புதன், 26 பிப்ரவரி, 2014

திரையிசை மனப்பதிவுகள் 2 - அடடா என்மீது தேவதை வாசனை


திரைப்படம் - பதினாறு
இசை - யுவன் ஷங்கர் ராஜா
பாடியோர் - ஹரிஹரன், பெல்லா ஷிண்டே
பாடல் - ஸ்னேகன்
ஹரிஹரன் குரலுக்கு பொதுவாகவே நான் அடிமை, அத்துடன் பெல்லா ஷிண்டேயின் மாயக்குரலும் சேர்ந்து என்னைக் கட்டிப்போட்ட பாடல் இது. பாடலைக் கேட்டுக்கொண்டே இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.
காதல் வந்த ஒரு பெண்ணுக்குள் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன அதுதான் நிகழ்வு. இது காலம் காலமாக சினிமாவில் பாடல் எழுதப்பட்டு வந்த ஒரு சந்தர்ப்பம்தான். ஆனால் கற்பனை புதியது.

ஒரு பெண்ணுக்குள் காதல் வந்தால் வெளியே என்ன மாற்றம் நிகழும்,?கண்ணாடி முன் நிற்கும் நேரம் கூடும், முகத்தில் எப்போதும் புன்னகை அரும்பும், தெருவோரப் பிச்சைக்காரன் வரை அன்பும் நீளும். உள்ளுக்குள் என்ன மாற்றம் நிகழும்? அது எல்லோருக்கும் ஒன்றுதான். தம்மை கொஞ்சம் வித்தியாசமாக உணர்வார்கள், இன்னும் சொன்னால் விசேடமாக உணர்வார்கள். Feeling special என்று ஆங்கிலத்தில் கூறுவது போல.
இந்தப் பாடலில் நாயகி தன்னை தேவதையாக உணர்கிறாள். வெறும் கற்பனையில் மட்டுமல்ல, அது அதீதமாகி அவளது மேனியில் தேவதை வாசனை வீசுவதாக உணர்கிறாள். 

"அடடா என்மீது தேவதை வாசனை காதல் இதுவோ
உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும் காதல் இதுவோ"

அடுத்தது எழுதி எழுதி சலித்த வரி. காணும் இடமெங்கும் காதலனே நிறைந்து இருப்பது போன்ற எண்ணம். 

காதலின் ஆரம்பத்தில் மனம் ஒரு பிச்சைக்காரனைப் போல் யாசிக்கும், 
"உனைக்காணும் வரம் போதும்"

அந்த அற்ப சந்தோசத்தினுள் உலகத்தையே மறக்கும். சிறிய ஸ்பரிசங்கள் பெரிய மகில்வினைக் கொணர்ந்து தரும்.
"எதிர்காலம் வசம் வசம் வரும்"

"உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி" என்பதுவும் இதுபோலவே சிறு ஸ்பரிசத்தில் சுயம் மறக்கும் நிலைதான். அவன் மனதிற்குள் பூக்கள் போல மகிழ்வு பூக்கிறது.
இங்கே நாயகியின் எதிர்காலம் விதி வசமிருந்து அவள் வசமே வருகிறது, வெறும் பார்வை மூலம்.

அது மட்டுமல்ல அவள் செல்கின்ற பாதை அனைத்திலும் மழையாகத் தூறி அவளைக் குளிர்த்தப்போகிறது அவன் தரிசனம். 
"வழிப் பாதை மரம் யாவும்
எனக்காக மழை மழை தரும்"
அதுவும் வானில் இருந்து விழும் துளிகள் போல அனைத்தையும் நனைக்கப்போவதில்லை, அவள் காதலன் தரிசனம் தானே,
மரத்திலிருந்து விழும் தூறல் போல அவளுக்காக மட்டும் மரம் மழை சிவிறுகின்றது.


காதலன் உணர்வு சற்று வித்தியாசமாக இருக்கிறது. அவனுக்கு உலகமே திடீரென வர்ண மயமாகிறது. லேசா லேசா பாடலில் "கலர் கலர் கனவுகள் விழிகளிலே" என்று வருவது போல, இவன் வாழ்வே வண்ண மயமாகிறது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்று புரியவில்லை. உவமை பிறக்கிறது.
"உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ"

அவனுக்குள் இருந்த வண்ணங்கள், சுவாசத்தில் வெளியேறிக் காற்றில் அலைகின்றன. அவளை எதிரே கண்டதும் மீண்டும் ஓடி வந்து ஒன்று சேர்கின்றன. அவனுக்குள் இருந்த உணர்வு அவளுக்குள்ளும் பற்றிக்கொள்கிறது.
"எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும் காதல் அதுவோ"

காதல் வந்ததும் அனைத்துமே இனிமையாகத்தான் இருக்கிறது. இனிமை உடலுக்குள் நிறைந்துபோக கண்களில் வழிகின்ற கண்ணீரில் இருந்துகூட சர்க்கரை தானாகத் திரள்கிறது. 
"ரம்மியம் ததும்பும் கனவு 

உன்னை கண்டதும் பிறந்ததே

கண்களில் வழியும் நீரில் 

இன்று சர்க்கரை திரளுதே"

அடுத்த அற்புதமான இடம் ஒன்று, ஒரு முரண் அணியின் வெளிப்பாடு. வாழ்க்கையில் எமது அமைதியை சத்தம் குழப்பலாம். ஆனால் காதலில் எமது அமைதியைக் காதலனின்/ காதிலியின் மௌனம் கூடக்கெடுக்கலாம். அதுவும் சாதாரணமாக அல்ல இடி வந்து மனதில் விழுவது போல மௌனம் எம்மைத் தாக்கி நிம்மதியைக் கெடுக்கும். 
"மௌனம் வந்து இடியைப்போல மனதின் மீது விழுந்ததோ"

இதற்கு மேலும் விரித்துப் பொருள் உரைக்க அவசியமில்லை என நினைக்கின்றேன். பாடலின் உணர்வுடனே இந்த அழகான வரிகளையும் கேட்கும்போது பொருளுக்கு அவசியம் இருக்காது.

"காற்றினில் அலையும் இறகு 
எந்தப் பறவை உதிர்த்ததோ
காதலில் மயங்கும் மனது 
அந்தக் கடவுளும் கொடுத்ததோ"

"பூட்டிய கதவின் இடுக்கில்
புது வெளிச்சம் நுழைந்ததோ
தாய்மையின் விரலைக்கொண்டு
நம்மைக் காதலும் வருடுதே..
தொடரும்....

வியாழன், 30 ஜனவரி, 2014

எனது திரையிசைப்பதிவுகள் - ஒரு பாதிக்கனவு


எத்தனையோ பேரைப் போல் திரைப்பாடல்களுக்கும்  தீராத  உறவு உள்ளது. பல உறக்கமற்ற இரவுகளில் உணர்வுகளை நகர்த்திச் செல்ல இசைதான் தோள்  கொடுத்து இருக்கிறது. நான் ரசிக்கும் பாடல்களைப் பற்றி பல பொழுதுகள் எழுத நினைத்தாலும் கைகள் அந்தப் பொழுதுகளில் எப்படியோ கட்டப் பட்டு விட்டன. இன்றைக்கு இந்தப் பாடல் காதில் விழுந்ததும் எழுதாமல் இருக்க இயலவில்லை. 
காதல் திரைப்படத்தின் பாடல்களில் இருந்து நான் நா முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு அடிமையானேன். இருந்தாலும் இந்தப்பாடலில் அவர் கைக்கொண்ட கற்பனைகள் என்னை சிலிர்க்க வைத்தன. வரிகளுடன்  அந்த சிலிர்ப்பையும் இங்கே பதிவிட விரும்புகிறேன். 


பாடல் - ஒரு பாதி கதவு
திரைப்படம் - தாண்டவம் 

ஆண்குரலில் ஆரம்பமாகிறது பாடல் 

"ஒரு பாதிக் கதவு நீயடி 
மறு பாதிக்கதவு நானடி
பார்த்துக் கொண்டே  பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்கக் காத்திருந்தோம் "

காதலர்களைக் கதவுகளாக்கி  உலவ விடுகிறார் நா முத்துக்குமார்
இரண்டு வித படிமங்களின் தளத்திலே நகர்கிறது பாடல்....
பார்த்துக் கொண்டே பிரிந்திருப்பது என்றால் என்ன என்று யாருக்காவது தெரியுமா.. 
அதிலுள்ள சுகம் என்ன என்றாவது உணராமல் விளங்குமா...
அனுபவிக்காமலே உணர வைக்கின்றன இந்த வரிகள்.

கதவு செய்து நிலையில் மாட்டப்பட்ட நாள் முதலே இரு பாதிகளுக்கும் யாரும் சொல்லாமலே புரியும் உனக்கு நான்தான் எனக்கு நீதான் என்று.
ஆனாலும் இருவரும் தாமாகச் சேர முடியாது வேறு ஒருவர்தான் பூட்டி வைக்கவேண்டும். உறுதியாக நிச்சயிக்கப்பட்ட உறவுகள் நெருக்கமாக இருந்தாலும் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு சேரும் காலம் வரை காத்து இருப்பதன் சுகம் இயல்பாக எங்களுக்குள் ஊடுருவும்.

இந்த நேரத்தில் தான் பெண்குரல் இந்த உணர்வை மேவ வைக்கும்.

"ஒரு பாதிக்கதவு நீயடா
மறு பாதிக்கதவு நீயடா
தாள் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீசக்காத்திருந்தோம்"

நீயும் நானும் தாள் திறந்து கிடக்கின்ற ஒரே கதவின் பாதிகள்தான் ஆனால் எம்மைச் சேர்த்து வைப்பதுதான் சுகம் என்று நினைக்கிறாயா தேவை இல்லை.
காற்று வீசும் போது கதவிரண்டும் படபடவென அடித்துக்கொள்ளும் அப்போது ஏதோ ஒரு கணத்தில் இரண்டு கதவுகளும் உரசி விட்டுப்பிரிந்து செல்லும். அந்த கண நேர ஸ்பரிசமே எனக்குப் போதும் வாழும் காலம் முழுவதும் கழித்து விட என்கிறது பெண் குரல். 

இதற்குப் பின்னர் கதவுகளாக மாறிப் பாடலைக் கேளுங்கள்.. கதவுகளோடு நீங்களும் காணாமல் போகலாம்...


பகிரல் தொடரும்.. 

 

சனி, 18 ஜனவரி, 2014

தமிழ் மாமன்றம் தோற்றமும் தொடர்ச்சியும்... - எனது அனுபவங்கள் 4


அமைப்பொன்று தோற்றம் பெற்று இடைக்கால செயற்குழுவுடன் இயங்கத் தலைப்பட்டபோது எமது செயற்பாடுகளை எங்கு ஆரம்பிக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதற்குரிய பதிலும் எம்மிடமே இருந்தது. பேச்சு மற்றும் விவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் எம்மில் நிறையப்பேர் இருந்ததால் பாடசாலை மாணவர்களுக்கான விவாதப்பயிலரங்கை தொடராக செய்யலாம் என்ற முடிவு எட்டப்பட்டது. இடைக்கால செயற்குழுவில் இருந்தோரும் வேறு சில நண்பர்களும் கூட்டாக இணைந்து ஒழுங்கமைப்பு வேளைகளில் ஈடுபட முதல் விவாதப்பயிற்சிக்குரிய நாளும் கனிந்து வந்தது. நண்பர்கள் நிக்சலன், கஜன், ஜெனன், அனுஜன் கிருத்திகன் ஆகியோர் ஒழுங்கமைப்பு வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டனர். 

முதல் விவாதப் பயிலரங்கு ஜூலை 23ம் திகதி கோவில்குளம் இந்துக்கல்லூரி, பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலயம், இலங்கைத் திருச்சபைத் தமிழ் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 25 மாணவர்களுக்காக கோவில்குளம் இந்துக்கல்லூரியில் நடாத்துவதென முடிவெடுக்கப்பட்டது. அதற்கு முதல் நாள் ராஜேஸ்வரன் அண்ணா, கிருபா அண்ணா, நிக்சலன், ஜெனன், கஜன் ஆகியோருடன் நான் கலந்துரையாடி விவாதப்பயிலரங்கு எப்படி நடாத்துவது என முடிவு எய்தப்பட்டது.
குறித்தநாளில் சிறப்பான வரவேற்புடன் 25 மாணவர்கள் மற்றும்  4 பொறுப்பாசிரியர்களின் பங்கேற்புடன் சஜிந்திரா அண்ணா, ராஜேஸ்வரன் அண்ணா, கிருபா அண்ணா, ஜெனன், கஜன், நிக்சலன், அனுஜன், ஜெசிதா, கிருத்திகன், பவித்திரன், ஆதவன் போன்ற உறுப்பினர்களின் நெறியாள்கையில் முதலாம் பயிலரங்கு நிறைவடைந்தது. 

இதற்கிடையில் எமது மன்றத்திற்கான பெயர் ஒன்றை சூட்டும் நோக்கில் எமது உறுப்பினர்களிடையே நேரடியாகவும் Facebook மூலமாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. எமது நோக்கு ஏற்கனவே இருக்கின்ற  தமிழ் இலக்கிய மன்றங்களின் பெயர்களை ஒட்டி அமையக்கூடாது அது ஒரு புதிய பெயராக அமையவேண்டும் என்பதாக இருந்தது. அதற்காக செயற்கைத் தன்மை கொண்ட பெயர்களையும் நாம் விரும்பவில்லை. நீண்டகாலம் பழகிய உணர்வினை ஏற்படுத்தக்கூடிய பெயராக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். நிறையப்பெயர்களைப் பரிசீலித்து நிறைவில் கம்பவாரிதி ஐயாவுடன் ஆலோசித்து நான் பரிந்துரைத்த தமிழ் மாமன்றம் எண்ணும் பெயர் முழுமனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாம் தமிழ் மாமன்றத்தினர் ஆனோம்...

தொடர்ந்து எமக்குரிய இலச்சினை ஒன்றையும் மகுட வாசகம் ஒன்றையும் தேர்வு செய்வதற்காய் பாடசாலை மாணவர்களிடையே ஒரு போட்டி நடாத்தத் தீர்மானிக்கப்பட்டது. போட்டி நிறைவுற்ற பின் மாணவர்கள் அனுப்பிய சின்னங்கள் மகுடவாசங்களில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு எமது ஆண்டு விழாவில் அவர்களுக்குப் பரிசளிப்பதாய்த் தீர்மானிக்கப்பட்டது. அதே வேலை அவர்களுடைய மகுட வாசகங்கள் மற்றும் இலச்சினைகள் எம்முள் ஏற்படுத்திய தாக்கங்களை சிந்தனைகளை மெருகேற்றி உறுப்பினர்களும் சிலவற்றைப் பரிந்துரை செய்தனர். பாரதியின் "வையத் தலைமை கொள்" அடியை மனதில் நிறுத்தி கம்பவாரிதி ஐயா அவர்கள் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்ட "தமிழால் வையத்தலைமை கொள்வோம்" என்ற வாசகம் எழுத்தாளர் கனடா மூர்த்தி அண்ணா அவர்களின் ஆலோசனையையும் ஏற்று "தமிழால் வையகத்தலைமை கொள்வோம்" என்று மாற்றப்பட்டு அதுவே மகுட வாசகமாக ஏக மனதாக ஏற்கப்பட்டது.

இலச்சினை ஒன்றுக்காக மாணவர்களின் சிந்தனையை மனதில் தொகுத்து நிக்சலன் வழிகாட்டலோடு வரையப்பட்ட இலச்சினை ஒன்றும் தம்பி கனிஷ்கன் வரைந்த இலச்சினைகள் இரண்டும் பரிசீலிக்கப்பட்டு நீண்ட ஆலோசனைக்குப்பின்னர் மேலே நாம் காட்டியுள்ள கனிஷ்கனால் வரையப்பட்ட இலச்சினை தெரிவு செய்யப்பட்டது.
இதெல்லாம் நடந்து கொண்டு இருக்கின்ற வேளைகளில் ஒரு புறம் எமது விவாதப்பயிலரங்குகள் மிகவும் வேகமாக நடைபெற்றுக்கொண்டு இருக்க எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டே இருந்தது....

தொடரும்...
"தமிழால் வையகத்தலைமை கொள்வோம்"

எமது Facebook பக்கம் - https://www.facebook.com/groups/ThamizhMamanram/

திங்கள், 13 ஜனவரி, 2014

தமிழ் மாமன்றம் தோற்றமும் தொடர்ச்சியும்... - எனது அனுபவங்கள் 3

 

நான் நிக்சலன், ஜெனன், கஜன் போன்றோருடன் இணைந்து எமக்குத் தெரிந்த இளம் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் திரட்டி ஒரு சந்திப்பை நிகழ்த்த விரும்பினோம். அதற்கான முன்னோட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலே நான் Facebook இலே விவாதிகள் முற்றம் என்ற பெயரில் ஒரு Group இனை உருவாக்கி முதலில் நாம் அறிந்த விவாதிகளையும் ஒரு சில கவிஞர்களையும் இசைக் கலைஞர்களையும் அதில் இணைத்தேன். நண்பர்களும் அவர்கள் அறிந்தவர்களை இணைத்தார்கள். 
அதன் அறிமுகச் செய்தியாக இவ்வாறு பதிவிட்டேன்.

"இந்த குழுவின் முதல் நோக்கம் எமது பிரதேச விவாதிகள், பேச்சாளர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒருங்கிணைப்பதாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் எமது பிரதேச மாணவர்களின் திறன்விருத்திக்கு எம்மால் முடிந்தவரை பங்களிப்பதுடன் எமது ஆர்வத்துக்கும் வெளிப்பட்டுக்கும் எம்மாலேயே களம் அமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட முடியும் என்பது எம் நம்பிக்கை. முழுமையான வடிவம் வரும்வரை இந்தக்குழு Facebook இலே Secret Group என்ற வகையில் செயற்படும் ஆனால் உறுப்பினர்கள் தங்களுக்கு தெரிந்த குறிந்த துறை ஆர்வலர்களை இந்த குழுவிற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்."

கொஞ்சம் கொஞ்சமாக  அந்தக்குழுவின் உறுப்பினர்கள் அதிகரித்த வேளையில் 16/06/2013 இலே ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்தோம். அதன் ஏற்பாடுகளை ஜெனன், நிக்சலன், கஜன், அனுஜன் ஆகியோர் முன்னின்று செய்தனர். கிட்டத்தட்ட 40 பேர் கலந்து கொள்வதாக வாக்களித்தும். இறுதி நேர மாற்றங்களால் 23 பேரே கலந்து கொண்டார்கள். ஆனாலும் எமக்குள் ஒரு இனம் புரியாத உற்சாகமும் நம்பிக்கையும் என் தெரியுமா.. ஏனென்றால் வவுனியாவில் ஒரு இலக்கியம் தொடர்பான கலந்துரையாடலுக்கு 15 பேர் வருவதே பெரிய விடயம் என்று இருந்த காலம் அது... :)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியர்கள் இருவர்,  சென். அன்ரனிஸ் கல்வி நிலைய அதிபரும் கம்பன் கழகத்தின் நீண்டநாள் உறுப்பினருமான கஜரூபன் ஆசிரியர் ஆகியோர் முன்னிலையில் பல பாடசாலைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பழைய மாணவர்களும், சில மாணவர்களுமாக 23 பேர் கலந்து கொள்ள வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஐயாத்துரை மண்டபத்தில் எமது கூட்டம் நடந்தது. நாம் சிறுவர்களாக இருக்கும்போதே வவுனியாவில் பேச்சு மற்றும் நடிப்புத்துறையில் சாதித்த கார்த்திகேயன் அண்ணா மற்றும் சஜிந்திரா அண்ணா ஆகியோரின் வருகை மேலும் உற்சாகம் தந்தது.

நான் எனது அறிமுக உரையிலே குறிப்பிட்ட விடயங்கள் எமது தலைமுறையினரில் பலர் திறைமைகளை வெளிப்படுத்த களம் இன்றியோ அல்லது விருப்பம் இன்றியோ வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். பொருத்தமான உதாரணங்கள் இல்லாததால் அடுத்த தலைமுறையினரிடம் கலை இலக்கிய ஆர்வம் குறைந்து வருகிறது. பல் துறை ஆர்வம் குறைவதால் அவர்கள் வாசிப்பின் வீச்சு குறைகிறது. இது ஆளுமை அற்ற வெறும் நூலறிவு பெற்ற தலைமுறையை தோற்றுவிக்கக்கூடும். எனவே எமது நோக்கங்கள் எம்மைப்போன்ற ஆர்வலர்களின் திறமை விருத்திக்கும் திறமை வெளிப்பாட்டுக்கும் களம் அமைப்பதோடு அடுத்த தலைமுறையையும் எங்களுடன் அழைத்துச் செல்லல். அதற்கு என்ன செய்யலாம்? என்ற கேள்வி அனைவரிடமும் எழுப்பப்பட்டது. அனைவரினதும் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. 

அதிலே குறிப்பாக எமது பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் சில பழைய மாணவர்களும் எமது பாடசாலைக்கு விசேட கவனம் எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். அந்த இடத்திலே ஒரு விடயத்தை நாம் தெளிவு படுத்தினோம். ஒரு பாடசாலைக்குள் மட்டுப்படுத்தி எமது செயற்பாடுகள் அமையாது. ஏனென்றால் ஒட்டு மொத்தமாக எமது பிரதேச மாணவர்கள் அனைவரையும் சம திறமை உள்ளவர்களாக வளர்த்து எடுப்பதுதான் எமது நோக்கம். ஆரம்பத்திலே வவுனியாவிற்குள் மட்டும் செயற்பட்டாலும். ஒவ்வொரு அடியாக ஏனைய வன்னி மாவட்டங்களையும் தொடர்ந்து தேவை அதிகமுள்ளவற்றுள் எங்களால் இயன்ற இடங்களிலும் செயற்படப்போகின்றோம் என்பதைக் கூறினோம். அதை விட தனியே ஒரு பாடசாலை மட்டும் போட்டியின்றி வளருமாயின் அதன் திறமை தேய்ந்து போகுமேயன்றி வளரும் நிலை தோன்றுவது குறைவு என்பதைக் கூறினோம். 

அடுத்ததாக நாம் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எமக்குள்ள தெரிவுகளைப் பரிசீலித்தோம். எமக்கு முன்னே மூன்று தெரிவுகள் இருந்தன. ஒன்று வவுனியாவில் உள்ள அமைப்புக்களில் ஒன்றுடன் இணைந்து செயற்படுவது. இரண்டாவது இலங்கைத் தமிழ் விவாதிகள் கழகம் அல்லது அதை ஒத்த ஏனைய அமைப்பொன்றின் வவுனியாக் கிளையாக செயற்படுவது. மூன்றாவது நாம் புதிய அமைப்பாக செயற்படுவது. இன்னொரு அமைப்பின் கிளையாக செயற்படுவது சிலவேளை எமது திட்டங்களைப் பாதிக்கலாம் என்பதால் இரண்டாவது தெரிவு நிராகரிக்கப்பட்டது. வவுனியாவில் உள்ள இலக்கிய அமைப்புக்களிடையான ஆரோக்கியமற்ற போட்டியில் தலையிட விரும்பாததால் அந்தத் தெரிவும் விடுக்கப்பட்டது. எனவே புதிய அமைப்பாக முடிவு செய்யப்பட்டு இடைக்கால செயற்குழு ஒன்று நிறுவப்பட்டது. 

இந்த இடைக்கால செயற்குழுவிலே ஐந்து பேர் உள்ளடக்கப்பட்டாலும். தேவைக்கேற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு முடிந்தவர்கள் பொறுப்புக்களைத் தாமே ஏற்றுச் செயற்பட்டனர்... 


வவுனியாவிலே தமிழார்வம் கொண்ட இளைஞர்களின் அமைப்பொன்று உருவானது...

தொடரும்...

"தமிழால் வையகத்தலைமை கொள்வோம்"

எமது Facebook பக்கம் - https://www.facebook.com/groups/ThamizhMamanram/

சனி, 11 ஜனவரி, 2014

தமிழ் மாமன்றம் தோற்றமும் தொடர்ச்சியும்... - எனது அனுபவங்கள் 2

இளைஞர்களுக்கு ஒரு இடம் தேவை என்று நான் முடிவெடுக்க என்ன காரணம் என்று சிலர் நினைக்கலாம் ஏனைய இடங்களைப்போலவே வவுனியாவிலும் சில இலக்கிய அமைப்புகள் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. அப்படியானால் இளைஞர்கள் அங்கேயே இணைந்து செயற்படலாமே என் தனியாக ஒரு அமைப்பு என்று கேட்கலாம். தனியான ஒரு அமைப்பு என்ற முடிவு ஆரம்பத்திலேயே எடுக்கப்பட்ட முடிவு அல்ல அனைவரும் இணைந்து மேற்கொண்ட முதலாவது சந்திப்பில் ஆலோசித்து  எடுக்கப்பட்ட முடிவு. இது பற்றிப்பின்னர் விரிவாகக் கூறுகின்றேன். ஆனால் இங்கு குறிப்பால் உணர்ந்து கொள்ளப்படவேண்டிய விடயம். ஏற்கனவே அங்கு சில அமைப்புக்கள் செயற்பட்டாலும் அவற்றில் இணைந்து செயற்படுவதில் இளைஞர்களுக்கு ஏதோ தயக்கம் அல்லது பிரச்சனை இருந்து இருக்கிறது என்பதாகும். ஏனென்றால் நான் பள்ளிப்பருவத்தில் கண்ட மிகச்சிறந்த பேச்சாளர்கள், கலைஞர்கள் எல்லாம் அவர்களது திறைமைகளை வெளிப்படுத்தாமல் மறைவில் வைத்திருந்தமை எதையோ கூறாமல் கூறியது. 

2013ம் ஆண்டின் ஆரம்பத்தில் எனது இறுதிப்பரீட்சையின் பின்னர் குறித்த ஒரு பாடத்தை மீள எழுத நிர்ப்பந்திக்கப்பட்ட பொழுதிலே தனிமையில் சிந்திக்க நிறைய நேரம் கிடைத்தது. பரீட்சைக்குப் பின்னர் கிடைக்கப்போகும் ஓய்வு நேரத்தில் என்ன செய்யப்போகிறேன் என்று எத்தனையோ கனவுகள் கதவு தட்டும். அந்தப் பொழுதுகளில் திலீபனுடன் சேர்ந்து கவிதைப்புத்தகம் ஒன்றை வெளியிடும் கனவுடன் இளைஞர்கள் சேர்ந்து உருவாகும் ஒரு அமைப்புப் பற்றிய கனவும் சேர்ந்துகொண்டது. ஒரு அமைப்பு ஒன்று உருவாவதற்கு முதலாவது தேவை ஒத்த எண்ணம் கொண்ட பலர் ஒன்றிணையவேண்டும். இந்த எண்ணம் வந்தபோது எனது நண்பர்கள் திலீபன், துஷ்மன் போன்றோருடன் பேசியபோது இதை ஒத்ததாய் தமக்கும் ஆசை உள்ளதைக் கூறினார்கள். அதுபோலவே நிரோஜன் ஜெயபரன் இன்னும் சில நண்பர்களும் வழக்கம் போல நான் என்ன முயற்சி எடுத்தாலும் தமது ஆதரவு கட்டாயம் உள்ளதைக் கூறினார்கள்.  

ஆனால் ஐந்தாறு பேர் போதாது என்ற உணர்வும் அதைவிட வவுனியா முழுவதும் இருக்கும் தமிழார்வம் கொண்ட இளைஞர்களை இணைக்க ஒரு சிறந்த திட்டம் அவசியம் என்பதால் அது சிந்தனையில் மட்டுமே இருந்தது. அதேவேளை வவுனியாவில் ஏற்கனவே செயற்பட்ட அமைப்புக்களில் ஒன்றில் எனது ஆசான்கள் இருந்ததால் நான் உடனே அதிலே இணைந்து செயற்படக்கூடிய வாய்ப்பு இருப்பினும் ஏற்கனவே அந்த அமைப்பில் இணையாமல் தனித்து உள்ளவர்கள் எப்படியும் வர வாய்ப்பில்லை என்பதால் பொறுத்திருந்தேன்.

அந்த வேளைதான் உணர்வுகளால் ஒன்று பட்டவர்களை தேடி இணைப்பது எப்படி என்று கண் முன்னே புதிதாய் தோன்றிய அமைப்பொன்று ஒரு நிகழ்வில் செய்துகாட்டியது. இலங்கைத் தமிழ் விவாதிகள் கழகத்தின் சொற்சிலம்பம் அந்த நிகழ்வு. விவாதம் என்ற பொது ஆர்வாத்தால் ஒன்றிணைந்த கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளின் முன்னாள் விவாதிகள் அவர்களை ஒத்த ஆர்வமுள்ளவர்களையும் சமூகத்திலுள்ள தமிழார்வலர்களையும் இணைத்து அந்த விழாவில் மிகப்பெரும் கூட்டத்தை திரட்டியிருந்தார்கள். அதில் எனக்கும் சுழலும் சொற்போரில் பேச ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த நிகழ்வு எனது கனவின் சாத்தியப்பாட்டைக் காட்டியது. 


இதன் பின்னர் இலங்கைத் தமிழ் விவாதிகள் கழகம் தனது பணிகளை இலங்கை முழுவதிலும் செய்வது பற்றிக்கூறியபோது அதன் தொடர்ச்சியாக வவுனியாவிலுள்ள எமது இளைஞர் அமைப்பை உருவாக்கினால் என்ன என்ற சிந்தனையும் எழுந்தது. ஆனால் பாடசாலையிலோ பல்கலைக் கழகங்களிலோ விவாதிகளாகச் செயற்பட்டவர்கள் அதற்குரிய ஆதாரத்துடன் வந்தால்தான் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளமுடியும் என்ற அவர்களது கொள்கை கொஞ்சம் நெருடலாக இருந்தது. நண்பன் துஷ்மனுக்கும் அது அறவே பிடிக்கவில்லை. அத்துடன் எமது கனவு தனியே விவாதம் பற்றிய மன்றம் ஒன்றாக இருக்கவில்லை அத்துடன் எந்த அனுபவமும் இல்லாதவர்களும் இணைந்து செயற்பட ஏதுவான ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் என்று எண்ணி விவாதிகள் கழகத்தின் தொடர்ச்சியான ஒரு அமைப்பின் சிந்தனையை பிற்போட்டோம். 

இதற்கிடையில் எனது நண்பர்கள் சிலருக்கு இலங்கை விவாதிகள் கழகத்தின் செயற்பாடுகள் பற்றிக்கூறி அத்துடன் எமது பிரதேச விவாதிகளையும் இணைய கலைஞர்களையும் இணைப்பது பற்றிப்பேசியதுடன் அவர்களுக்குத் தெரிந்த ஏனைய ஆர்வலர்களின் தொடர்புகளைக் கொஞ்சம் கொஞ்சம் பெற ஆரம்பித்தேன். முதலில் எனக்கு நெருக்கமான மற்றும் நான் பாடசாலையில் கற்கும் காலங்களில் கலை முயற்சிகளில் ஈடுபட்டவர்கள், எனக்கு நேரடியாக அறிமுகமானவர்களை அழைத்துப் பேசினேன். அவர்களுக்குத் தெரிந்தவர்களின் விபரங்களைத் திரட்டச் சொன்னேன். அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது நண்பன் அங்கு நண்பன் நிரோஜனுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த ராஜேஸ்வரன் அண்ணா எனக்கு அறிமுகம் ஆனார். 

எமது பாடசாலையில் கல்வி கற்றுப் பின்னர் தனது சுய முயற்சியால் வளர்ந்து ஜனாதிபதி விருது பெற்ற மேடை அறிவிப்பாளராகிய அவரும் தன்னுடைய இலக்கியச் செயற்பாட்டுக்கு ஒரு தளத்தினை தேடிக்கொண்டிருந்தார். நாம் முன்னெடுக்கின்ற எந்த முயற்சியிலும் பங்கேற்பதாக வாக்களித்தார். இது நடந்து ஒரு வாரத்திற்குள்ளாக மொரட்டுவைப் பல்கலைக்கழகம் ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கை மட்டத்திலான விவாதப்போட்டியில் நடுவராகப் பங்கேற்கும் வாய்ப்பினை நண்பன் வர்ணன் ஏற்படுத்திக் கொடுத்து இருந்தார். இதில் நானும் நண்பன் துஷ்மனும் அத்துடன் இலங்கைத் தமிழ் விவாதிகள் கழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் பலரும் நடுவர்களாகப் பங்கேற்றோம். 

இதன் போதான அனுபவங்கள் வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கான கலை இலக்கியத்துரையிலான ஊக்குவிப்பு அவசியம் என்பதை எமக்கு உணர்த்தியது. அதை விட இதனை அடிக்கடி செயற்படுத்தவும் அருகிலிருந்து கண்காணிக்கவும் அங்கேயே ஒரு அமைப்புத் தேவை என்று புரிந்தது. அத்துடன் பிரதேசத்துக் பிரதேசம் கலைகளின் பண்பில் சில மாறுதல்கள் இருப்பதால் குறித்த பிரதேசத்தைச் சார்ந்தவர்கள் பயிற்சி கொடுக்கும்போது ஒரு புரிந்துணர்வும் கூடவே ஒரு உணர்வு ரீதியான பங்களிப்பும் இருக்கும் என்பதால் அங்கே இருப்பவர்களால் அது இயக்கப் படவேண்டும் என்றும் உணர்ந்தோம். 

இந்த உணர்வுகள் ஏற்பட்ட அதே இடத்திலேயே எமது பாடசாலை பழைய மாணவனும் விவாதியுமான நண்பன் கஜனைச் சந்தித்து விரைவில் நாம் ஏதாவது செய்யவேண்டும், அதற்காக ஒரு முறை சந்திக்கவேண்டும் என்ற விருப்பத்தைப் பதிவு செய்தேன். அவரும் தனது பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என்ற உறுதிப்பாட்டை ஆர்வத்துடன் வழங்கினார். குறித்த போட்டிக்கு எமது பாடசாலை மாணவர்களுக்கு விவாதப் பயிற்சியாளராக வந்திருந்த நண்பன் நிக்சலனைச் சந்தித்தார். எமது பாடசாலைமுன்னாள் விவாதிகளை மீள ஒருங்கிணைப்பதில் ஆர்வமாகவும் இருந்தார். அவரிடம் ஏனைய விவாதிகளின் தொடர்புகளைத் தேடச்சொல்லி அன்றே கூறினேன். 

இதன் பிறகு Facebook மூலமாக நண்பர் ஜெனனைத் தொடர்பு கொண்டேன். அவரும் எமது பாடசாலையின் முன்னாள் விவாதி. அவர் மாணவராக இருந்தபோதே அவர் எனக்கு அறிமுகம். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் ஒருமுறை கொழும்பு வரவும் ஒரு வெள்ளிக்கிழமை மாலை அவருடன் கலந்துரையாடவும் அவரை கம்பன் கழகத்துக்கு அழைத்துச் சென்று ஜெயராஜ் ஐயாவுடன் பேச வைக்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அன்றைய தினம் ஜெயராஜ் ஐயா கூறிய உற்சாகப்படுத்தும் வார்த்தைகள் எமது தீர்மானத்தை மேலும் உறுதிப்படுத்தியது. 

எல்லோரும் அமர்ந்து பேச ஒரு வாய்ப்பினை உருவாக்க முற்பட்டோம்...

தொடரும்..

"தமிழால் வையகத்தலைமை கொள்வோம்"

எமது Facebook பக்கம் - https://www.facebook.com/groups/ThamizhMamanram/

வியாழன், 9 ஜனவரி, 2014

தமிழ் மாமன்றம் தோற்றமும் தொடர்ச்சியும்... - எனது அனுபவங்கள் 1


எம்மில் பலருக்கு ஆயுட்காலக் கனவுகளில் ஒன்றாக இருந்த தமிழ் மாமன்றம் தோற்றம் பெற்று இன்று சிறப்பாகச் செயற்பட்டவண்ணம் உள்ளது. தமிழ் மாமன்றம் எதற்காக உருவானது, எப்படி உருவாக்கப்பட்டது, என்ன செய்ய நினைக்கிறது, என்ன செய்துகொண்டு இருக்கிறது என்ற பல கேள்விகள் இன்றுவரை பல நண்பர்களிடம் இருந்து வந்த வண்ணமே இருப்பினும் சிலருக்கு மட்டுமே நேரில் பதிலளிக்க முடிந்தது. இருளைப்படைத்தல் கவிதை நூல் வெளியீட்டு விழா தமிழ் மாமன்றம் பற்றிய அழுத்தமான பதிவை வவுனியாச் சமூகத்தின் மனதில் ஏற்படுத்தியுள்ளதோடு. கம்பவாரிதி ஜெயராஜ் ஐயா, கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன் அண்ணா உட்பட்ட கம்பன் கழகத்தினரிடமும் தென்மராட்சி இலக்கிய அணியினரிடமும் எம்மைப் பற்றிய நல்லெண்ணத்தையும் உருவாக்கியுள்ளது. இருப்பினும் இணையம்மூலம் எம்முடன் இணைந்து இருப்பவர்களுக்கும் புதியவர்களுக்கும் எம்மைப் பற்றிய ஒரு தெளிவுபடுத்தலை மேற்கொள்ள நீண்டநாளாய் நினைத்து இருந்தேன். நேரம் இன்றைக்கு என்னை எழுத வைக்கிறது. 
(இதன் முதல் பகுதி எனது தமிழ் மாமன்றத்தின் தோற்றத்துடன் தொடர்புபட்ட எனது அனுபவங்களைக் கூறுகிறது. இதன் மூலம் தமிழ் மாமன்றத்தை நான் மட்டுமே தோற்றுவித்ததாக தயவு செய்து பொருள் கொள்ளவேண்டாம். என்னைப் போன்ற ஒத்த சிந்தனையுடன் ஒரே காலப்பகுதியில் ஒன்று சேர்ந்த நண்பர்கள் அனைவரினதும் கூட்டு முயற்சியே இதற்குக் காரணம்.)


முற்றுமுழுதாக இளைஞர்களைக் கொண்ட சரியான சமுதாயக்கண்ணோட்டம் கொண்ட அமைப்பொன்றை நிறுவ வேண்டும் என்ற ஆசை பல்கலைக்கழகம் புகுந்த நாளில் இருந்தே எனக்கு இருந்தது. இதனுடைய சாத்தியப்பாடுகள் பற்றி எனது நண்பர்களுடன் பலமுறை பேசியிருக்கிறேன். சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்ற விளங்காத கனவு அந்த வயதில் ஏற்படுவது சாதாரணம்தான் என்றாலும் குறைந்தது அப்படி ஒரு அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு சிறந்த ஒரு செயற்பாட்டுத்தளத்தையும் வழிகாட்டலையும் வழங்க முனைந்தால் அது அந்த இளைஞர்களை கட்டாயம் செப்பனிடும். நீண்டகால நோக்கில் அந்த செப்பனிடல் ஏதும் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பது அங்கு காணப்படும் சிறிய நப்பாசை. 

இந்த ஆசை இப்படியே இருக்க எனது ஆறு வருடப் பல்கலைக்கழக வாழ்க்கையில் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வகை அனுபவங்கள் கிட்டின. மருத்துவ பீடத்தில் கிடைத்த அனுபவம் ஒருவகையில் முக்கியமானது. நேரடியாக சிங்கள நண்பர்களுடன் பழகுவதற்கும், கருத்துக்களைப் பரிமாறவும் முக்கியமாக நேரடியாக முரண்படவும் அது களம் தந்தது. அதே போலவே பல்கலைக்கழக மட்டத்தில் இந்து மாமன்றத்தின் உறுப்பினராகவும் பின்பு தலைவனாகவும் வேறுபட்ட பீடங்களைச் சேர்ந்த பல நண்பர்களுடன் பழக வாய்ப்புக்கிட்டியது. கொழும்புப் பல்கலைக்கழக இந்து மாமன்றத்தின் தலைவனாக ஒரு வருடம் செயற்பட்டது, ஒரு தலைவன் எப்படிச் செயற்படக்கூடாது என்ற அனுபவத்தை எனக்கு ஊட்டியது. 

சமகாலத்தில் கொழும்பில் செயற்படும் பல அமைப்புக்களுடன் பழக வாய்ப்புக்கிட்டியது. கொழும்புத் தமிழ்ச் சங்க நூலக உறுப்புரிமை பெற்று அங்கு அடிக்கடி போய் வந்தமை தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் நான் பங்குபெற வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது. அதே சமயத்தில் பல்கலைக்கழக நண்பர்கள்மூலமும் இணையம் மூலமும் சமூக விஞ்ஞான கற்கைகள் வட்டத்தின் நண்பர்கள் பலரது அறிமுகம் கிட்டியது. தொடர்ந்து 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக எழுத்தாளர் மாநாட்டில் பங்கேற்றமை மேலும் பல அறிமுகங்களையும் அனுபவங்களையும் ஊட்டியது. குறிப்பாக பேராசிரியர். கா. சிவத்தம்பி அவர்களது அறிமுகம் எழுத்தாளர் கனடா மூர்த்தி அண்ணா மூலம் கிட்டியது. அவரது அறிமுகம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது வீடு செல்லவும் பல மணி நேரம் உரையாடவும் வாய்ப்பு உருவாக்கித் தந்தது. அவர் சுகவீனமுற்று மறையும் வரை உரையாடல்களும் தொடர்ந்தன. 

இப்படிக் காற்றில் அலையும் இறகாக அலைந்து கொண்டிருந்த என்னை ஓரிடத்தில் கட்டிப்போட்டது கம்பன் கழகத்துடனான உறவு. 2008ம் ஆண்டு கம்பன் விழாவினை எமது பீட அண்ணன்மார் வாகீஸ்வரன், ராகவன் ஆகியோருடன் சென்று கடைசி வரிசையில் அமர்ந்து ரசித்துவிட்டு வந்தேன். பின்பொருநாள் வெள்ளவத்தை வீதியில் ஜெயராஜ் ஐயா நடந்து போவதைக் கண்டு அவருடன் பேச விரும்பி அருகில் சென்று தயக்கத்திலே திரும்பிவிட்டேன்.அதற்கு நீண்டநாட்களுக்குப் பிறகு ஜெயராஜ் ஐயா அவர்களின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு ஒன்றினை தமிழ்ச் சங்கத்திலே கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தத் தமிழினால் ஈர்க்கப்பட்டு நண்பன் தனேசன் உதவியுடன் ஜெயராஜ் ஐயாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன் சில நிமிட உரையாடலின் பின் அவரின் திருக்குறள் வகுப்பில் மாணவனாக இணைந்துகொண்டேன். 

மருத்துவபீட கல்விச்சுமையால் திருக்குறள் வகுப்பை அப்போதைக்கு இடை நிறுத்தினாலும் 2011 கம்பன் விழாவிலே என்னை மீறிய ஒரு சக்தி அல்லது ஒரு உணர்வு கம்பன் கழகத்தில் ஒருவனாக கட்டிப்போட்டது. ஒரு விழா எப்படி நடத்தப்படவேண்டும் என்பதை அருகிருந்தே பார்க்கவும் விழாவை ரசிக்கவும் கம்பன் கழகக் குடும்பத்தில் ஒருவனாகப் பழகவும் வாய்ப்புக்கிடைத்தது. கூடவே தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்ளும் வழக்கறிஞர் ராமலிங்கம் ஐயா அவர்களின் அன்பும் கிட்டியது. இலக்கியம் மட்டும் என்று இல்லாமல் தலைத்துவம், ஒழுங்கமைப்பு, பொறுமை என்று எத்தனையோ மனிதப்பண்புகளை எனக்குப் போதித்து கம்பன் கழகம் எனக்குள்ளே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வைத்தது. 

இந்த வரம் எனக்கு மட்டும் இன்றி என்னைப்போலவே ஒவ்வொரு முறையும் அன்புடனும் ஆர்வத்துடனும் வந்து இணைந்துகொள்ளும் அனைவருக்கும் தடையின்றிக்கிடைத்தவண்ணமே இருந்தது. இலங்கையில் இன்றைக்குப் புகழ் பெற்றவர்களாக விளங்கும் எத்தனையோ எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் கம்பன் கழகத்தினால் செதுக்கப்பட்டவர்கள். அது மட்டுமின்றி ஆசிரியர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலார்கள் முதல் அலுவலக சிப்பந்திகள் வரை அனைத்துவிதமான தொழிற்றுறையில் இருப்பவர்களும். ஜெயராஜ் ஐயாவிடமும் திருக்குறளுடன் சேர்த்து வாழ்வியலையும் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கக்கூடிய சிறந்த மாற்றம் ஒன்று வித்திடப்பட்டுக்கொண்டு இருப்பதை கண்டு உணர்ந்த பின் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

ஒவ்வொரு வருடமும் கம்பன் கழகத்தினால் எத்தனை பேர் உருவாகிறார்கள். இது ஏன் இலங்கையின் மற்றைய கலை இலக்கிய அமைப்புக்களால் முடிவதில்லை. அல்லது ஏனையோருக்கு மற்ற ஒருவரை வளர்த்தெடுக்கும் சமுதாயப்பொறுப்பு ஏன் ஏற்படுவதில்லை. எனக்கு கொழும்பு தற்காலிக இடம்தான் எனவே வவுனியாவிலே அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு கலை இலக்கியத்துறையிலே செயற்பாட்டுக்களம் அமைத்துகொடுக்க, கம்பன் காலத்தைப் போல திறந்த மனதுடன் செயற்படும் ஒரு அமைப்பு தேவை என்ற உணர்வு மேலிட்டது. 2013 இலே யாழ்ப்பாணக் கம்பன் விழாவின் வெற்றி கண்டு அடுத்தமுறை வவுனியாவில் ஒரே கம்பன் விழா நடத்துங்களேன் என்று ஜெயராஜ் ஐயாவிடம் கேட்டபோது. சுய நலம் இன்றி தமிழ் என்ற உணர்வுடன் உழைக்கக்கூடிய இளைஞர்கள் பத்துப்பேரைச் சேர்த்துவிட்டு என்னிடம் சொல் என்றார். வவுனியாவிலே இளைஞர்களுக்கான ஒரு இடம் தேவை என்று உறுதிபட என் மனதில் முடிவெடுத்துக்கொண்டேன். ..

தொடரும்...

"தமிழால் வையகத்தலைமை கொள்வோம்"

தமிழ் மாமன்றத்தின் Facebook பக்கம் - https://www.facebook.com/groups/ThamizhMamanram/

புதன், 8 ஜனவரி, 2014

தும்பி பிடித்தல்....


சின்ன வயதில் தும்பி பிடித்து இருக்கிறீர்களா...
ஆம் என்றால் நீங்களும் ஏதோ சாதனை செய்ததாக பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
தும்பிகள் உருவத்தில் சிறியவை, மிகவும் சிறிய செட்டை உடையவை... அதனால் அதனைப் பிடிப்பது என்பது வண்ணாத்துப்பூச்சி ஒன்றைப்பிடிப்பதிலும் மிகவும் கடினமானது...
அதன் வேகமான பறத்தல் அத்தனை சிறுவர்களுக்கும் சவாலானது...
பிடிக்கமுதலே பிய்ந்து வரும் அதன் செட்டைகளை எப்போதாவது கையில் பிடித்து உணர்ந்தால் மறுபடி அதனைப்பிடிக்க மனம்வராது எந்தச் சிறுவனுக்கும்...
எஞ்சியிருக்கும் வழிகள் இரண்டேதான்...
ஒன்று மெல்லப்பின்புறமாகச் சென்று தும்பியின் வாலிலே பற்றுவது..
அடுத்தது குவித்த கைகளுக்குள் மெல்லச் சிறைபிடிப்பது...
இதில் பொதுவாக பையன்கள் முதலாவது வழியில் கில்லாடிகள்...
இரண்டாவது பெண்கள் வழி...
ஆனாலும் பிடித்த தும்பியை சிறைப்பிடித்துவைக்க மனம் உடன்படாது..
அதற்கு சுதந்திரம் கொடுத்து அதன் பின் நட்புக்கொண்டு உறவாடவே மனம் ஏங்கும்...

தும்பி துரத்தும் சிறுவன் போலவே என் மனமும் ஏதாவது எழுதவேண்டும் என்று ஓடித்திரிகிறது...
அழகான தும்பிகளைக்காணும்போது குதித்துக்கொண்டாடுகிறது..
கையை உதறிக்கைப்பற்ற எண்ணும்போது காணாமலே போகும் தும்பிகள், கடும் வேலைகளுக்கு மத்தியில் வந்து தலை காட்டும்..
இருந்தாலும் கொஞ்சம் தனியாக நேரம் ஒதுக்கிக்கொண்டு தும்பிகளை துரத்த முயல்கிறேன்...
முடிந்தவரை இறக்கைகள் பிரியாத அழகான தும்பிகளை அவ்வப்போது கைகளுக்குள் போத்திவந்து தரமுயல்கிறேன்...
அல்லது தும்பிகளின் வாலைப்பிடித்துக்கொண்டு நான் அலைந்த அனுபவங்களையாவது எழுதமுயல்கிறேன்... மீண்டும் மீண்டும்...


மதுரகன்

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...