வியாழன், 9 ஜூன், 2011

பா.விஜய் தலைமையில் நடைபெற்ற முத்தமிழ்விழாக் கவியரங்கில் நான் வாசித்த கவிதை

தேமதுரத் தமிழோசை பூவுலகை வெல்லும்
காற்றாகி, கனலாகி, காதலாகி, ஊற்றாகி, உறவாகி, உழைப்பாகி
காற்றாகி...
காத்திடு என் கவியில் கலையாத களங்கமுண்டேல்
பார்த்து என் கவியின் பழுதெலாம் போக்கிடு
சேர்த்துச் சேர்த்துனது செவியினிலே நான்பாடும்
நீர்த்துப்போன வரிகளையும் நிலைநாட்டு கணபதியே

என் கவிதைக்கு அப்பன் பாரதியை வணங்கிக்கொண்டு
இஃது எனக்குத் தோல்வியையும் புன்னகையையும்
கற்றுத்தந்த அனைவருக்காகவும்....

தமிழன்னை தாள் போற்றி
குருநாதர் அடி போற்றி
அறியாத கவிதைதனை அறியவைத்தான் மனம் போற்றி

கோவையில் உடல் பிறந்து கவிதையில் உளம் வளர்ந்து
ஆவியில் தமிழ் புகுந்து களமெலாம் கவி கண்டு
ஞானப்பழத்தில் அடியெடுத்து ஒவ்வொருபூக்களிலும் உச்சம்பெற்று
கலைஞர் மடி தவழ்ந்து காப்பியக் கவிஞர் வழி வாரிசாகிய
வித்தகக்கவிஞரே உமக்கென்றோர் தனிவாழ்த்து உவகையிலே
விதத்துவம் எதுவுமிலான் கவி வரி வழியே...

தேமதுரத் தமிழோசை பூவுலகைக் காற்றாகி வெல்லும்..
வென்றாகவேண்டும் தமிழ், நன்றாக அதுவெல்லும் பூவுலகை
குன்றாது குன்றி மணியேனும், அது கொண்ட புகழ்
நன்றாக நன்றாக உரத்துச் சொல்வேன், காற்றாகி வெல்லும் தமிழ்

காற்றுத்தான் அனைத்திற்கும் ஆக்குபொருள்
வானின்று தோன்றிய பஞ்சபூதங்களில் காற்றுத்தான் மூத்ததும் முதலானதும்
காற்றுத்தான் பூவுலகிலும் பூவுடலிலும் நீக்கமற நிறைந்தது
காற்றின்றிப் பூவுலகிலும் உயிரில்லை பூவுடலிலும் உயிரில்லை
            நிலத்திலும் உயிரில்லை நீரிலும் உயிரில்லை  
காற்றணுக்கள் இணைந்துதானே நீரணுக்கள் பிறக்கின்றன
காற்றின் சத்துப்பெற்றே அக்கினியும் எரிகிறது
காற்றுத்தானே பூவுலகில் கட்டின்றிப்பரவும் ஆற்றல்கொண்டது
ஆதலால் காற்றாகி வெல்லும் தமிழ் – அல்லது
காற்றாகினால் வெல்லும் தமிழ்

அது என்ன பொல்லாத காற்றைப்பாடப்போகிறாய்
சிலர் பொங்குவது கேட்கிறது – பொறுத்தருள்வீர் உண்மை சொல்வேன்
நீர்க்குமிழ்க்காற்று, தென்றல் காற்று, பருவக்காற்று, வாடைக்காற்று, புயல்க்காற்று, சூறாவளிக்காற்று, விசக்காற்று, உயிர்க்காற்று என நான் கண்ட காற்றுகள் சிலகொண்டு
காற்றாகி வெல்லும் தமிழ் எனக் கவியினால் நிறுவவந்தேன்

ஒன்று மட்டும் உண்மை
தமிழ் ஊற்றாகிக் கனலை வெல்லும்
      உறவாகி அன்பு ஊற்றை வெல்லும்
      காதலாகி உறவை வெல்லும்
      உழைப்பாகிக் காதலை வெல்லும்
காற்றாகித்தான் அனைத்தையும் வெல்லும் பூவுலகையும் வெல்லும்

நீர்க்குமிழிக்காற்றாகி..
நமக்குத்தொழில் கவிதை அல்ல!
நமக்குப் புலன் கவிதை!! நமக்குப் புலம் கவிதை!!
நமக்குப் புலப்பாடுகளும் கவிதையே!!
நீரிலிருந்து மிதந்துவரும் நீர்க்குமிழிபோல
என் கவியும் சில கணங்கள் உலாப்போகும்
அளவில் சிறிதானாலும் அது வெடித்து வெளியேறும்
சொற்பக்காற்றிலும் சோர்வின்றிப்பூவுலகை வெல்லும் என்தமிழ்

பருவக்காற்றாகி...
கண்டவுடனே காதல் வருமெனக் கேட்டதுண்டு
கண்டபடியெல்லாம் காதல் வர இன்று பார்க்கிறேன் நான்
இன்றைக்குத் தமிழனுக்கு கண்டபடி வருவது காதலும் கவிதையும்தான்
இன்றைய கவிஞர்கள், கவிதைக்குப் பொய்யழகு எனச்சொல்வதில்லை
அவர்கள் கவிதைகளுக்கு மெய்யழகு
அவர்கள் கவிதைகளிலும் ஒரே மெய்யழகுதான் - பாவை மெய் அழகு

காதல் காதல் காதல் துரத்த துரத்த மோதி விழுந்து ஓடிக்கொண்டு இருக்கின்றனர்
தாயகத்தின் கரைகளை போர்க்கடல் அரிக்கின்றவேளை
தலைநகர்க் கடற்கரையில் இவர்தம் கூத்துக்கள் ரத்தம் கொதிக்க வைக்கின்றது

கொஞ்சம் பொறுங்கள் காதல் வேண்டாம் என்று சொல்லவில்லை நான்
தமிழை மறவாது காதல் செய்யுங்கள்
கலாச்சாரம் உங்கள் காதலில் சிக்கிச்சாகத்தான் வேண்டுமா..
காதல் அனைவருக்கும் வரும் அது பருவக்காற்றுப்போன்றது
காலம் வந்தால் அனைவருக்கும் வரும்..

காதலியின் பார்வையிலே தேகமெங்கும் மின்னல் வெட்டும்
மேகப்புகைகள் போல
பட்டும்படாமலும் அருகேநடக்க மனம்முழுக்க முழக்கமிடும்
பிரிவொன்று நேரும்போது கண்ணிரண்டில் சாரல்வரும்
ஒற்றை மழையை நம்பித்தான் ஒரு ஊரே வயல விதைக்கும்
அதுதான் உண்மைக்காதல்

கண்ட கண்ட வாய்க்கால்களின் கழிவுநீர் வயலில் சேர்வதுபோல்
காண்பவருடனெல்லாம் காதல்கொள்வதும்
அவசரமாய் ஆள் மாற்றம் செய்வதும் ஆள் மாறாட்டம்செய்வதும்
சொல்லவகையில்லை சோர்ந்துபோகும் என்விரல்கள்
வேண்டாம் இது...
கண்ணியமாய்க்காதல்செய்க தமிழ் பருவக்காற்றை உலகைவெல்லும்

தலைநகர்க் காதல் பார்த்தோம், எங்கள் தாய்நிலத்துக் காதல்பற்றிக்கொஞ்சம்
காணாமல்போனோர் பற்றிய கணக்கெடுப்பில்
தன்கணவன் பெயர் சேர்க்கக் காத்திருக்கும் பெண்கள்
காத்திருந்து காத்திருந்து, கைதானோர் பட்டியலில்
தன் காதலன் பெயரும் வருதா எனப் பார்த்திருக்கும் காதலிகள்
கூடவே களம்கண்டு உயிர்நீத்த பத்தினிகள்
இன்னும் எத்தனையென்று சொல்ல..
எங்கள் பெண்களுக்கு நெடுநல்வாடைகள் கிடையாது
களம்கண்ட கணவனைக்காணாது இரண்டுமூன்று வருடங்களாய்
நெடு வாடைகள் மட்டும் வீசிச்செல்கின்றன
அந்த வாடைக்காற்றிலும் தமிழ் பூவுலகை வெல்லத்தான் போகிறது

தென்றல்காற்று
தமிழ்த்தென்றலின் இனிமை யாவருக்கும் புரிந்துவிடுவதில்லை –வாய்ப்பதும் இல்லை
அதிலும் வீசுகின்ற குண்டுகளில்
உரிமைகளையும் கனவுகளையும் தொலைத்துவிட்டு
தொலைவாக ஓடிவந்து கோடிகளைக்கொட்டி குடியிருக்க வீடெடுத்து தொடர்மாடிகளில் தொங்கிவாழும் தலைநகரத்தமிழர்கள் வீடுகளுக்குள்
தமிழ்த்தென்றல் கொஞ்சம் தயங்கித்தான் வீசுகிறது...

சிங்களத்துடன் சிரித்துக்கொண்டே குடும்பம் நடாத்துபவர்களும்
ஆங்கிலத்துடன் இழித்துக்கொண்டே Adjust செய்துகொண்டவர்களும்
நாளாக நாளாக கூடியவண்ணம்தான்

இங்கேயே இப்படி என்றால் புலம்பெயர்ந்து ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், ஸ்பானிஷ் என அந்நியமொழிகள் அனைத்தையும் கற்கும் அதிசயத்தமிழர்கள்
அன்னைத்தமிழை மறந்தனர் பாவம்..
அவர்கள் நாடுகளில் கூட மாடுகள் அம்மா எனக்கத்தியும்
அவர் குழந்தைகள் இன்றுவரை மம்மி என்றுதான் கத்திக்கொண்டிருக்கின்றனர்..

எஞ்சிய தமிழ்பேசும் தமிழரிலும் எத்தனைபேர்
தரமான தமிழ்பேச வாயெடுகின்றனர்
இலக்கியம் தெரியாது இலக்கணம் புரியாது
கம்பனைத்தெரியாது வள்ளுவம் படிக்காது
வளர்ந்து கெடுகிறது என்னினம்
கொஞ்சம்போலப் பருகிப்பாருங்கள் என் தமிழ்த்தாயின் பாலை
தமிழ் தென்றல் காற்றாய் உங்களைத்தாலாட்டும்...

நிறைவாக..
துடிக்கின்ற விரல்களில் இருந்து கண்களைப்பற்றி
ஆயிரம் கவிதைகள் எழுதவேண்டும் – காதல் மயக்கத்தில் அல்ல
கண்ணீர் பற்றியெரியும் கதைகளையும் வற்றிப்போன விழிகளையும் கொண்டு
இன்னமும் சிலிர்க்கின்ற மயிர்களும் புடைக்கின்ற நரம்புகளும்
கொஞ்சம் மீதமிருப்பதை எதிரிக்குப்புலப்படுத்த
வலிக்கின்ற இதயங்களுடன் விடிகின்ற இரவுகளுக்கு
வரியாகச் செலுத்தப்பட்ட விழிநீர்க்கனல்கள்
விதையாகி வீழ்ந்து விண்ணையும் சுட்டு
விண்மீன்களாகி மிளிர்கின்ற வரலாறுகளைப் புரட்டிப்போட

எமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம்...
எங்கள் குழந்தைகள் மட்டும்
பால காண்டம் முடிந்ததும் ஆரணியகாண்டம் புகுந்து
யுத்தகாண்டத்தில் விதையாகின
எங்கள் இளைஞர்களுக்கோ வனவாசத்தைவிட நீண்டு கிடக்கிறது
அஞ்ஞாதவாசம் – வேஷம் கலைந்தால் வாழ்வு தொலைந்துவிடும்...
அநியாயமாய்ப் பலிகொடுத்த அன்புக் கணவர்களுக்காய்
நியாயம் கேட்கப்போன நிறையக் கண்ணகிகள்
முலைகள் திருகியெறியும் முன்னர் அவர்கள் தலைகள் திருக்கப்பட்டன

பெற்றவரை இழந்து பிள்ளைகளை இழந்து
வீடிழந்து வாழ்விழந்து அக்காள் தங்கைகள் மானமிழந்து
கொத்துக்கொத்தாய் விழுந்த கொத்தணிக்குண்டுகளுக்கு
மொத்தமாய்ப்பலிகொள்ளப் பார்த்திருந்து
வெற்றுக்காகிதமாய் வரலாறுதனை இழந்து
உயிர்ப்பை இழந்து உணர்வை இழந்து உழைப்பை இழந்து
கடைசியில் கல்லில்லா அரிசிக்கும் கால்கிலோ சீனிக்கும்
கையேந்தும் நிலைகொண்டோம்

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை
மானத்தை மறைப்பதற்கே இருகையும் போதாத நிலையில்
இரந்து கேட்கவும் இறைவனை வணங்கவும்
என்ன செய்ய எனத்தவிக்கின்ற தாய்மார்
கூப்பிடவோ நா ஒன்றால் முடியவில்லை
நம்பிடவும் எம்மிடத்தில் நாதியில்லை தமிழை விட
துயரங்கள் கூடிவந்த போதும் சுரணை கெட்டுச் சுற்றுகின்ற மூடர்களே
தமிழ்க்காற்று புயலாகத் திரும்பிவரும் துயரனைத்தும் பொடியாக்கும்
துரோகங்கள் தொலைந்தோடும் பூவுலகை வெல்லும்..

பேரினவாதப் பெருமான்களுக்கு...
உங்கள் ஒப்பந்தங்களிலும் அவை கிழித்தெறியப்பட்ட நிர்ப்பந்தங்களிலும்
சிதறி வீழ்ந்தன எங்கள் வரலாறுகள்...
சிறு சிறு சலுகைகளுக்காய் சண்டையிட்டே மறைந்துபோனது ரோசம்
அவ்வப்போது போடப்படும் எச்சிற்பருக்கைகளுக்காய்
நன்றி பாராட்டி நன்றி பாராட்டி முதுகெலும்பு வாலாகிவிட்டது
உரிமைகளுக்காய் போராடியும் போராட எத்தனித்தும்
ஆயிரம் ஆயிரம் உடன்பிறப்புக்கள் சாம்பாராயினர்...
குரல் கொடுக்க அஞ்சி அஞ்சியே தொலைந்து போயின குரல்கள்
மற்றவர் நிழலில் தங்கித்தங்கியே எங்கள் நிழல்கள் காணாமல் போயின
இன்னும் என்ன என்கிறீர்களா...
அடக்கப்பட்ட தமிழ்மூச்சுக்கள் அடங்காத சூறாவளியாய் உருவெடுக்கும்
அழித்து ஒழித்து அதிலேயே மழையாகப்பொழிந்து பூவுலகை வெல்லும்...

உயிர்க்காற்று...
வெறுப்புறும் ஒரு பொருளாய்க் காற்றதன் பெருவெளியில்
இன்னும் அலைகிறது என்னுயிர்
காலமும் கடவுளும் கைவிட்டு நீந்த ஒரினத்தை சூழும் இருளறிந்தும்
கண்டு கொள்ளாக்கவிதைகளை இன்னும் யாத்தபடி
நிமிர்ந்து இறுமாந்து இருந்து
ரத்தக்கரைகளுக்கு அவர் இவர் எனச்சுட்டுதல் செய்து
கவனமாய்த்தப்பித்தாவிக் காத்து வந்த என்னுயிர்
சொட்டும் ரத்தமின்றி சொட்டுதற்கு நீருமின்றி
கத்த மனமுமின்றி காப்பதற்கு யாருமின்றி
தூக்க வருவார் துயர் துடைக்க வருவார் என
கடைசிவரை நம்பிக்காத்திருந்து கதியிழந்து
வெறுப்புறும் ஒரு பொருளாய்க் காற்றதன் பெருவெளியில்
இன்னும் அலைகிறது என்னுயிர்..

இனியும் இருளில்லை எமக்கும் அருளில்லை
போகுமுயிர் பேனாவால் புதுச்சரிதம் படைக்குமெனில்
காத்திருந்த கவலையெல்லாம் கலையவழி கிடைக்குமெனில்
எமதுயிரும் இப்பாழும் உடல் நீங்கிப் பயணிக்க
அச்சமில்லை அச்சமில்லை இனிப்பொறுமை எமக்கில்லை..
நாம் நீத்த மூச்செல்லாம் பகைவர்க்கு நச்சுக்காற்றாய் மாற
தேமதுரத்தமிழோசை எம்முயிர்க்காற்றாகி எம்முயிர்க்காற்றாலும்
இப்பூவுலகை வெல்லும்...

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”  
 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...