வியாழன், 20 ஜனவரி, 2011

மரபு வழிப்படா இயல்புகள் - 1


நீ வணங்கிய தெய்வங்களும்
நான் வணங்கும் தெய்வங்களும்
சண்டையிட ஆரம்பித்தன...

நோக்கமும் பின்புலமும் அறியாமல்
நீயும் நானும் பார்வையாளர்களாய்
போர்க்களத்தின் எதிர் முனைகளில்...

வானத்தைப் பார்த்து நான் குறி சொன்னேன்
வெற்றி என் பக்கம் என...
காற்றினைப் பார்த்து நீ சொன்னாய்
அது உன் பக்கம் என...

என் பக்கம் கை உயர்வதாகக் கருதிக்கொண்ட
பொழுதுகளில் புழுதிதட்டி ஆர்ப்பரித்தேன்
சம்பந்தமின்றி நீயும் இடைக்கிடை
கை கொட்டிக் களித்துக்கொண்டாய்...

எனது ஆர்ப்பரிப்புக்களால் ஆகர்சிக்கப்பட்டு
என்பின்னே ஒருசிலர் அணிசேர ஆரம்பித்தனர்
உனது வெற்றிக்களிப்புகளால் ஈர்க்கப்பட்டு
உன் பின்னாலும் சிலர்...

எமக்கென்று சில அடையாளங்களையும்
சின்னங்களையும் வகுத்துக்கொண்டு, என் பின்னே
நிற்பவர்களையும் பின்பற்றச் சொன்னேன்
இடையிடை தெய்வங்களைப் போற்றிப்
பாடல்களும் இசைக்கலானேன்

இருபுறமும் கூட்டம் பெருகியது
ஆரவாரங்களும் அதிகரித்தன

சண்டையைப்பற்றியும் அதன் தார்ப்பரியங்கள் பற்றியும்
என் பக்கம் நானும் உன் பக்கம் நீயும்
வியாக்கியானம் கூறினோம்
உன்னை நானும் என்னை நீயும்
எதிரிகளாகப் பிரகடனம் செய்தோம்..

நாளடைவில் எமது சுவர்களில் தெய்வ சின்னங்கள்
மறைந்து - உன்னைப் பற்றிய தூசிப்புகள் நிறைந்தன
எமது வாய்களில் தோத்திரங்கள் மறைந்து
உன்னையும் உனது குலத்தையும் பற்றிய நிந்தனைகள் ஏறின

எங்கோ இருந்த கல்லொன்று எகிறி விழுந்ததில்
இரு பக்கமும் முட்டிக்கொள்ள ஆரம்பித்தன...
நீயும் நானும் கட்டிப்புரண்டு சண்டையிட்டோம்
யுகங்களைக் கடந்து, காயமுற்று,
செங்குருதி சிந்தியது அந்தக்கலவரம்....

பின்னால் வந்த தலைமுறைகள் தாமாகவே
சண்டையிடப் பழகிக்கொண்டன..
தெய்வங்களிடைப்பட்ட சண்டையைப்பற்றி
பலரும் மறந்து
வருடங்கள் தேய்ந்துவிட்டன....

ஒரே இடத்தில் ஒரே காரணத்துக்காய் ஒரே மாதிரி
சண்டையிட்டுச் சலித்துப்போன நானும் நீயும்
அன்றைய அந்திப்பொழுதில்
உனது தெய்வத்தையும் எனது தெய்வத்தையும் நோக்கினோம்

அன்றுதான் பாவக்கண் திறந்து உண்மையைப் பார்த்தோம்,
அங்கு பாவங்களும் புண்ணியங்களும் களைந்து
நடுநிலையாக்கப்பட்டன....
அங்கு பிரபஞ்சங்கள் முழுவதும் ஒளி பெற்றன
அங்கு நான் வணங்கும் தெய்வங்களும் நீ வணங்கும் தெய்வங்களும்
ஒருங்கே பிறப்புக்கொண்டன...
அனைவரும் அதிரும் வண்ணம் பிரபஞ்சத் தாண்டவம் நடந்தது....

திகைத்துப்போய் மறுபுறம் திரும்பினோம்..
எனது பேரனும் உனது பேரனும்
ஒருவரை ஒருவர் தூசித்த வண்ணம்
மூர்க்கத்தனமாக தாக்கிக்கொண்டு இருந்தனர்...

இருவரும் தனித்தனியாக கண்களை மூடி
கடவுளைப் பிரார்த்திக்க ஆரம்பித்தோம்...
"எனது குலத்தைக் காக்கச் சொல்லி...."

மதுரகன்

சனி, 8 ஜனவரி, 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - குழப்பங்களும் சாட்டையடிகளும்

கொழும்பில் முதன்முறையாக நடந்துகொண்டிருக்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் பற்றி குழப்பங்களும் பகிஷ்கரிக்குமாறு பலதரப்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதும் பலருக்கும் தெரிந்திருந்த விடயம் அறியாதோர் பின்வரும் இணைப்புக்களை படித்துப் பார்க்க. 
கீற்று - கீற்று இணையத்தளத்திற்கு சென்று அத்துடன் தொடர்புடைய இடுகைகளைப் பார்வையிட்டால் அவர்களுடைய நிலைப்பாடுபுரியும்.
மாற்றுப்பிரதி வலைப்பதிவு - விழாவாசலிலேயே எதிர்ப்புத் துண்டுப்பிரசுரம் வெளியிட்ட இவர்கள் கருத்துக்களைக் காண. 
அத்துடன் கீற்று ஊடாகவும் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் நேரடியாகவும் மாநாட்டைப் பகிஷ்கரிகுமாறு குறிப்பாக சர்வதேச மற்றும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களைக் கோரியவர் ஈழத்து மூத்த எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள். இவருடைய வாதங்களையும் கீற்று இணையத்தளத்தில் பார்க்கலாம். 
இவர்களுடைய கருத்துக்கள் உண்மையா? இல்லையா? என்பதைத் தவிர்த்து இவ்வாறு பலதரப்பட்டவர்களின் கூட்டு முயற்சிக்குப் பின் ஈழத்து அறிஞர்களால் இவர்களுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டுள்ளதை விழா உணர்த்துகின்றது. அதை விட இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள 45 பேராளர்களும் இங்கிலாந்து, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வந்தவர்களும் கூற முயல்வது என்ன. 
நான் கேள்விப்பட்ட வரையில் ஈழத்து தமிழ்ப் பேரறிஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பங்கேற்ற சமீபத்திய விழாவாக இதைக் கூறலாம். அவர்கள் எதிர்ப்பாளிகளுக்கு கூற முயல்வது என்ன ? 
ஒரு மேற்காட்டுகைக்கு விழாவில் பங்கேற்கும் ஈழத்துப் பேராசிரியர்களின் பெயர்களை இங்கு தருகிறேன். இதற்கு மேல் எதிர்ப்பாளிகளுக்கு எப்படி முகத்தில் கரி பூச முடியும் என நீங்கள் எண்ணிப் பாருங்கள். 
பேராசிரியர். கா. சிவத்தம்பி
பேராசிரியர். அ. சண்முகதாஸ்
பேராசிரியர். எம். ஏ. நுஹ்மான்
பேராசிரியர். சி. மௌனகுரு
பேராசிரியர். சபா ஜெயராசா
பேராசிரியர். எஸ். சிவலிங்கராசா
பேராசிரியர். செ. யோகராசா
பேராசிரியர். மா. செல்வராஜா
பேராசிரியை. சித்திரலேகா மௌனகுரு
பேராசிரியை. அம்மன்கிளி முருகதாஸ்

இதைவிடப் பல கலாநிதிகள், விரிவுரையாளர்கள், எண்ணற்ற தமிழறிஞர்கள் என கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களில் ஈழத்துக்கலை இலக்கியதுறையை தோள்களில் சுமந்து சென்றவர்கள் அனைவரையும் கிட்டத்தட்ட அனைவரையும் அங்கே காணமுடிந்தது.அவர்களுடைய ஆற்றலுக்கும் தரத்திற்கும் உரிய ஒழுங்கமைப்புகள் காணப்படுகிறதா என்னும் ஐயம எனக்கு வந்தது. ஒழுங்கமைப்புகளில் நிறைய குறைபாடுகள் உள்ளது உண்மை. பேராசிரியர்களும் வரிசையில் நின்று அவர்களுக்குரிய சிட்டையைக் காண்பித்து உணவுப் பொதிகளைப் பெற்று வசதியற்ற மேசைகளில் இருந்து உண்டனர். எதற்காக அவர்கள் இத்தனை சிரமங்களைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். இவர்கள் அனைவரினதும் ஒன்றிணைவு கூறுவது என்ன.... சிந்தித்துப் பாருங்கள் தமிழ்நாட்டுக்கும் புலம்பெயர் தமிழர்களில் எதிர்க்கின்ற சிலருக்கும் சில உண்மைகள் புரியலாம். 
- எதிர்ப்புக்களை ஏற்று இந்தியாவின் முன்னணி எழுத்தாளர்கள் நிகழ்வைப் புறக்கணித்து இருந்தாலும் அந்த இழப்பைச் சமப்படுத்துகின்ற இலக்கிய ஆளுமைகள் எங்களிடத்திலேயே உண்டு என்று திடமாக காட்டியுள்ளனர். 
-என்ன தேவைக்கும் ஈழத்தின் பெயரைச்சொல்லி காரியம் சாதிக்கும் அளவிற்கு முட்டாள்கள் சிலர் தமிழ்நாட்டில் உள்ளதைப் புலப்படுத்துகின்றது.
-எப்போதும் தாங்கள் எடுக்கும் முடிவுகளை இலங்கையில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணும் சில புலம்பெயர் புதிர்கள் நல்ல சாட்டையடி மூலம் அவிழ்க்கப்பட்டுள்ளன.

இந்த மாநாடு உண்மையிலேயே எத்தகையது என்று என்னிடம் கேட்போருக்கு.. 
- எதிர்ப்பளிகளின் குரல்களைப் படியுங்கள் எதனால் எதிர்க்கிறான் என்ற கருத்திலேயே பலவிதமான பேதங்கள் உண்டு.. ?உள்முரண்பாடு 
- இதுவரை மாநாட்டில் இது அரச சார்பான விழா என்று எந்த இடத்திலும் ஐயம் வரவில்லை (காலி வீதியருகில் ஊர்வலத்திற்கு உதவி செய்யவந்த போக்குவரத்துப் போலீசார் தவிர)
- தமிழ்த் தேசியவாதம் பற்றிய எண்ணக்கருக்கள் சுதந்திரமாக வெளிப்படாமல் இல்லை
- நீங்களே வந்து மாநாட்டு அமர்வு ஒன்றில் அமர்ந்து பாருங்கள்.

நிறைவாக இது ஒரு குறிப்பிட்ட குழுவின் குழுநிலைச் செயற்பாடு என்று கூறியாவர்களே நீங்கள்தான் நிறைவில் ஒரு குழுவாக மீந்துள்ளீர்கள்
முத்தமிழ் முதுசம் எங்களிடத்திலேயே இருக்க யாரிடமும் எடுக்க வேண்டியதில்லை பிச்சை என்று காட்டிய இலங்கைத் தமிழிலக்கிய ஆளுமைகளே உங்களைப் பணிகிறேன்.
தடைகள் பலகடந்து மாநாட்டில் தடம் பதித்த தமிழ்நாட்டு மற்றும் புலம்பெயர் இலக்கிய ஆளுமைகளே பாராட்டுக்கள் உங்கள் துணிச்சலுக்கு...

எண்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு..

தமிழன்

பிற்குறிப்பு - 1. மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
                        2. என் கருத்துக்கள் யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்
                        3. நான் கலந்து கொண்டதன் நோக்கம் தமிழார்வம் மட்டுமே
 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...