புதன், 15 செப்டம்பர், 2010

விளையாட்டும் வினைகளும்

Posted on முற்பகல் 12:01 by செல்வராஜா மதுரகன்

வாழ்க்கை மனிதனுக்கு நிறைய பாடம் கற்பித்து வந்திருக்கிறது. அதனால் தான் மனிதன் வாழ்கையை இவ்வளவு தூரம் வாழவும் முடிகிறது. நெருப்பிலே கைவிட்ட மனிதர்களின் துணிவு அவர்களுக்கு பாடம் கற்பித்தது. அது பின்னாளில் நெருப்பு சுடும் என அறிந்து வாழும் தலைமுறையை படைத்தது. கடந்த தலைமுறை விட்டுச்சென்ற அனுபவங்கள்தான் நாங்கள் இன்று வாழும் வாழ்க்கை. 
ஆனால் எல்லா விடயங்களும் இப்படி நடந்திருக்கிறதா என்று பார்த்தால். சிலவிடயங்கள் எதிர்மறையான வழியிலும் சென்றுகொண்டிருக்கின்றன. அதிலே ஒரு விடயத்தைப் பற்றிதான் இங்கே சொல்ல விரும்புகிறேன். நான் இதுவரை எண்ணற்ற மரணங்களைப் பார்த்து இருக்கிறேன், கேட்டு இருக்கிறேன். அவற்றிலே ஒரு சில என்னை மிக ஆழமாகப் பாதித்து இருக்கின்றன. அதிலே இரண்டு மரணங்களை என்னுடைய சிறுகதைகள் வாயிலாகவும் வெளிப்படுத்தி இருக்கிறேன். நேரம் கிடைத்தால் அவற்றையும் பதிவிடுகிறேன். 
இது நேற்றுமுன்தினம் நிகழ்ந்த என்னுடைய நண்பி ஒருவரின் தம்பியின் மறைவை ஒட்டி எழுதப்பட்டாலும் ஒரே முறையில் என்னைப் பாதித்த மரணங்களின் தொடர்ச்சியாகவே இதனை பதிவிடுகிறேன். கடலில் குளிக்கச் சென்ற அந்த பதினேழு வயது மாணவன் கடலுடன் போய் விட்டான். இவ்வளவுக்கும் கடல் அவனுக்கு புதிதில்லை. அவன் பிறந்ததிலிருந்தே கடலின் அருகாமை அவனுக்கு வைத்து இருந்தது. தெரிந்தும் தெரியாமலும் ஒழித்தும் கடலில் விளையாடி வளர்ந்த பையன்தான். எனவே கடலுடன் அவன் போனது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
இது முதலாவது சம்பவம் அல்ல. 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் இளஞ்சேய் நெளுக்குளத்தில் நீந்தப்போய் நீருக்குள் மாண்டு போனான். அவனுக்கும் இதே கதைதான் பிறந்ததில் இருந்தே அவனது வீட்டுக்கு பின்னால் குளம் அதன் ஓரத்தில் எத்தனையோ நாள் நடந்து திறந்திருந்த அவனுக்கு அன்றுதான் இறங்கிப் பார்க்கத் தோன்றியிருக்கின்றது. அதுவும் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத வேளையில். பதினைந்து வயதில் அவனது அத்தனை திறமைகளும் அவனுடனே சேர்ந்து நீருக்குள் மூழ்கிப் போய்விட்டது. அதிலிருந்து எங்கே யார் மூழ்கிப் போன செய்தி கேட்டாலும் மனதுக்குள் அவன் வந்து நிறைந்துவிடுவான். இன்றுபோல...
இதற்கு யாரைக் குறை சொல்லுவது என்று புரியவில்லை.
அத்தனை வயது வந்தவர்களுக்கு புரிய வேண்டாமா எது ஆபத்து என ?
அடுத்தது சமுதாய மாறல். எங்களது சமுதாயம் பின் புறமாக நடக்கிறது. எங்களது பெற்றோரின் தலைமுறையில் பெரும்பாலும் அனைவருக்கும் நீச்சல் தெரிந்து இருந்தது. சும்மா இருந்த குளங்களில் சிறு வயதிலேயே கொஞ்சம் கொஞ்சமாக நீச்சல் பழகியவர்கள் அவர்கள். பிறகு மேலைத்தேய கல்வி முறைமைக்கு அரைகுறையாக ஆட்பட்டு முழு நேரமும் பாடப்புத்தகங்களுக்குள் தொலைக்கப்பட்ட பிறகு. அவர்களது நேரம் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. நீச்சல் தெரியாத தலைமுறை ஒன்று கட்டி எழுப்பப் பட்டது. இன்று பின்னவீனத்துவம் நோக்கியும் நாகரிகம் எனும் பெயரிலும் சின்னக்குழந்தைகள் நீச்சல் குளங்களுக்குள் நீச்சல் பழகுகிறார்கள். எங்களிடம் இயல்பாக இருந்த பழக்கம் கூட மேலைதேயத்தவர் சொல்லும் வரை கடைப்பிடிக்கப் படாமல் இருந்த கேவலத்தை வேறு எங்கும் காண முடியாது. 
கடலுக்கு அருகில் குளத்துக்கு அருகில் வாழ்ந்தவர்கள் கொஞ்சம் நீச்சல் பழகி இருந்தாலும் அவர்கள் இன்று வாழ்ந்து கொண்டு இருந்து இருக்கலாம். இதற்கு மேல் இதைதொடரக்கூடிய மனநிலையில் இன்று இல்லாததால்....

தொடரும்...

மதுரகன்

No Response to "விளையாட்டும் வினைகளும்"

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...