சனி, 20 பிப்ரவரி, 2010

நண்பன் அகிலனின் காதலர்தினச் சிறப்புக்கவிதைகள்

Posted on பிற்பகல் 6:54 by செல்வராஜா மதுரகன்


நண்பன் நடேசன் அகிலன் மருத்துவ பீடத்தில் எமது அணி மாணவன். காரையம்சன் என்ற புனைபெயரில் கவிதைகளை தரும் அவர் களமிறங்கி விட்டாலே எமது பீட கவியரங்குகள் களை கட்டும். காதலர் தினத்தை முன்னிடு அவர் எழுதி எமது பீட அறிவித்தல் பலகையிலும் அவரது மூஞ்சிப்புத்தகத்திலும் இட்ட கவிதைகளின் ஒரு பங்கு இங்கே அவரின் அனுமதியுடன்...
காதலர்தின சிறப்பு குறுங்கவிதைகள் 

காதலே!
இந்த ரோஜாப்பூவை பிடுங்கும்போது
ஒரு கண்டிப்பான உத்தரவு பிறந்தது!
இம்முறையும்
இதை கொடுக்க முடியாது போனால்
இனிமேல் பூக்க மாட்டேன் என்று
அதனால்தானேனும் வாங்கிக்கொள்…

*****************நீ நடந்து செல்லும் வழியைப்பார்த்து
பூக்களை பரவிவிடவும்
உன் கால்தடங்களைத்தேடி
வேர்களை அனுப்பவும்
இந்த மரம் பழகிவிட்டது…
என்ன அதிசயம்!
உன் பாதங்களில்
மிதிபட்ட பூக்களில் மட்டும்
எறும்புகள் மொய்க்கின்றன…

********************
நிலா
ஆகா எத்தனை அழகு!
உன்னில் உரசிக்கொள்ள தவறிய
மேகங்கள் சேர்ந்து
வடிக்கும் கண்ணீர்தான் மழை!
இந்த நேரத்தில்
சந்திரனில் உயிர்வாழும் கவிஞன்
உன்னைப்பற்றி எழுதிக்கொண்டிருப்பான்…
“நிலா அங்கிருக்க என்பூமி ஏன் தேய்கிறது?”

*****************

பெண்ணே!
அந்த மலை முகட்டிற்குச்செல்
நீயா நிலவா என்று
மேகங்கள் தீர்ப்பு வழங்கட்டும்!

***********************

இந்த வண்ணத்துப்பூச்சியை
இறக்கிவிட்டுப்போகும்
பேருந்து சாரதிக்கும்
நடத்துனருக்கும்
வயது நூறு…
அந்த ஆசனத்தில்
இப்பொழுது இருப்பவனுக்கு
வயது அறுநூறு…

*********************

ஏய் முட்டாள்களே!
இந்த விரிவுரை மண்டபத்தின் நடுவே
ஒர் அழகான தாமரைப்பூ பூத்திருப்பது
தெரியவில்லையா?
அங்கே என்ன படம் பார்க்கிறீர்?
யார் அங்கே முன்னால் நின்று முணுமுணுப்பது?
முட்டாள்களே!-காரையம்சன்- 


1 Response to "நண்பன் அகிலனின் காதலர்தினச் சிறப்புக்கவிதைகள்"

.
gravatar
அந்நிய நண்பன் Says....

அருமை அகிலன்.... வித்தியாசமான கோணங்கள்.
அத்துடன் மதுரகன் இந்த கவிதைகளை பகிர்ந்துகொண்ட உங்களுக்கு நன்றிகள்

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...