ஞாயிறு, 27 ஜூன், 2010

உயிர்த்திருப்பு



உயிர்த்திருப்பு
            சிறுகதை
செல்வராஜா மதுரகன்
3ம் வருடம்
மருத்துவபீடம்
- 1 -

சிலநூறு மைல்கள் வடகிழக்காக ஏதோ ஒரு கிராமத்தில்,
வானம் வழக்கம் போலவே கிழக்குப்புறமாக வெளுத்துக்கொண்டிருந்தது. அதற்கு இரு நாட்களுக்கு முன்புதான் பிறந்திருந்த குட்டிகளின் ஈனமான சத்தத்தைக் கேட்டபடி மரத்தநிலையில் படுத்திருக்கும். அந்த நரைநிற நாயும், இறுதி முயற்சியாக பால்வராத அந்த முலைகளை சப்பிப்பார்த்துவிட்டு “ஓள... ஊ…” என்று ஏமாற்றம் தெரிவிக்கும் அதன் குட்டிகளும் மனித சஞ்சாரமற்ற அந்தக்காணியின் (யுத்தத்தால்) பாழ்பட்ட அந்த வீட்டினுள் அனுமதியின்றி வசித்துவரும் குடிகள்.
      வானத்தை ஆக்கிரமித்த இனம்புரியாத கரிய மேகங்கள் எழுப்பும் சத்தங்களாலும், வீசும் நெருப்புக்களாலும் அண்டையிலிருந்து இரண்டு மூன்று வீடுகளின் மனிதர் குடிபெயர்ந்து போனது ஏனென்று புரியும் அறிவில்லாததாலும், நிறைமாத கர்ப்பத்தினாலும் வேறு இடம் போகாமல் தங்கிவிட்;ட தாய்நாய்க்கு நாட்கள் நகர நகர சிக்கல்களும் புரிந்தது. நேரத்துக்கு உணவளித்த மனிதர்கள் போய்விட்டபிறகு தனது வயிற்றுக்கு உணவு தேடுவதே சிக்கலாக இருக்கும் காலத்தில் மூன்று குட்டிகளையும் ஈன்று பால் கொடுப்பது அதன் இயலுமையைச் சோதித்தது. அது தன்னாலானவரை முயன்றும் கூட குட்டிகள் ஈன்ற உடலுடன் எவ்வளவு தூரம்தான் அலைந்து திரிவது. முந்தையநாள் முழுவதும் தண்ணீரைத்தவிர ஏதும் அகப்படாததால், இன்று குட்டிகளுக்கு ஊட்ட போதியளவு பால்சுரக்கவில்லை.
      
        குட்டிகளின் பலவீனமான முனகல்கள் அதற்குள்ளிருந்த தாய்மையுணர்வை மேலும் உசுப்பிவிட, படுத்துக்கிடந்து ஆவதென்னவென்று எழுந்து நின்றது. இன்றைய தேடலுக்குச் செல்லமுன்பு குட்டிகளை வாஞ்சையுடன் நக்கிக்கொண்டது.
“வெள.. வெள.. ஒள…”
விடைபெற்றுக்கொண்டது. காணியைவிட்டு வெளியேறித்தெருவுக்கு வந்தது. ஒரு தாய்க்கே உரிய பயமும் கலவரமும் பற்றிக்கொள்ள சுற்றும் முற்றும் பார்த்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு விரைவில் திரும்பிவிடவேண்டும் என்ற எண்ணத்துடன். விரைவாக ஓட ஆரம்பித்தது. பிரதான வீதியை அடையவேண்டும் பிறகு பிரதான வீதியில் கொஞ்சத்தூரம் போனால் அடுத்துவரும் சந்தியிலுள்ள சாப்பாட்டுக்கடைதான் அதனது இலக்கு. கடைதிறக்க முன்பே சென்று காத்திருந்தால் முதல்நாள் மீதிகள் ஏதாவது கிடைக்கலாம். ஒரு எலும்புத்துண்டு, காய்ந்துபோன நாட்பட்ட ரொட்டி அல்லது இன்று காலையில் பிழிந்த தேங்காய்ப்ப+ கலந்த தண்ணீராவது கிடைத்தால் போதும் அதன் இன்றைய நாளை சமாளித்துக்கொள்ள. மனிதர்கள்தாம் நாளைக்கு நாளைக்கு என்று சேர்த்து வைப்பவர்கள். மிருகங்களுக்கு அப்படி இல்லையே…

0--------0-------0--------0

அதே வட்டாரத்தில், அதே சூழ்நிலையில் இன்னுமோர் கிராமத்தில்
அதே நாளின் மாலைநேரம்….
      மனங்களைப்போல இருண்டு வயிற்றினைப்போல வெறுமையாக இருந்த அந்தவீட்டின் வெளிப்புறத் திண்ணையில் கால்களை மடித்து கைகளைத் தலைக்கு அணையாக வைத்து படுத்துக்கிடந்தான் இரவீந்திரன். திடீரென உள்ளே குழந்தையின் அழுகுரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தான். சூரியன் தனது அன்றைய நாளுக்குரிய ஓட்டத்தை நிறைவுசெய்துகொள்ள எத்தனிப்பது புரிந்தது. கலக்கத்துடன் எழுந்து அமர்ந்தான். எதிரே அவனையே உற்றுப்பார்த்தபடி அவனது வளர்ப்பு நாள் “ஜிம்மி” அவளையே உற்றுப்பார்த்தபடி.
அதற்கு இரண்டு நாளாகச் சாப்பாடுபோடவில்லை,
தான் நேற்றிலிருந்து பட்டினி,
உள்ளே படுத்திருக்கும் அவனது மனைவியும் நான்கு மாதக்குழந்தையும் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அரைப்பட்டினி.
     
 “கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்கள் வீடுகளை, கால்நடைகளை, காணிகளை, பிழைப்பினை, எல்லாக் கஷ்டத்தையும் குடுத்திட்டு அமைதியாக இருந்து பார்க்கும் முத்துமாரியம்மனை விட்டுவிட்டு போக்கிடம் தேடிப்போனபோதே நானும் போயிருக்கவேண்டும், பாழாயப்போன மண்ணில இருந்த பற்றாலயும் என்ர உழைப்பில இருந்த நம்பிக்கையாலயும் இருக்கப்போய்.. சே…! கட்டின மனுசிக்கும் பெத்தபிள்ளைக்கும் சோறுபோட முடியாத நிலையில நான்”. அவன் மட்டும் நினைத்தா பார்த்தான், தென்னிலங்கையுடனான தொடர்புகள் அறுந்துபோகவும் பிறகு விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடைகளாலயும் விவசாயம் செய்யக்கூட கஷ்டம் வருமென்று. விதைச்சத காக்கவும் வெட்டினத விக்கவும் இயலாம. கடவுளுக்கு மேல கும்பிடுற விதை நெல்லப்பொங்கிச்சாப்பிடும்போது அவனது தொண்டைக்குள்ளால் சோறு எப்படி இறங்கும். தோட்டத்தில தோப்பில என்று தான் விதைச்சதைத் தாங்களே சாப்பிட்டு ஏதோ எப்படியோ வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க, இரண்டு மாதமாய் அதுவும் சிக்கலாகிவிட்டது. ஊரில மிஞ்சியிருந்த ஒரே கடையில அவன் மீளமுடியாத கடனாளியாகி விட்டான்.
      பசித்திருந்தே செத்துப்போக அவன் உடலில் உரம் இல்லாமலில்லை. ஆனால் பச்சைக்குழந்தை பாலுக்காக அழுவதையும், பட்டினியிருந்து இருந்து பால்சுரக்கா மார்புடன் பரிதவிக்கும் மனைவியின் முகத்தையும் பார்க்கும்போது இருக்கின்ற தைரியம் எல்லாம் இடம்தெரியாமல் ஓடிவிடும். இதற்கு மேலும் இங்கிருந்தால் தான் மனிதன் என்பதில் அர்த்தமில்லை என உணர்ந்துகொண்டு, கடையைப்பூட்ட முதல் கயிலாயத்தின்ட காலில விழுந்தாவது ஒரு அங்கர்ப்பெட்டியும் அரைக்கிலோ மாவும் வாங்கிவிடுவோமென ஆணியில் மாட்டியிருந்த பிரம்புக்கூடையையும் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கி சைக்கிளில் ஏறி ஓட ஆரம்பித்தான்.
- 2 –
முதலாவது கிராமத்தில்…
நீண்ட தூரம் ஓடிவந்தது மூச்சிரைத்தது. நாக்கை வெளியே நீட்டி மூச்சுவாங்கிக்கொண்டே கடையை நோட்டம் விட்டது. இன்னமும் கடை திறக்கப்படாததால் நிம்மதியடைந்து அருகிலிருந்த சிறுகுட்டையில் தாகத்தைத் தணித்துக்கொண்டு வழக்கமாக கடைக்குப்பைகள் வீசப்படும் அந்தத்தொட்டிக்கு அருகில் காத்திருந்தது. போட்டிக்கு வேறு யாரும் வந்துவிட்டாலம் என்னும் பயம்வேறு அதனை வாட்டிக்கொண்டிருந்தது. ஏனென்றால் சண்டைபிடிக்க அதனுடலில் துளியும் திராணியில்லை. இருவாரங்களுக்கு முன்பு வயிற்றில் குட்டிகளை சுமந்திருப்பவள் என்று பாராது எங்கிருந்தோ வந்த சிவலை ஒன்று அதன் காலினைப் பதம் பார்த்தது இப்போதுதான் கொஞ்சம் ஆறிவருகின்றது.
      மெல்லத்திறக்கப்பட்ட பின்கதவினூடு ஒரு பையன் வந்து தட்டுநிறைய எதையோ கொட்டிவிட்டுப்போக, இன்றைக்கு நல்ல விருந்து என்று மோப்பம் பிடித்தபடி ஆவலுடன் வாயை வைத்தது.
“ஓள.. ஊ….”
திடீரென தொடையில் சுருக்கென்று ஏதோ ஒன்று தைத்தது. பின்னால் திரும்பிப்பார்க்க கையில் ஒரு நீண்டதடியுடன் இருவர். ஏதோ ஒரு வலி உடல் முழுவதும் பரவிச்செல்ல கிடந்து துடித்தது. கண் இருட்டிக்கொண்டு வந்தது. இன்னமும் முழுமையாக கண்திறந்து பார்க்கமாட்டாத தன் குட்டிகளின் நிலையை நினைத்துக்கொண்டிருந்த கணத்துடன் நினைவிழந்தது.

“இண்டைக்கு விடியவே நல்ல வேட்டை, அஞ்சு நாய் அம்பிட்டிட்டு” என்று கூறிக்கொண்டே அதன் உடலை எடுத்துப் பின்னால் நின்ற வண்டியில் போட்டான், வந்தவர்களில் ஒருவன்.
0--------0-------0--------0

இரண்டாவது கிராமத்தில்…
     
      கடையை அண்மித்ததும் மெல்ல சைக்கிளால் இறங்கி அருகிலுள்ள மரத்துடன் சைக்கிளைச் சாத்திவைத்துவிட்டு கூடையுடன் சென்று கடைக்கு முன்னாலிருந்த சுவரோரத்தில் அமர்ந்து கொண்டான். இவனைக்கண்டவுடனே கயிலாயம் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டான். கடையிலிருந்த ஓரிருவர் செல்லும்வரை பொறுமையுடன் இருந்த இரவீந்திரன் கதைக்கத்தொடங்கினான். “சைக்கிள விட்டுட்டுப்போறன்”. கயிலாயம் மௌனம் சாதித்தார்.
      இரவீந்திரன் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான். “இந்த உதவிய இண்டைக்கு நீங்கள் செய்தா நாளைக்கு என்ர பிள்ளை உயிரோட இருக்கும்”. அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. கயிலாயம் திடுக்கிட்டுவிட்டார், அவர் இப்படி ஒரு வசனத்தை எதிர்பார்க்கவில்லை. அவரும் மனுசர்தானே. அதற்கு மேல் தாமதியாது என்னவென்று கேட்காமலே அவன் வழக்கமாய் வாங்கும் அங்கர், ஒரு கிலோ மா, அரைக்கிலோ உருளைக்கிழங்கு சுத்திக்கொண்டுவந்து கொடுத்தார்.
“சைக்கிளையெல்லாம் விட்டிட்டுப்போயிடாத எல்லாம் பிறகு பார்ப்பம், வாங்கி வச்சுக்கொண்டு நான் மட்டும் என்னசெய்ய அங்க இங்க விழுறது இங்க விழுந்தா எல்லாம் சாம்பல்தானே…”. வாயினாலே நன்றிகூறக்கூடிய நிலையில் இல்லாத அவன் கண்களாலேயே நன்றி கூறிவிட்டு மரத்தடியில் சென்று சைக்கிளை எடுத்தான்.
“டொம்ம்ம்…..” என்று மிகப்பெரும் அதிர்வுடன் சத்தம் கேக்க ஏதோ பிரச்சினை என்று புரிந்துகொண்டு அவசரமாக அவசரமாக சைக்கிளை மிதித்துச்சென்றான். சற்று நேரத்துக்குள் “சட் சட் சட் சட் சட்….” என்று சத்தம் ஆரம்பிக்கின்றது. இரவீந்திரனுக்கு முதுகில் ஏதோ ஊசி குத்தியதுபோல உணரும்போதே சைக்கிளுடன் கீழே சரிந்தான். கொஞ்சம் கொஞ்சமாக செந்நிறநீர் பெருக்கெடுக்கு அவனைச் சூழ்கிறது. கண் இருட்டிக்கொண்டு வருகிறது, மூச்சிரைக்கிறது, நினைவுகள் மெல்ல மெல்ல அகலும் போது காட்சிகள் மாறி மாறி கண்முன் வந்துபோகின்றன. இன்னமும் தெளிவாக அவன் முகத்தைப் பார்த்தறியாத அவன் குழந்தைக்கு அவன் முகம் தெரியாமலே போகப்போகிறதா… வீட்டைத்தாண்டி வெளியுலகம் அறியாத அவன் மனைவி….?
நேரம் கடந்தும் கணவன் திரும்பாததால் திண்ணையில் அமர்ந்திருந்து படலையைப் பார்த்தபடியே குழந்தைக்கு சீனித்தண்ணி பருக்கிக்கொண்டிருக்கிறாள் இரவீந்திரன் மனைவி. யாருமற்ற வீதியில் இரத்தவெள்ளத்தில் இரவீந்திரன் சடலம்.

- 3 -
சில மாதங்களுக்குப்பின்பு,
ஒரு பற்றரி வானொலியின் காலைச்செய்திகளில்…..
“அமைச்சரவைத்தீர்மானங்களை அறிவிக்கும் கூட்டத்திலே இன்று முக்கியமான ‘சிந்தனை’ ஒன்று உருவாக்கம். அதன்படி நாய்களைக்கொல்வது தண்டனைக்குரிய குற்றம் என இன்றிலிருந்து அழுலுக்கு வரும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவிப்பு.
0--------0-------0--------0
அடுத்த அடுத்த நாட்களில்,
இன்னமும் சில தூரங்களுக்கு அப்பால்,
      அதேபோல் கிழக்குப்புறமாக வானம் விடிந்துகொண்டிருக்க ஒரு இறைச்சித்துண்டுக்காக கூட்டமாக சண்டைபோட்டபடி சில நாய்களும் அதற்கு அப்பால் இன்னமும் வீடு திரும்பாத அப்பாவை எதிர்நோக்கி வேலியருகில் தூங்காமல் காத்திருக்கும் சிறுமியும் மற்றோர் ஆளில்லாத வீதியில் ஓரமாக கிடக்கும் ஓரிரு துவிச்சக்கர வண்டிகளும்….

“முற்றும்”

வெள்ளி, 18 ஜூன், 2010

ராவணன் ஒரு நவயுக ராமாயணம் - விமர்சனம்





ராவணன் படத்தை முதல் நாளான நேற்றே நண்பர்களுடன் பார்த்து விட்டேன். பார்த்ததிலிருந்து என்ன எழுதுவது என்று தெரிய வில்லை. ஆனால் எதாவது எழுதியே ஆகவேண்டும் என்ற  தவிப்புக்காக எழுதுகிறேன். 
பாடல்களில் கவிதையாக இருந்த ராமாயணத்தை பாத்திரங்களாக்கி உலவ விட்டுள்ளார் மணிரத்னம் என்றே கூறத்தோன்றுகிறது. இது நீங்கள் கம்பனில் பார்த்த இராமாயண சரித்திரமாக இருக்காது. மாறாக பாரதிதாசனும் பெரியாரும் கனவுகண்ட தமிழ் ராவணனின் கதையாகத்தான் இருக்கும். வான்மீகி என்ற முனிவர் ராமன் என்ற அரசனின் கதையை படைத்துவிட்டுச் சென்றார். அதாவது மனிதர்களைக்கொண்டு கதையை படைத்தார், மனிதர்கலேன்றால் பாவம் புண்ணியம் களங்கம் ஆகியவற்றுக்கு ஆளாகக்கூடியவர்கள், அதேபோலவே அவர் படைத்த ராமனும் இருந்தான். ஆனால் வைணவ குலத்தில் பிறந்து திருமாலை கடவுளாக வழிபாடும் கம்பரோ மனம் கேட்காமல் ராமனை அவதார புருசராக அதாவது கடவுளாக படிக்க முயன்று பல இடங்களில் மாற்றங்களைச் செய்தார் அவற்றிலே அவர் ராமனை உயர்த்தியதோடு ராவணனையும் தாழ்த்திவிடுகிறார். 


அதைப் பொறுக்க முடியாமல் இதுவரை குரல் கொடுப்போர் பலர். ஆனாலும் அந்த வரிசையில் மணிரத்னத்தை சேர்ப்பதா இல்லையா என்று புரியவில்லை ஏனென்றால் அவர் எதிர்மறை நாயகர்களையும் சிறப்பாக காட்டுவதை வழக்கமாக கொண்டவர். உதாரணம் தளபதியிலே மம்முட்டி கதாபாத்திரம் அவர் குறிப்பது மகாபாரதத்துது துரியோதனன் என்று அனைவருக்கும் தெரியுமே.  


சரி இந்த ராமாயணத்தைப் பற்றி என்ன சொல்ல பாடல்களைப் பற்றி சொல்லவே வேண்டாம் ஏற்கனவே உசிரே போகுதே மெகா ஹிட், ஏனைய பாடல்களும்தான். கேட்கும் போது எனக்கு அவ்வளவு பிடிக்காத பாடல் கடாக்கறி கொதிக்குது ஆனால் படத்தில் அதுவும் நன்றாக இருக்கிறது கொடு போட்டால் பாடல் பட்டையை கிளப்புகிறது. ஆனால் வழக்காமான மணிரத்னம் படங்கள் போல பாடல்கள் சில துண்டுபோடப்பட்டும் சில அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன அதுவும் அழகுதான்.   
இயக்கம் மணிரத்னம் இதெல்லாம் சொல்லி விளக்குற விடயம் இல்லை. 
ஒளிப்பதிவு அற்புதம் காடு, மலைச்சாரல்கள் படம் முழுக்க வந்து தூறும் மலை அனைத்தும் அற்புதமாக மிளிருகிறது... இரண்டு ஒளிப்பதிவாளர்கள் இருந்தாலும் பிரதான பொறுப்பு சந்தொஷ்சிவன்தான் என்று கூறினார்கள் உணமையிலேயே அவரது கைவண்ணம் படம் முழுக்க தொடர்கிறது... 
பின்னனி இசையும் இசைக்கலவையும் படத்துடனே எம்மை நகர்த்திச்செல்ல உதவுகின்றன 
நடிகர்கள் என்று பார்த்தால் - விக்ரம் இல்லாமல் என்னால் படத்தை நினைத்துப்பார்க்க முடியவில்லை, எதற்கும் ஹிந்தி படத்தையும் பார்க்கவே உள்ளேன் அங்கும் விக்ரம் மற்ற வேடத்தில் எப்படி நடித்துள்ளார் என்பதைப் பார்க்கவே. 
முதல் முதலில் காதல் வயப்படுவதாகட்டும், அதை நாசூக்காக கூறுவதாகட்டும், வெறி கொண்டு கத்துவதில் என்று விக்ரம் மேலே நிற்கிறார். அடுத்து ப்ரித்விராஜ் தனது பணியை மிகவும் சிறப்பாக செய்து முடித்து உள்ளார் அழகாகவும் இருக்கிறார். ஆனால் ஒரு சில இடங்களில் அவரது நடவடிக்கையை ஏற்க மனம் மறுக்கிறது. ஆனால் ராமனை விட ராவணனை நல்லவனாக காட்ட மணிரத்னம் பயன்படுத்திய இடங்களாகவே அவற்றை நான் பார்க்கிறேன். ஐவ்றையா கணவனைப் பிரிந்து தவிக்கும் இடங்களில், உண்மை தெரிந்து குமுறும் இடங்களில், கணவன் சந்தேகப்பட்டதும் கதறும் இடங்களில் சற்றே சலனப்படும் இடங்களில் சிறந்த நடிகையாக கண்ணில் வருகிறார். 
பிறப்பு மற்றும் விக்ரம் தம்பியாக வந்த முன்னா இருவரும் இவர்களிலே முன்னா ஒருபடி மேலேயே சென்று திறமையை காட்டி இருக்கிறார்கள். முன்னாவை இனி எதாவது படங்களில் ஹீரோவாக பார்க்க வாய்ப்பு கிடைக்கலாம்.  
நிச்சயாமாக குறிப்பிட்டுக் கூறப்படவேண்டிய ஒருவர் ப்ரியாமணி கொஞ்ச நேரமே வந்தாலும் கண்ணுக்குள் நிற்கிறார். பாவப்பட்ட ரஞ்சிதாவும் வாயைத்திறக்காமலே சில காட்சிகளில் வந்து போகிறார்(டப்பிங் பேச ஆள் கிடைத்தால் தானே). 
இதை விட படத்துக்கு வசனம் சுகாசினி - அனல் தெறிக்கும் வசனங்களை அழுத்தி இருக்கிறார் அவருக்கும் ஒரு பாராட்டு.
இதுவரைக்கும் இப்படி சமாளிக்கிறேன் என்றால் என்ன அர்த்தம் கதையை முழுமையாக கூற விரும்பவில்லை என்பதுதான். நிச்சயமாக தியேட்டர் இல் சென்று பார்க்க வேண்டிய படம். திரைக்கதை சில இடன்காளில் குழப்பமாக இருந்தாலும் படம் திறமையானவர்களின் சேர்கையில் வந்த அற்புதமான ஒரு கலவை. நிறைவாக ஆர்வக்கோளாறுகளுக்காக படத்தின் கதையில் கொஞ்சம், கேட்க விரும்பாதவர்கள் இதைத் தவிர்த்து விடுங்கள். 
படத்தில் ராவணன் இருக்கிறார் - விக்ரம்(வீரா) காட்டு வாசியினம் , புரட்சியாளர் 
ராமன் இருக்கிறார் - ப்ரித்வி (தேவ் பிரகாஷ்) போலீஸ் 
சீதை இருக்கிறார் - ஐஸ்வர்யா (ராகினி) - ப்ரித்வியின் மனைவி
சூர்ப்பனகை இருக்கிறார் - ப்ரியாமணி (வெண்ணிலா) - விக்ரம் தங்கை 
அனுமார் இருக்கிறார் - கார்த்திக் (ஞானப்ரகாசம்) வனஇலாகா அதிகாரி 
இனி ராமன் மனைவியை ராவணன் கடத்துவதி படம் தொடங்கி ராமன் மனைவியாய் எப்படி மீட்கிறார் என்பதில் நிறைவு பெறுகிறது வழக்கம் போலவே ராவணனும் சாகிறான் ஆனால் எப்படி என்பதை படத்தில் பாருங்கள். ஆனால் கம்ப ராமாயணத்தை போலல்லாது இங்கே மனிதர்களால் படைக்கப்பட்ட ராவணனில், ராமன் ராவனைக் கொள்ள சதிசெய்கின்றான் இருமுறை ஒருமுறை பெண்களுக்குள் மறைந்திருந்து சுடுகிறான் மறுமுறை பெண்ணைப் பயன்படுத்திச் சுடுகிறான். இங்கு சீதையின் மனதிலும் சலனம் வருகின்றது சில இடங்களில் அவள் ராவணனை நல்லவனாகப பார்க்க ஆராம்பிக்கின்றால். இங்கு ராவணன் கடைசி வரை சீதையின் மூக்கு நுனியைக் கூட தீண்டாமல் சாகின்றான். 


ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் திராவிட கொள்கைகளைக் கேட்டு வளர்ந்த தமிழர்களாலே இதை பார்க்கக் கூடியதாக இருக்கும் அதில் கூட தீவிர ராம பக்தர்கள் சந்தேகமே.. ஆனால் ராம வெறியுடன் வாழும் வடநாட்டுக்காறரால் எப்படி இந்தப் படம் நோக்கப் படப்போகின்றது என்று எனக்குப் புரியவில்லை. 


மதுரகன்  

திங்கள், 14 ஜூன், 2010

நினைத்தாலே இனிக்கும் 1

சிக்கித் தவிக்கின்ற மனங்களுக்குள் இன்னமும் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கின்ற காதல்களுக்கும், வேறுபட்டுப் பிரிந்த பின்பும் வெள்ளி முளைக்கின்ற வயதுகளிலும் மனதை வெட்கப்படுத்தும் காதல்களுக்கும் சமர்ப்பணம் என் கவிதைகள்..... 
..............................................................................................................................................................

உன்னை நினைக்கும் போதெல்லாம் எங்கோ 
பூக்கள் பூக்கும் காட்சிகள் மனதில்
எங்கெங்கோ பூக்கள் பூப்பதைப் பார்க்கும் போதும் 
நடுவே உன் புன்னகைகள் 

எதோ உன்னைப் பற்றிய நினைவிகள் இருந்தும் 
இல்லாமலும் உன்னைப் பற்றியோ அன்றில் 
உன்னையோ எப்போதும் உணர்ந்துகொண்டு 
சுவாசித்துக்கொண்டு எதோ ஒரு நிலையில் நானும் 

கவனமின்றிப் பாதையில் நடக்கும் பொது காலைக் 
கல்லில் இடித்துக் காயப்படுத்திக் கொள்வது போல 
சிரத்தையின்றி சிந்தனையைக் களைய விடுகின்ற போது 
மனது உன்னில் மோதிக் காயப்படுகிறேன் கண்ணீர்த்துளிகளாய்....

மதுரகன் 

புதன், 2 ஜூன், 2010

தோல்வியின் நிலை.



உலகத்தில் வெற்றி பெற்ற காதல்களில் பெரும்பாலானவை, ஒரு குடும்பத்துக்கு உள்ளோ ஒரு சிறிய பரப்பிற்கு உள்ளோ அன்றாட தேவைகளுக்காக அல்லல் படும் அல்லது அல்லல் படாமல் உழைத்து உண்ணும் கணவன் மனைவியாக முடங்கிப் போகின்றன.. 
அட்டைப்புத்தகத்தில் எழுதப்பட்ட ஒரு கதை போல நிறைவு பெறுகின்றன... தோல்வியடைந்த காதல்கள் மட்டும் தான் விண்ணையும் தாண்டி வரலாறுகள் ஆகின்றன.. அன்றைய இலக்கியங்களும் இன்றைய சினிமாக்களும் கடுவதும் இதைத்தானே.. இன்னும் சொல்லப் போனால் யுகங்கள் தோறும் காதலர்களை உருவாகிக்கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் இருக்கப் போவது ராமன் சீதை கதையல்ல, லைலா மஜ்னு - அம்பிகாவதி அமராவதி மற்றும் ரோமியோ ஜூலியட் கதைகள் தான்........ 
 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...