திங்கள், 5 பிப்ரவரி, 2018
ஒரு வார்த்தையின் மரணம்! ஒரு வசனத்தின் மரணம்! ஒரு கவிதையின் மரணம்!
Posted on பிற்பகல் 3:40 by செல்வராஜா மதுரகன்
ஒரு வார்த்தையின் மரணம்
ஒரு வசனத்தின் மரணம்
ஒரு கவிதையின் மரணம்
கவிஞர் செழியனின்
மரணத்தின் செய்தி எனக்குள் ஒரு முட்செடியின் கீறலாய்ப் பதிந்து சென்றது. மரணத்துள்
வாழ்வோம் தொகுப்புத்தான் எனக்கு செழியனின் எழுத்துக்களை அறிமுகம் செய்தது. அது
தந்த ஈர்ப்புத்தான் மரணம் என்ற அவரது தொகுப்பைத் தேடவும் வாசிக்கவும் தூண்டியது.
இன்று அவரது மரணம் உச்சரிக்கப் படாத வார்த்தையொன்றாக என்னைத் தாக்கியபோது கண்ணீர்த்துளிகளால்
அஞ்சலி செய்ய மனம் ஏங்குகிறது.
“மக்களை நேசித்த
எங்கள் கண்களில்
கண்ணீர்ப் பூக்கள் உதிர்வதை
நான் வெறுக்கிறேன்.
மகிழ்ச்சிக்காய் வாழ்ந்து
மகிழ்ச்சிக்காய் இறந்து போய்விட்ட
எங்கள் தோழர்கள் மத்தியில் அமையும்
என் சமாதியில்
அழுகையின் ஒலி
கேட்கவே கூடாது.”
என்ற உனது வரிகளை உதடுகள் முணுமுணுக்கின்றன. மேடையில் பேசிப்பழகிய காலங்களில்
உனது வார்த்தைகளை அழுத்தி உச்சரித்துப் பெற்றுக்கொண்ட கைதட்டல்கள் கண்களை
நிறைக்கின்றன. ஆகர்சித்து வளர்ந்த விதைகள் யாவற்றையும் மரம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
என் ஓசையற்ற எழுத்துக்கள் சிலவற்றையாவது காற்றில் அனுப்பிவைக்கிறேன்.
1.
ஒரு வார்த்தையின் மரணம்
Game of Thrones தொடரில் வரும்
வாசகம் ஒன்று எப்போதும் மனதில் நிற்கும். “There
is only one God, and his name is death. And there is only one
thing we say to death: Not today”.
மரணம் என்கிற
வார்த்தையின் பரிணாமங்கள் பல. அதன் உள்ளார்ந்த பொருளின் மீதான பயமும், அந்தப் பயம்
கொடுக்கின்ற பலமுமாக அந்த வார்த்தையின் தாக்கங்கள் எதிர்வுகூற முடியாதவை.
உன்னுடைய கவிதைகளில் அந்த
வார்த்தையின் அர்த்தங்களும் தாக்கங்களும்
மரணித்து எமக்குப் பிரமிப்பூட்டுகின்றன
மரணம்
எங்கே இருக்கின்றாய்?
எம் உண்மைத் தோழ!
முகம் தெரியாத கரிய
இருளில்
திசை தெரியாத சம
வெளிகளில்
உன் முகத்தை எங்கே என்று
கால்களை இழந்த நாம்
தேடுவது?
துளிர் விட்டு வளரும்
பூச்செடியில் புதிதாய் அரும்பும்
பூக்களுக்காக.
சிறகு முளைத்த இளம் பறவைகள்
சிறகடித்துப் பறக்கும்
ஒலிகளுக்காக.
எங்களை நெருங்கி வருகின்ற
மரணத்துக்காக
நம்பிக்கையோடு
நாங்கள் காத்திருக்கிறோம்!
பூச்செடியில் புதிதாய் அரும்பும்
பூக்களுக்காக.
சிறகு முளைத்த இளம் பறவைகள்
சிறகடித்துப் பறக்கும்
ஒலிகளுக்காக.
எங்களை நெருங்கி வருகின்ற
மரணத்துக்காக
நம்பிக்கையோடு
நாங்கள் காத்திருக்கிறோம்!
மண்ணிறம் கொண்டதாகவும், வியர்வையின்
உப்புக் கரிப்பதாகவும் மரணம் பலரைத் தழுவிக் கொள்வதை எனது சிறு பிராயத்தின்
கதைகளும் கனவுகளும் வரித்திருந்ததை மாற்றியமைத்திருந்தன உந்தன் வரிகள்.
மரணத்தைக் கண்டு நாம்
அஞ்சவில்லை
ஒரு அனாதைப் பிணமாய் ஒரு
அடிமையாய் புதிய எஜமானர்களுக்காக தெருக்களில் மரணிப்பதை
நாம் வெறுக்கிறோம்!
என்ற உந்தன் வரிகளுடன்
மரணம் என்ற வார்த்தை அதன் அத்தனை அர்த்த சாத்தியப்பாடுகளுடனும், பரிணாமங்களுடனும்
மூன்று காலத்திலும் அது ஏற்படுத்திய தாக்கங்களுடனும் மரணித்துவிட்டது.
2.
ஒரு வசனத்தின் மரணம்
தாங்கள் கற்பனை காணும் விடுதலைக்கு இலாயக்கற்ற
இனக்குழுமம் எங்கள் மக்கள் என்பது எனது கருத்துநிலை. Grandiosity என்ற உளவியல்
தன்மையை இயல்பாய் வெளிப்படுத்தும் எத்தனையோ பேரில் கண்டும் கடந்தும் செல்லும்
அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.
நீ எமது மக்களை நோக்கும் விதம்
மாறுபட்டிருந்தது.
என்னதான்
இருந்தபோதும்
மக்கள் மட்டும்
முன்புபோல இப்போ
இல்லை.
நீண்டு விரிந்து
கிடக்கும்
வானத்தில்
இருந்து,
அதன் பின்னால்
கூட்டம்
கூட்டமாய்
எங்களைப்
பார்த்துச் சிரிக்கின்ற
நட்சத்திர
மண்டலங்களிலிருந்து
எப்போதும்
போராடிக்
கொண்டேயிருக்கும்
கருங்கடல்களுக்கு
அப்பால்
ஏதோ
பெயர் தெரியாத
அந்நிய
தேசமொன்றில் இருந்து
திடீரென
எங்களை மீட்க
மீட்பர்கள்
வருவார்கள் என
முன்பு போல
இப்போதெல்லாம்
மக்கள்
நம்புவதில்லை.
நீ அப்போது உன் கண்முன்
கண்ட காட்சிகளின் வெளிப்பாடா ? அல்லது இப்படி இருக்கக்கூடாதா என்ற உனது ஏக்கத்தின்
வெளிப்பாடா? இப்படி இருக்கவேண்டும் என்ற கனவா? முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதி
வரை, ஏன் அதற்குப் பின்னரும் மீட்பர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கையாலாகாத
எமது மக்கள் மீது ஏன் இப்படி ஒரு நம்பிக்கை உனக்கு.
இப்போதெல்லாம்
மக்கள்
சந்தேகிக்கின்றனர்,
அடிக்கடி
கேள்விகள் கேட்கின்றனர்,
தமக்குள் நீண்ட
நேரம்
பேசிக்
கொள்கின்றனர்.
இவற்றையெல்லாம்
பார்க்கையில்
என்ன ஏது என்று
புரியாவிட்டாலும்
ஒன்றுமட்டும்
நிச்சயமாக
எனக்குத் தெரிகின்றது,
மக்கள்
ஏதோ செய்யப்
போகின்றார்கள்.
அது, முன்பு நடந்தது போல
இருக்காது.
எங்கள் மண்ணில்
ஒரு புதிய
வரலாற்றை
நானும் நீயும்
திட்டித் தீர்த்த,
அதே சனங்கள்
எங்கள் மக்கள்
படைக்கப்
போகின்றனர்.
மக்கள் புதிய வரலாறு
படைக்கப்போகிறார்கள் என்று நாம் நம்பியிருந்த கணப்பொழுதுகளில் எல்லாம், அவர்கள் புதிய
பேனாக்களைத் தெரிவு செய்து, அந்தப் புதிய பேனாக்களைக் கொண்டும் தமது பழைய
வரலாற்றையே தொடர்ந்து எழுத முயன்ற துயரங்களை நீ அறியவில்லையா செழியன் அண்ணா?
உன்னுடைய கவிதை வரிகளில் ஒருபோதும் மரணித்து விடக்கூடாது என்று நான்
நினைக்கும் ஒரு வசனம்,
கறை
படிந்துபோன
பாடங்களின் முடிவில்
மக்கள்
எப்போதும்
புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.
பாடங்களின் முடிவில்
மக்கள்
எப்போதும்
புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.
3.
ஒரு கவிதையின் மரணம்
எரிகின்ற
எங்கள் தேசத்தில்
எழுகின்ற எங்கள்
மக்களின் கரங்களுடன்
மெலிந்துபோன என் கரங்களை
இணைத்துக் கொள்வதற்காய்
நான்
எங்கள் தேசத்தில்
வாழவிரும்புகிறேன்.
எரிந்து கொண்டிருந்த எமது நாட்டில் இருந்து வெவ்வேறு காரணங்களுக்காக ஒவ்வொருவரும்
தப்பி ஓடிக்கொண்டிருந்த, அல்லது தப்பி ஓடுவதற்கு முயற்சியோ சிந்தனையோ செய்து
கொண்டிருந்த காலத்தில், இப்படி ஒரு கவிதையை எழுதுவதற்கு உனக்கு எவ்வளவு மன
உறுதியும் ஓர்மமும் தேவைப்பட்டிருக்கும்.
எங்கள் தேசத்து நகரங்களை
எரித்த தீச்சுவாலைகள்
அணைந்து போக முன்னரே
எங்கள் தெருக்களில்
படர்ந்த
எம்மவர் குருதியின்
சுவடுகள்
உறைந்துபோக முன்னரே
மனித வேட்டையரால்
கொலை செய்யப்பட்டு
வீசி எறியப்பட்ட
எங்கள் தேசத்து
இளைஞர்களின்
சடலங்களின் மேல் நடந்து
பெர்லின் விமான
நிலையத்தில்
வந்து இறங்கும்
அகதிகள் கூட்டத்தில்
என்னைத் தேடி நீ அலையாதே.
என்று உறுதியிட்டுச் செல்வதற்கு உனக்கு எவ்வளவு தன்னம்பிக்கை இருந்திருக்கும்.
அல்லது முழுவதும் சுயநலத்திற்கும் தன்னைப் புதைத்துக்கொள்ள முயலும் இந்த நிலத்தின்
மீது உனக்கு எவ்வளவு பற்று இருந்து இருக்கும்.
நீ இந்த மண்ணை விட்டு நீங்கிச் சென்றதன் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது.
எப்போதாவது
மீண்டும்
நீ
எங்கள் தேசத்திற்கு வந்தால்
மக்கள்
எங்கள் தேசத்தில்
வாழ்ந்து கொண்டுதான்
இருப்பார்கள்.
என்று கூறிய உனது வார்த்தைகளை உண்மை என்பதா? இல்லை என்பதா? இந்தக்கவிதையில்
எழுதும்போது வார்த்தைகளுடன் தோய்த்துவைத்த உணர்வுகளின் மரணத்திற்கு இந்த
சமூகத்தில் அப்போதிலிருந்து உயிர்ப்புடன் இருந்த, சிந்திக்கத் தெரிந்த, தெரியாத
அத்தனைபேரும் பொறுப்புக் கூறவேண்டும்.
“மகிழ்ச்சிக்காய்ப் போராடி
மக்களுக்காக மரணிப்பதற்கு
நாம் அஞ்சவில்லை.
என் சமாதியில்
முட்களைத் தாங்கி
அழகிய பூச்செடி ஒன்று
துளிர்விட்டு வளரும்.
நான் நம்புகிறேன்.”
மதுரகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to "ஒரு வார்த்தையின் மரணம்! ஒரு வசனத்தின் மரணம்! ஒரு கவிதையின் மரணம்!"
கருத்துரையிடுக