொள்ள முயலும் இந்த யுகத்தில் இசைத்தொகுப்புக்கள் சில அவ்வப்போது வெளிவந்து சுதந்திரமான தமிழ் மெல்லிசை உலகத்தின் இருப்பைக்காத்துக்கொள்ளும். ஆனால் அதிலும் வெளிவருகின்ற இசைத்தொகுப்புக்கள் பூரணமாக Rap மற்றும் Hip Hop இசைக்கே முக்கியத்துவம் வழங்க முற்படுகின்றன. இவற்றின் இசை இன்றைய இளைய தலைமுறையினரின் மனதை ஆக்கிரமித்துவிட்டது எவ்வளவிற்கு உண்மையே அதே அளவிற்கு உண்மையான விடயம் தமிழ் உச்சரிப்பினை இவை சிதைத்துக்கொண்டு இருப்பது. வர வர அதன் அளவு மோசமாவதையும் புதிதாக வருபவர்கள் நன்றாக தமிழ் உச்சரிக்கத் தெரிந்து இருந்தும் அது நாகரிகம் இல்லை என நினைத்து தமிழை தவறாக கையாள ஆரம்பிப்பதும் வேதனை அளிக்கும் விடயங்கள். உதாரணமாக தமிழ் இவர்களால் தமில் ஆகியுள்ளது, பெண்ணே என்பதை பென்னே என்கிறார்கள். இப்படி இவர்களில் சிலரால் தமிழ் பட்டபாடு கொஞ்சம் நெஞ்சம் இல்லை. இந்தக் காலகட்டத்தில் இனிமையான மெல்லிசைக்கும் தூய்மையான தமிழ் உச்சரிப்பிற்கும் இன்னும் காலமிருப்பதை கண்ணுக்கு முன்னே காட்டிக்கொண்டிருப்பவர்தான் இன்றைய எனது பதிவினை ஆட்கொள்ளும் திலீப் வர்மன்.
ஒரு நண்பரின் Facebook இணைப்பு ஒன்றினை சொடுக்கியபோது நான் உணர்ந்து இருக்கவில்லை. அன்றைய நாள் முழுவதையும் இல்லை.. கிட்டதட்ட அந்த வாரம் முழுவதையும் ஆக்கிரமிக்கப்போகும் இரு பாடலாக அது அமையப்போகிறது என. திலீப் வர்மனின் குரலில் வெளியான "உயிரைத்தொலைத்தேன்" என்ற மிகப்பிரபல்யம் வாய்ந்த பாடல்தான் அது. அதற்குப்பிறகு அவரது ஒவ்வொரு பாடலாக தேடித்தேடிப் பார்த்தேன் கேட்டேன் உணர்ந்தேன்...
அவரைப்பற்றி கொஞ்சம்
பெயர் - எஸ். திலீப்வர்மன்
வயது - தெரியாது 
பிறந்த திகதி - ஏப்ரல் 28
பிறந்த இடம் - பினாங்கு மாநிலம், மலேசியா
தொழில் - பாடகர், இசையமைப்பாளர்,பாடலாசிரியர்

இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரகுமான் ஆகியோருடைய தீவிர ரசிகராக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அவர் 2000 ஆம் ஆண்டில் ஒரு மேடைப்பாடகராக தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தார். 2002இல் நவீனம் என்ற இசைத்தொகுப்பில் பாட அவருக்கு கிடைத்தவாய்ப்பு அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் தாமாக ஆரம்பித்த நிறுவனத்தின் மூலம் இசைத்தொகுப்புக்களை அவர் வெளியிட ஆரம்பித்தார் அந்தவேளை ஜெய் இனது இசையில் வெளியான "உயிரைத்தொலைத்தேன்" பாடல் மலேசியா கடந்து சர்வதேச அளவில் அவருக்கு புகழ் தேடிக்கொடுத்தது. தென்னிந்திய இசை ரசிகர்களால் கவனிக்கப்படும் ஒருவராக மாறினார். தொடர்ந்து அவரது ஒவ்வொரு தொகுப்புக்களும் வெற்றி பெற்று எண்ணற்ற விசிறிகளை உருவாக்கிவிட்டது. 2007ம் வருடம் மலேசிய இந்திய இசை உலகத்தின் சிறந்த ஆண் பாடகருக்கு உரிய விருது அவருக்கு கிடைத்தது. அவரது பாடல்களின் எனக்கு மிகவும் பிடித்த உயிரைத்தொலைத்தேன் பாடலின் இணைப்பை இங்கு தருகிறேன்.

மேலதிக இணைப்புக்கள்
2. திலீப் வர்மனின் Homepage 


மீண்டும் ஏதாவது எழுதத்தோன்றினால் வருகிறேன்..
அன்புடன், 
மதுரகன்  

வியாழன், 26 மே, 2011

கவனிக்கப்படாமல் விடப்பட்டது ஏனோ???

சந்தமிதுரி என்ற சிங்களப்பாடலைப் பலர் கேட்டு இருக்கக்கூடும்... அர்த்தம் புரியாவிட்டாலும் அந்த இசையின் இனிமையிலும் குரலின் உணர்விலும் நான் மனதைப் பறிகொடுத்துவிட்டு இருந்தேன். அந்தப்பாடலின் இசை ராஜ் என குறிப்பிடப்பட்டு இருந்தபோது அது ஒரு தமிழர் என நான் அறிந்து இருக்கவில்லை... கொஞ்சம் அந்தப்பாடலை கேட்டுவிட்டு வாருங்கள் மீதம் சொல்கிறேன்...
பிறகு சில நாட்களின் பின்னர்தான் நண்பன் அகிலனின் மூலம் இந்தப்பாடலிற்கு தமிழ் மொழிப்பதிப்பு ஒன்று இருப்பதை அறிந்தேன். அதுவும் எஸ்.பி.பி பாடியிருக்கிறார் என அறிந்ததும் அந்தப்பாடலை Youtube இல் தேடிக்கண்டெடுத்தேன்... இன்று தற்செயலாக அந்தப்பாடல் இன்று மீண்டும் என் கண்ணில் பட.. காதில் ஒட்டிக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. அதையும் உங்களுக்காக இங்கே இணைத்து இருக்கிறேன்..
பாடல் வரிகள் - 
"மொழியின்றி விரிகின்ற என் கீதம்
வழிகின்ற இளங்காதல் சங்கீதம்
இமையோரம் இதழாலே இசை சொல்வேன் இளமானே இனிக்கின்ற துயர் நீக்க வா
எந்தன் ஆசை சொல்லும் ஓசை காதல் பாஷை
உந்தன் ஆசை சொல்லும் ஓசை என்ன பாஷை

நிலவொன்று பொழிகின்ற நிறம் கண்டு நீலம் மீது நிஜமாக நீ வந்து ஏன் தோன்றினாய்
கண் வீணை காதல் இசை மீட்ட
பண் தேனைப் பதமாக்கி நான் ஊற்ற
துளிர் விட்ட ராகங்கள் சுகம் கொட்டும் நேரங்கள் சுவை ஊற்றும் வாழ்வுக்கு வரமாகுமோ
கண்ணே கீதா கீதம் தா தா

வாழ்வென்ற மலர்மீது வழிகின்ற அழகாகி வலம் வந்து என் வாழ்வில் கரம்பற்றுவாய்
உயிர் சேரும் ஒரு இருள்நேரம்
பயிராகி மெய்யொன்று உயிர் பூக்கும்
கவிபேசி நான் ஒட்ட காதோரம் தேன் சொட்ட கனவொன்று உன்னாலே நனவாகுமோ
உள்ளம் தந்தேன் உள்ளே வா வா"

அதன் பிறகு அந்தப்பாடலைப் பற்றி மேலும் சில விடயங்கள் தேடியபோது ஒரு ஆச்சரியம் தரும் விடயம் தெரியவந்தது. கனேடிய தமிழர்களால் எடுக்கப்பட்ட "1999" எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்தான் அது என்பதுவும் அந்த திரைப்படத்தைப்பற்றி மேலதிக விடயங்கள் சிலவும் தெரியவந்தது. 
கீழே அந்தத் திரைப்படம் பற்றிய இணைப்புக்களும் அதன் Trailerஉம் உங்கள் பார்வைக்கு...

வேறு இணைப்புக்கள் - 

திரைப்படத்தை பெற்றுக்கொள்ள முயல்கிறேன்... கிடைத்தால் பார்த்து விமர்சனம் எழுதுகிறேன்...

அன்புடன் 
மதுரகன்
 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...