சனி, 27 ஆகஸ்ட், 2011

எனது வாசிப்புலகம் 2 - பாடசாலைக்காலம் (சிறுகதை - நாவல்)

Posted on பிற்பகல் 9:30 by செல்வராஜா மதுரகன்

தேடலுக்குத் தீனி போட்ட வவுனியா பொது நூலகம்
எனது சிறு பிராயத்து அனுபவங்களை ஏற்கனவே பதிவு செய்து இருந்தேன். (பார்க்க : எனது வாசிப்புலகம் 1- சிறுபிராயத்து வாசிப்பு அனுபவங்கள்) அதனைத் தொடர்ந்ததாகவே இதுவும் இருக்கும். சிறுபிராயம் கழிந்து கொஞ்சம் துடிப்பு உடலிலும் மனதிலும் ஏறிக்கொண்டிருந்த பொழுதில் நானும் என் நண்பனும் (ஜனுதர்சன்) வவுனியா பொது நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து புத்தகங்களை இரவல் பெற்று வந்து வாசிப்பதென முடிவெடுத்தோம். 
ஒரு நாள் பாடசாலை முடிய இருவரும் சென்று விண்ணப்பப்படிவதைக் கேட்கும்பொது எங்களுக்கு பதின்மூன்று வயதாவதால் சிறுவர் பகுதியில் அனுமதிக்க முடியாது ஆகவே இரவல் வழங்கும் பகுதியில் உறுப்புரிமை பெறுமாறு அங்கிருந்த பொறுப்பாளர் கூறினார். அங்கு என்ன இருக்கும் என்று அறிந்திராவிட்டாலும் இருவரும் படிவத்தைப் பெற்றுச்சென்று அதில் கூறியிருந்த அனைவரிடமும் கையொப்பம் பெற்று ஓரிரு நாட்களுக்கும் நகரசபையில் கட்டுப்பணமும் செலுத்தி உறுப்புரிமை பெற்றுவிட்டோம். 

தமிழ்வாணன்
அதன் பின்பு இரவல் வழங்கும் பகுதிக்கு நுழைந்தபோதுதான் புரிந்தது ஒரு புத்தகக்கடலுக்குள் நுழைந்துவிட்டோம் என. ஆரம்பத்தில் எந்தப்புத்தகதை எடுப்பது என குழப்பம் நேரிட்டது. நண்பன் (வசீதன்) ஒருவனின் அறிவுறுத்தலில் தமிழ்வாணன் நாவல்களை வாசிக்க ஆரம்பித்தேன். பின்பு ஒரு வாரத்திற்கு ஒரு நகைச்சுவைப் புத்தகம் ஒரு தமிழ்வாணன் புத்தகம் என வாசித்தேன். தமிழ்வாணன் எழுதி நூலாகத்தில் இடம்பிடித்திருந்த அவ்வளவு புத்தகங்களையும் முடிக்கும் மட்டும் இது தொடர்ந்தது. 
கூடவே வேறு சில நண்பர்களும் தமிழ்வாணனை வாசிப்பதை அறிந்து அவர்களுடன் சங்கர்லால், தமிழ்வாணன் போன்ற கதாபாத்திரங்கள் பற்றியெல்லாம் விவாதிப்பதும் நடந்தது (குறிப்பாக அருணனுடன்). அப்படியே தமிழ்வாணன் முடிய ஜே.டி.ஆர், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், எண்டமூரி விரேந்திரநாத் என இது தொடர்ந்தது. (பிற்காலத்தில் இந்தப் புத்தகங்களில் பல சிரிப்பை வரவழைத்தாலும் அந்த வயதுகளில் அது பிடித்து இருந்தது). 
ராஜேஸ்குமார்
ப. பிரபாகர்
நாட்செல்லச்செல்ல வாரம் இரு புத்தகங்கள் போதாது என்ற உணர்வு வந்தது. அக்கா பயன்படுத்தாமல் வைத்திருந்த அவரது அட்டைக்கும் நான் புத்தகம் எடுக்க ஆரம்பித்தேன். நூலகப் பொறுப்பாளர் அறிமுகம் ஆனவர் என்பதால் அவர் பொருட்படுத்துவது இல்லை. கிட்டத்தட்ட ஒன்பதாம் ஆண்டு முடியும் வரை இவ்வாறுதான் தொடர்ந்தது. நகைச்சுவைக் கதைகளில் பாக்கியம் ராமசாமி சென்னைத்தமிழில் எழுதிய அப்புசாமி தொடர்கதைகளைப் படித்ததாக நினைவு அதைவிடவும் பல நகைச்சுவைகள் படிப்பேன். 

எண்டமூரி
பாக்கியம் ராமசாமி
கல்கி
பத்தாம் ஆண்டின் ஆரம்பப்பகுதி அல்லது முதல் அரைப்பாகத்தில் மகாபாரதத்தை முழுமையாக வாசித்து முடித்து பொன்னியின் செல்வனையும் முடித்தேன். பொன்னியின் செல்வன் பலதடவைகள் வகுப்பில் பாடம் நடக்கும்போது மடியில் வைத்தெல்லாம் வாசித்து இருக்கிறேன். கூடவே இந்திரா சௌந்தர்ராஜனின் எழுத்துக்களின் அறிமுகம் மற்றும் மாயாஜால விடயங்களில் இருந்த ஆர்வம போன்றன அவரது கதைகளை வாசிக்கத்தூண்டியது. அவரது புத்தகங்கள் இருந்த தட்டையும் முடித்தேன். இதிலே விடுபட்ட ஓரிரு புத்தகங்களை கடையில் வாங்கியும் வாசித்தேன். அந்தக் காலங்களில் எமது தனியார் கல்வி நிலையத்தில் தமிழ் கற்பித்த கஜரூபன் ஆசிரியரது கற்பித்தலும் பல வாசிப்புகளில் என்னைத்தூண்டியது. அடிக்கடி பல புத்தகங்களை பரிசளித்தும் எங்கள் ஆர்வத்திற்கு வழிகோலினார். அதை விட கம்பன் கழகம் பற்றிய அறிமுகம் மற்றும் தகவல்களும் அவரின் மூலமே எங்களுக்கு முதன் முதலில் கிடைத்தன.

2002ம் ஆண்டின் இன் மத்திய பகுதியில் என் வாழ்க்கையில் எதிர்பாராத அறிமுகங்களும் திருப்பங்களும் ஏற்பட்டன....

தொடரும்...

அன்புடன்,
மதுரகன்

பி. கு - இதை வாசிக்கும் நெருங்கிய நண்பர்கள் நான் எதையும் தவற விட்டிருந்தால் கூறவும்


3 Response to "எனது வாசிப்புலகம் 2 - பாடசாலைக்காலம் (சிறுகதை - நாவல்)"

.
gravatar
Mrs Janaki Prakash Says....

நன்றாக இருக்கிறது. இடையிடையே சிரிக்க வைக்க கூடிய சுவாரசியமான நகைச்சுவைகளை சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி இணைத்தால், வாசகர்களை கவரலாம்.

.
gravatar
A.Shugirthan Says....

உங்கள் பிரசுரிப்பில் facebook இன் like பொத்தான் வசதி இருப்பின் ஒவ்வொரு பிரசுரத்திற்கும் கருத்தினை தெரிவிக்கவும் எம் சமூகவலையமைப்பு நண்பர்குடன் பகிர்த்து கொள்ளவும் இலகுவாக இருக்கும்
shugirthan@gmail.com

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...