வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

எனது வாசிப்புலகம் - சிறுபிராயத்து வாசிப்பு அனுபவங்கள்

Posted on PM 10:01 by செல்வராஜா மதுரகன்

நீண்ட நாளாக எழுத விரும்பிய அல்லது பதிந்து வைத்துக்கொள்ள விரும்பிய விடயம் இது. நான் என்னைப்பற்றிக் கூறிக்கொள்கிற ஒரு விடயம் நான் ஒரு Book addict அதாவது வாசிப்பிற்கு அடிமையான ஒருவன் என்பதாகும். இது எவ்வாறு தொடங்கியது எப்படி நான் பயணித்தேன் என்று அடிக்கடி மீட்டுப்பார்த்துக்கொள்வேன்.
பெரும்பாலான எல்லாரையும் போல் பிஞ்சு வயதில் கேட்ட கதைகள்தான் எனது வாசிப்பு உலகத்தின் திறவுகோல். புத்தகம் எடுத்து வாசிக்கப் பொறுமை இல்லாதவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் இருக்கலாம். ஆனால் சின்ன வயதில் கதை கேக்க விருப்பமில்லாதவர்கள் இருக்கவே முடியாது. இன்று வரை பல குழந்தைகளுக்கு பராக்கு காட்டவும், உணவு ஊட்டவும், தூங்கவைக்கவும் கதைகளே உதவுகின்றன. நானும் நினைவு தெரிந்த நாள்முதல் கதை கேட்டு இருக்கிறேன். அம்மா, அப்பா, அம்மம்மா என அந்த நினைவுகள் நீளும். 
ஆனால் அதிகளவு கதை கேட்டது அப்பாவிடமிருந்துதான். அந்தக்காலங்கள் அருமையானவை கட்டிலில் அப்பாவின் அருகில் படுத்திருந்தவண்ணம் கதை கேட்கும் பொழுதுகள். பெரும்பாலான கதைகள் இன்றுவரை நினைவிருக்கின்றன. சிக்கல் தன்மை குறைந்தவையாக சுவாரசியமான, விகடமான, சாதுரியமான பல கதைகள். அவற்றில் பல காட்டு விலங்குகளைப் பற்றியதாக இருக்கும் பல மனிதர்கள் இடையான கதைகள் என பல்வேறு வகைப்பட்டது. அவற்றில் பெரும்பாலான கதைகள் மீண்டும் வேறு புத்தகங்களில் நான் வாசித்ததில்லை. ஆனால் அதே கதைகளை அவர் என்னிலும் ஐந்து வயது குறைந்த தங்கையிடமும், என்னிலும் பதின்மூன்று வயது குறைந்த தம்பியிடமும் கூறும் போதும் திரும்ப அருகிலிருந்து கேட்டேன். அதே சுவாரசியமும் மழலைப்பருவ மகிழ்ச்சியும் கிடைக்காமல் இல்லை.
பள்ளி செல்லும் வயது வந்ததும் அந்தந்த வயதுகளில் நான் வாசிக்க ஏற்ற புத்தகங்கள் எனக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டன. ஈஸாப் நீதிக்கதைகளில் தொடங்கி தெனாலி ராமன் மரியாதை ராமன் கதைகள் என 7 - 8 வயதுகளில் வாசித்தேன். ஒன்பது வயதை எட்டியதும் கோகுலம் இதழ்கள் எனக்கு அப்பா வாங்கிக்கொடுப்பார். அந்த வயதில்தான் வாசிப்பு ஆர்வம் வெளிப்படையாக எனக்குத் தெரிந்தது. கொண்டுவந்த கோகுலத்தை அரை நாளுக்குள் வாசித்து முடித்துவிட்டு இன்னொரு புத்தகம் கேட்பதைப் பார்த்து அப்பா பொறுமையாக வாசி என்பார். சிலவேளைகளில் நான் பலவற்றை வாசிக்காமல் விடுவதை சுட்டிக்காட்டுவார். 
அதேவேளை அந்த நேரம் பிரபலமாக வந்து கொண்டிருந்த ஒரு கட்டுரை "அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை" என்று நினைக்கிறேன் வாசிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் தினமுரசு பத்திரிக்கை எடுக்கப்படுவது வழக்கம். (அந்தக்கட்டுரைக்காகத்தான் அது எடுக்கப்பட்டது என்பது பிற்காலத்தில் அந்த பத்திரிகைக்கான சந்தா நிறுத்தப்பட்டபோது விசாரித்து அறிந்து கொண்டேன்). அந்தப் பத்திரிகையின் சிறுவர் பக்கத்தை வாசிக்க ஆரம்பித்தேன் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா, சிறுகதை என வாசிக்க ஆரம்பித்து ஐந்தாம் ஆண்டவில் என்று நினைக்கிறேன் தொடர்கதைகளையும் வாசிக்க ஆரம்பித்தேன். அந்த நேரம் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஸ்குமார் போன்றவர்களின் தொடர்கதைகள் மாறி மாறி வந்தது ஞாபகம். அதை விட பூலான் தேவியின் வாழ்க்கை வரலாறு, இடி அமீன் வரலாறு, பின்னர் "கண்ணீரில் கரைந்த இரவுகள்" என்ற தலைப்பில் டயானாவின் வரலாறு போன்றன வெளிவந்தன புரிந்தும் புரியாமலும் அவற்றையும் வாசித்தேன்.
அந்த நேரம் வெளிவந்த ராணி காமிக்ஸ் புத்தகங்கள் எனக்குப் பிடிக்கும் ஆனால் ஏனோ அப்பா அவற்றை வாங்கிக்கொடுப்பதில்லை கோகுலம்தான் வாங்கிக் கொடுப்பார், ஆனால் ஒன்பது வயதில் எங்களது வகுப்பு மாணவன் ஜோன்சன் ஒவ்வொரு வாரமும் ராணி காமிக்ஸ் வந்ததும் காலையே வாங்கிக்கொண்டு பாடசாலை வருவான். நாங்களும் போட்டி போட்டுக்கொண்டு அவன் வாசித்து முடித்ததும் ஒவ்வொருவராக பாடசாலை முடியும் முன்னரே வாசித்துவிடுவது வழக்கமாக இருந்தது.
அதைவிட எனது தாய் தந்தையர் இருவரும் ஆசிரியர்களாக இருப்பதால் ஏனைய வகுப்புகளின் பாடப்புத்தகங்கள் எனது வீட்டில் இருக்கும் இவற்றில் உள்ள கதைகளையும் ஒன்று விடாமால் வாசித்து முடித்துவிடுவேன். இதேவேளை நான்காம் ஆண்டில் படிக்கும் போதே அடுத்தடுத்து புத்தகம் கேட்டு தொல்லை கொடுப்பதைக் கண்டு அப்பா சனி ஞாயிறுகளில் வவுனியா நூலகத்திற்கு கூட்டிகொண்டு போவார் காலையில் கொண்டுபோய் இறக்கிவிட்டு பின்னர் மதியம் வந்து ஏற்றிச்செல்வார் அந்த நேரம் கொஞ்சம் நாட்டுச்சூழலும் பிரச்சினை மிக்கதாய் இருந்ததால் இடைக்கிடை எனது விஜயம் தடைப்படும். அல்லது அம்மா நீண்ட அறிவுறுத்தல் பட்டியலுடன் அனுப்பி வைப்பார்.
சிறு வயதில் நான் நேரம் செலவிட்ட பழைய பொதுநூலகம்
அங்கு சிறுவர் பகுதிக்குச் சென்று கையில் அகப்படும் புத்தகத்தை எடுத்து வாசிப்பேன் அது பிடிக்காவிட்டால் இன்னொன்று என நிறையப்புத்தகங்களை வாசித்து இருக்கிறேன். புலமைப்பரிசில் பரீட்சைக்கு மேலதிக வகுப்புக்கள் ஒழுங்கு செய்யப்படும் வரை இது தொடர்ந்தது.

குறிப்பு - இந்த நடை பலருக்கு அலுப்படிக்கலாம் ஆனால் எல்லாவற்றையும் பதிவு செய்யவேண்டும் என்ற ஆர்வமே எனக்கு முதலிடத்தில் இருக்கிறது.

இன்னும் தொடரும்...

அன்புடன்,
மதுரகன்



3 Response to "எனது வாசிப்புலகம் - சிறுபிராயத்து வாசிப்பு அனுபவங்கள்"

.
gravatar
shugirthan Says....

உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது மதுரகன் . மேலும் தொடர்த்து உங்கள் அனுபவங்களை பகிர்த்துகொல்லுங்கள் .. உங்கள் அப்பா மாயாவி புத்தகங்கள் வாங்கி கொடுக்காதது அந் நாட்டுசூழலில் நல்லதுக்குதான் என நான்னினைக்கிறேன்...

.
gravatar
Mrs Janaki Prakash Says....

சிறுபிராயத்து வாசிப்பு அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ள விரும்பிய உங்களுக்கு நன்றிகள். உங்கள் எழுத்துக்களின் ரசிகைகளில் நானும் ஒருத்தி. வாசிப்புக்கு அடிமையாகுவதில் ஒரு தனி சுகமே இருக்கிறது.

பொதுவாக நாம் அனைவரும் கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள் தான். எங்களுடைய சிறு பராயத்தில் கதை சொல்லிகள் பலர் இருந்தனர். அம்மா,அப்பா,அம்மம்மா,அம்மப்பா,பூட்டன் & பூட்டி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு இந்த கதை சொல்லிகள் இருக்கின்றனரா? இல்லை என்றுதான் நான் கூறுவேன். சிறு பராயத்தில் ஒரு பிள்ளை புத்தகங்களை வாசிப்பதனால், பல விடயங்களை அறிந்து கொள்கிறான்.ஆனால், இன்றோ காலம் மாறிப்போச்சு. Internet & E-mail என்று புது புது துறைகளில் குழந்தைகள் ஈடுபாட்டை காட்டுகின்றனர். எதிர்கால சந்ததியினர் குறித்த கேள்விகளை,கவலைகளை சொல்ல நல்ல தருணம்.

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...