வியாழன், 30 டிசம்பர், 2010

கடந்து போகிறதா ஓர் ஆண்டு? பாகம் 2(கலையுலகும் நானும்)


கடந்துபோகிறதா ஓர் ஆண்டு..? பாகம் - 1(நானும் பதிவுலகமும்)

தலைப்பைப் பார்த்து ஏதோ தமிழ்ப் பேச வராத புதுமுக நடிகை ஒருவரின் பெட்டி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். என்னதான் மருத்துவ பீடத்தில் கற்றாலும் எனக்குள் இருக்கும் கலையார்வம் தங்குதடையின்றி இங்கும் பொங்கிக் கொண்டுதான் இருக்கின்றது நேரம் வரும்போது பயன்படுத்திக் கொள்கிறேன்..
நான் ஒரு வாசிப்பு பைத்தியம். எனது வாசிப்பு உலகத்தைப் பற்றி நீண்ட ஒரு பதிவு தனியாக எழுத வேண்டும்.. கிட்டத்தட்ட ஏழு எட்டு வயதில் பிடித்த வாசிப்பு பைத்தியம் அந்த அந்த வயதுகளுக்கு உரிய புத்தகங்களுடன் நகர்ந்து இன்று என்னவென்று இல்லாமல் வியாபித்து இருக்கின்றது. இந்த வருடத்தில் எனது வாசிப்பு வீச்சினை எடுத்துப் பார்த்தால். இலக்கியங்களுள் டாக்டர். மு. வரதராசனாரின் கிடைத்தற்கரிய பல புத்தகங்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது பல இலக்கிய விமர்சன நூல்களை வாங்கி வாசித்தேன். மேலும் எங்கள் பிரதேச எழுத்தாளரும் எனது பேச்சுலக குருவுமாகிய தமிழ்மணி அகளங்கன் ஐயா அவர்களின் பல இலக்கிய நூல்களை வாசித்தேன். 
நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் பார்த்தால் எனது ஆஸ்தான எழுத்தாளர் சுஜாதாவின் பல குறுநாவல்கள் கொண்ட ஒரு தொகுப்பு கிடைத்தது. அத்துடன் சுந்தர ராமசாமி, ல. ச. ராமாமிர்தம் போன்றோரின் எழுத்துக்களை பரிச்சயப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது.
இதை விட மொழிபெயர்ப்பு நாவல்களில் ரசிய மொழிபெயர்ப் பான செம்மணி வளையல் என் நெஞ்சுக்குள்ளேயே வார்த்தைகளாக நிற்கிறது இன்னும்.. வழக்கம் போல எனது தட்டில் இன்னும் பல கவிதைப் புத்தகங்கள் முளைத்தன.. இந்த வருடம் மட்டும் நான் கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்களை வாங்கியுள்ளேன். எனது குட்டி நூலகம் நூற்றுஅறுபது புத்தகங்களை தாண்டி விட்டது என்று நினைக்கின்றேன். குறிப்பாக வருட இறுதியில் நண்பன் ஜனுதர்சன் பரிசளித்த செம்மொழி மாநாடு தொடர்பான புத்தகம் விலை மதிப்பிலா சொத்து.

அடுத்ததாக நான் தலைவராக செயற்பட்ட கொழும்புப் பல்கலைக்கழக இந்து மன்றத்தின் வருடாந்த கலைவிழாவினை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் ஜூன் 12ம் திகதி மிக விமரிசையாக நடாத்தியது பெருமைக்குரிய விடயம். பார்வையாளர்கள் எதிர்பார்த்த அளவு வராமையும் இறுதி நிகழ்வான நாடகம் அரங்கேறாமையும் தவிர எந்தக் குறையும் இன்றி இந்து மன்ற வரலாற்றில் பாரிய விழாவாக நடைபெற்றது, நிகழ்விற்கு பிரதம விருந்தினராக நீதவான். மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களும் கௌரவ விருந்தினராக எழுத்தாளர் கவிஞர் தமிழ்மணி அகளங்கன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியக் கலாநிதி. கணேசரத்தினம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். என்னுடன் தோளோடு தோள் நின்று விழா சிறப்புற உதவிய இதர நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் நிர்வாகக் குழு சாரா நண்பர்களுக்கும் முக்கியமாக மருத்துவ பீடத்தினை சார்ந்த எனது அணித்தோழர்களுக்கும் நன்றிகள். தனியாக கூற வேண்டிய நன்றி இருவருக்கு, ஒரு சிக்கலான பிரச்சனையால் வழக்காடு மன்றம் நடப்பதே கேள்விக்குறியானபோது உடனே தயாராகி வழக்காடு மன்றத்தில் பங்கேற்ற எமது பீட சிரேஷ்ட மாணவரும் சிறந்த நண்பருமாகிய பரதன் அண்ணாவிற்கும், விஞ்ஞான பீட பழைய மாணவரும் என்னுடைய ஆரம்பகாலங்களில் பேச்சிற்கு வழிகாட்டியாக அமைந்த கோகுலதாசன் அண்ணாவிற்கும் உரித்தான நன்றிகள் அவை.


அடுத்ததாக கூறப்பட வேண்டிய விடயம் கொழும்புப் பல்கலைக்கழ தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா. இந்து மன்றத்தின் அப்பன் தமிழ் மன்றம் என புடம் போட்டு காடியது போல் இருந்தது விழா.. பல்கலைக்கழக வரலாற்றிலேயே பொறிக்கப் படவேண்டிய விழாவொன்றை கவிக்கோ அப்துல் ரகுமானையும் அழைத்து நடாத்தியது, அந்த நிகழ்வில் அப்துல் ரகுமான் தலைமையிலான கவியரங்கில் நானும் பங்கேற்க கிடைத்த வாய்ப்பு என்னுடைய ஓட்டு மொத்த வாழ் நாளில் ஒரு நாளாகும்... இந்த இடத்தில் 
தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழு, நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக் குழு குறிப்பாக தலைவர் கோபிதாஸ் ஆகியோருக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த ஒரு முக்கிய திருப்பு முனை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்ற கம்பவாரிதி ஐயாவின் திருக்குறள் பற்றிய தொடர் சொற்பொழிவு. அதன்   அந்த இலக்கிய முழக்கத்தால் வசீகரிக்கப்பட்டு நண்பன் தனேசனின் உதவியுடன் ஐயாவின் அறிமுகம் கிடைத்ததும் பின்பு அவரிடம் நேரடியாக இலக்கியம் கற்கும் பேறு கிடைத்ததும் எனது இலக்கியப் பயணத்தினை மேலும் உறுதிப்படுத்தும் புள்ளிகள். 

இதை விடக் கூறுவதானால் எமது பீடத்தின் வாணிவிழா கடந்த வருடங்களை விட மிகவும் சிரத்தை எடுக்கப் பட்டு மிக அருமையான மேடை அமைப்பு மற்றும் ஒலி ஒளி அமைப்புகளுடன் வெகு விமரிசையாக நடாத்தப்பட்டது. அதற்கு தலைவர் பிரசாத் தலைமையிலான நிர்வாகக் குழுவிற்கு பாராடுதல்களை தெரிவிப்பதோடு, அங்கு நடை பெற்ற "பெண்மையின் ஆற்றலால் சமகாலப் பெண்களுக்கு வழிகாட்டுவதில் விஞ்சி நிற்பது பாரதி காட்டும் பாஞ்சாலியே, இளங்கோ காட்டும் கண்ணகியே" என்னும் படி மன்றத்திலும் "ஜயமுண்டு பயமில்லை மனமே" கவியரங்கிலும் பங்கேற்றமை மறக்க முடியா நிகழ்வுகள். 
எல்லாவற்றிலும் மேலான நிகழ்வாக சக்தி தொலைக்காட்சியால் நடாத்தப்படும் தமிழோசை நிகழ்வில் தெரிவுச் சுற்று முதலாம் சுற்று என்பவற்றில் வெற்றி பெற்று தற்போது இரண்டாம் சுற்றில் இருபது போட்டியாளர்களுள் ஒருவராக இடம்பெற்றுள்ளமை மிகவும் மனமகிழ்ச்சி தரும் விடயம். வரும் வருடத்தில் அந்தப் போட்டித்தொடரின் இறுதிச் சுற்றுக்குள் எப்படியும் நுழையவேண்டுமென்பது எனது ஆசை பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று..
இத்துடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்... ஆனால் எனது சொந்த வாழ்க்கைப் பயணம் பற்றிய பதிவு இதை அடுத்து பதிவிடப் பட உள்ளது. உங்கள் பார்வை மற்றும் ஆதரவு அங்கும் தேவை..

அன்புடன் 
மதுரகன்.

கடந்துபோகிறதா ஓர் ஆண்டு..? பாகம் - 1(நானும் பதிவுலகமும்)

2010 எனும் ஓர் ஆண்டு சப்தமின்றி எம்மைக் கடந்து செல்லத் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒவ்வொருவருக்கும் நினைவுகள் கொஞ்சத்தை மறக்க முடியாத சம்பவங்களாக, மாறாத வடுக்களாக, என்றும் இனிய நினைவுகளாக எமக்குள்ளேயே விலகாது. அப்படியே எனது நினைவுகளுக்குள் இந்த ஆண்டு உதிர்த்துச் செல்கின்ற விடயங்களை கொஞ்சம் புரட்ட ஆசைப்படுகின்றேன். 
நான் வலைப்பூவொன்றை முதன் முதலாய் ஆரம்பித்தது 2005ம் ஆண்டில் என்று நினைக்கின்றேன். ஒரு சில கவிதைகளுடன் நின்று போனது அது. பின்பும் இப்படி ஓரிரண்டைத் தொடங்கி பாதியில் விட்டேன். பின்பு கடந்த வருடத்தில் இறுதிப் பகுதியில் தொடர்ச்சியாக ஒரு வலைப்பூவையாவது கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவில் ஆரம்பித்ததுதான் இந்த மனதில் தெறித்த சாரல்கள்.
முதன் முதல் பயன்படுத்திய முகப்பு

என்னுடன் பேசும் பலர் எனது வலைப்பூவின் பெயரை மெச்சுவார்கள். அது எனக்கு சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் இயல்பாக எனது மனதில் உதித்த பெயர் அது. அதை விட ஆரம்பத்தில் என்ன எழுதுவது என்ற குழப்பம் இருந்தது. எனக்கு பிடித்ததை எழுதுவதா.. அல்லது அதுகளவு வாசகர்களை ஈர்க்கக்கூடிய விடயங்களை எழுதுவதா.. நான் மிகவும் ரசித்து எழுதும் ஒரு கவிதைக்கு கிடைக்கும் வாசகர்கள் அளவு மிகக் குறைவாக இருக்கும் வேளையில்.. சினிமா விடயங்கள் அற்பமாக இருந்தாலும் அதிக வாசகர்களை கொண்டுவருகின்றது. எப்படியோ தத்தி தத்தி ஓரளவு பதிவுகளை ஒப்பேற்றி விட்டேன். என்னுடைய ஒவ்வொரு பதிவையும் வாசிக்க ஒரு நூறு பேராவது நிரந்தர வாசகர்களாக உள்ளனர் அது மிகவும் மகிழ்ச்சி...
இரண்டாவது விடயம் தொழிநுட்பப் பிரச்சினைகள். ஏற்கனவே வலைப்பூ இருந்தும் அதிகளவு மாற்றங்களை செய்யாததால் தேவை இருக்கவில்லை, ஆனால் இந்தமுறை நான் வலைப்பூவினை அழகுபடுத்தும் முயற்சியில் இறங்கியபோது அடிக்கடி பிரச்சினைகள் சந்தேகங்கள் வரும் அப்போதெல்லாம் சக பதிவரும் நண்பருமான சதீஷ்(சதீஷ் இன் பார்வை) மற்றும் ராஜீவ்காந்த்(எனக்குள் ஒருவன்) ஆகியோரின்து உதவி அளப்பரியதாக இருந்தது. பதிவுலகில் நண்பர்கள் அவசியமென அப்போதுதான் உணர்ந்தேன்.. கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்ச நண்பர்கள் கிடைத்தனர். ஹரன்ஸ் - சுதாகரன் அண்ணா, அகசியம் - வரோ, முகிலனின் பிதற்றல்கள், பதியவும் பகிரவும் - ஸ்ரீதர்சன் ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இதைவிட யாரும் தவற விடப்பட்டிருந்தால் மன்னிக்கவும். அதை விட என்னுடைய ஒவ்வொரு பதிவினையும் வாசித்து கருத்துக்கூறும் நண்பர்களை மறக்க முடியாது. அதிலும் குறிப்பாக முகப்புத்தக நண்பர்கள்(Facebook) தான் நான் இவ்வளவு தூரம் பயணிக்க முக்கிய காரணம். எனவே அவர்களுக்கு இந்த இடத்தில் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன்..
நான் ஏறத்தாழ 52 பதிவுகள் எழுதியுள்ளேன் அவற்றுள் 50பிரசுரிக்கப் பட்டுள்ளன.(இரண்டு பாதியில் உள்ளது) எனது பழக்கம் எதைப்பற்றியாவது நினைவுக்கு வரும்போதே எழுதிவிட வேண்டும். பின்பு எழுதலாம் என்றோ பாதியில் இடைநிறுத்தினாலோ அது பின்பு அதோ கதிதான். இப்படி எழுதப்படாமல் போன பதிவுகள் ஏராளம். நான் எழுதியவற்றுள் சிலவற்றை மீட்டிப் பார்க்க விரும்புகிறேன். எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த பதிவு உயிர்த்திருப்பு என்னும் சிறுகதைதான்.. அதற்குரிய இணைப்பு..
கூகிள் தரவுகளின் உதவியுடன் எனது வலைப்பதிவு பற்றிய சிறிய மீள் பார்வை.. 
அதிகளவு பேர் பார்வையிட்ட முதல் ஐந்து பதிவுகள்.
இங்கேயும் வசூலில் முன்னே நிற்பது எந்திரன்தான்... 

என்னுடைய வலைப்பதிவிற்கு அதிக பார்வையாளர்களை அனுப்பிவைத்த முதல் மூன்று நாடுகள்..
இந்தியா
இலங்கை
ஐக்கிய அமெரிக்க குடியரசு

இன்னும் எவ்வளவோ எழுதலாம்... ஆனால் வாசிப்பவர்களுக்கு அலுப்படிக்க விரும்பவில்லை.. அடுத்த அடுத்த பதிவுகள் இந்த ஆண்டில் என்னுடைய வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவங்கள் சுவையான நிகழ்வுகள் பற்றி எழுதப் போகின்றேன் கட்டாயம் அனைவரும் வாசிக்க வேண்டும்..


அன்புடன்
மதுரகன்..

செவ்வாய், 30 நவம்பர், 2010

வாணி விழா 2010 - கவியரங்கக்கவிதை

எமது பீடத்தின் வருடாந்த வாணிவிழாக் கவியரங்கில் நான் வாசித்த கவிதை.. வாசித்த கவிதை என்று ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால் உணர்வுகளின் தொகுப்பாக நான் எழுதிய கவிதையில் பொருத்தம் பற்றி வேறு சிலரின் கவிதைகளின் தழுவல்களையும் இடையிடையில் புகுத்தியிருகிறேன். குறிப்பாக அப்துல்ரகுமானின் சில வரிகள்(காதல் பற்றிய இடத்தில்). மற்றும் தேவை கருத்தி ஒரு பாடலின் இரு வரிகளை பயன்படுத்தயுள்ளேன். கவியரங்கில் கவித்துவத்திலும் சமர்ப்பிக்கும் முறைதான் தாக்கம் செலுத்தும் என்ற எண்ணத்தில் நான் வழக்கமாகவே தழுவல்களை புகுத்துவது வழக்கம். தவறென்று எண்ணுபவர்கள் மன்னிக்கவும். மேலும் பத்து நிமிடங்கள் வாசிக்கப் பட்ட இக்கவிதையின் நீட்சி எழுத்து வடிவில் அதிகமாகத் தென்படுகிறது. மன்னிப்பு - பொறுமை...

தலைமை - வைத்தியக்கலாநிதி. திவாகரன் (நரம்பியல் நிபுணர்)
பங்கேற்பு - 
கவிஞர். காரையம்சன் (நடேசன் அகிலன்)
கவிஞர். எஸ்.பொ அல்லது பொ.சி(பொன்னுத்துரை சிவபாலன்)
கவிஞர். ஜோசெப் ஷரோன்ராஜ்
கவிஞர். அஹ்மத் ஷஹ்மி 
மற்றும் அடியேன்...
ஜயமுண்டு பயமில்லை மனமே..

ஜயமுண்டு பயமில்லை மனமே இந்த ஜன்மத்திலே
விடுதலை உண்டு நிலை உண்டு, 
பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற் பதிவுற்ற 
குலசக்தி சரணுண்டு பயமில்லை 

பாரதியை வணங்கிக்கொண்டு

இஃது திக்குத்தெரியாத பேரிருளில் தமது சூரியங்களைத் தொலைத்துக்கொண்ட என்னின விசுவாசிகளுக்காக

இன்னமும் 

சிக்கித்தவிக்கின்ற மனங்களுக்குள் இன்னமும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள
காதல்களுக்கும் வேறுபட்டுப் பிரிந்தபின்பும் 
வெள்ளி முளைக்கின்ற வயதுகளிலும் மனதை 
வெட்கப்படுத்தும் காதல்களுக்கும் சமர்ப்பணம் என் கவிதைகள்

கல்லான கடவுளுக்கு
எல்லா உலகமும் ஆனாய் நீயே
உள்ளாய் உண்மையுமாய் உறைபவனும் நீயே 
விலங்குகளாய்த் தாவரமாய் விளைபவனும் நீயே
விளையாடி வினைதீர்க்க விதிப்பவனும் நீயே
முதல் நீ; முடிபு நீ; முற்றும் நீயே..

சிலையாகி வாழ்ந்திட்ட பெருவாழ்வு நாமுமக்குத் தந்திட்டோம்
வாழ்கையில் சமையத்தை அன்றி சமயத்தில் வாழ்க்கை அமைத்த 
நெறி நின்ற தமிழர் வழிவந்தவன் நான்..
கோயிலைக் காக்கவும் சிலைகளைக் காக்கவும்
போர்த்துகேயர் முதல் பொன்சேகா வரை 
வீசிவிட்ட குண்டுகளுக்கும் தீர்த்துவிட்ட வேட்டுக்களுக்கும் இடையில்
விதியோடு விளையாடி விளையாட்டாய் உயிர்நீத்த 
தமிழர் வழி வந்த கடையன்தான் நானும்...

யாரை நம்பினாலும் நம்பாவிட்டாலும் கடைசிவரை
உன்னை நம்பியவர்கள் நாங்கள், ஆனால்
கதிர்காம மலைமுதல் நயினா தீபம் வரை உன் கோயிலையே
பாதகர்க்குப் பங்குபோட்ட பாவியோ நீயெனப் பாடவைக்கிறாய் 
ஏன் எனை இன்னும்...

ஆனாலும் ஒன்று 
 நீயெமை விட்டாலும் நாமுமை விடுவதாயில்லை
எமக்குத்தெரியும் 
விடுதலையெனும்போது போராட்டம்தான் கடவுள் 
வாழ்க்கை எனும்போது முயற்சிதான் கடவுள் 
ஆகையால் நானும் உன்னை விடுவதாயில்லை
நிலையாக உனக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே..

- கண்முன் தெரியும் கடவுளர்க்கும் கண்டபடி ஒரு வாழ்த்திசை
ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் 
பிரணவன் பானை முகத்தான் 
கஜானன் சோணை முகத்தான்
அவன் தம்பியொருத்தன் அவன் ஆறுமுகத்தான்
பெரும் காதல் முகப்பால் பலர் கரம் பிடித்தான்
(பிரணவன், கஜானன் என்ற பெயர்களில் எமது பீடத்திலும் நண்பர்கள் உளர்)

நவராத்திரியில் நலம் வழங்கும் முத்தேவிகளே 
நீங்கள் மட்டும் எமக்கு வைத்ததில்லை குறை

என்னென்ன இடர்ப்பட்டாலும் இடம் பட்டாலும் 
இருப்பொன்றை ஏற்படுத்தும் கல்விக்கு என்றுமே 
குறை வைத்ததில்லை

புலம் பெயர்ந்துபோனாலும் புலன் பெயர்ந்து போனாலும் 
கண் தெரியாத் தேசங்களின் கழிப்பறைகளில் தொழில் புரிந்தாலும்
காசுக்கும் குறையில்லை என்றும் எமக்கு...

கடத்திச் சென்றாலும் கற்பழிக்கப் பட்டாலும் 
முற்றாக எமக்குள்ளே கறுவிக்கொள்ளும் ரோசத்திலும் 
வெளிநாட்டுப் புல்விரிப்புகளில் ஒரு கையில் பியர்ப் போத்தலுடனும்
மறுகையில் தாயகக் கொடியுடனும் வீதியில் நின்றுகொண்டு
வேண்டாம் இனி இன ஒழிப்பு என்று நித்தம் போராடும் வேட்கைக்கும்
வந்ததில்லை குறைவு
ஆதாலால் ஜயமுண்டு பயமில்லை மனமே

நீட்டமாய்ப் பாட்டுகள் போவதால் வாட்டமாய்க் கூரை வளம் பார்க்கும் 
பெண்களே பையன்களே இன்னும் அரைமணி நேரத்திற்குள் கவியரங்கம் முடியவுள்ளதால் உங்களுக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே...

வந்து நான்காவது வருடமாக இன்றும் 
எம் புலன் நரம்புகளைக் கொண்டு சிலிர்ப்பூட்டவும் 
இயக்க நரம்புகளைக் கொண்டு சிரிப்பூட்டவும் கவிபாடி 
எம் கரம் பிடித்து மருத்துவ மாணவர் இந்து மன்றத்தில் கவிபாடும் வகையுரைத்து
வருடங்களாய் வலிகாட்டிவரும் நரம்பியல் மருத்துவர் 
திவா அண்ணா வந்தனங்கள்
மற்றிச் சபையோரைப் பணிகின்றேன்

நமக்குத்தொழில் கவிதை அல்ல 
நமக்குப் புலன் கவிதை; நமக்குப் புலம் கவிதை 
நமக்குப் புலப்பாடுகளும் கவிதையே 
ஆதலால் பொறுத்தருள்க எம் வாய்ப்பிழை 
இது பற்றி நமக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே

கூடக் கவிபாடவந்த கூட்டாளிக் கவிஞர்களுக்கும் ..

காரைதீவில் தொடங்கி பருத்தித்துறைவரை தேடியும்
கடைசியில் போயும் போயும் லண்டனில்தான் 
பெண் கிடைப்பாள் என்று தெரிந்தும் 
விழுந்தும் மீசையில் மண் ஒட்டாமலிருக்க மீசை எடுத்த 
காரையம்சனே அகிலனே உனக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே

சின்ன இடையுடையான் சித்திரத்துப் பல்லுடையான் 
வெட்டிவைத்த செங்கரும்பின் நீளத்துக்குக் காலுடையான்
பத்தரைக்குப் பிறகு Facebook இல் இருந்து கொண்டு 
பாத்திராத பெண்களின் Profile துழாவி முகம் பார்த்து
முகம் மலரும் சிவபாலனே
சிங்களத்து பெண்ணின் பெயருக்கும் பையனின் பெயருக்கும் 
வேறுபாடு உணராது பையனுடன் கடலை போட்டு
கல்லடி வாங்கப் பார்த்த உனக்கும் 
ஜயமுண்டு பயமில்லை மனமே...

இன்னமும் சிங்களத்துப் பெண்களுக்கு
சின்னச் சின்ன Joke சொல்லி சிரிக்க வைப்பதை விட்டு விட்டு
கவியரங்கில் கால் பாதிக்கும் ஷரோன் ராஜ் 
ஆர்வத்துடன் வந்துள்ள அஹ்மத் ஷஹ்மி 
அனைவருக்கும் இங்கு ஜயமுண்டு பயமில்லை மனமே

ஜயமுண்டு பயமில்லை மனமே 
யாருக்குத்தான் இல்லை பிரச்சினை - உண்மையோ இல்லையோ
ஐந்து வருடமென்று கூறினாலும் ஆறாவது வருடத்திலாவது 
படிப்பு முடியுமென்னும் நம்பிக்கையில் 
ஜயமுண்டு பயமில்லை மனமே

முடிந்ததும் வேலை கிடைக்குமென்னும் நம்பிக்கையோ 
கிடைக்காவிட்டால் பெட்டிக்கடை வைத்தாலும் பிழைத்துக் 
கொள்வோம் என்னும் நம்பிக்கையில்
ஜயமுண்டு பயமில்லை மனமே

Facebookஇல் கணக்கில்லாமல் கடலை போட்டு 
கலியாணத்திற்கும் பெண் பார்த்த மாசிலனுக்கு 
உள்ளதுபோல அமையாவிட்டாலும், 
கண்ட கண்ட Status Like பண்ணியும் Comment போட்டும்
கணக்கெடுபடாமல் விடுபட்ட அல்பர்ட் உனக்கும் 
ஜயமுண்டு பயமில்லை மனமே

எதிரொலிக்கு எதிராக எதிரொலிக்க எழில் ஒலிக்க
தரமான தமிழொலிக்க தரம் கெட்டோர் தலைதெறிக்க 
தகவான விழாவெடுக்கும் தலைவனே 
செல்வானந்தம் பெற்ற புதல்வனே உனக்கும்
ஜயமுண்டு பயமில்லை மனமே

கம்பசுக்கு வந்தால் கலர் கலராய் கடலை போடலாம் என்று
எண்ணி வந்து நொந்து போன சஜீவ்
கடலை போட்டும் போடாமலும் செட் ஆன சிவசுகந்தன், அர்ஜுன் 
எல்லாருக்கும் நிஜமாக ஜயமுண்டு பயமில்லை மனமே..

யாருக்குத்தான் தோல்விகள் இல்லை
எனக்கும் தோல்விகள் உண்டு - அது ஒரு அழகிய காதலின் தோல்வி

பலருக்கு காதல்தான் கவிதை கொடுக்கும் 
எனக்கு கவிதைதான் காதல் கொடுத்தது
வரும்போதும் போகும்போதும் கண்ணீர் கசிந்தது 

பாடசாலைக் காலங்களில் பார்க்கும் அழகிய முகங்களிலெல்லாம்
திக்கித் திணறி வெளியே வந்தவன்தான் நான்
காணுமிடமெல்லாம் தேவதைகள் நடந்து திரிவதைக் கண்டு 
நீண்ட இரவுகளில் தூக்கமில்லாமல் புலம்பியிருக்கிறேன்
ஆனாலும் இது வெறும் இனக்கவர்ச்சி என்பது 
எனக்குப் பட்டும் படாமலும் புரிந்ததில் அப்போது
எனக்கும் ஜயம் இருந்தது பயம் இல்லாமல்

காதல் வந்தது காலத்திலே.. அது இறந்த காலமாகிவிட்டது இன்று..
இறந்தகாலம்தான் நான் உயிர்ப்புடன் இருந்தகாலம் ஏனென்றால்
அப்போதுதான் அவள் என்னைக் காதலித்துக் கொண்டிருந்தாள்

ஜென்ம ஜென்மங்களுக்கு நேசிக்கத் தெரிந்த பெண்ணொருத்தியை
நான் இங்கே அறிமுகம் செய்கிறேன்
கவிதை எழுத வார்த்தைகளைத் தேடும் ஒரு கணத்தில்
இறைவன் அவளை என் முன் அனுப்பியிருந்தான்

தனிமையில் மனம் பசித்து அழுதபோது அவளது நினைவுகள் 
என்னை அள்ளி எடுத்துப் பாலூட்டியுள்ளன.. 
இன்று அவளில்லாவிட்டாலும் ஒருகாலத்தில்
நகர்ந்து கொண்டேயிரு நதிபோல ஓரிடத்தில் 
கடலாக நான் வருவேன் என்று நான் உரைத்ததும்
காத்திருப்பேன் கடைசிவரை மரணம் போல நீ நிச்சயம் வருவதானால்
என்று நீ கூறிய வார்த்தைகளும் இன்று வரை என் காதுகளில் ஒலித்தபடி..

என்ன வேண்டுமென்று ஒவ்வொருமுறையும் கடவுள் கனவிலே
கேட்கின்ற போதும் கீறல் விழுந்த CD போல நான் உனது பெயரையே 
மீண்டும் மீண்டும் புலம்பியிருக்கின்றேன்..
இன்று எனக்கும் அவளுக்கும் பிறந்த கவிதைகள்
தாயைதேடி அழுகின்றன...

காதல் தோல்விக்கு நான் கலங்கவில்லை அதை வாழ்கையின்
எல்லா வெற்றிகளையும் விட உயர்ந்ததாக கருதுகிறேன்
அத்துடன் காதல் ஒருபோதும் தோற்பதில்லை 
காதலர்கள்தாம் தமக்குள்ளே தோற்றுப் போகின்றனர்
அதை உணர்ந்து விட்டதால் எனக்கு ஜயமுண்டு பயமில்லை மனமே..
நிறைவாக.. இது கண்ணீர் அல்ல கண்கள் உனக்காகப் பூத்தொடுக்கின்றன

கண்டபடி கதைத்தாலும் காட்டமாகப் பேசினாலும் கடைசிவரை 
என் வாயிலிருந்து வழுவாத என் வாய்த்தமிழே 
என் காலடியில் இருந்து கழராத என் வன்னித்தாய் மண்ணே 
ஜயமுண்டு பயமில்லை மனமே

ஆரம்பமாயிருந்தோம் குமரியிலே ஆழி தடுத்தது 
ஆண்டவராயிருந்தோம் ஈழ - பாரதத்தை அந்நியப்படைகள் தடுத்தது
மீண்டெழுந்து வந்தோம் தக்கணத்தில் ஆரியத்தின் ஊடுருவல் தடுத்தது
நின்று நிமிரும் முன்பே தமிழ் உச்சரிப்பின் பல்வகைமை தடுத்தது
இன்றுவரை இந்திய இந்தியும் இலங்கைச் சிங்களமும் 
எதிரே நின்று தடுக்கின்றது..
நோந்தாலும் வெம்புனலில் வெந்தாலும் 
நெறி மாறோம் நிலை மாறோம் - ஏனெனில் 
நாங்கள் கண்ணீரைக் கைவிட்டுக் கனகாலம்
நீர் வழிந்த கண்களிலே தீ மூட்டி 
தீவினைகள் தெறித்தெறியக் காத்திருப்போம் 
ஜயமுண்டு பயமில்லை மனமே

நாங்கள் அலைக்கழிந்த கதை அலை கரையரித்த கதை
காலத்தையும் ஏமாற்றியே வந்தது இதுவரை
கனவுகள் மாத்திரம் பலநூறு கண்டோம்
தாகத்திற்குத் தண்ணீர் தேடினோம் 
கானல் நீரே கண்ணுக்குப் பட்டது 
அமைதிக் குஞ்சுகளை அடை காத்த போது அர்த்தமற்ற அமளிகளால்
கூழாகிப் போன முட்டைகளும் முடமாகிப் பிறந்த புறாக்களும் ஏராளம் 
பறந்து வந்த பருந்துகளுக்கு விருந்தாகிப் போனது மிச்சம் 
என்னதான் நடந்தாலும் உயர உயரப் பறக்கும் ஊர்க்குருவிகள் நாங்கள்
வலிமை மிகுந்த வல்லூறுகளை எதிர்த்து எமது இறக்கைகளைக் 
காயப்படுத்திக் கொள்வதால் ஜயமுண்டு பயமில்லை மனமே

நிலத்தையும் மக்களையும் மீட்டபின் சிலருக்கு
அரசியலே தீர்வாகிப் போனதால் அரசியல் தீர்வு 
அவர்களுக்கு அந்நியமாகிப் போனது
இன்னும் சொல்லப் போனால்
அவசரமாக வரும்போதும் அடக்கிக்கொண்டு 
அவசரகாலச் சட்டத்திற்கு அவசர அவசரமாகக் கையுயர்த்திக் 
கையுயர்த்தியே Shoulder Joint இல் Pain வந்த தொண்டர்களும்
ஐம்பது அறுபது பெயரை வைத்துக்கொண்டே ஐம்பதாயிரம் வாக்குகள் 
போடவைத்து வென்றதில் களைத்துப் போன அவர்கள் தலைவனுக்கும் கூட 
ஜயமுண்டு  பயமில்லை மனமே

இதை விட மிஞ்சிப் போன தம்பியருள் ஒருவருக்கு 
விழாக்களுக்கு முதன்மை விருந்தினராகச் செல்லும் 
பொன்சு அமைச்சுப் பொறுப்பு, மற்றவருக்கோ 
ஊரார் குடிகெடுத்துக் கிடைப்பவற்றைச் சுருட்டும் வேலை
இதைவிட கோட்டையைத் தாண்டாத மந்திரி சபையை 
கிளிநொச்சியிலும் மாங்குளத்திலும் வைப்பதிலும்
பின்பு இரவில் யாழ்ப்பாணத்தில் விருந்துண்டு கள்ளுக்குடிப்பதற்கும் கூட
நேரம் போதாததால் அவர்களுக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு உழைத்து உழைத்துக் 
களைத்தபின் உண்டு உறங்கி வாழ்ந்த குடிக்கு 
உயிரை அழித்து உயிர்ப்பை அழித்து உணர்வை அழித்து   
உழைப்பை அழித்துக் கடைசியில் கால்கிலோ சீனிக்கும்
கல்லில்லா அரிசிக்கும் கையேந்தும் சுதந்திரம் கொடுத்தாலும்
"தலைகள் குனியும் நிலையில் இங்கே தமிழர் இல்லையடா
யாரும் விலைகள் கூறும் நிலையில் இவர் மானம் இல்லையடா"
என்று உரைக்கும் புலம் பெயர் உறவுகள் இருக்கும் வரைக்கும்
ஜயமுண்டு பயமில்லை மனமே

வரலாற்றுத் தோல்வியைக் கடந்தாலும் வரலாற்றை நாம் இழக்கவில்லை
முள்ளி வாய்க்கால் எம் உணர்வுகளின் முடிவல்ல நிலை மாற்றம் மட்டுமே
வேள்வியில் சொரியப்பட்ட அர்ச்சனைப் பூக்கள் கருகினாலும் 
வாசம் மாறுவதில்லை..
மூழ்கும் ஓடத்திலேறி வருகின்ற தசாப்தக் கனவுகளைப் பயணிக்க வைப்பது
எப்படி என்னும் திகில் நிறைந்த போதும்
காலத்தினால் நேரத்தினால் இயல்பினால் மாறுபட்டு 
எமக்குத் தீர்வு வரும் அதுவரை தமிழன் என்னும் பெயர்காக்க 
தமிழைக் காத்து வாழ்வோம், எமக்கு
ஜயமுண்டு பயமில்லை மனமே...

வாழ்க்கையில் தோற்றாலும் வரலாற்றில் தோற்றாலும் 
கூறுவதற்கு ஒன்றுண்டு 
"விடுதலை எனும் போது போராட்டம்தான் கடவுள்
வாழ்க்கை எனும்போது முயற்சிதான் கடவுள்"
ஆகவே கடவுள் எம்மை விட்டாலும் நாம் அதை விடலாது..
கடவுளை நம்புவோர்க்கு என்றும் ஜயமுண்டு பயமில்லை மனமே.....

அன்புடன்
மதுரகன்

புதன், 24 நவம்பர், 2010

கடவுள் - எனது ஐம்பதாவது பதிவு..

இது கமலின் குரலில் ஒலிக்கும் யாருக்கும் விளங்காதாம் என்ற நாத்திகம் தொனிக்கும் கவிதையை கேட்ட பின்பும் அது தொடர்பாக Facebook இல் எழுந்த விவாதங்களின் தொடர்பாகவும் முன்வைக்கப்படும் எனது சொந்தக் கருத்துக்களின் தொகுப்பு. அடக்கத்தின் அளவு கருதி இதைப் பாகங்களாக பிரித்து எழுத ஆசைப்படுகிறேன். 

பிடித்தவர்கள் படிக்கவும். விரும்பியவர்கள் வாதம் செய்யலாம்.. பிடிக்காதவர்கள் தவிர்த்து விடவும்... அத்துடன் நான் ஒரு ஆத்திகன் என்பதையும் முன்னரே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.. அதற்காக என்னை பகுத்தறிவுச் சிந்தைக்கு எதிரானவனாக எண்ண வேண்டாம். உண்மையான பகுத்தறிவுச் சிந்தையின் தந்தையான இங்கர்சாலின் கொள்கைகளின் தீவிர ரசிகன் நான். ஆனால் பகுத்தறிவு வாதத்திற்கும் நாத்திகத்திற்கும் இடைவெளி உண்டு என்பது எனது கருத்து...

முதலில் அந்தக் கமல் கவிதை ஒளி மற்றும் வரி வடிவங்களில்..
(எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்)
"கிரகனாதி கிரகனங்கட்பாலுமே ஒரு
அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆள் ஒரு பொழிப்புரை கிறுக்கியும் ஆருக்கும் விளங்காததாம்..
அதைப் பயந்து அதை உணர்ந்து துதிப்பதுவன்றி...
பிறிதேதும் வழி இல்லையாம்
நாம் செய்த வினையெல்லாம் முன்செய்தது என்றது
விதி ஒன்று செய்வித்ததாம்
அதை வெல்ல முனைவோரை சதி கூட செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாக செவிடாக மலடாக முடமாக
கருசேற்கும் திருமூலமாம்
குஷ்ட துஷ்யம் புற்று சூலை மூலம்என்ற
க்ரூரங்கள் அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடில்
புது சென்மம் தந்தருளுமாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்பததன்
வாடிக்கை விளையாடலாம்
நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதனின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணி தந்து அது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர் தேற்றி
அல்குலின் சினை சேர்க்குமாம்
அசுரரை பிளந்ததுபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார்க்கருளிடும்
பரிவான பரப்ரம்மமே

உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமாறு தொழுசக்தியை
மற்றவர் வையுபயம் கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்றுகொள்
ஆகமக்குளம் மூழ்கி மும்மலம் கழி அறிவை
ஆத்திக சலவையும் செய்
கொட்டடித்து போற்று மணியடித்து போற்று
கற்பூர ஆரத்தியை
தையடா ஊசியில் தையென தந்தபின்
தக்கதை தையாதிரு
உய்திடும் மெய்வழி உதாசீனத்தபின்
நைவதே நன்றெனின் நை"எனது கருத்துக்கள் பல ஒழுங்குகள் முன்பின் மாறி அமையலாம் ஆனால் நான் சொல்ல வந்த விடயத்தை கூடியவரை எளிமையாக சொல்ல முயன்று இருக்கிறேன்...

அளவையியலில் மூன்று அளவைப் பிரமாணங்கள் உண்டு காட்சிப்பிரமாணம்கருதல்பிரமாணம், ஆகமப் பிரமாணம் இதில் மூன்றாவது நவீன அளவையியலில் கடைப்பிடிக்கப் படுவதில்லை..

காட்சிப் பிரமாணம் - கண்ணால் காண்பதை உண்டு என நிறுவுவது... மரத்தைக் காண்கிறோம் மரம் உண்டு..

கருதல் பிரமாணம் - ஒன்றின் இருப்பு இன்னொன்றை இருப்பதாக நிறுவுவது.. புகை வருவதால் தீ உள்ளது..

ஆகமப் பிரமாணம் - கற்றறிந்த பெரியவர்கள் கூறுவதை உண்மை என ஏற்றுக்கொள்வது.. இந்த இடத்தில்தான் விஞ்ஞானம் முரண்படுகிறது.. அது வெறும் வாய்ப்பேச்சை எப்படி நம்புவது என்று கேட்கிறது. ஆனால் எண்ணிப் பார்த்தால் நாங்கள் பெரும்பாலான இடங்களில் அப்படித்தான் நடந்துகொள்கிறோம்.
உதாரணம் - மருத்துவரிடம் செல்கிறீர்கள் அவர் கூறும் மருந்தை உண்கிறீர்கள் அது பற்றி நீங்கள் ஆராய்ச்சி செய்வதுண்டா..
விவசாயம் செய்பவர்கள் - வயதில் மூத்தவர்கள் சொல்வதைக் கேட்டு அறுவடைத் தேதி முடிவு செய்வார்கள்.. ஏனென்றால் மழை வருவதற்கான அறிகுறிகளை அவர்கள் அனுபவம் உணர்த்தும்.. ஒழுக்கத்தால் கல்வியால் உணர்ந்தவர்கள் அறிவுரைகளைத் தலைமேல் கொள்கிறோம்.. விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் வரை... அதுதான் ஆகமப் பிரமாணம்...

அதே வேலை காட்சிப் பிரமாணம் பிழைக்கும் இடங்களுமுண்டு.. வானம் கண்ணுக்கு தெரிவதால் வானம் உள்ளதா..
கருதல் அளவைப்படி தென்னை மரத்தடியில் பால் குடிப்பவரை கள் குடிப்பவராக காண நேரலாம். சமயங்கள் பெரும்பாலும் ஆகமப் பிரமாணங்களை முன்னிறுத்துவதால் பகுத்தறிவாளர்கள் என தம்மை கூறிக்கொள்பவர்களிடம் முரண்படுகிறது..

ஆனால் அவர்களையும் கடந்த விஞ்ஞானிகளின் கருத்துப் படி கடவுள் இருப்பதை எப்படி அறுதியிட முடிவதில்லையோ அது போல் அவர் இல்லாதிருப்பதையும் அறுதியிட முடியவில்லை.. ஐன்ஸ்டீன் இடம் கேட்ட கேள்வி - கடவுள் உண்டா? அவர் பதில் "It is complicated..."

அடுத்த விடயம் எனது கருத்து கடவுள் என்பது ஒரு கருப்பொருள் "God is a Concept" அது தேவை கருதி உருவாக்கப் பட்டது. கடவுளுக்கு மனிதன் தேவை இல்லை ஆனால் மனிதனுக்கு கடவுள் தேவைப்படுகின்றது..

கடவுளை விபரிக்க சிறந்த பதம் அவன் அல்ல அவள் அல்ல அவர் அல்ல.. அது என்பதே மிகச்சிறந்த பதம் ஏனென்றால் உயர்திணை அல்திணை என்றோ ஆண் பெண் என்றோ பாகுபடுத்தப் படமுடியாத கருப்பொருள் அது..

மதங்கள் தோன்றும் போது அவை தோன்றிய இடம், காலம் மக்கள் வாழ்க்கை முறைக்கேற்ப கடவுளை வகுத்துக்கொண்டது.. ஒரு பூனை தனக்கு ஒரு கடவுளை சிருடித்து இருந்தால் அந்தக் கடவுளின் உருவம் ஒரு சக்தி படைத்த பூனையின் உருவாகவே கற்பனை செய்து இருக்கும்.. அது போல மனிதனுக்கும் தன்னை விட சக்தி வாய்ந்த மானிட உருவாகவே கடவுள் தோன்றினார்.. அந்தக் காலகட்டங்களில் அரசர்கள் சக்தி ஆதிக்கம் மிகுந்தவர்களாக இருந்ததால் வர்கள் உடைகளுடன் தம்மைப் பயப்படுத்தும் ஆயுதங்களுடன். மற்றும் தம்மை வாழவைக்கும் மற்றும் அச்சுறுத்தும் மிருகங்களுடனும் கடவுள் படைக்கப் பட்டார்.(ஆரம்பகாலத்தில் தோன்றிய எல்லா மதங்களிலும் கடவுள் இப்படித்தான் சிருடிக்கப் பட்டார்.) அவரவர் நாகரிகங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப கடவுளின் ஆடைகள் அணிகள மாறுபட்டன. மலை வாசிகளின் கடவுள் அவர்கள் ஆடை தரித்தார்.. இன்னும் பல..

குளிர் நாடுகளில் தோன்றிய மதங்கள் மாமிசம் புசிப்பதை ஊக்குவிக்க வெம்மை மிகுந்த நாடுகளில் தோன்றிய மதங்கள் மாமிசம் உண்பதை கூடியவரை தவிர்க்க வற்புறுத்தின..

இது ஒரு பொதுப்படையான கருத்து.. மேலதிக சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். தெளிவான மற்றும் விஞ்ஞான பூர்வமாக கடவுளின் இருப்பை உறுதி செய்ய சுஜாதா எழுதிய கடவுள் என்ற புத்தகத்தை வாசிக்கவும்...
மேலும் தொடர்வேன்

அன்புடன்
மதுரகன்


வெள்ளி, 22 அக்டோபர், 2010

லட்சாதிபதி ஆவது எப்படி ?


கோடீஸ்வரன் மற்றும் க்ரோர்பதி நிகழ்ச்சிகளை பார்த்து இருப்பீர்கள் அதை  ஒத்து இலங்கை சக்திஎப்.எம் நடாத்திய லட்சாதிபதி நிகழ்வில் சுமார் ஒரு வருடத்திற்கு முன் நான் பங்கேற்று முழுமையாக ஒரு இலட்சம் ரூபாவினையும் வென்றிருந்தேன். அந்த நிகழ்வின் ஒலிப்பதிவினை இங்கு இணைப்பிடுகிறேன். சுமார் ஆறுமாத காலம் நிகழ்ந்த அந்த நிகழ்வில் ஒரு இலட்சம் வென்ற ஒரே போட்டியாளர் நான்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒலிப்பதிவின் தரம் சில இடங்களில் மட்டமாக உள்ளது வானொலி சதி செய்து விட்டது மன்னிக்கவும். 

பாகம் 1

பாகம் 2

பாகம் 3

வெள்ளி, 1 அக்டோபர், 2010

எந்திரன் - சுடச்சுட முதல்ப்பார்வை

எந்திரன் - விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகளாவிய எதிர்பார்ப்பில் வெளியான எந்திரனை சிநேசிட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்தது என்பதை விட போராடிப் பெற்றுக்கொண்டோம். அள்ளிக்கொண்டு வந்த சன வெள்ளத்தைப் பார்த்தே நண்பன் ஒருவன் கழன்றுவிட்டான் மீதி ஏழு பேர் எஞ்சி இருந்தோம். நெரிபட்டு நசிபட்டு திரையரங்கிற்குள்ளே சென்றபின் அவர்களிலும் ஒருவனைக் காணவில்லை. கூட்டம் தள்ளியதால் விழுந்து அறைக்கு திரும்பி விட்டதாக தொலைபேசியில் செய்தி வந்தது. ஒருவாறு கதிரைகளைப் பிடித்து அமர்ந்து கொண்டால் புகைபோக்கிகளினதும் விசிலடிச்சான் குஞ்சுகளினதும் தொல்லை தலைவலியை வரவழைத்து விட இரவு 10.30இலிருந்து அதிகாலை 2 மணி வரை அமர்ந்து பார்த்து விட்டு வந்தேன் . தூக்கம் கண்ணைக் கசக்குவதால் ஒரு சுருக்கமான முதல் பார்வை இங்கே..

நடிகர் நடிகையர்
ரஜினி ஐஸ்வர்யா மற்றும் வில்லனாக வந்த டான்னி டென்சொன்க்பா(Danny Denzongpa) இவர்கள் மட்டும்தான் கதாபாத்திரம் என்று கூறலாம். மற்றவர்களுக்கு வேலை மிகசொற்பம். அதிலும் கருணாஸ் மற்றும் சந்தானம் ஆகியோர் சும்மா வந்து போகிறார்கள். 
ரஜினி - சொல்லித்தான் தெரிய வேண்டுமா. வழக்கமான ஸ்டைலில் விஞ்ஞானி வசீகரனாகவும் அதை விட எந்திரன் சிட்டியாகவும்(அதிலும் இருவேறுபட்ட தோற்றங்கள்) வந்து கலக்கியுள்ளார். இந்தக் கதாபாத்திரம் எத்தனை கை மாறி அவரிடம் வந்தாலும் இதற்குப் பொருத்தமான நபர தான் என்று கட்டியுள்ளார். அதிலும் நிறைவுக்காட்சியில் ஏராளமான ரோபோக்கள் ரஜினியுருவில் காட்சியளிப்பதும் சண்டை இடுவதும் அற்புதமாக உள்ளது. 

ஐஸ்வர்யா - வழக்கம் போல அழகாக இருக்கிறார், கதாபாத்திரத்துக்கு அழகாக நடித்துள்ளார். அற்புதமாக நடனம் ஆடியுள்ளார். இதை விட வேற என்ன சொல்ல. எந்திரன் காதலிக்கும் அழகுப் பதுமையாக வருகிறார்.

 டான்னி டென்சொன்க்பா - விஞ்ஞானி வில்லன் சீன மூஞ்சயுடன் வேண்டும் என்று தேடிப்பிடிதார்களோ தெரியவில்லை. தேடிப்பார்த்ததில் அந்த நடிகர் இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தில் பிறந்தவர் என்பது. ஹிந்தி மற்றும் உருதுப் படங்களில் நடித்துள்ளவர் என்பதும் தெரிகிறது. ஆனால் இறுதிக் காட்சிக்கு முன்னர் அவரையும் போட்டுதள்ளிவிட்டு எந்திரன் ரஜினி வில்லன் பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்கிறார்.

இசை - ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அந்த அளவிற்கு ஈர்ப்பதாய் இல்லை. அரிமா அரிமா பாடல் மற்றும் காதல் அணுக்கள் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனால் அதனை பாடல்களும் காட்சியமைப்பு அற்புதமாக இருக்கின்றது. சங்கர் சங்கர்தான் சாபு சிரில் மற்றும் ரத்னவேலு ஆகியோரும் புகுந்து விளையாடி இருக்கின்றனர்.

கதை, திரைக்கதை
திரைக்கதை ஒரு இடமும் சோர்வடைய விடாமல் அற்புதமாக இருக்கின்றது. வழக்கமான சங்கர் படத்தினுடைய முடிவு போலவே முற்றுப்புள்ளி இன்றி காற்புள்ளியுடன் படம் முடிகின்றது... 
நிறைவுக்காட்சியில் வரும் மிக நீண்ட சண்டை சற்றே சலிப்படைய வைத்தாலும் Graphics அற்புதமாக கையாளப்பட்டுள்ளது. 

வசனம் - மறைந்த என் மனம் கவர்ந்த சுஜாதா என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்வதற்கு இந்தத் திரைப்படமும் ஒரு கருவியாக அமையும். அத்துடன் இந்த திரைப்படத்தின் வெற்றி(இப்போதே கூறி விட்டேன் பார்ப்போம்) நிச்சயம் சுஜாதாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படவேண்டும். 

தொழிநுட்பம் - இதுவரை எந்த இந்திய மொழிப் படங்களிலும் இந்த அளவு நுட்பங்கள் பயன்படுத்தி நான் அறியவில்லை. (எனக்கு தமிழ் ஹிந்தி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமே படம் பார்த்த அனுபவம் உண்டு மற்றைய இந்திய மொழிகளைப் பற்றி தெரியாது.)
எந்திரன் வரும் காட்சிகள் குறிப்பாக சண்டைக் காட்சிகள் பாராட்ட வைக்கின்றன.

பாதிப்புக்கள் - சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" "மீண்டும் ஜூனோ" ஆகிய நாவல்களின் பாதிப்பு இருக்கின்றது, வசனகர்த்தாவே அவர் என்பதால் பரவாயில்லை. 
சில இடங்களில் I- robot படத்தின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. அந்த I- robot உருவத்தைப் பயன்படுத்தும் உரிமத்தை வாங்கியிருப்பினும் காட்சிகள் அதை நினைவு படுத்துவதை தவிர்த்து இருக்கலாம். 

கதைச்சுருக்கம் - வசீகரன் என்ற விஞ்ஞானி தனது பத்து வருட உழைப்பின் பின் தன்னைப் போல உருவம் கொண்ட மனிதனைப் போல செயற்படக்கூடிய ஆனால் மனிதனிலும் நூறு மடங்கு ஆற்றல் வாய்ந்த எந்திரனை உருவாக்குகிறார். அதனை நாட்டின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு பயன்படுத்த நினைக்கிறார். பலத்த சிரமத்தின் பின் எந்திரனை மனித உணர்வுகளை புரிந்து கொள்ளவும் வெளிப்படுத்தவும் கூடியதாக மாற்றுகிறார். உணர்வு பெற்ற எந்திரன் வசீகரனின் காதலியான ஐஸ்வர்யாராயை காதலிக்கின்றது. அதனால் கட்டளைகளையும் மீறுகின்றது. அதை நெறிப்படுத்த முயன்று அது வழிக்கு வராததால் அதனை துண்டு துண்டாகி குப்பையில் வீசுகிறார் வசீகரன். ஆனால் சமுதாய விரோதிகளுக்கு துணை போக நினைக்கும் வசீகரனின் குருநாதரான இன்னொரு விஞ்ஞானி போஹ்ரா எந்திரனை உயிர்ப்பித்து அதனது ஆக்க வலுவை அழிக்கும் வலுவாக மாற்றி விடுகிறார். எந்திரனோ போஹ்ராவையும் கொன்றுவிட்டு ஐஸ்வர்யவையும் கடத்தி வைத்துக்கொண்டு இன்னும் எண்ணற்ற எந்திரங்களை உருவாக்கி ஒரு எந்திர சாம்ராஜ்யத்தை உருவாக்க முயல்கின்றது. பலத்த உயிரிழப்பு மற்றும் போராட்டத்திற்கு பின்னர் வசீகரன் எந்திரனை பழைய படி அழிவு எண்ணங்கள் அற்றதாக மாற்றுகிறார். ஆனால் அதனது குற்றசெயல்களுக்காக அது செயலிழக்க செய்யப்பட நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க. நிறைவில் எந்திரன் தன்னைத்தானே செயலிழக்கச் செய்துகொண்டு அருங்காட்சியகப் பொருளாக இருக்கின்றது,

நிறைவில் மனதிலிருந்து - எவ்வளவு இருந்தும் என் மனதில் ஏதோ குறை. சிறந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் தேர்வு சிறந்த காட்சியமைப்பு சிறந்த கதை வசனம் எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைகின்றது. தொழிநுட்ப விடயங்களைத் தவிர கதை என்ற அடிப்படையில் புதுமை இல்லை....
அத்துடன் ரஜினி என்ற நல்ல நடிகரை ரஜினி என்ற நல்ல கதாநாயகனாக மாற்றி விட்டோம்....

முடிந்தால் மற்றுமொரு தெளிவான பார்வை ஓரிரு நாட்களில்...


அன்புடன்
மதுரகன்

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

கவிஞர் காரையம்சனின் நிலவின் பிரசவம் அவள்


கவிஞர் காரையம்சன்(நடேசன் அகிலன்) கிழக்கிலங்கையின் காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயில்பவர். அவரது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாக இது... அவருடைய காதல் கவிதைகளின் தொகுப்பொன்று இசையுடன் உங்களுக்காக. இது அவரின் அனுமதியுடன் இங்கே பதிவிடப்படுகின்றது....பார்த்துக் கருத்துக்களைப் பரிமாறவும்....


அன்புடன்
மதுரகன்.
 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...