திங்கள், 17 டிசம்பர், 2012

மனசுக்குள் பொன்வசந்தம்

Posted on PM 10:30 by செல்வராஜா மதுரகன்

நீதானே என் பொன்வசந்தம் நீண்ட ஒரு எதிர்பார்ப்புக்கும் பலரின் சிபாரிசுக்கும் பின்னர் பாமன்கடை ஈரோஸ் திரையரங்கில் பார்த்தேன். ஒரு வரியில் சொல்வதென்றால் ஒட்டுமொத்த திரைப்படம் என்னை ஈர்க்கவில்லை. அதற்காக படம் மோசம் என்றும் நான் சொல்லவரவில்லை. ஏதோ ஒரு இனம் புரியாத குறை படத்தில். 

கல்லூரியில் ஆரம்பிக்கும் கதை திடீரென குழந்தைப் பருவத்திற்கு தாவுகிறது. இரு குழந்தைகளிடையான நெருக்கமான நட்பு வளர்வதும் முறிவதும் அழகான காட்சிப்படுத்தலுடன் இளையராஜாவின் குரலில் இனிமையான பாடலில் காட்டப்பட மீண்டும் குழந்தையாகப் பிறக்க மனம் ஏங்குகின்றது. கெளதம் மேனனின் மகன் சிறு வயது ஜீவாவாக அறிமுகமாகிறார்.

அப்படியே விடலைப்பருவத்துக்கு காட்சி நகர பாடசாலை மாணவியாகவே மாறிவலம் வரும் சமந்தாவைக் கண்டு மனம் பிரமிக்கிறது. என்னுடைய வயது ஆறு ஏழு வருடங்கள் குறைந்துபோக உயர்தர வகுப்பில் படிக்கும்போது இயல்பாக எமக்குள் தோன்றும் மனக்கிலேசங்களும் கற்பனை உலகங்களும் கண் முன் மீண்டும் தோன்றுகிறது. அந்த வயதுகளில் கண்ணாடி முன் மணிக்கணக்கில் செலவிடும் பெண்களின் நேரமும் அறிந்தும் அறியாமலும் ஒருவரை ஒருவர் கடந்து செல்ல கண் சிமிட்டுவதும் புன்னகைப்பதும் கவிதைகளாக கடந்து செல்ல... மீண்டும் ஒரு பிரிவு விட்டுக்கொடுப்பின்மை/ ஈகோ காரணமாக நேர.. இன்று மீண்டும் கல்லூரியில் இருவரும்.. 
விட்ட இடத்திலிருந்து தொடர இருவரும் நாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை.. சாய்ந்து சாய்ந்து பாடல் இடையில் அற்புதமாக வந்து போகிறது.. ஆனால் இங்கிருந்து கதைப்போக்கு கொஞ்சம் மந்தமடைகிறது. திடீரென காண்பிக்கப்படும் ஜீவாவின் குடும்பச்சிக்கல்களும் எதிர்பார்ப்புக்களும் கதையை மற்றொரு பிரிவுக்கு நகர்த்தசுனாமி நிவாரணக் கிராமமொன்றில் கற்பிக்கும் சமந்தாவை நோக்கி கதை மீள நகர்கிறது.. இந்த நேரத்தில் காற்றைக்கொஞ்சம் பாடலும் என்னோடு வா வா பாடலும் அற்புதமாக காட்சியமைக்கப்பட்டு இருந்தாலும் கூடவே வரும் சற்று முன்பு மற்றும் பெண்கள் என்றால் பாடல்கள் தொடர்ந்து வருவதால் சலிப்பு ஏற்படுத்துகின்றன. 
கதை இதற்குப்பின் நகரும் போது சந்தானம்சமந்தா போன்றோர் கொஞ்சம் ஆறுதல் அளிக்கின்றனர்.. நிறைவில் காதலனுடைய திருமண வரவேற்பில் ஒரு காதலியின் உணர்வுகளை கெளதம் அற்புதமாக காட்டுகிறார்.. 
கெளதம் காதலித்து இருக்கிறாரா.. நிச்சயம் காதலித்து இருக்கவேண்டும்.. தோற்று அல்லது தோல்வியில் விளிம்புக்கு சென்று இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை.. இந்த உணர்வுகள் கவிதைகள் சாத்தியமில்லை..

ஆனால் படத்திற்கு பலவீனம் முக்கியனாக கெளதம் தான்... ஒரு கவிஞன் உணர்வுகளுக்குள் முழுமையாக சிக்கிக் கொல்லும் போது அழகான கவிதை பிறக்காது... உணர்வுச்சிக்கல்தான் வெளிப்படும்... அதில் முழுமை இருக்காது அது போலத்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பை வெளியில் இருந்து கொஞ்சம் அவதானிக்கவேண்டும்.. எனக்கென்னவோ கெளதம் தவிர்க்க முடியாத சில உணர்வுகளுக்குள் சிக்கிக்கொண்டதாகத்தான் தெரிகிறது.. 
இந்தப்படத்தைப் பாராட்டுபவர்களும் பலர் அப்படித்தான் சில சில உணர்வுகளுக்குள் மனதை பறிகொடுத்தவர்களாகவே நான் காண்கிறேன்.. கதாபாத்திரங்களை சிருடிப்பதில் அதிகம் கவனமெடுத்த கெளதம் அவற்றின் நிலைப்பாட்டில் சின்னச் சின்ன தவறுகள் விடுக்கிறார்..

காட்சியமைப்பில் அதிகம் கவனமெடுத்து இருக்கும் கெளதம் அவற்றுக்கான திரைக்கதையில் பல இடங்களில் நேர்த்தியை தவறவிட்டு இருக்கிறார்.
அற்புதமான பாடல்களைக் கொடுப்பதில் சிரத்தை எடுத்த கெளதம் அவற்றை பயன்படுத்திய இடங்கள் பொருத்தமாக இல்லை... பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலவீனம்.. எதைக்குறை சொல்வது என்று புரியவில்லை... சில இடங்களில் நீண்ட மௌனங்களும் திடீரென முளைக்கும் பெருத்த சப்தங்களும் படத்தை சோர்வடையவைக்கின்றன..

ஆனாலும் ஒரு தலைமுறைக்கு நித்யாவையும் வருணையும் நினைவில் நிறுத்த அவர் பட்ட பிரயத்தனங்களை பாராட்டாமல் இருக்க இயலாது. மிக இயல்பாக தன்னை நிலை நிறுத்தும் ஜீவா நடிப்பில் வியக்கவைக்கிறார். சமந்தா அழகாக இருக்கிறார் கண்களை அகல விடாமல் தன்னில் நிலைக்க வைக்கிறார்.. அவரின் நடிப்பில் பல இடங்களில் நாடகத்தன்மை தெரிந்தாலும் அந்த அண்ட் வயதுகளில் பெண்களில் பலரிடம் நாடகப்பாங்கான பேச்சும் இயல்பும் வருவதும் சாதாரணம்தானே.. சந்தானம் வரும் இடங்கள் அனைத்திற்கும் கைதட்டல்கள்..

இந்தக் கதைக்களம் எமக்குப் புதியதல்ல பாலசந்தர்பாரதிராஜாபாலுமகேந்திரா என நான் ரசித்த அனைத்து இயக்குனர்களும் தொட்ட களம்தான். கதைக்கருவும் புதிதல்ல  அண்மையில் வந்த காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் கூட கிட்டத்தட்ட இதே விடயங்களில் பலவற்றை தொட்டு இருந்தது. ஆனாலும் கேட்ட கண்டகதைகளை புதிதாக தரும் கெளதம் மேனன்  Special Ingredient இந்தப் படத்தில் இல்லை.

தன் முதலாவது படத்திலேயே மின்னலாக புருவங்களை உயர்த்தவைத்தவர். அது ஒன்று போதும் அவரின் தகுதியை எடுத்துக்காட்ட.. அது இந்தப் படத்தில் இல்லை... அதிகம் அதிகம் எதிர்பார்ப்பதில் இது என்னைத் திருப்தி செய்வதில்லையோ என்ற ஒரு குழப்பம் இருந்தாலும்... என்னை ஈர்க்கிற திரைப்படங்கள் இன்னும் இருந்துகொண்டு இருப்பதால் என் ரசனையில் பழுதில்லை என்று நம்புகிறேன்.. ஓய்ந்து கிடந்த என்னுடைய சாளரங்களில் மீண்டும் தூறல் தெறிக்க வைத்ததில் நீதானே என் பொன்வசந்தத்திற்கு பெரும் பங்குண்டு...
மதுரகன்.



2 Response to "மனசுக்குள் பொன்வசந்தம்"

.
gravatar
kk Says....

ஏதோ ஒரு இனம் புரியாத குறை படத்தில். //அது என்னமோ உண்மைதான்

.
gravatar
Anujan Says....

என்னை பொறுத்த வரையிலும் சில இடங்களில் திரைக்கதை சற்று இழுபட்டதாகவே தோன்றுகிறது.
படத்தின் முடிவில் கூட திருமண நிச்சயத்திற்குப் பின்னர் ஒரு மணி நேரத்தில் காதலர்கள் ஒன்று சேருவதில் எனக்கு உடன்பாடில்லை.

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...