திங்கள், 5 பிப்ரவரி, 2018

ஒரு வார்த்தையின் மரணம்! ஒரு வசனத்தின் மரணம்! ஒரு கவிதையின் மரணம்!

ஒரு வார்த்தையின் மரணம்
ஒரு வசனத்தின் மரணம்
ஒரு கவிதையின் மரணம்


கவிஞர் செழியனின் மரணத்தின் செய்தி எனக்குள் ஒரு முட்செடியின் கீறலாய்ப் பதிந்து சென்றது. மரணத்துள் வாழ்வோம் தொகுப்புத்தான் எனக்கு செழியனின் எழுத்துக்களை அறிமுகம் செய்தது. அது தந்த ஈர்ப்புத்தான் மரணம் என்ற அவரது தொகுப்பைத் தேடவும் வாசிக்கவும் தூண்டியது. இன்று அவரது மரணம் உச்சரிக்கப் படாத வார்த்தையொன்றாக என்னைத் தாக்கியபோது கண்ணீர்த்துளிகளால் அஞ்சலி செய்ய மனம் ஏங்குகிறது.

“மக்களை நேசித்த
எங்கள் கண்களில்
கண்ணீர்ப் பூக்கள் உதிர்வதை
நான் வெறுக்கிறேன்.
மகிழ்ச்சிக்காய் வாழ்ந்து
மகிழ்ச்சிக்காய் இறந்து போய்விட்ட
எங்கள் தோழர்கள் மத்தியில் அமையும்
என் சமாதியில்
அழுகையின் ஒலி
கேட்கவே கூடாது.”

என்ற உனது வரிகளை உதடுகள் முணுமுணுக்கின்றன. மேடையில் பேசிப்பழகிய காலங்களில் உனது வார்த்தைகளை அழுத்தி உச்சரித்துப் பெற்றுக்கொண்ட கைதட்டல்கள் கண்களை நிறைக்கின்றன. ஆகர்சித்து வளர்ந்த விதைகள் யாவற்றையும் மரம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. என் ஓசையற்ற எழுத்துக்கள் சிலவற்றையாவது காற்றில் அனுப்பிவைக்கிறேன்.

1.       ஒரு வார்த்தையின் மரணம்
Game of Thrones தொடரில் வரும் வாசகம் ஒன்று எப்போதும் மனதில் நிற்கும். “There is only one God, and his name is death. And there is only one thing we say to death: Not today”.
மரணம் என்கிற வார்த்தையின் பரிணாமங்கள் பல. அதன் உள்ளார்ந்த பொருளின் மீதான பயமும், அந்தப் பயம் கொடுக்கின்ற பலமுமாக அந்த வார்த்தையின் தாக்கங்கள் எதிர்வுகூற முடியாதவை.
உன்னுடைய கவிதைகளில் அந்த வார்த்தையின் அர்த்தங்களும் தாக்கங்களும்  மரணித்து எமக்குப் பிரமிப்பூட்டுகின்றன

மரணம்

எங்கே இருக்கின்றாய்?
எம் உண்மைத் தோழ!

முகம் தெரியாத கரிய இருளில்
திசை தெரியாத சம வெளிகளில்
உன் முகத்தை எங்கே என்று
கால்களை இழந்த நாம் தேடுவது?

துளிர் விட்டு வளரும்
பூச்செடியில் புதிதாய் அரும்பும்
பூக்களுக்காக.

சிறகு முளைத்த இளம் பறவைகள்
சிறகடித்துப் பறக்கும்
ஒலிகளுக்காக.

எங்களை நெருங்கி வருகின்ற
மரணத்துக்காக
நம்பிக்கையோடு
நாங்கள் காத்திருக்கிறோம்!

மண்ணிறம் கொண்டதாகவும், வியர்வையின் உப்புக் கரிப்பதாகவும் மரணம் பலரைத் தழுவிக் கொள்வதை எனது சிறு பிராயத்தின் கதைகளும் கனவுகளும் வரித்திருந்ததை மாற்றியமைத்திருந்தன உந்தன் வரிகள்.
மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லை
ஒரு அனாதைப் பிணமாய் ஒரு அடிமையாய் புதிய எஜமானர்களுக்காக தெருக்களில் மரணிப்பதை
நாம் வெறுக்கிறோம்!

என்ற உந்தன் வரிகளுடன் மரணம் என்ற வார்த்தை அதன் அத்தனை அர்த்த சாத்தியப்பாடுகளுடனும், பரிணாமங்களுடனும் மூன்று காலத்திலும் அது ஏற்படுத்திய தாக்கங்களுடனும் மரணித்துவிட்டது.

2.       ஒரு வசனத்தின் மரணம்
தாங்கள் கற்பனை காணும் விடுதலைக்கு இலாயக்கற்ற இனக்குழுமம் எங்கள் மக்கள் என்பது எனது கருத்துநிலை. Grandiosity என்ற உளவியல் தன்மையை இயல்பாய் வெளிப்படுத்தும் எத்தனையோ பேரில் கண்டும் கடந்தும் செல்லும் அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.
நீ எமது மக்களை நோக்கும் விதம் மாறுபட்டிருந்தது.
என்னதான் இருந்தபோதும்
மக்கள் மட்டும்
முன்புபோல இப்போ இல்லை.

நீண்டு விரிந்து கிடக்கும்
வானத்தில் இருந்து,
அதன் பின்னால்
கூட்டம் கூட்டமாய்

எங்களைப் பார்த்துச் சிரிக்கின்ற
நட்சத்திர மண்டலங்களிலிருந்து

எப்போதும்
போராடிக் கொண்டேயிருக்கும்
கருங்கடல்களுக்கு அப்பால்

ஏதோ
பெயர் தெரியாத
அந்நிய தேசமொன்றில் இருந்து

திடீரென
எங்களை மீட்க
மீட்பர்கள் வருவார்கள் என
முன்பு போல
இப்போதெல்லாம்
மக்கள் நம்புவதில்லை.

நீ அப்போது உன் கண்முன் கண்ட காட்சிகளின் வெளிப்பாடா ? அல்லது இப்படி இருக்கக்கூடாதா என்ற உனது ஏக்கத்தின் வெளிப்பாடா? இப்படி இருக்கவேண்டும் என்ற கனவா? முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதி வரை, ஏன் அதற்குப் பின்னரும் மீட்பர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கையாலாகாத எமது மக்கள் மீது ஏன் இப்படி ஒரு நம்பிக்கை உனக்கு.

இப்போதெல்லாம்
மக்கள்
சந்தேகிக்கின்றனர்,
அடிக்கடி கேள்விகள் கேட்கின்றனர்,
தமக்குள் நீண்ட நேரம்
பேசிக் கொள்கின்றனர்.

இவற்றையெல்லாம் பார்க்கையில்
என்ன ஏது என்று
புரியாவிட்டாலும்
ஒன்றுமட்டும்
நிச்சயமாக எனக்குத் தெரிகின்றது,
மக்கள்
ஏதோ செய்யப் போகின்றார்கள்.

அது, முன்பு நடந்தது போல
இருக்காது.
எங்கள் மண்ணில்
ஒரு புதிய வரலாற்றை
நானும் நீயும்
திட்டித் தீர்த்த,
அதே சனங்கள்
எங்கள் மக்கள்
படைக்கப் போகின்றனர்.

மக்கள் புதிய வரலாறு படைக்கப்போகிறார்கள் என்று நாம் நம்பியிருந்த கணப்பொழுதுகளில் எல்லாம், அவர்கள் புதிய பேனாக்களைத் தெரிவு செய்து, அந்தப் புதிய பேனாக்களைக் கொண்டும் தமது பழைய வரலாற்றையே தொடர்ந்து எழுத முயன்ற துயரங்களை நீ அறியவில்லையா செழியன் அண்ணா?




உன்னுடைய கவிதை வரிகளில் ஒருபோதும் மரணித்து விடக்கூடாது என்று நான் நினைக்கும் ஒரு வசனம்,
கறை படிந்துபோன
பாடங்களின் முடிவில்
மக்கள் 
எப்போதும்
புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.

3.       ஒரு கவிதையின் மரணம்

எரிகின்ற
எங்கள் தேசத்தில்
எழுகின்ற எங்கள்
மக்களின் கரங்களுடன்
மெலிந்துபோன என் கரங்களை
இணைத்துக் கொள்வதற்காய்

நான்
எங்கள் தேசத்தில்
வாழவிரும்புகிறேன்.

எரிந்து கொண்டிருந்த எமது நாட்டில் இருந்து வெவ்வேறு காரணங்களுக்காக ஒவ்வொருவரும் தப்பி ஓடிக்கொண்டிருந்த, அல்லது தப்பி ஓடுவதற்கு முயற்சியோ சிந்தனையோ செய்து கொண்டிருந்த காலத்தில், இப்படி ஒரு கவிதையை எழுதுவதற்கு உனக்கு எவ்வளவு மன உறுதியும் ஓர்மமும் தேவைப்பட்டிருக்கும்.

எங்கள் தேசத்து நகரங்களை
எரித்த தீச்சுவாலைகள்
அணைந்து போக முன்னரே
எங்கள் தெருக்களில் படர்ந்த
எம்மவர் குருதியின் சுவடுகள்
உறைந்துபோக முன்னரே
மனித வேட்டையரால்
கொலை செய்யப்பட்டு
வீசி எறியப்பட்ட
எங்கள் தேசத்து இளைஞர்களின்
சடலங்களின் மேல் நடந்து

பெர்லின் விமான நிலையத்தில்
வந்து இறங்கும்
அகதிகள் கூட்டத்தில்
என்னைத் தேடி நீ அலையாதே.

என்று உறுதியிட்டுச் செல்வதற்கு உனக்கு எவ்வளவு தன்னம்பிக்கை இருந்திருக்கும். அல்லது முழுவதும் சுயநலத்திற்கும் தன்னைப் புதைத்துக்கொள்ள முயலும் இந்த நிலத்தின் மீது உனக்கு எவ்வளவு பற்று இருந்து இருக்கும்.

நீ இந்த மண்ணை விட்டு நீங்கிச் சென்றதன் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது.

எப்போதாவது
மீண்டும்
நீ
எங்கள் தேசத்திற்கு வந்தால்

மக்கள்
எங்கள் தேசத்தில்
வாழ்ந்து கொண்டுதான்
இருப்பார்கள்.

என்று கூறிய உனது வார்த்தைகளை உண்மை என்பதா? இல்லை என்பதா? இந்தக்கவிதையில் எழுதும்போது வார்த்தைகளுடன் தோய்த்துவைத்த உணர்வுகளின் மரணத்திற்கு இந்த சமூகத்தில் அப்போதிலிருந்து உயிர்ப்புடன் இருந்த, சிந்திக்கத் தெரிந்த, தெரியாத அத்தனைபேரும் பொறுப்புக் கூறவேண்டும்.

“மகிழ்ச்சிக்காய்ப் போராடி
மக்களுக்காக மரணிப்பதற்கு
நாம் அஞ்சவில்லை.
என் சமாதியில்
முட்களைத் தாங்கி
அழகிய பூச்செடி ஒன்று
துளிர்விட்டு வளரும்.
நான் நம்புகிறேன்.”

மதுரகன்

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

மனதிற்குள் மறைந்து பூத்தவை 1 - சென்னை





பயணங்கள் ஆரம்பத்தில் எனக்கு வலிநீக்கியாக இருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக என்னையறியாத பண்புமாற்றம் ஒன்றை நிகழ்த்த ஆரம்பித்தன.. சென்ற ஒவ்வொரு நாடுகளும், ஒவ்வொரு நகரங்களும் சந்தித்த முன்பு அறிந்த/ அறியாத மனிதர்களும் தெருக்களும் உணவுகளும் காற்றும் ஒவ்வொருமுறையும் எனக்குள் அறியாத இன்பத்தைப் புகட்ட, பயணம் என்பது கிட்டத்தட்ட எனக்குப்போதையானது...

பயணங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள பலமுறை நான் எண்ணியிருந்தும் இன்று வரை அந்த அனுபவங்களெல்லாம் மனதுக்குள்ளே மட்டும் தூறல் போட்டன... சில அனுபவங்களை வார்தைகலாக்கிப் பகிர முயலும் ஒரு வெளிப்பாடு இது...

2007ம் ஆண்டு எனது ஏப்ரல் மாதம் அம்மாவுடன் சென்னை பயணித்தேன், எனது முதலாது வெளிநாட்டுப்பயணம், முதலாவது விமானப்பயணம் ஒரு கிளர்ச்சியூட்டும் மனநிலையோடு செய்யப்போகும் விடயங்கள், வாங்கப்போகும் பொருட்கள் என்று பட்டியல்கள் மனதிற்குள் நீள அந்தப்பயணத்தை ஆரம்பித்து இருந்தேன். சென்னைக்குள்ளேயே முடிந்து விட்டிருந்தாலும் தனிமையில் சென்னையில் நடமாடித்திரிந்த அனுபவம் அன்றைய நிலையில் எனக்கு புதிதாகவே இருந்தது.

இலங்கையில் யுத்தம் தீவிரமாகத் தொடங்கியிருந்த காலப்பகுதி அது, காரணமின்றிக் கொழும்பிலே உலவும் தமிழ் பேசுபவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்ட காலம். பச்சைச் சீருடையுடன் யாரைக்கண்டாலும் பயந்து ஒதுங்கிய காலம். வவுனியாவிலோ ஏழு மணிக்குப்பிறகு எதிர்வீட்டிற்கு சென்றுவரக்கூட அஞ்சும் நிலை. இப்படியான சூழ்நிலையில் கூண்டுக்குள் இருந்து  திறந்துவிட்ட கிளி போல எனது உணர்வு இருந்தது. எங்கு பார்த்தாலும் தமிழ் பேசும் மக்கள் கூட்டம் வாழ்த்தலும் வைதலும் கூட சுகமாகப் பட்டது. ஒரு கடையைத் தேடிச்சென்று பாதை தவறிவிட வழியில் அகப்பட்ட போலிஸ் இடமே பாதை கேட்டுப்போனேன். தனியாகவே நேரம் கடந்து உலாவினேன். சாப்பிடும் கடைகளில், திரையரங்குகளில், புத்தகக் கடைகளில் சந்திப்பவர்களிடம் மணிக்கணக்கில் சுகம் விசாரித்தேன்.

எனது தமிழைக்கேட்ட முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஒருமுறை "என்னய்யா உ(ஒ)ளருற" என்றார்.. குழாயடிச் சண்டை ஒன்றை ரசித்துப்பார்த்தேன். தி நகரில் தெருவோரம் பொருட்கள் விற்கும் ஒருவரிடம் விளையாட்டாய் விலை கேட்டுவிட அவர் பின்னாலேயே துரத்தி வந்து முதலில் நூறு ரூபாய் சொன்ன பொருளை இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்குமாறு கெஞ்ச வேறு வழியின்றிச் சிரிப்புடன் வாங்கி வந்தேன். கரும்புச்சாற்றின் சுவையில் மனதைத் தொலைத்தேன். ஆவின் பால் நிலையத்தில் மோர்ப்பக்கெட் வாங்கிக் குடித்தேன்.

மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி ரங்கநாதன் தெருவைக் கடந்து உஸ்மான் தெருவை அடையமுதல் அந்த ஒடுங்கிய தெருவிற்குள் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த வவுனியா சனத்தொகையையே கடக்கவேண்டி இருந்தது. எந்தவித கஷ்டமும் இன்றி அந்த மனித அலையே என்னை உஸ்மான் ரோட்டில் ஒதுக்கிய நாட்களும் இருந்தன. இப்படி பொழுதுகள் முழுக்கப் புதிதாகக் கழிந்துகொண்டு இருந்தன. 

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை மெரீனா பீச்சிலே இந்திய விமானப்படையின் விமானசாகசங்கள் காட்டப்படுவதாய் சேதி வந்தது. அம்மாவையும் மாமாவின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணொருவரையும் அழைத்துக்கொண்டு பார்ப்பதற்காகச் சென்றோம். அண்ணா சமாதி எம்ஜிஆரின் சமாதிகளைக் கண்டு உணர்வுற்றுக் கடற்கரையை அண்மித்து விமான சாகசத்தைப் பார்க்கத் தொடங்கினோம், ஒரு லட்சம்பேர் பார்த்ததாக கூறப்பட்டு கிட்டத்தட்ட இரு மணிநேரம்  நீடித்த நிகழ்வு நிறைவடைந்துகொண்டு இருக்கும்போது மாமாவிடம் இருந்து அழைப்பு வந்தது "முடிய ஒரு அரை மணித்தியாலத்துக்கு முதல் வெளிக்கிடுங்கோ, அல்லது நெரிசல் கூடிவிடும்" என்று அவர் சொன்னதைக் கேட்டு அழைப்பைத் துண்டித்தபோதுதான் நிலைமை மோசமானதை உணர்ந்தேன்.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை சனவெள்ளம் அலைமோதுகின்றது. வீதி எது கரை எது என்று விளங்கவில்லை. உள்ளே சென்றால் நெரிந்து சாகவேண்டியதுதான். ஒருவாறு கரையோரமாக நடந்து வந்தபோது உயர்நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்து சிலர் வெளியேறுவதைக் கண்டோம். மதிலருகில் அடுக்கப்பட்டிருந்த கற்களைப் படிக்கட்டுக்களாகப் பயன்படுத்திச் சிலபெண்களும் படலையை தாண்டிப் பாய்ந்து பல ஆண்களும் அந்தப்பக்கம் கடந்துகொண்டு இருந்தார்கள். கூடவந்த அம்மாவையும் மற்றப்பெண்ணையும் படிகளால் கடக்கச் சொல்லிவிட்டு, நானும் படலையைத் தாண்டிப் பாய்ந்தேன், எனது செருப்பின் ஒரு முனை சிக்கிக்கொண்டதில் தடுமாறி மறுபுறம் தலைகீழாய் விழுந்தேன். கொஞ்சமென்றால் என் மேல் இருபது பேர் குதித்திருப்பார்கள். சில இளைஞர்கள் என்னை இழுத்தெடுத்து சுற்றிப்பாதுகாப்பாய் நின்றுகொண்டார்கள். அவர்களின் முகம் பார்க்கக்கூட முடியாத நிலையில், வலியுடன் முழங்கையால் இரத்தம் வழிய, கிழிந்த சேட்டுடன் ஐந்து கிலோமீற்றர் நடந்து வந்தே முச்சக்கரவண்டி ஒன்றைப்பெற்றுக்கொண்டு வைத்தியசாலை சென்றோம். 

முதுகில் ஏற்பட்ட வலி கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாய் இருந்தது. திருப்பதியில் போட்ட மொட்டையில் கல்கீறிய காயம் இப்போதும் கன்னம் தடவும் போது சிரிக்கிறது. கடல் கடந்து வந்துதான் சன நெரிசலை உணரவேண்டும் என்று எனக்கு விதிக்கப்பட்டு இருந்ததோ என்று இன்றைக்கும் நினைத்துக்கொள்வேன்.


வேறு நகரங்களில் தொடரக்கூடும்...

வெள்ளி, 3 ஜூலை, 2015

கவிதாசன்


கவிதாசன்




தமிழ்த்திரையிசையில் கவித்துவம் பற்றி நண்பன் சுதர்சனுடனான facebook கலந்துரையாடல் ஒன்றின்போது எழுதத்தோன்றிய விடயங்கள் இவை. சுதர்ஷன் இயல்பிலேயே வைரமுத்துவின் தீவிர ரசிகன். நான் வைரமுத்துவை வெறுப்பவன் என்றில்லை. ஆனால் அவரது சில படைப்புக்களை மட்டும் ரசித்தவன். சுதர்ஷனது குறிப்பொன்றில் "தமிழில் ஒரு உயர்ந்த மொழி அமைப்பை ஆழமான காதல் உணர்வோடு உருவாக்கியவர் அவர்தான். அறிவுமதி, வாலி எல்லாம் வேறு ரகம்" என்று குறிப்பிட்டு இருந்தார். அது என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது, அது தொடர்பான எனது தனிப்பட்ட கருத்தினை மனம் அலசியது. 

வைரமுத்துவுக்கு முதல் என்ன நடந்துகொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பினேன். "சங்க இலக்கியங்கள்ல மட்டும் இதே அழகும் ஆழமும் இருந்தது. வைரமுத்துவுக்கு முதலும் காதல் பாடல்கள் வந்தது. இந்த ஆழம் இல்லை. இதைச் சினிமாவில் சரியா உள்வாங்கினது மணிரத்னம்." என்று அழகாகப்பதில் சொன்னார். எங்கள் இருவரதும் வாசிப்பு முரண்படும் இடங்களில் முக்கியமானவர் வைரமுத்து, எனவே எனது கருத்துக்களை விரைவில் பதிவிடுவதாக வாக்களித்தேன். அது இன்றுதான் நிறைவு பெற்றது.

- *****- ***** - ***** -

சமகாலத்திரையிசையில் மிகவும் பற்றுக்கொண்டவன் நான் வானொலிப்பெட்டியில் பாடல்கள் கேட்ட காலம்முதல், அதனைக் Casette இலே பதிவு செய்து கேட்ட காலம் கடந்து, Audio CD, Mp3 காலம் கழிந்து கைத்தொலைபேசியில் காதுக்குள் இசை புகும் காலம் வரை வாழ்க்கையில் ஒரு முக்கிய இடம் இசைக்கு இருந்தது.

உயர்தரம் கற்கையில் கால்வாசி நேரம் படித்தது போக மிகுதி நேரங்களில் பாடல்தான் ஒலிக்கும். நினைவு தெரிந்து மிகச்சிறுவயதில் ஒரு பாடலில் இசைக்கோர்ப்புத்தான் முதலில் என்னை ஈர்த்துக்கொண்டிருந்தது. இளையராஜா, ஏ ஆர் ரகுமான், தேவா போன்ற பெயர்கள் மெல்ல மெல்ல வாயில் உலவத்தொடங்கின. பதின்ம வயதுகளில் குறித்த சில பாடகர்கள் குரல் கவரத்தொடங்கியது. உன்னிகிருஷ்ணன் ஹரிஹரன் ஆகியோர் பாடல்களுக்குப் பெரிதுமே அடிமையாகி இருந்தேன். 

உயர்தரம் படிக்கும் இரவுகளில் தனிமையில் பாடல்களைக் கேட்கும்போதுதான் வார்த்தைகள் மனதுக்கும் விளையாட ஆரம்பித்தன. கவிதை பற்றிய அறிவும் பிடிப்பும் தேடலும் அதிகமாகத் தொடங்கிய அந்த வயதில் பாடல்வரிகளில் உட்புதைந்த அர்த்தங்கள் எனது இரவுகளைத் தின்று போட்டன. ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் வைரமுத்து என்னை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தார் அதிலும் இளையராஜா பாலசுப்பிரமணியம் வைரமுத்து கூட்டணி வார்த்தைகளை மென்று தின்னத் தூண்டியது.
//விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்..//
//மனதோடு திரைபோட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்//
//ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை வாராமல் போய்விடுமா// சொல்லிக்கொண்டே போக இங்கு இடம் போதாது...

- *****- ***** - ***** -

காலம் கடக்கக் கடக்க முன்னுக்கும் பின்னுக்கும் நகர்ந்து போயினேன், அந்த சமாலத்தில் எழுதிக்கொண்டிருந்த  நா. முத்துக்குமார் "கண்ணீர்த்துளிகளைக் கண்கள் தாங்கும் கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா" என்று புல்லரிக்கச் செய்தார். "அலை கரையைக் கடந்த பின்னர், நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி" என்று மனதைப் பொங்கச்செய்தார். எல்லாமே ரசிக்கிறோம், வெவ்வேறு பட்ட தளங்களில் வேறுபட்ட மனநிலைகளில் நின்று. காலத்தால் வேறுபட்ட கவிஞர்களை ஒப்பிட இயலுமா என்ற கேள்வி மனதுக்குள் எழாமல் இல்லை. ஆனால் திரையிசையில் வார்த்தைகள் கடந்த பொருளாழம், காலம் வெல்லும் இலக்கியத்தரம் என்ற கண்ணோட்டத்திலும், சுதர்ஷன் குறிப்பிட்ட மொழியழகையும் கொண்டு அளவிட்டுப் பார்க்கும்போது எனது கருத்துக் கொஞ்சம் முரண்படுகிறது,

கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி என்ற மூவரது பங்களிப்பையும் ஒருசேரப் பார்த்தால் தமிழ்த்திரையுலகின் இலக்கியப்பதிவுகளின் பெரும்பங்கு இவர்களின் பெயர்களாலேயே அளவிடப்படவேண்டியது. மற்றொரு பக்கமாகப் பார்த்தால் இன்றுவரை உள்ள படைப்புக்களில் இவர்களது பங்களிப்பை நீக்கிய பின் எஞ்சியிருப்பது வெறும் பத்துவீதம் மட்டுமே... இந்தப்பின்புலத்தில் கண்ணதாசனைக் கொஞ்சம் அலசிக் கட்டுரையை நிறைக்க விரும்புகிறேன். 

அப்துல் ரகுமான் வார்த்தைகளின் படி "மீன் விற்கும் சந்தையிலே விண்மீன்கள் விற்றவர்" கண்ணதாசன். வார்த்தைத் தெரிவிலும், சந்தக்கடைவிலும், பொருள்ப்பொதிவிலும் பல்வேறு எல்லைகளைத் தொட்டவர். அவரது காதல்சார் பாடல்களை இங்கு முன்னிறுத்த முனைகிறேன்.

- *****- ***** - ***** -

பாலும் பலமும் என்ற திரைப்படத்தில் "நான் பேச நினைப்பதெல்லாம்" என்ற ஒரு பாடலை எழுதியிருப்பார், டி. எம். எஸ் - சுசீலா என்ற அற்புதமான இணை அதைப்பாடியிருக்கும்.


ஒவ்வொரு வரியாக எடுத்துச் சொல்வது இங்கு ஒவ்வாது என்பதால் அந்தப்பாடலில் ஒரு பந்தியை இங்கு பகிர்கிறேன்...
//சொல்லென்றும் மொழியென்றும் 
பொருளென்றும் இல்லை 
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு 
விலையேதும் இல்லை 
விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக 
உயிர் சேர்ந்த பின்னே 
உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி 
வேறேதும் இல்லை 
வேறேதும் இல்லை//

விலையில்லை என்று அவரே வியந்த அந்த சொல்லாத சொல் காலங்கள் பல கடந்து இன்றைய பாடல்களிலும் இன்னும் நீள்கிறது. (உதாரணங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்)

- *****- ***** - ***** -


காதலின் பிரிவின் சோகம் பற்றி எழுதாதோர் இல்லை... அவை எல்லாவற்றுக்கும் பாடம் சொல்லித் தந்த பாடல் "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா"
//
மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா?//
//
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா?//

சிறுவயதிலே பார்த்த சிவாஜியின் படங்களில் புதிய பறவை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று, கிட்டத்தட்ட ஏதோ விறுவிறுப்பான நாவல் படிப்பதாக எண்ணம் வந்தது அதைப்பார்த்தபோது. 
அதிலே ஒரு பாடல் வரும் 
//பார்த்த ஞாபகம் இல்லையோ..
பருவ நாடகம் தொல்லையோ..
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ..//

இறந்து போன மனைவி கண்முன்னே நின்று பாடுகிறாள், அது உண்மையா பொய்யா என்ற கேள்வி மனதுள்.. அவள் சொல்கிறாள்...
//எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சிந்திப்போம் இந்த நிலவை..//

நான் எப்போதோ எழுதிய கவிதை ஒன்றே எனக்கு நினைவுக்கு வந்தது..
//பிறவிகள் தோறும்
உந்தன் பருவத்தின் கனவுகளில்
நான் வருவேன்,
பாதையோரங்களில் இடறிவிடும்
பழைய கல்லொன்றைப் போல...//

- *****- ***** - ***** -
நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பலர் பார்த்திருக்கக் கூடும். கே.வி ஆனந்த் அனேகன் கதைக்காக கை வைத்த இடங்களில் இந்தப் படமும் ஒன்று. ஸ்ரீதர் என்ற பெயருக்கு என்ன மதிப்பு என்பதை எனக்கு உணர்த்திய படம். இந்தப் படத்தை மூன்று முறை பார்த்திருப்பேன் முதன் முறை ஒன்பது வயதில், இரண்டாவதாக பதினைந்து வயதில் இரண்டும் சண் டிவி இல் தற்செயலாகப் பார்த்தவை. மூன்றாவது முறையாக தேடி எடுத்து பல்கலையில் இருக்கும் போது பார்த்தேன். மூன்று முறையும் நான் பற்ற அனுபவங்கள் வேறுபட்டவை. ஆனால் இந்தப் பாடல்மட்டும் மாறாமல் என்னைக்கட்டிப் போட்டது.


இந்தப் பாடலில் ஒரே ஒரு வரி போதும் அதன் உள்ளடக்கத்தைச் சொல்ல...
//காலங்கள் தோறும் உன்மடி தேடிக் கலங்கும் என் மனசு..//
ஜென்மங்கள் கடந்த காதலை விபரிக்க ஒரு வரி போதுமாகிறது...

- *****- ***** - ***** -

"நிறம் மாறாத பூக்கள்" இந்தப் பெயரைக் கேட்ட உடனே அந்த ரேடியோ கண்ணுக்குள் வருகிறது, பின்னர் அந்த வள்ளம், அதுக்குப் பிறகு விஜயனின் முகம் அப்பிடியே ராதிகா முகம், சுசீலாவின் குரலிலே "ஆயிரம் மலர்களே" மனதுக்குள் மலர்கிறது.


//ஆயிரம் மலர்களே மலருங்கள் மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ?
நெருங்கி வந்து செல்லுங்கள் செல்லுங்கள்...//

வானத்திலே நிலா முழுமதியாகலாம், பிறையாகத் தேயலாம், அமாவாசையாக இருளலாம், ஆனால் நிலா பற்றி மனதிற்கும் மலரும் கற்பனைகள் என்றும் மாறாதே. அது போலவே சூழல் மாறலாம், காட்சி மாறலாம், ஆளே மாறலாம், ஆனால் மனதில் தோன்றிய காதல் மாறாதே.

//வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்..
மனதிலுள்ள கவிதைக்கோடு மாறுமோ?
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
உன்பாட்டும் என்பாட்டும் ஒன்றல்லவோ..//
கீழ்வரும் வரிகளுக்கு விளக்கம் தேவை இருக்காது.. உணர்ந்து பாருங்கள்..
//கோடையில் மழை வரும்
வசந்த காலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ..
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ?..//
- *****- ***** - ***** -

இவைதான் கண்ணதாசன் கவித்துவத்தின் உதாரணமா என்று யாரும் கேட்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். அந்தக் கடலில் ஒரு கரையில் நான் கையால் துழாவிப்பார்க்கிறேன். என் மனதில் முதலில் வருபவை சிலவற்றை சொல்கிறேன். கண்ணதாசனுக்கு முகவரி எழுத முனைந்ததை நினைக்க சிரிப்பும் வருகிறது. இன்னும் எப்போதாவது நேரமும் மனமும் ஒத்துழைத்தால் கண்ணதாசனில் இன்னும் கொஞ்சமோ அல்லது வாலியுடனோ என் பதிவு வரும். 

//வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும் 
மரகதக்கிள்ளை மொழிபேசும் 
பூவானில் பொன்மேகமும் உன்போலே 
நாளெல்லாம் விளையாடும்
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் 
உயிரன்றோ//

தொடரக்கூடும்...

மதுரகன்.
 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...