வியாழன், 20 ஜனவரி, 2011

மரபு வழிப்படா இயல்புகள் - 1

Posted on முற்பகல் 12:59 by செல்வராஜா மதுரகன்


நீ வணங்கிய தெய்வங்களும்
நான் வணங்கும் தெய்வங்களும்
சண்டையிட ஆரம்பித்தன...

நோக்கமும் பின்புலமும் அறியாமல்
நீயும் நானும் பார்வையாளர்களாய்
போர்க்களத்தின் எதிர் முனைகளில்...

வானத்தைப் பார்த்து நான் குறி சொன்னேன்
வெற்றி என் பக்கம் என...
காற்றினைப் பார்த்து நீ சொன்னாய்
அது உன் பக்கம் என...

என் பக்கம் கை உயர்வதாகக் கருதிக்கொண்ட
பொழுதுகளில் புழுதிதட்டி ஆர்ப்பரித்தேன்
சம்பந்தமின்றி நீயும் இடைக்கிடை
கை கொட்டிக் களித்துக்கொண்டாய்...

எனது ஆர்ப்பரிப்புக்களால் ஆகர்சிக்கப்பட்டு
என்பின்னே ஒருசிலர் அணிசேர ஆரம்பித்தனர்
உனது வெற்றிக்களிப்புகளால் ஈர்க்கப்பட்டு
உன் பின்னாலும் சிலர்...

எமக்கென்று சில அடையாளங்களையும்
சின்னங்களையும் வகுத்துக்கொண்டு, என் பின்னே
நிற்பவர்களையும் பின்பற்றச் சொன்னேன்
இடையிடை தெய்வங்களைப் போற்றிப்
பாடல்களும் இசைக்கலானேன்

இருபுறமும் கூட்டம் பெருகியது
ஆரவாரங்களும் அதிகரித்தன

சண்டையைப்பற்றியும் அதன் தார்ப்பரியங்கள் பற்றியும்
என் பக்கம் நானும் உன் பக்கம் நீயும்
வியாக்கியானம் கூறினோம்
உன்னை நானும் என்னை நீயும்
எதிரிகளாகப் பிரகடனம் செய்தோம்..

நாளடைவில் எமது சுவர்களில் தெய்வ சின்னங்கள்
மறைந்து - உன்னைப் பற்றிய தூசிப்புகள் நிறைந்தன
எமது வாய்களில் தோத்திரங்கள் மறைந்து
உன்னையும் உனது குலத்தையும் பற்றிய நிந்தனைகள் ஏறின

எங்கோ இருந்த கல்லொன்று எகிறி விழுந்ததில்
இரு பக்கமும் முட்டிக்கொள்ள ஆரம்பித்தன...
நீயும் நானும் கட்டிப்புரண்டு சண்டையிட்டோம்
யுகங்களைக் கடந்து, காயமுற்று,
செங்குருதி சிந்தியது அந்தக்கலவரம்....

பின்னால் வந்த தலைமுறைகள் தாமாகவே
சண்டையிடப் பழகிக்கொண்டன..
தெய்வங்களிடைப்பட்ட சண்டையைப்பற்றி
பலரும் மறந்து
வருடங்கள் தேய்ந்துவிட்டன....

ஒரே இடத்தில் ஒரே காரணத்துக்காய் ஒரே மாதிரி
சண்டையிட்டுச் சலித்துப்போன நானும் நீயும்
அன்றைய அந்திப்பொழுதில்
உனது தெய்வத்தையும் எனது தெய்வத்தையும் நோக்கினோம்

அன்றுதான் பாவக்கண் திறந்து உண்மையைப் பார்த்தோம்,
அங்கு பாவங்களும் புண்ணியங்களும் களைந்து
நடுநிலையாக்கப்பட்டன....
அங்கு பிரபஞ்சங்கள் முழுவதும் ஒளி பெற்றன
அங்கு நான் வணங்கும் தெய்வங்களும் நீ வணங்கும் தெய்வங்களும்
ஒருங்கே பிறப்புக்கொண்டன...
அனைவரும் அதிரும் வண்ணம் பிரபஞ்சத் தாண்டவம் நடந்தது....

திகைத்துப்போய் மறுபுறம் திரும்பினோம்..
எனது பேரனும் உனது பேரனும்
ஒருவரை ஒருவர் தூசித்த வண்ணம்
மூர்க்கத்தனமாக தாக்கிக்கொண்டு இருந்தனர்...

இருவரும் தனித்தனியாக கண்களை மூடி
கடவுளைப் பிரார்த்திக்க ஆரம்பித்தோம்...
"எனது குலத்தைக் காக்கச் சொல்லி...."

மதுரகன்


6 Response to "மரபு வழிப்படா இயல்புகள் - 1"

.
gravatar
Jana Says....

அருமை என்று பெயருக்கு சொல்லக்கூடாது..மிக அருமையாக உள்ளது.
மரபு வழிப்படா இயல்புகள்..கனக்க சிந்திக்கவும் வைத்துவிட்டது.
பாராட்டுக்கள்.

.
gravatar
Sajeev Says....

இனிமையான முறையில் ஒரு சிறந்த கருத்தை வெளியிட்ட்டுள்ளீர்கள் திரு.மதுரகன் அவர்களே....

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...