வியாழன், 20 ஆகஸ்ட், 2015

மனதிற்குள் மறைந்து பூத்தவை 1 - சென்னை

Posted on பிற்பகல் 9:05 by செல்வராஜா மதுரகன்

பயணங்கள் ஆரம்பத்தில் எனக்கு வலிநீக்கியாக இருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக என்னையறியாத பண்புமாற்றம் ஒன்றை நிகழ்த்த ஆரம்பித்தன.. சென்ற ஒவ்வொரு நாடுகளும், ஒவ்வொரு நகரங்களும் சந்தித்த முன்பு அறிந்த/ அறியாத மனிதர்களும் தெருக்களும் உணவுகளும் காற்றும் ஒவ்வொருமுறையும் எனக்குள் அறியாத இன்பத்தைப் புகட்ட, பயணம் என்பது கிட்டத்தட்ட எனக்குப்போதையானது...

பயணங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள பலமுறை நான் எண்ணியிருந்தும் இன்று வரை அந்த அனுபவங்களெல்லாம் மனதுக்குள்ளே மட்டும் தூறல் போட்டன... சில அனுபவங்களை வார்தைகலாக்கிப் பகிர முயலும் ஒரு வெளிப்பாடு இது...

2007ம் ஆண்டு எனது ஏப்ரல் மாதம் அம்மாவுடன் சென்னை பயணித்தேன், எனது முதலாது வெளிநாட்டுப்பயணம், முதலாவது விமானப்பயணம் ஒரு கிளர்ச்சியூட்டும் மனநிலையோடு செய்யப்போகும் விடயங்கள், வாங்கப்போகும் பொருட்கள் என்று பட்டியல்கள் மனதிற்குள் நீள அந்தப்பயணத்தை ஆரம்பித்து இருந்தேன். சென்னைக்குள்ளேயே முடிந்து விட்டிருந்தாலும் தனிமையில் சென்னையில் நடமாடித்திரிந்த அனுபவம் அன்றைய நிலையில் எனக்கு புதிதாகவே இருந்தது.

இலங்கையில் யுத்தம் தீவிரமாகத் தொடங்கியிருந்த காலப்பகுதி அது, காரணமின்றிக் கொழும்பிலே உலவும் தமிழ் பேசுபவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்ட காலம். பச்சைச் சீருடையுடன் யாரைக்கண்டாலும் பயந்து ஒதுங்கிய காலம். வவுனியாவிலோ ஏழு மணிக்குப்பிறகு எதிர்வீட்டிற்கு சென்றுவரக்கூட அஞ்சும் நிலை. இப்படியான சூழ்நிலையில் கூண்டுக்குள் இருந்து  திறந்துவிட்ட கிளி போல எனது உணர்வு இருந்தது. எங்கு பார்த்தாலும் தமிழ் பேசும் மக்கள் கூட்டம் வாழ்த்தலும் வைதலும் கூட சுகமாகப் பட்டது. ஒரு கடையைத் தேடிச்சென்று பாதை தவறிவிட வழியில் அகப்பட்ட போலிஸ் இடமே பாதை கேட்டுப்போனேன். தனியாகவே நேரம் கடந்து உலாவினேன். சாப்பிடும் கடைகளில், திரையரங்குகளில், புத்தகக் கடைகளில் சந்திப்பவர்களிடம் மணிக்கணக்கில் சுகம் விசாரித்தேன்.

எனது தமிழைக்கேட்ட முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஒருமுறை "என்னய்யா உ(ஒ)ளருற" என்றார்.. குழாயடிச் சண்டை ஒன்றை ரசித்துப்பார்த்தேன். தி நகரில் தெருவோரம் பொருட்கள் விற்கும் ஒருவரிடம் விளையாட்டாய் விலை கேட்டுவிட அவர் பின்னாலேயே துரத்தி வந்து முதலில் நூறு ரூபாய் சொன்ன பொருளை இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்குமாறு கெஞ்ச வேறு வழியின்றிச் சிரிப்புடன் வாங்கி வந்தேன். கரும்புச்சாற்றின் சுவையில் மனதைத் தொலைத்தேன். ஆவின் பால் நிலையத்தில் மோர்ப்பக்கெட் வாங்கிக் குடித்தேன்.

மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி ரங்கநாதன் தெருவைக் கடந்து உஸ்மான் தெருவை அடையமுதல் அந்த ஒடுங்கிய தெருவிற்குள் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த வவுனியா சனத்தொகையையே கடக்கவேண்டி இருந்தது. எந்தவித கஷ்டமும் இன்றி அந்த மனித அலையே என்னை உஸ்மான் ரோட்டில் ஒதுக்கிய நாட்களும் இருந்தன. இப்படி பொழுதுகள் முழுக்கப் புதிதாகக் கழிந்துகொண்டு இருந்தன. 

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை மெரீனா பீச்சிலே இந்திய விமானப்படையின் விமானசாகசங்கள் காட்டப்படுவதாய் சேதி வந்தது. அம்மாவையும் மாமாவின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணொருவரையும் அழைத்துக்கொண்டு பார்ப்பதற்காகச் சென்றோம். அண்ணா சமாதி எம்ஜிஆரின் சமாதிகளைக் கண்டு உணர்வுற்றுக் கடற்கரையை அண்மித்து விமான சாகசத்தைப் பார்க்கத் தொடங்கினோம், ஒரு லட்சம்பேர் பார்த்ததாக கூறப்பட்டு கிட்டத்தட்ட இரு மணிநேரம்  நீடித்த நிகழ்வு நிறைவடைந்துகொண்டு இருக்கும்போது மாமாவிடம் இருந்து அழைப்பு வந்தது "முடிய ஒரு அரை மணித்தியாலத்துக்கு முதல் வெளிக்கிடுங்கோ, அல்லது நெரிசல் கூடிவிடும்" என்று அவர் சொன்னதைக் கேட்டு அழைப்பைத் துண்டித்தபோதுதான் நிலைமை மோசமானதை உணர்ந்தேன்.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை சனவெள்ளம் அலைமோதுகின்றது. வீதி எது கரை எது என்று விளங்கவில்லை. உள்ளே சென்றால் நெரிந்து சாகவேண்டியதுதான். ஒருவாறு கரையோரமாக நடந்து வந்தபோது உயர்நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்து சிலர் வெளியேறுவதைக் கண்டோம். மதிலருகில் அடுக்கப்பட்டிருந்த கற்களைப் படிக்கட்டுக்களாகப் பயன்படுத்திச் சிலபெண்களும் படலையை தாண்டிப் பாய்ந்து பல ஆண்களும் அந்தப்பக்கம் கடந்துகொண்டு இருந்தார்கள். கூடவந்த அம்மாவையும் மற்றப்பெண்ணையும் படிகளால் கடக்கச் சொல்லிவிட்டு, நானும் படலையைத் தாண்டிப் பாய்ந்தேன், எனது செருப்பின் ஒரு முனை சிக்கிக்கொண்டதில் தடுமாறி மறுபுறம் தலைகீழாய் விழுந்தேன். கொஞ்சமென்றால் என் மேல் இருபது பேர் குதித்திருப்பார்கள். சில இளைஞர்கள் என்னை இழுத்தெடுத்து சுற்றிப்பாதுகாப்பாய் நின்றுகொண்டார்கள். அவர்களின் முகம் பார்க்கக்கூட முடியாத நிலையில், வலியுடன் முழங்கையால் இரத்தம் வழிய, கிழிந்த சேட்டுடன் ஐந்து கிலோமீற்றர் நடந்து வந்தே முச்சக்கரவண்டி ஒன்றைப்பெற்றுக்கொண்டு வைத்தியசாலை சென்றோம். 

முதுகில் ஏற்பட்ட வலி கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாய் இருந்தது. திருப்பதியில் போட்ட மொட்டையில் கல்கீறிய காயம் இப்போதும் கன்னம் தடவும் போது சிரிக்கிறது. கடல் கடந்து வந்துதான் சன நெரிசலை உணரவேண்டும் என்று எனக்கு விதிக்கப்பட்டு இருந்ததோ என்று இன்றைக்கும் நினைத்துக்கொள்வேன்.


வேறு நகரங்களில் தொடரக்கூடும்...


No Response to "மனதிற்குள் மறைந்து பூத்தவை 1 - சென்னை"

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...